புதன், 24 அக்டோபர், 2012

ஆணவம் ! மாயை ! கன்மம் ! என்பது யாது ?



ஆணவம் ! மாயை !கன்மம் ! என்பது யாது ?


ஆணவம் , மாயை ,கன்மம் , என்னும் வார்த்தை ஆன்மீகத்தில் அனைவராலும் பேசப்படும் வார்த்தையாகும் , ஆன்மா என்னும் ஒளியை, ஆணவம் ,மாயை ,கன்மம் என்னும் மும்மலங்கள் மறைத்துக் கொண்டு உள்ளதால் ,உண்மையான கடவுளை அறிய முடியவில்லை என்கிறார்கள் ,அதை அழித்தால் தான் கடவுளை அறிய முடியும் என்பது ஆன்மீக,சமய ..மத .. வாதிகளின் கருத்தாகும் .

இதற்கு வள்ளல்பெருமான் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்! .

ஆன்மாக்கள் என்பது ,ஆண்டவரால் அனுப்பப் பட்ட ,ஆண்டவரின் குழந்தைகளாகும் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது ,அனைத்து அண்டங்களையும் இயக்கிக் கொண்டு இருக்கும்,,ஒரு மாபெரும் பேரொளியாகும். அந்த பேரொளி இருக்கும் இடம் ,அகண்ட ,அளவிடமுடியாத அருட்பெருவெளியாகும், அந்த அருட்பெரு வெளியில் ....ஆன்ம ஆகாசம் என்னும் ஓர் எல்லை (இடம் ) உள்ளது ....அங்குதான் ஆன்மாக்கள் நிறைந்து இருக்கின்றன ,அந்த ஆன்மாக்கள் முன்று பிரிவுகளாக உள்ளன .அதற்கு ..பக்குவ ஆன்மா ..அபக்குவ ஆன்மா ...பக்குவா பக்குவமுள்ள ஆன்மா,...என்பனப் போன்ற மூன்றுவிதமான ஆன்மாக்கள்,மூன்று பிரிவுகளாக நிறைந்து இருக்கின்றன .

அங்கு இருந்துதான் எல்லா அண்டங்களுக்கும் ஆன்மாக்களை அருட்பெரும்ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைக்கப் படுகின்றது ...

மூன்று விதமான ஆன்மாக்கள் !.

அந்த ஆன்மாக்களுக்கு ,உண்மை தெரியாத ஆன்மாக்கள் என்றும் ..உண்மையும் பொய்யும் தெரிந்த ஆன்மாக்கள் என்றும் ...உண்மை மட்டும் தெரிந்த ஆன்மாக்கள் என்றும் ..என மூன்று குணங்கள் உள்ள ஆன்மாக்கள் ,அந்த ஆன்மா ஆகாயத்தில் உள்ளன .அந்த ஆன்மா ஆகாயத்தில் மூன்று பிரிவுகளாக உள்ளன .அதற்குப் பெயர்;-- ,சகலர் ...பிரளயாகலர் ....விஞஞானகலர் ...என்பதாகும் .


அபக்குவம் உள்ள ஆன்மாக்கள் ;--...சகலர் என்பதாகும் ;----...அந்த ஆன்மாக்கள் ஜீவர்கள் எனப்படும் உயிர்பெற்று வாழம் ஜீவ ஆன்மாக்கள் என்பதாகும் .அந்த ஆன்மாவில் இயற்கையாகிய ஆணவம் ...இயற்கையில் செயற்கையாகிய மாயையும் ...செயற்கையாகிய காமியம் அல்லது கர்மம் ...இம்முன்றும் உள்ளவைகளாகும் ....

பக்குவாபக்குவம் உள்ள ஆன்மாக்கள் ;--பிரளயாகலர் ;----என்பதாகும் .இந்த ஆன்மாக்களில் இயற்கையாகிய ஆணவம் ...இயற்கையில் செயற்கையாகிய மாயை ...இவ்விரண்டும் உள்ள உயிர்பெற்று வாழும் ஜீவன்களாகும்....

பக்குவம் உள்ள ஆன்மாக்கள் ;---விஞ்ஞானகலர் ...என்பதாகும்...இந்த ஆன்மாவில் இயற்கை யாகிய ஆணவம் மாத்திரம் உள்ளதாகும்....இந்த ஆன்மா உயிர் பெறாமல் வாழும் கலாதீதர்கள். இவை எங்கு வேண்டுமானாலும் உயிர் ..உடல் ..இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் சென்று வாழும் தகுதிப் பெற்றதாகும் .

சகலர் ...பிரளயாகலர் ...விஞ்ஞானகலர் ..வாழ்க்கை முறைகள் ;--

சகலர் என்ப்படுவது ----ஜீவர்கள் ...தாவரம் முதல் மனிதர் வரை ஆணவம் ...மாயை ...கன்மம் ..என்னும் மும்மலங்களுடன்,ஆன்மா,உயிர்... உடம்பு பெற்று இவ்வுலகில் வாழ்ந்து ,..இறுதியில் மனித தேகம் கிடைத்து ,வாழ்ந்து இன்பம் ..துன்பம் ..சலிப்பு...வெறுப்பு அடைந்து ..மெய் அறிவு என்னும், ஆன்ம அறிவு பெற்று ,அருளை அடைந்து,சுத்த தேகம் பெற்று...பின் பிரணவ தேகம் பெற்று ..பின்பு ஞான தேகம் பெற்று ...இறை உண்மையை அறிந்து ,பேரின்ப நிலையை அடைவதாகும் ....

பிரளயாகலர் எனப்படுவது ;---கல்ப தேகிகள் ..இவர்கள் ஆன்மாவில் ஆணவம் மாயை என்னும் இரண்டு மலங்கள் உடையதால் ,இயற்கை யாகிய ஆணவத்துடன் செயற்கையாகிய மாயை என்னும் உடம்புடன் வாழும் தகுதியைப் பெற்று வாழ்வதாகும் . ,கன்மம் என்னும் செயல்கள்(பதிவுகள் )இவைகளுக்கு கிடையாது .இந்த ஆன்மாக்கள் மாயை என்னும் உடம்புடன் வாழ்ந்து ....இன்பம் ...துன்பம்...சலிப்பு...வெறுப்பு அடைந்து ..மெய் அறிவு என்னும் ஆன்ம அறிவு பெற்று... இறைவன் உண்மையை அறிந்து....அருளைப் பெற்றுப் பிரணவ தேகம் பெற்று.. ..பின் ஞான தேகம் பெற்று பேரின்ப நிலையை அடைவதாகும்.

விஞ்ஞானகலர் எனப்படுவது ;---கலாதீதர்கள்...இவர்கள் ..ஆன்மாவில் இயற்கையாகிய ஆணவம் மட்டும் உள்ளவர்கள் .இந்த ஆன்மாவிற்கு மாயையின் உடம்பு தேவை இல்லை ,மாயையின் உதவி மட்டும் தேவை ,இந்த ஆன்மா உடம்பு இல்லாமல் .மாயையின் உதவியுடன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் .எங்கும் சென்று ..எப்படி வேண்டுமானாலும் வாழலாம் .அதுவும் வாழ்க்கையில்..இன்பம்...துன்பம்...சலிப்பு.... வெறுப்பு அடைந்து ,மெய் அறிவு என்னும் ...ஆன்ம அறிவு பெற்று ...இறை உண்மையை அறிந்து ,அருளைப் பெற்று ஞானதேகம் என்னும்... ஒளி தேகம் ....பெற்று பேரின்ப நிலையை அடைவதாகும்....மேலும் விரிக்கில் பெருகும் ...

இவை மூன்று விதமான ஆன்மாக்களின் வாழ்க்கை முறைகளாகும் .நாம் சகலர் என்னும் ஆணவம் ...மாயை ...கன்மம் ...என்னும் மும் மலங்கள் பொருந்திய ஆன்மாக்கள் ஆகிய ..நாம் பல பிறவிகள் எடுத்து ..இப்போது தான் மனிதப் பிறவி கிடைத்துள்ளது .இந்த மனிதப் பிறவி எப்படி கிடைத்தது,..நாம் எங்கு இருந்து வந்தோம் ,ஆன்மாவை ஆணவம்...மாயை ...கன்மம் ..என்னும் மலங்கள் எப்படி பற்றிக் கொண்டது ? ஏன் பற்றிக் கொண்டது ?  என்பதை நமது வள்ளல் பெருமான் எப்படி விளக்கம் அளிக்கிறார் என்பதைப் பார்ப்போம் .

 ஆன்மாக்கள் மேலே சொன்னபடி ..அருட்பெரு வெளியில் உள்ள ஆன்ம ஆகாசத்தில் இருந்து ஒவ்வொரு அண்டங்களுக்கும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைக்கப் படுகின்றன .ஆண்டவர் ஆன்மாக்களை வெறுமென அனுப்பி வைக்க படுவதில்லை ஆன்மாக்களுக்கு வேண்டிய ''அருள்'' என்னும் பொக்கிஷத்தை வைத்து அனுப்பி வைக்கிறார் ..அருட் பெருவெளியில் இருந்து எப்படி அனுப்பி வைக்கிறார் என்பதைப் அறிவோம் .

ஆன்மாவில் பதிந்து உள்ளவைகள் எவை ?

ஆன்மாவின் முதல் மனைவி !

அருட்பெரு வெளியில் உள்ள ஆன்ம ஆகாசத்தில் இருந்து தான் எல்லா அண்டங்களுக்கும் (உலகங்கள் ) ஆன்மாக்களை அனுப்பி வைக்கப் படுகின்றன .ஆன்மாவை அனுப்பும் போது ஆன்மாக்கள்.... ,உலகத்தில் வந்து வாழ்ந்து, இன்பம் ....துன்பம் ....வெறுப்பும் ,...சலிப்பும்... அடைந்து, எங்கு இருந்து வந்தோமோ அங்கு திரும்பி செலவதற்கு தேவையான ''அருள் அமுதம்'' என்னும் அரும் பொருளை ஆன்மாவில்..இறைவனால் நிரைப்பி வைத்து அனுப்பப் படுகிறது .அதாவது,.திரும்பி வருவதற்கு .... ரிட்டன் டிக்கட் வாங்கிக் கொடுப்பது போலாகும்

ஆன்மா தானே எங்கும் செல்லாது ,...அதை அழைத்து செல்வதற்கு ''ஆணவம்''என்னும் ஒரு மனைவியை,..இயற்கையே கட்டிவைத்து,அதன் துணையுடன் உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது .அதனால்தான் ஆணவம் செயற்கை அல்ல ,ஆணவம் இயற்கை என்கிறார் வள்ளலார் .

'உதாரணம்;-- ..ஒருபெண் திருமண வயது வந்தவுடன்,அந்த பெண்ணுக்கு தகுந்த கணவனை தேர்வு செய்து ,திருமணம் செய்து கணவன் வீட்டிற்கு ,தாய்,தந்தையார் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்பார்கள் .அனுப்பும் போது மணப் பெண்ணை சும்மா அனுப்புவ தில்லை ,அந்த பெண்ணுக்கு தேவையான ,ஆடை,...ஆபரணங்கள் ,....தேவையான பணம் போன்ற சீர் வரிசை... ,அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்து கணவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் .

அதேபோல் ஆன்மாவுக்கு ஆணவம் என்னும் மனைவியை மணம் முடித்து  (கட்டிவைத்து) ,''அருள் அமுதம்'' என்னும் பொருளை ''ஆன்மா என்னும் பெட்டியில் ''வைத்து மகிழ்ச்சியுடன் ஆண்டவர் அனுப்பி வைக்கிறார் .

ஆன்மாவைப் பற்றிக் கொண்ட ஆணவம்,எப்படி பற்றிக் கொண்டது என்பதை வள்ளல் பெருமான் விளக்குவதை பாருங்கள் .செம்போடு களிம்பு சேர்ந்தது போன்று ஆணவக் கிழத்தி ,அனாதியில் இறுகப் பிடித்துக் கொண்டாள் .பிரம்ம ராட்ஷசி, பேய் போல் பிடித்துக் கொண்டாள் .சிவபூராணத்தை சிறிதும் காட்டாள்,..
ஜெகமேனும் ஏக தேசமும் தெரிய விடாமல் இருக்காள் .எவ்விடத்து இருளும் என்னுடைய அகம் என்னும் உண்மையை,...சுவர்போல் கட்டிக் கொண்டாள் .நனவில் தான் காட்டமாட்டாள் என்றால் ,கனவிலும் இருள் போல் மறைத்துக் கொண்டாள் .மிகவும் கொடியவள் .

இரவு எது ?,....பகல்எது ?,...இன்பம் எது ?,...துன்பம் எது?...ஒளி எது ?..வெளி எது ? என ஒன்றும் தெரிய விடாமல் ,இறுக்கும் அரக்கி,...இவளோடும் இருந்து வாழ்ந்து கொண்டு உள்ளேன் .எளியேனால் என்ன செய்ய முடியும் .அவள் மயக்கத்தில் என்னை இழந்தேன் .

ஆணவத்தின் முதல் பிள்ளை ! அஞ்ஞானம் !

ஆணவம் என்ற பெண்ணிடம் என்னுடைய காதலை வெளிப்படுத்தி கற்பை இழந்து ,அஞ்ஞானம் என்னும் ஒரு மூடப் பிள்ளையைப் பெற்றுக் கொண்டேன்.அவன் எனக்குத் துணையாக இருப்பான் என்று நினைத்து அன்போடு அரவணைத்து ஆசையோடு வளர்த்தேன் .அவனோ சூரியனை மறைக்கும் கரு மேகங்கள் போல்,என்னுடைய அகக் கண்ணையும் ,புறக் கண்ணையும்,அவன் கைகளாலே முடிக் கொண்டான் ...தன்னையும் காட்டாமல் ,என்னையும் நான் பார்க்க முடியாமல் மறைத்துக் கொண்டான் .

இவன் ஏடுறும்,..எண்ணும்,..எழுத்தும் ,..உணரான் ....தாயினும் கொடியன் ..ஆயினும் என்றன் விதியை நொந்து விருப்பமுடன் வளர்ந்தேன் .ஆனால் .இவன் என்னுடைய மகன் என்று சொல்லும் அளவிற்கு பெருமை வாங்கித்  தரவில்லை.அவன் பெருமை வாங்கித் தராவிட்டாலும் பரவாயில்லை ,சிறுவயது முதலே, என்னுடைய உறவில்லாமலும்... அவனுக்கும் அறிவு இல்லாமல் அவன் விருப்பம்போல், எனக்குத் தொல்லையும் துன்பமும் கொடுத்துக் கொண்டே உள்ளான்,அதனால்,ஆணவம் என்னும் முதல் மனைவியை கண்டு கொள்ளாமலே இருந்தேன்,

இந்த மாயை என்னும் உலகத்தில் வந்ததும் மண்ணும்... நீரும்...நெருப்பும் ...காற்றும் ...ஆகாயமும் ..அதனால் உண்டாக்கும் அதிசயங்களும்,அதில் உள்ள விசித்திரமான செயல்பாடுகளும் ....ஏழுவிதமான முக்கியமான அணுக்களும் ...அதற்கு துணையான சாதாரண, அசாதாரண அணுக்களும் . அந்த அணுக்களால்..''ஆன்மாக்களுக்கு'' கட்டிக் கொடுக்கப்பட்ட,அழகு ..அழகான வீடுகளும் ஆன்மாவில் இருந்து வெளியே வந்து வாழும் உயிர்களும் ,ஒவ்வொரு உயிர்களுக்கும் விதவிதமாக கட்டிக் கொடுக்கப்பட்ட ...வித ..விதமான தோற்றமுள்ள வீடுகளும் .தாவரம் ...ஊர்வன ...நீரில் வாழ்வன ...பறப்பன ....நடப்பன ....தேவர் ...நரகர்....மனிதர் ..போன்ற உயிர்கள் ....அந்த வீட்டில் இருப்பதையும் ....இயங்குவதையும் ....வாழ்வதையும் பார்த்து மயங்கிப் போனேன் அதனால் என்னுடைய முதல் மனைவியான ஆணவத்தை நினைத்துப் பார்க்க நேரமும் இல்லை.... அறிவும் இல்லை .

ஆணவம் என்னும் மனைவியை மறந்ததால்,என்னுடைய தவிப்பைப் பார்த்து  இடண்டாவது மனைவியாக, என்னை தானாகவே வந்து திருமணம் செய்து கொண்டாள் .அவள் தான் மாயை என்பவளாகும் .

எனது இரண்டாவது மனைவி ;--மாயை !

ஆன்மாகாசத்தில் இருந்து ,ஆணவம் என்ற மனைவியுடனும் ,அஞ்ஞானம் எண்ணும் மகனுடனும் .இந்த உலகத்திற்கு வந்தேன் .இங்கு வந்ததும் ஆணவம் என்னும் மனைவியையும் ,அவளுக்கு பிறந்த அஞ்ஞானும் என்னும்  பிள்ளையையும் இங்கு வந்த உடனே .மறந்து விட்டேன் .இரண்டாவது மனைவியாக மாயையைத் திருமணம் செய்து கொண்டேன் .

மாயை என்னும் பெண் என்னை எப்படி பிடித்துக் கொண்டாள் என்பதை வள்ளலார் விளக்குவதைப் பாருங்கள் .

மாயை என்னும் மாதினைக் கொணர்ந்தே
சிறுகருங் காக்கைக் குருகுறுங் கழுத்தில்
கனம்பெறு பனங்காய் கட்டிய வாறெனக்
கட்டிப் புண்ணியங் கட்டிக் கொண்டனன்
விடுத்தெனைப் புண்ணியன் விலகலும் அவள்தான்
விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு
கொள்ளிவாய்ப் பேய்களோர் கொடி நின்றே
தடித்த குழவியைப் பிடித்தது போல .

மற்றவள் என்னை மணந்து கொண்டனள்
பெண்ணடை அனைத்தும் பெருங்கதை யாகும்

மாயைக்கு பிறந்த குழைந்தைகள் ...நான்கு !

இரண்டாவது மனைவி மாயை என்பவளாகும் ,அவளுக்கு பிறந்தது நான்கு குழைந்தை களாகும் .

முதல் பிள்ளை ;--மனம் என்னும் பெயராகும் ....இரண்டாவது பிள்ளை ;--புத்தி என்னும் பெயராகும் .மூன்றாவது பிள்ளை ;--சித்தம் என்னும் பெயராகும் ....நான்காவது பிள்ளை ;---அகங்காரம் என்னும் பெயராகும் .இந்த நான்கு பிள்ளைகளும் எனக்கு கொடுக்கும் தொல்லைகள் அளவில் அடங்காது .

மனம் என்னும் முதல் பிள்ளை ..அதன் குணம் எப்படிபட்டது என்பதை விளக்குகிறார்..!

கொடுந்தவம் புரிந்தொரு குரங்கு பெற்றார் போல
மலைக்கப் பெற்றிட மனமெனும் இளைஞ்ன்
உலகைக் கொழுந்தென ஒருவன் பிறந்தான்
வருமிவன் சேட்டை வகுக்க வாய் கூசும்.

விதி விலக்கறியா மிகச் சிறிய வனாயினும்
விண் மண் நடுங்க வினைகள் இயற்றிக்
காமக் குழியில் கடுகிப் படுகுழி
விழு மதக் களிறென விழுந்து திகைப்பான்
பதியை இழந்த பாவையின் செயல்போல்

கோப வெங் கனலிற் குதித்து வெதும்புவன்
நிதிகவர் கள்வர் நேரும் சிறையென
உலோபச் சிறையில் உழன்று வாழ்வன்
வெற்பெனும் யானையை விழுங்கும் முதலை
முழுகிக் கடலில் முளைத்திடல் போல

மோகக் கடலில் மூழ்கி மயங்குவன்
மது குடித் தேங்கி மயக்குறு வார்போல்
மதத்தில் வீறி மதங்களில் வியப்பன்
பட்டினி இருக்கும் வெட்டுணி போல
மச்சரங் கொண்டு மகிழ கூர்ந் தலைவன்

காசில் ஆசை கலங்குறா வேசை
எனினும் விழிமுன் எதிர்ப்படில் அக்கணம்
அரிய தெய்வம் என்று ஆடுவான் பாடுவான் .
அணிகள் அணிவன் அடியும் பணிவன்
எலும்பைச் சுரண்டும் எரிநாய் போலச்

சுற்றுவன் பற்றுவன் தொழுவன் எழுவன்
கணத்தில் உலகெலாங் கண்டே இமைப்பில்
உற்ற விடத்தில் உறுவன் அம்மா
சேய்மை எல்லாஞ் செல்லற் கிளையான்
பித்தோங் கியவுன் மத்தனாத் திரிவான்

சொல்வழி நில்லான் நல்வழி செல்லான்
சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன்
வெட்டிலுந் துணியான் கட்டிலுங் குறுகான்
மலக்கி ஈன்ற மாதினும் பாவி
கள்ளது குடித்துத் துள்ளுவான் போல

மதத்தாற் பொங்கி வழிந்து துள்ளுவன்
முத்தம் தரல்போல் மூக்கைப் கடிப்பன்
மறைசொல் வான்போல் வளர்செவி கிள்ளுவன்
சற்றும் இரங்கான் தனித்துயில் கொள்ளான்
கூவிளிச் செய்வன் கூடுவன் பலரை

கூவி அதட்டினும் கோபங் கொள்வான்
இங்கு முள்ளான் அங்கும் முள்ளான்
படிக்கும் முன்னே பங்கு கொள்வான்
படியில் நிறுத்தி வாய்மை வழங்கினும்
வண்ணான் கல்லிடை வறிஞர் சீலையை

ஒலித்திடல் போல உரத்திக் கத்துவான்
என்னைத் தாதை என்று எண்ணான் சொல்லும்
வாய்மை எல்லாம் வண்புனல் ஓவியம்
ஆகக் கொள்வான் அவன் பரிசுரைக்கேன்
பிறந்த இப்பாவி இறந்தான் இலையே

சென்ற நாள் எலாம் இச்சிறுவனால் அன்றே
வருசுகங் காணா வைச்சுமை நேர்ந்தேன்
திறந்திவன் செயலைத் தினைத்துணை விடாது
செப்பின் கற்கள் சிதைந்து கசியும்
கனத்த மரங்கள் கண்ணீர் பொழியும் .

கடவுளர் இவன் செயல் காணுவாரேல்
இமையாக் கண்களை இமைத்திடு வாரால்

மாயையின் முதல் பிள்ளையான மனத்தைப் பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் தெளிவாக விளக்கி உள்ளார் .இரண்டாவது பிள்ளையான புத்தியைப் பற்றி எப்படி விளக்கம் தருகிறார் என்பதைப் பார்ப்போம் .

மாயையின் இரண்டாவது பிள்ளை ;--புத்தி ! ..புத்தியைப் பற்றி சொல்லுவதைப் பார்ப்போம் .

காசிபன் மனைவிமுன் கடுந்தவம் புரிந்து
பையுடைப் பாம்பை பயந்தது போன்று
புத்தி என்னும் புத்திரன் தன்னை
ஈன்றனன் அவனோ எளியரில் எளியன்
வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன்
தாயோடும் பழகான் தமையனோ அணையான்
பாவம் என்னிற் பதறி அயர்வான்.

பாடு படற்குக் கூடான் உலகர்
கயங்கு நெறியில் உடங்கி மயங்குவன்
பாழ்நிகர் புந்தியர் பாலிற் பொருந்தான்
எப்பாடும் படான் எவரையும் கூடான்
கபடரைக் காணிற் காதம் போவான் .

கங்குலும் பகலும் கருது விகாரத்
தடத்திடை வீழ்ந்து தயங்குறு நயங்கள்
சாருவன் கூறுவன் தருக்குவன் எவைக்கும்
அடங்குவன் அறிதே அமைதல் இல்லான்
இவனை மடியில் இருத்திக் திடமொழி

செப்பிடச் சோர்வு செறிவதென் எனக்கே
இவன்பாற் செய்வது ஏதும் அறியேன் .

மாயையின் மூன்றாவது பிள்ளை ;--சித்தம் ....என்பதாகும்.அவன் செயல்கள் எப்படிபட்டது என்பதை பார்ப்போம் .

செறிதரு கோளுள சேயிழை யாள்பினும்
நையப் புணர்ந்து நாள்பட வருந்தி
நாடி நாடி நாயை யீன்றது போல் .

உணர்விலி என்றே உலகர் ஓதும்
சித்தம் என்னும் சிறிய குழவியைப்
பயந்து கரத்திற் பதர எடுத்தனன்
கரைதரு விண்ணீர்க் கடிதடம் ஆகக்
கதிர்விடும் உடுக்கன் கறங்கு மீனாக.

மதியைத் தாமரை மலராய் மதித்ததில்
மூழ்கப் பிடிக்க முன்னங் கொய்திட
எண்ணுவன் எழுவன் எட்டுவன் சிறிதும்
நேரா திளைத்தே நிலைகள் பற்பல
வான் கண்டவன் போல வாயாற் கொஞ்சுவன்.

எனையுங் கூவுவன் இவனிடர் பலவே
இடர் பல இயற்றி இழுக்குங் கொடியன்
இவன் செயல் நிற்க இவன் தாய் வயிற்றில் .

மாயையின் நான்காவது பிள்ளை ;--அகங்காரம் ,...அகங்காரம் என்னும் பிள்ளையின் செயல்களைப் பார்ப்போம் .

தாருகன் என்னும் தருகண் களிற்றைத்
தந்த மாயைக்குத் தனி மூத்தவளாய்
அகங்காரம் எனும் அடங்காக் காளை
அவனி மூன்றும் அதிர்ந்து கவிழக்
கடைமுறை பெற்றுக் களித்தனன் அவன் செயல்
கருதவும் பேசவும் கனிவாய்க் கூசுமே
கூற்றுவர் கோடிகொண்டு உதித்தா லென் .

முளைத்து வளர்ந்தனன் ''மூத்தவன் மூழை
இளையவன் காளை'' என்னும் இலக்கியமாய்
முன்னுள்ள மூவரை முடுகி ஈர்த்தே
எண்ணில் விளையாட்டை எழுப்பும் திறத்தன்
எல்லா ஆற்றலும் என்பால் உலதெனத்

தருக்குவன் இவன்றன் சங்கடம் பலவே
தன்னைத் தானே தகைமையில் மதிப்பன்
தரணியற் பெரியார் தாமிலை என்பான்
மாதின் வயிற்றில் வந்தவன் எனாது
தானே பிறந்த தன்மை போல் பேசுவன்

விடியும் அளவும் வீண் வாதம் இடுவான்
வாயால் வண்மை வகைபல புரிவன்
ஓத அவன் பெருமை ஈதவன் இயல்பே
சொல்லினுங் கேளாத் துரியோதனன் என
வானவர் தமக்கும் வணங்கா முடியன்

முன்வினை யாவும் முற்றும் திரண்டே
உருக் கொடியுங் இயம் பொணா ஊறுகள் இயற்றுவன்
பிள்ளையும் அல்லன் கொள்ளியும் அல்லன்
இன்னும் இவன் செயும் இடர்பல அவற்றை
இவர்பால் சொல்லி என்துயர் ஆற்றுவேன் .

பாதகி துன்பம் பவக்கடல் ஏழும்
மக்கள் துன்பம் மலைபோல் எட்டும்
நீளல் போல் அதனை செஞ்சில் நினைத்தோ
அவளது சூழ்ச்சி அற்புதம் அற்புதம் .

ஆன்மாவிற்கு முதல் மனைவி ,ஆணவம் ,அவளுக்கு பிறந்த குழைந்தை ,
அஞ்ஞானம் ,..இரண்டாவது மனைவி மாயை ;--அவளுக்கு பிறந்த குழைந்தைகள் ,..மனம் ...புத்தி ....சித்தம் ...அகங்காரம் ..என்னும் நான்கு குழைந்தைகள் பிறந்தது .அதனால் அடைந்த துன்பங்களும் ,துயரங்களும் ,அளவிடமுடியாது ,அவர்களுடன் வாழ்ந்து வரும் வேளையில்... மூன்றாவதாக ஒரு மனைவி வந்து பிடித்துக் கொண்டாள் .அவள் பெயர் காமியம்(அதாவது கன்மம் )...

மூன்றாவது மனைவி காமியம் (கன்மம் );--அவள் என்ன செய்கிறாள் என்பதைப் பார்ப்போம் .

தொல்லை மரபில் தொழில் பல கற்று
உலவுறு காமியம் ஒண்டொடி என்னும்
கபட வஞ்சகி யாங் களத்தினைக் கொணர்ந்து
பேய் பிடித்தவன் பாற் பெரும் பூதங் கூட்டித்
தான் மணந்தது போதாது இங்கு என்று பின்
''மாற்று காலுக்கு மறுகால் ஆக ''
மாட்டி மிக மனம் மகிழ்ந்தாள் கூர்வேல்
கண்ணினை யாள் நெடுங் கடல் சூழ் உலகில்
நிறைந்துள யாரையும் நெருக்குவள் கணத்தில்
இவள் செயும் வீரம் எண்ணி விளம்ப
உடலெலாம் நாவாய் உறினும் ஒண்ணா

ஒருத்தியே இரண்டு அங்குரு கொட அவ்வற்றில்
பலவாய்ப் பலவுளும் பற்பல வாயுரு
பொருத்தம் முறவே புரிவள அவ்வற்றில்
பலகால் புணர்ந்து பயன்வலி போக்கி
ஓருரு கரும்பும் ஓருரு காஞ்சியும்

ஓருரு நோவ இழுத்தே அனைவள்
இங்கனம் பற்பல ஏழைக் குறும்புகள்
இயற்றி எவருமே ஏக்கங் கொளவே
இவள்முன் நம்செபம் என்னுஞ் சாயா
அரகர என்றே அரற்றி மெலிவேன் .

மூன்றாவது மனைவிக்கும் மூன்று பிள்ளைகள் ;--அவை முக்குணங்கள் என்பதாகும் .அதாவது ..சாத்விகம் ...ராஜஸம்...தாமஸம் . என்பவையாகும் .இந்த பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம் .

இவ்வா றென்னை இழைத்திடும் கொடியாள்
முக்கண் மூன்று மூவுருவம் எடுத்தே
வயிறு கிழிய வந்த சிறார்கள்
மூவர் தமையும் அம் மூவரும் அறியார்
வெலவரும் இவரால் மேலோடு கீழ் நடு

ஆய உலகும் அவ்வுலக உயிரும்
பற்பல நெறியிற் பாடு பட்டார் எனில்
எளியேன் பாடு இங்கு இயம்பவும் படுமோ
இவர்கள் இயல்பை எண்ணவும் பயமாம்
பாரெலாம் தாமாய்ப் பரவும் இவர்தம்

ஏற்றுவர் இறக்குவர் எங்கும் நடத்துவர்
இயற்றுவர் கீழ் மேல் எங்குமாக
உவகை ஊட்டுவர் உறு செவி மூடத்
திட்டுவர் பலவாய்த் திரண்டு திரண்டே
ஆற்றுறும் ஆற்றலை ஆற்றல் அரிதாம்

இவ்வுகம் அதனில் என்கண் காண
ஆழிழை யானை ஆய்ந்து மணந்து
நாளில் தொடங்கி இந்நாள் பரியந்தம்
மனம் சலித்திடவே வழிய விலங்கினைத்
தாளில் இட்டுத் தயங்கி அலைந்தேன் .

விண் சஞ்சலம் என விளம்பும் துகளை
முடி மூழ்க வாரி முடித்திட்டேன் ஆனால்
ஈட்டிய பொருளால் இற்பசு வீந்தே
எருமை தன்னை அருமையாய் அடைந்தனோ
ஆற்ற முடியா தலைவேன் எனவும்

குறித்த அங்கு எடுத்திடுங் கூவல் நீரை
விழற்கு முத்துலை வேண்டி இறைத்துத்
துணைக்கரஞ் சலித்தே துயர் உற்றேனோ
காற்றினும் விரைந்தே காரான் பாலை
கமரிடை ஏனோ கவிழ்த்துங் கலக்குவேன்

கலநீர் தன்னைக் கண்ணிற் சிந்திக்
கழறிக் குழறிக் கனியுடல் களைக்கச்
சிலை நேர் நுதலிற் சிறுவியர் விரும்ப
அருந்தொழிற் செய்து இங்கு அடைந்த பொருளைச்
சிவ புண்ணியத்திற் செலவிற் கலவாறு .

பெண் சிலுகுக்குப் பெரிதும் ஒத்தேன்
பகலும் இரவும் பாவிகள் அலைந்தனர்
இவர்கள் சல்லியம் ஏற்பவர் ஆரெனக்
கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன்
கிணற்றில் மண்ணைக் கெல்லப் பூதம் .

தோன்றியது என்னும் சொல்லை ஒத்தது
இவருடன் ஆட என்னால் முடியுமோ
அவளுக்கு இவள்தான் அறிய வந்தால் எனும்
மூன்று மாதரும் ''முழுபாய் சுருட்டிகள் ''
இவர்களில் ஒருவரும் இசைய வந்தார் இலர் .

இச்சை வழியே இணங்கி வலிவில்
மனமது கொண்டு வாழ்ந்து வருகையில்
சண்டன் மிண்டன் தலைவர் என்ன
புவிமிசைப் பாதகர் போந்து இங்கு உதித்தனர்
இவரால் நேர்ந்த எண்ணிலாத் துயரைப்

பொறுப்பது அரிதாம் வெறுப்பது விதியே
பாவம் இன்னும் பற்பல உளவே.

மேலே கண்ட மூன்று மனைவிகளுக்கும் ,அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் .அவர்கள் வாழ்வதற்கு வாடகை வீடு தேவைப்படுகிறது .அந்த தேகம் பெருமாயை என்னும் பெண்ணிடத்தில் ,தின வாடகைக்கு வாங்கி குடி இருக்கிறார்கள் . அதற்கு குடிக்கூலி வீடு ;--தேகம் என்பதாகும் .

ஆன்மாவின் குடிக்கூலி வீடு ;-- தேகம் ...

குடும்பத் துடனே குடித்தனம் செய்யக்
குடிகூலிக்குக் கொண்ட மனையில்
கண்ட காட்சிகள் கன வினோதங்கள்

இராமயணத்தும் பாரத்ததும் இலை
இழிவினும் இழிவது எண்சான் உள்ளது
மலமுஞ் சலமும் மாறா ஒழுக்கது
சுற்றினும் ஒன்பது பொத்தல் உடையது
சீழும் கிருமியுஞ் சேர்ந்து கிடப்பது

என்பு தோல் இறைச்சி எங்குஞ் செந்நீர்
ஆய்ந்து செய்த ஆகர முற்றது
அகலல் அணுகல் புகலல் இகலல்
அணிகள் துணிகள் அணிவ தாய
சால வித்தைகள் சதுரிற் கொண்டது

கிடந்தும் இருந்தும் நடந்தும் பற்பல
பகரிம் மனையால் படும் பாடு அதிகம் .

வாடகை வீட்டின் (உடம்பு )தலைவர் ;--வாத ...பித்த ...சிலேஷ்மம் ..(வாதநாடி ...பித்தநாடி ...சுழுமுனை நாடி ) இவர்களின் வேலையைப் பார்ப்போம் .

இம்மனைத் தலைவராய் எழுந்த மூவர்
தறுகட் கடையர் தயவே இல்லார்
பணிசிர முதலாய்ப் பாதம் வரையில்

வாது செய்திடும் வங்கால வாதி
பெருகுறு கள்ளினும் பெரிதுறு மயக்கம்
பேதமை காட்டும் பெருந்தீப் பித்தன்
கொடுவிடம் ஏறிடும் கொள்கை போல் இரக்கங்
கொள்ளாது இடர் செய் குளிர்ந்த கொள்ளி

இவர்கள் என்னோடு இகல்வர் இரங்கார்
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார் .

ஆன்மாவின் வாடகை வீட்டிற்கு வாடகை குடிக்கூலி ;---பிண்டம் (உணவு )இவர்கள் செய்யும் வேலையைப் பார்ப்போம் .

பிண்டம் என்னும் பெருங் குடிக் கூலி
அன்றைக் கன்றே நின்று வாங்குவர்
தெரியாது ஒருநாள் செலுத்தா விட்டால்

உதரத்து உள்ளே உறுங் கனல் எழுப்பி
உள்ளும் புறத்தும் எண்ணையில் எரி ஊட்டி
அருநோய் பற்பல அடிக்கடி செய்வர்
இவர் கொடுஞ் செய்கை எண்ணும் தோறும்
பகீரென உள்ளம் பதைத்துக் கொதித்து
வெதும்பும் என்னில் விளம்புவது என்னே
சினமிகும் இவர்தம் செய்கைகள் கனவினும்
நினைந்து விழித்து நேர்வதன் முன்னர் .

இப்படி என்னுடைய ஆன்மாவை ...ஆணவம் ....மாயை...கன்மம் ...எண்ணும் மூன்று மனைவிகளுடனும்,,அவர்களுக்கு பிறந்த குழைந்தை களுடனும், வாடகை வீட்டில் குடி இருந்து கொண்டு நான் தவித்துக் கொண்டு இருக்க,மதவாதிகள் பொய்யான கற்பனைக் கதைகளை கட்டி எனக்கு களங்கம் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள் .என்னுடைய உண்மையான வாழ்க்கை தெரிந்து இருந்தால் இப்படி பேசுவார்களா !

மதவாதிகள் ;---வருகை ...

மற்போர் கருதி வந்தவர் போல
ஓதும் வேதாந்தம் உரைப்பவர் சிலபேர்

வாட் போரினுக்கு வந்தவர் போல
வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சிலபேர்
தண்டாயுதப் போர் தாங்குவர் போல
இதி காசத்தை இசைப்பவர் சிலபேர்
உலக்கைப் போரை உற்றார் போல

இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்
கற்போர் விளைக்கக் காட்டுவர் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்
வாய்ப் போருக்கு வந்தவர் போல
விவ காரங்கள் விளம்புவர் சிலபேர் .

மடிபிடி போர்க்கு வாய்ந்தவர் போல
மத தூஷனைகள் வழங்குவர் சிலபேர்
கட் குடியர் வந்து கலக்குதல் போலக்
காம நூல்கலைக் கழறுவர் சிலபேர்
விழற்கு நீரை விடுவார் போல

வீண் கதை பேச விழைவர் சிலபேர்
இவர்கள் முன்னே இவருக்கு ஏற்ப
குரல் கம்மிடவும் குறுநா உலரவும்
அழலை எழவும் அவரவர் தம்பால்
சமயோ சிதமாய்ச் சந்ததம் பேசி

இயன்ற மட்டில் ஈடு தந்து அயர்வேன் .

இப்படி என்னுடைய நித்திய கருமங்களை செய்து கொண்டு வருகிறேன் .என்னுடைய உண்மையான வீடு எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன் .அப்படி நினைக்கும் பொது என்னுடைய உடம்பில் ...நான் உண்ணும் உணவு எப்படி செரிமானம் மாகிறது என்பதைப் பாருங்கள் .

பின்னர் மனையின் பின் புறத்தேகிக்
கலக்கும் மலத்தைக் கடிதே கழித்துக்
கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று
பல்லின் அழுக்கைப் பண்பின் மாற்றிச்

சோமனைப் போல வெண் சோமனைத் துவைத்து
நன்னீர் ஆடி நறுமலர் கொய்து
தேவருக் கேற்ற திரவியம் கூட்டிப்
பாவையை வைத்துப் பாடி யாடும்
சிறாரைப் போலச் செய்பணி யாற்றி

மண்ணின் சுவர்க்கு வண்சுதை தீட்டல் போல்
வெண்ணீர் அதனை விளங்கப் பூசிப்
புகழ் ருத்ராக்கப் பூனை என்ன
உற்ற செபவடம் உருட்டி உருட்டிக்
குரண்டகம் போன்று குறித்த யோகம்

செய்த பின்னர் சிறிது நேரம்
அருத்தியிற் பூசனை அமர்ந்து அங்காற்றி
ஊன் பிண்டத்திற் உருபிண்டம் மீந்து
குடிக்கூலிக் கடன் குறையறத் தீர்த்துப்
பகல் வேடத்தால் பலரை விரட்டி

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும்
பொழுதும் சரியாய்ப் போகின்றதுவே .

மனிதன் எப்படி இந்த உலகத்தில் உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளான் என்பதை ,தெளிவாக விளக்கி உள்ளார் நமது அருள் வள்ளல் ...திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்கள் .

ஆணவம் ...மாயை ...கன்மம் ...எண்ணும் மும்மலங்கள் நம்முடைய ஆன்மாவில் எப்படி பதிவாகி உள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார் .ஆன்மா வாடகை வீட்டில் வாழாமல் .ஆன்மா தனக்கு என சொந்தமான ஒளிதேகம் பெற்றுக் கொண்டால் மட்டுமே இவ்வுலகத்தை விட்டு வெளியே செல்லமுடியும் .

இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு பெருமாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு உடம்பு என்பதாகும் .உயிர் இல்லாமல் வாழ வேண்டுமானால் உயிர் எடுக்காமல் இருக்க வேண்டும் .ஆன்மா வாழ்வதற்கு ஒளி தேகம் எடுத்தால் தான் வாடகை கிடையாது ,ஆன்மா வாழ்வதற்கு ஒளிதேகம் எடுப்பதே சொந்த வீடு என்பதாகும் .

ஆன்மாவில் இருந்து உயிர் வருவதற்கு ...உருவம் உள்ள பஞ்ச பூத தேகம் எடுத்து வாழ்ந்து கொண்டு வருகிறது ...இதை மாற்ற வேண்டுமானால் ஆன்மாவில் உள்ள அருள் என்னும் அமுதத்தை அறிந்து அதை ....ஜீவர்களின் அன்பால் ..தயவால் ...கருணையால் மோட்ச வீட்டின் திறவுகோலைப் பெற்று ,....இறைவன் கருணைக் கொண்டு மேல் வீட்டின் கதவைத் திறந்து,அருள் அமுதை உண்டு ,சுத்த தேகம் ...பிரணவ தேகம் ...ஞான தேகம் ...என்னும் ஒளிதேகத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டுமே ...ஆணவம் ...மாயை ...கன்மம் ...என்னும் கூண்டில் இருந்து வெளியே வரமுடியும் .

இதுவே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும் .சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து கடவுள் அருளைப் பெற்று பேரின்ப பெருவாழ்வில் வாழ்வோம் .

ஆன்மநேயன்----கதிர்வேலு ....

மீண்டும் பூக்கும்.....          
  



   






4 கருத்துகள்:

14 ஜனவரி, 2014 அன்று 3:37 PM க்கு, Blogger Sivamjothi கூறியது…

This is told in Thevaaram ...

எல்லா உயிர்களும் `விஞ்ஞானகலர், பிரளயா கலர், சகலர் என்னும் மூவகையுள் அடங்கி நிற்கும்.

http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10215

 
19 நவம்பர், 2018 அன்று 8:14 AM க்கு, Blogger Unknown கூறியது…

குடும்ப கோரம் செய்யுள் வரிக்கு பொருள் உள்ளதா

 
4 ஆகஸ்ட், 2022 அன்று 9:56 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

கருத்துக்கு நன்றி வாழ்க வளமுடன்.

 
22 டிசம்பர், 2024 அன்று 4:31 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

ஆன்மா ஒளியே புரியவைத்ததற்கு மிக்க நன்றி ஆன்மா நண்பரே 🪔🙏

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு