புதன், 11 ஜூலை, 2012

நான் அறிந்த வள்ளலார் !பாகம் -5,

நான் அறிந்த வள்ளலார் !பாகம் -5,


இமாய்யா வீடு !

நண்பகல் நேரம் வீட்டில் சின்னம்மை சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார் .

வீடு முழுவதும் மெழுகி விடப்பட்டு இருக்கிறது,வாசல் முழுதும் கோலம் அழகாக வரையப்பட்டு இருக்கிறது ,வீட்டின் உள்ளே இருக்கும் நடராசர் சிலைக்கு அலங்காரம் செய்யப் பட்டு இருக்கிறது.வீட்டு வேளைகளில் கவனமாக இருக்கிறார் சின்னம்மையார்,


  • சிவனடியார் வருகை !


''நமச்சிவாயம் ....அம்மணி ''

என்ற குரல் சின்னம்மையின் காதில் விழுகிறது ,உடனே விரைவாக வாசலுக்கு வருகிறார் .

வாசலில் --

சிவந்த மேனியும், கற்றைத் திருநீறும்..நீண்ட சடாமுடியும் ..காவி உடையும் ,.கமண்டலமும், திருவோடும் கம்பீரமும் .நிமிர்ந்த தோற்றமும்,..வயது முதிர்ந்த தோற்றமும் உள்ள சிவனடியார் நிற்கிறார் .

{அவர் முகத்திலே ஒரு தெய்வீகமான களை இதுவரையில் இது போன்ற ஒரு துறவியை யாரும் பார்த்ததும் இல்லை அப்படி ஒரு தோற்றம் }

அம்மணி என்ற குரல் கேட்டதும் வாசலுக்கு வந்த சின்னம்மை அவரைப் பார்த்ததும் அந்த சிவனடியாரைக் கண்ட மாத்திரத்தில் கைகூப்பி வணங்குகிறார்.

{அந்த நேரத்தில் பம்பை உடுக்கை ஒலி போன்ற தெய்வீக சப்தம் கேட்பது போல் சின்னம்மை உணர்கிறார் }
அடியாரைக் கண்ட பரபரப்பில் அவருக்கு ஒன்றுமே ஓடவில்லை "'வாங்க சாமீ...வாங்க என்று கூறிவிட்டு ,அவர் அமருவதற்காக ஒலைப்பாயை எடுத்துவந்து திண்ணையில் விரிக்கிறார்.

உட்காருங்க சாமீ...

என்று சின்னம்மை கூறியவுடன் ..அடியவர் தன் கையை உயர்த்தி ஆசி வழங்குகிறார்,வீட்டிற்க்குள் வரவேண்டி காலடி எடுத்து வைத்தவர் ...காலை பின்னுக்கு இழுக்கிறார்,வாசலில் கோலமாவில் சிவலிங்கம் படம் போட்டதைப பார்த்து அதை மிதிக்காமல் உட்புறம் நோக்குகிறார்,அங்கே நடராசர் திருவுருவப்படம்,அதன் அருகில் இரண்டொரு இனிப்பு பலகாரங்கள் படையல் வைக்கப்பட்டு இருக்கிறது.

அடியார் மெல்ல புன்னகை பூக்கிறார்,விரித்த பாயில் அமர்கிறார் .அவருக்கு தாக சாந்திக்காக முதலில் தண்ணீர் தருகிறார் சின்னம்மை,

சிவனடியார் தண்ணீர் அருந்திவிட்டு ..

அம்மணி...நான் மிகவும் களைப்போடு இங்கே வந்து இருக்கேன்,உன் வீட்டில் விருந்து உண்டு பசியாற்றிக் கொள்ளவே,நெடும் தொலைவில் இருந்து வருகிறேன் ...நான் வந்த வேளை நல்ல வேலைதானே ?

என்று கேட்கிறார் ..

அதற்கு கின்னம்மை --

சாமீ .. நீங்க பெரியவங்க இந்த குடிசையிலே அடியெடுத்து வச்சதே எங்க நல்ல காலம்தான் சாமீ ...அவுங்களும் இப்போ வந்திடுவாங்கோ  ..உங்களைப் போன்ற சிவனடியாருங்க இந்த வீட்டிற்க்கு வந்தாங்கன்னு தெரிந்தா ..அந்த கடவுளே வந்திட்டதா நெனைச்சி ரொம்போ சந்தோஷப் படுவாருங்க ..என்கிறார்


நீ -கூறித்தான் இதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை ,யாம் அனைத்தும் அறிவோம்!--மகளே ,பசி முகவும் வருத்துகிறது அமுது படிக்கிறாயா ?--விருந்து உண்ட பிறகு நான் தில்லைக்குப் போக வேண்டும்.



  • ''தில்லைக்கா ''
  • ஆமாம் ..தில்லை அம்பலம் என்னும் சிதம்பரமே எனது இருப்பிடம் .--என்று எழுகிறார் .



சிவனடியார் நின்று கொண்டு இருக்கிறார் ,சின்னம்மை --அவர் பாதங்களில் நீர் விடுகிறார் ,சிவனடியார் புன்முறுவலோடு நிற்கிறார் .பின்னர் அவர் பாதம் தொட்டு சின்னம்மை வணங்குகிறார் .


அவர் பாதத்தில் கைவைத்து எடுக்கும் போது ஒருகாலை விட ஒருகால் வித்தியாசமாக இருக்கவே --வியந்து அடியாரை நோக்க அடியார் அதைப்புரிந்து கொண்டு --


தில்லைக்குப் போனால் நான் ஒருகாலைத் தூக்கித்தான் ஆடிக்கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது .அதனால் வந்த கோளாறு என்று நினைக்கிறேன் .


சின்னம்மை அவரை உற்றுநோக்க --பம்பை உடுக்கை ஒலி போல சத்தம் சின்னம்மை காதில் மெல்என ஒலிக்கிறது அதை அனுபவித்துக் கொண்டே --


சின்னம்மை சிவனடியாருக்கு உணவை ஆவலுடன் பரிமாறுகிறார் ,--சிவனடியார் மகிழ்ச்சியோடு ஆவலாக உண்கிறார்,அவர் அருகில் நின்று கொண்டு பனை ஓலை விசிறியால் அவருக்கு விசிறி விடுகிறார் ,


சிவனடியாருக்கு ஏப்பம் வருகிறது .


''அப்பாடா --பசிக்காக சாப்பிட உட்கார்ந்த நான் --ருசிக்காக,கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன் என்கிறார் சிவனடியார்.


இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு மோர் குழம்பு விடட்டுமா சாமீ ...என்று சின்னம்மை கேட்க ...போதும் மகளே !...நீ படைத்த அமுதால் வயிறு மட்டும் நிறையவில்லை ...என்னுடைய மனதும் நிறைந்து விட்டது .என்று நீர் அருந்துகிறார் .


பின் சிவனடியார் வீட்டுக்குள் இருந்து வெளியே வருகிறார் ,..அவரைத் தொடர்ந்து சின்னம்மையும் வருகிறார் .வந்தவர் சின்னம்மை பக்கம் திரும்பி ..

அம்மணி ..எனக்கு விருந்து படைத்து உபசரித்த உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே புரியவில்லை என்று சொல்கிறார் .

சுவாமீ.. உங்களை மாதிரி அடியார்களுக்கு உபசாரம் செய்யறது --அந்த சிவனுக்கே உபசாரம் பண்றதாத்தான் நினைக்கிறோம் --''இது எங்க கடமை சாமீ ''---என்று பதில் சொல்லுகிறார் சின்னம்மை !

நல்லது மகளே சிவனடியார்களை உபசரித்தால் அந்த சிவனையே உபசரித்தாகத்தான் அர்த்தம் ...

அந்த சிவமாக நின்று உனக்கு ஒரு வரம் தருவோம் !--என்னுடைய வயிற்றுப் பசியை நீக்கிய உன் வயிற்றில் --இந்த உலகம் எல்லாம் உள்ள மாந்தர்களின் அறியாமையைப் போக்கி..அனைவருடைய வயிற்றுப் பசியையும் போக்கி ,மேலும்  அறிவு என்னும் பசியை உண்டாக்க ---

ஒரு ஞானக் குழைந்தை பிறக்கும் !தெய்வாம்சம் அவன்மேல் நின்று ஒளிரும் ,--இறைவனின் பிள்ளை என்று யாவராலும் போற்றப் படும் .அவன் மரணத்தை நீக்கி வாழ்வாங்கு வாழ்வான் !--நீ ஞானக் குழைந்தையைப் பெற்ற புண்ணியவதி என்று போற்றப் படுவாய் ..

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாயாக ..அவன் பெருமையில் நீ வாழ்வாய் !

என்று கூறி திருநீறை சின்னம்மை கையில் வழங்கி ''இதை நீயும் இட்டுக்கொள் --மறவாமல் உனது கணவருக்கும் கோடு ...எல்லாம் நலமாக அமையும்.!''என்று கூறிவிட்டு நிற்கிறார் .

அப்போது பம்பை உடுக்கை ஒலி மெல்லென ஒலிக்கிறது !

''எல்லாம் நலமாக அமையும் '' என்று மீண்டும் கூறிவிட்டு --சின்னம்மையின் பதிலையும் எதிர் பார்க்காமல் புறப்பட்டு சிவனடியார் போகிறார் .

அவர் போவதையே பார்க்கிறார் சின்னம்மை ..நடந்து கொண்டே இருந்த சிவனடியார் உருவம் மறைந்து விடுகிறது .திகைத்த சின்னம்மை ...வந்தவர் அந்த சிவபெருமானே என்று மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் விட்டுக் கொண்டே .--

நேராக ஒடி நடராசர் திருஉருவ சந்நிதியில் அமர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் .


                  
மீண்டும் பூக்கும் ;--

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு