வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பு எது?

இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பு எது?

"உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக அதிநவீன உளவியல், வெற்றிகரமாக வாழ்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை அறிவியல் பூர்வமாக வகுத்துத் தந்ததுதான்" என்கின்றனர் அறிஞர்.

வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆக்க பூர்வமான சிந்தனையுடன் கூடிய அணுகுமுறை முக்கியமான தேவை என்று உளவியல் அறிஞரும், வெற்றி பெற்ற சாதனையாளரும் வலியுறுத்திக் கூறுகின்றனர்.

உணர்ச்சி என்பது என்ன? இதைப் பற்றி நன்கு ஆய்ந்து அறிந்தவர் வில்லியம் ஜேம்ஸ் என்ற பேரறிஞர். 1884-ல் உணர்ச்சியை விளக்கிக் கூறிய அவர், "உடலில் உணரக் கூடிய அளவுக்கு மாறுதல்களைத் தரும் மனநிலையே உணர்ச்சி" என்று வரையறுக்கிறார். ஒவ்வொரு உணர்ச்சியும் உடலிலே, ரத்த நாளங்களிலே, சதைப் பகுதிகளிலே, சுரப்பிகளிலே அந்தந்த மனநிலைக்குத் தக்கவாறு மாறுதல்களை ஏற்படுத்துகின்றன என்பதை அவர் அறிவியல் பூர்வமாக கண்டறிந்தார்.

உடலில் தோன்றும் 50 சதவிகித வியாதிகள் உணர்ச்சியால் தூண்டப்படும் வியாதிகளே (EMOTIONALLY INDUCED ILLNESS) என்ற முடிவுக்கு உளவியலாரும் மருத்துவர்களும் வந்துள்ளனர்.

முகம் சிவக்க, உடல் அங்கமெல்லாம் துடிதுடிக்க ஆவேசப்படும் பலரை கோப நிலையில் தினசரி பார்க்கிறோம். மூளையில் ரத்தநாளம் வெடித்து இறந்த வரையோ, ஸ்ட்ரோக் எனப்படும் தாக்குதலுக்கு ஆட்பட்டு செயல் இழந்தவரையோ நிச்சயம் நாம் பார்த்திருக்க முடியும்.

மனநலம் சீராக இருக்க ஆக்கபூர்வ சிந்தனை எப்போதும் வேண்டும். இது ஆரோக்கியத்தை நிலைப்படுத்தி வெற்றிக்கான வழியை வகுக்கிறது.

அமெரிக்காவின் சிந்தனைப் போக்கையே மாற்றிய மூன்று அறிஞர்கள் வில்லியம் ஜேம்ஸ், எமர்ஸன், தோரோ ஆவர்.

ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்க விரும்புவோர் அதில் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தே வெற்றியை அடைவர் என்கிறார் வில்லியம் ஜேம்ஸ்.

மனித ஆளுமையை இறைவனின் கருணை தொடும் போது மேன்மை அடையப்படுகிறது என்ற தமது அடிப்படைக் கொள்கையைக் கூறுகிறார் எமர்ஸன். மனதிலே வெற்றி அமைந்துள்ள சித்திரத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மூலமே வெற்றியை அடைய முடியும் என்கிறார் தோரோ.

இந்த மூவரும் அடிப்படையாக வலியுறுத்துவது ஆக்கபூர்வ சிந்தனையைத் தான்!

365 நாளும் வாழ வழி

வருடத்தில் 365 நாளும் வாழ வழி (HOW TO LIVE 365 DAYS A YEAR) என்ற தனது புத்தகத்தில் பிரபல அறிஞர் ஜான் ஏ. ஷிண்ட்லர் "உணர்ச்சிகளால் தூண்டப்படும் நோய்களை அறவே விரட்ட வேண்டும்" என்று அறிவுரை பகர்கிறார்.

சீரான வாழ்க்கை அமைந்திருந்தால் அதைத் தொடர்ந்து அனுபவியுங்கள். கரடுமுரடான வாழ்க்கை நிலை ஏற்பட்டால் நான்கு வழிகளை மனதில் கொள்ளுங்கள் என்று கூறும் அவர் நான்கு வழிகளை முறைப்படுத்தி கூறுகிறார்.

1. முதலில் எவ்வளவு மோசமான நிலையாக இருந்தாலும் வெளிப்படையாக அமைதியுடன் இருங்கள். முடிந்தால் நகைச்சுவையுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள் (இடுக்கண் வருங்கால் நகுக)

2. சினிமா பிலிம் போல உங்களுக்கு நேர்ந்த அவல நிலையை திருப்பித் திருப்பி மனத்திரையில் ஓட்டிப் பார்க்காதீர்கள். தன்னிரக்கப்படவே கூடாது.

3. தோல்வியை எப்படி வெற்றியாக மாற்ற முடியும் என்று பாருங்கள். சமநிலை, தைரியம், மகிழ்ச்சி போன்ற பண்புகளால் உங்கள் தோல்வியை சமாளித்த நீங்கள் வெற்றி பெறும் நிலையை பார்த்து அனைவரும் வியப்படைவர்.

4. கீழ்க்கண்ட கொடிகளை உங்கள் மனம் என்னும் கோட்டையில் பறக்க விடுங்கள்.

சமநிலை: (அமைதியுடன் இருப்பேன்)

வருவது வரட்டும்: (இந்த தற்காலிக சரிவை ஏற்றுக் கொள்வேன்)

தைரியம்: (இது மட்டுமல்ல; இனிவரும் தோல்விக்கும் தயார்)

மலர்ச்சி: (இந்த தோல்வியை வெற்றியாக மாற்றியே தீருவேன்)

மகிழ்ச்சி: (இன்னும் நல்ல முறையில் எல்லா மனிதரையும் அணுகுவேன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு