திங்கள், 7 நவம்பர், 2011

அப்துல்கலாம் கருத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகிறது


அப்துல்கலாம் கருத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகிறது:கூடங்குளத்தில் கதிர்வீச்சு அபாயம் இல்லை

தற்போதைய செய்தி
சென்னை, நவ. 7-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து அப்துல்கலாம் அளித்துள்ள பேட்டியில், “கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எந்த வகையிலும் பயப்பட வேண்டியதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் இந்த அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதால் கதிர்வீச்சு அபாயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
இது குறித்து தீவிர ஆய்வு செய்த பிறகே இதை சொல்கிறேன். அணுக்கழிவு 25 சத வீதம்தான் வரும். அதுவும் கதிர்வீச்சு அகற்றப்பட்டு பூமிக்கு அடியில் வைக்கப்படும். கடலில் கதிர்வீச்சு இல்லாத தண்ணீர்தான் கலக்கும். இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
கூடங்குளம் அணுமின் நிலையம், 6 ரிக்டர் அளவு பூமி அதிர்ச்சியை தாங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புயல், சுனாமியாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலும் இந்த அணு உலை தானாகவே கதிர்வீச்சை தடுக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்டது.
இந்த அணுமின் நிலையத்தால் கூடங்குளம் பகுதி வளம்பெறும். இதை தடுக்க முயற்சி செய்வது சரியல்ல” என்று அப்துல்கலாம் கூறியுள்ளார்.
அப்துல்கலாம் இது பற்றி வெளியிட்டுள்ள கட்டுரையில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு சந்தேகத்துக்கும் பதில் அளித்துள்ளார். அதில் இந்த அணுமின் உலை எந்த அளவு பாதுகாப்பானது என்பதற்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளார்.
எந்த ஒரு விஷயத்திலும் நன்மை-தீமை, சாதகம்-பாதகம் என்று இரண்டும் உண்டு. இதில் நன்மையானவற்றையும், நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமானவற்றையும் எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். அப்போதுதான் மற்ற நாடுகளைவிட நமது நாடு வேகமாக முன்னேற முடியும். 2020-ல் வளர்ந்த நாடாக முடியும்.
தனி நபரின் நலனைவிட நாட்டின் நலன்தான் முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு மின்சார உற்பத்தி அவசியம். அணு மின்சாரம்தான் தூய்மையானது. மற்ற வகையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைவிட மிக குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
கல்லணை உடைந்தால் ஆபத்து என்று நினைத்து இருந்தால் கரிகாலசோழன் காவிரி குறுக்கே அணை கட்டி இருக்க மாட்டான். எனவே நல்லதை மட்டுமே நினைத்து செயல்பட வேண்டும் என அப்துல்கலாம் கூறி உள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவு பெருகி உள்ளது.
அப்துல்கலாமின் கருத்து பொதுமக்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் வளர்ச்சி முக்கியம். ஆபத்து எல்லா இடங்களிலும் உள்ளது. பஸ், கார், மோட்டார்சைக்கிள் எதில் பயணம் செய்தாலும் விபத்து ஏற்படும். விமான விபத்தில் பல உயிர் இழக்கிறார்கள். இதனால் பயணமே செய்யக்கூடாது என்று சொல்வது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல் கூடங்குளத்தில் அணுமின்சாரமே கூடாது என்பதும் தவறானது.
பாதுகாப்பான பயணத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் கவனிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு விபத்து நடப்பதால் இனி வாகனங்களையே பயன்படுத்தவே மாட்டேன். நடந்துதான் போவேன் என்பது பெரிய முட்டாள்தனமாகி விடும்.
எனவே அப்துல்கலாம் இவ்வளவு சொன்ன பிறகும் அதை ஏற்க மாட்டேன் என்று சொல்வது சரியானது அல்ல என்று அந்த பகுதி மக்களே பேசத் தொடங்கி விட்டனர்.
You can leave a response, or trackback from your own site.

No Responses to “அப்துல்கலாம் கருத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகிறது:கூடங்குளத்தில் கதிர்வீச்சு அபாயம் இல்லை”

  1. kathirvelu says:
    Your comment is awaiting moderation.
    நமது நாட்டின் நலன் கருதியும் மக்கள் நலன் கருதியும் நமது இந்திய முன்னாள் குடி அரசுத் தலைவரும் .அணு ஆராய்ச்சி நிபுணருமான பொது சிந்தனையாளர் திரு அப்துல்கலாம் அவர்கள் வெளியிட்டுள்ள .கூடங்குள்ம் அணுமின நிலைய ஆராய்ச்சி பற்றிய செய்தி மிகவும் வரவேற்கக் தகுந்த செய்தி யாகும் .
    அவர் குரிப்புட்டுள்ளது போல் நன்மை தீமை இன்பம் துன்பம் எல்லா வகைகளிலும் வழிகளிலும் உள்ளது மக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் .நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமானதும் தேவையானதும் மின்சாரமாகும் இதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள் .
    இதை வைத்து மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை வெளியிட்டு குழப்புவது அரசியல் நோக்கமாகும் ,இந்த மாதிரியான விஷம் கலந்த செய்திகள் எப்போதும் நடந்து கொண்டுதான் உள்ளது இதை மக்கள் நம்பாமல் ஏற்றுக் கொள்ளாமல் நல்லதை செய்ய, நல்லது நடைபெற அனைவரும் துணை இருப்போம்
    இவை நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது திரு அப்துல்கலாம் அவர்கள் நல்லதைத்தான் சொல்வார் நல்லதைத்தான் செய்வார் என்ற நம்பிக்கையில் எல்லாம் இறைவன் செயல் என்று நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வோம் .நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் .
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
    அன்புடன் ஆன்மநேயன் –கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு