புதன், 7 ஜூன், 2023

அருட் சிவ மருந்து !

 *அருட் சிவ மருந்து !*


*இவ்வுலகிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அனுப்பப்பட்ட ஆன்மாக்கள் தனித்து வாழ முடியாது. ஆதலால் ஆன்மாக்கள் வாழ்வதற்கு உயிர் உடம்பு என்னும் "வாடகை வீடு" மாயை,மாமாயை,பெருமாயை என்னும் நிர்வாகத் தலைவிகளால் (மாயாசக்தி) கட்டிக் கொடுக்கப் படுகிறது*


*ஏழு பிறப்பு !*


*தாவரம்,ஊர்வன,பறப்பன,நடப்பன,அசுரர்,தேவர், மற்றும் இறுதியாக ஏழாவதாக மனிதப்பிறப்பு என்னும் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.*


 *ஆன்மாவைப் பற்றி உள்ளது மூன்று பிணி !* 


*இவ்வுலகில் ஆன்மாவைப் பற்றிக் கொண்ட பிணிதான் உயிர்ப்பிணி, உடற்ப்பிணி என்பதாகும், இந்த இரண்டு பிணிகளால் மரணப் பெரும்பிணி தொற்றிக் கொள்கிறது. அம் மூன்று பிணிகளை அகற்றுவதற்காகவே உயர்ந்த  அறிவு இறைவனால் மனிதப் பிறப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ளன.*


*இந்த மூன்று பிணிகளையும் சுமந்து கொண்டே தான் இவ்வுலக மனித தேக வாழ்க்கையில் ஆன்மாக்கள் மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என்னும் மூன்று ஆசைகளில் மூழ்கி மூழ்கி தேக இன்ப வாழ்வு,போக இன்பவாழ்வு,ஜீவ இன்ப வாழ்வு என்கின்ற சிற்றின்பத்தில் பற்றுக் கொண்டு வாழ்வதால், உயிர்ப்பிணியும், உடற்பிணியும்,மரணப் பெரும் பிணியையும் நீக்கிக் கொள்ள முடியாமல் நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,போன்றவை ஆன்மாவைப் பற்றிக் கொண்டு இறுதியாக உயிர்ப்பிணியும் உடற்பிணியும் நீக்கிக்கொள்ள முடியாமல் இறுதியாக  மரணப்பெரும்பிணி வந்து ஆன்மா வெளியே சென்று விடுகிறது,* 


*மறுபிறப்பு*


*மீண்டும்  வேறு ஒரு வாடகை வீடு கட்டிக் கொடுக்கப்படுகின்றன. அவ் வீட்டிலும் உயிர்ப்பிணியும்,உடற்ப்பிணியும் சேர்ந்து , மரணப் பெரும் பிணியும் பற்றிக் கொண்டு வாழ்வதுதான் ஆன்மாக்களின் மறுபிறப்பு என்பதாகும்.இவை தொடர்ந்து தொடர்கதையாக நடைபெற்றுக் கொண்டே வருகிறது.*


*வள்ளலார் பாடல்!*


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம் தன்னை எண்ணி


*நோவது இன்று புதிதன்றே என்றும் உளதால்* இந்த *நோவை நீக்கி*


ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் *மற்றை இறைவராலே*


ஆவதொன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே.! 


*மனித  குலத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் இந்த  தொற்று நோயை நீக்கவல்ல கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் ! அவரைத் தவிர வேறு எந்த கடவுளாலும் நீக்கமுடியாது  என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கின்றார் வள்ளலார் அவர்கள்.*


*மீண்டும் இறப்பு பிறப்பு  எடுக்காமல் வாழ வேண்டுமானால், உயிர்ப்பிணியும் உடற்பிணியும், மரணப் பெரும்பிணி என்கின்ற மூன்று பிணிகளையும் அகற்றி, பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்டு குடியிருக்கும் வாடகை வீட்டை  சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும், இதைத்தான் "அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர்" என்கிறார் வள்ளல் பெருமான்.*


*பொருள் தேகத்தை அருள் தேகமாக மாற்றுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய கொள்கையாகும்*


*சிறந்த மருந்து*


*உயர்ந்த அறிவு பெற்ற மனித ஆன்மாக்க ளை தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ள உயிர்ப்பிணியும் உடற்பிணியும் முதலில் நீக்க வேண்டும். அந்த இரண்டு பிணிகள் நீங்கினால்தான் மரணப் பெரும்பிணி தானாக நீங்கிவிடும்..*


*அந்த பிணிகளை நீக்கவல்ல சிறந்த மா மருந்தை, தன்னுடைய  உயர்ந்த அறிவைக் கொண்டும் அருளைப் கொண்டும் கண்டு பிடித்தவர் வள்ளல்பெருமான் ஒருவரே!*


*வள்ளலார் அகவல் !*


*என்றே எனினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞானமருந்தே !*


*முதலில் நரை, திரை,பிணி மூப்பு,பயம்,மரணம் வராமல்  உடம்பை இளமையோடு இருக்க பாதுகாக்க வேண்டும் என்கின்றார், அதற்கு வேண்டிய  உபாயங்களான,இந்திரிய கரண ஜீவ ஆனம ஒழுக்கம் என்னும் நான்கு ஒழுக்க நெறிகளை வள்ளலார் கண்டுபிடித்து பின் அவற்றைக் கடைபிடித்து இளமையோடு  வாழ்ந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து காட்டியுள்ளார்.*


*வள்ளலார் போல் கடைபிடித்தால் இளமையோடு இருக்கலாம் என்பது சத்தியம்.*


*உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்* அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ *மருந்தே !* ( அகவல்)


*மரணப் பெரும்பிணி* வாரா வகைமிகு கரணப் பெரும்திறல் காட்டிய *மருந்தே !"*

(அகவல்) 


*ஆன்மாவைப் பற்றிக் கொண்டுள்ளது உயிர்ப்பிணி உடற்ப்பிணி மரணப் பெரும்பிணியாகும். மேலும் அந்த மூன்றையும்  பற்றி உள்ளது, ஐந்து மலங்களான ஆணவம்,மாயை,மாமாயை,பெருமாயை,கன்மம் என்னும்  ஐந்து மலங்களாகும் அம்மலங்களை் யாவையும் அருட்சிவ மருந்தை கொண்டே நீக்க வேண்டும்.*


*அகவல் வரிகள்*


மலப்பிணி தவிர்த்து அருள் வலந்தரு கின்றதோர் நலத்தகை அதுஎன நாட்டிய மருந்தே ! (அகவல்)


*மருந்து கிடைக்கும் இடம்!* 


*உடற்பிணியையும்,உயிர்ப்பிணியையும்,மரணப் பெரும்பிணியையும் வராமல் தடுக்க வேண்டும்*


*இவ்வுலகில் வெளியில் எங்கு சென்று தேடினாலும் காணக் கிடைக்காத அற்புத மருந்து ஆனந்த மருந்து அதுவே அருட் சிவ மருந்து.* 


*அம் மருந்து இருக்கும் இடத்தை அறிந்து தெரிந்து அனுபவித்து, மரணத்தை வென்று*,

*ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் தெரிவிக்கின்றார் வள்ளலார்* 


*மேலும் என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே  என்பதை தன்னுடைய அறிவு விளக்கத்தாலும், அருள் விளக்கத்தாலும் அறிந்து, அன்பு தயவு கருணையுடன் மருந்து இருக்கும் இடத்தையும்,அவற்றை அறிந்து தெரிந்து  அருந்தும் வழிமுறைகளைப் பற்றியும் அருட்பெருஞ்ஜோதி அகவலிலும், ஆறாம் திருமுறை பாடல்களிலும் தெளிவாகத் தெரிவிக்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்*


*சிற்சபை நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே !*(அகவல்) 


*சிற்சபை என்பது மனித சிரநடுவில் ஆன்மா இயங்கும் இடமே சிற்சபை என்பதாகும், அங்குதான் அருள் மருந்து என்கின்ற, அற்புத ஆனந்த மருந்து பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்து பூட்டி வைக்கப்பட்டு இருக்கின்றது*


,*அப் பெட்டியைச் சுற்றி அறியாமை, அஞ்ஞானம் என்னும் ஏழு மாயா வண்ணத் திரைகளால் மறைக்கப் பட்டுள்ளன.*


*திரைகளை நீக்கும் வழிகள்!* 


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பார் வள்ளல்பெருமான்*


*மோட்ச வீட்டின் திறவுகோல் பெறுவதற்கு ஜீவகாருண்யம் ரொம்ப ரொம்ப முக்கியம்,ஜீவ காருண்யம் என்றால் என்ன ?* 


*ஜீவன் ( உயிர்) என்கின்ற உயிர்களுக்கு, ஜீவர்களால் உண்டாகும் பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம்,கொலை போன்ற துன்பங்களை, அன்பு தயவு கருணை கொண்டு விளம்பரம் இல்லாமல் இயற்கை உள்ளத்தோடு தயவாலே, அத் துன்பம் துயரம் அச்சம் பயத்தை போக்க வேண்டும், தவிர்க்கப்பட வேண்டும்,*


*மேலும் அச் சீவன்களுக்கு ஆன்ம உருக்கும், ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்ம மகிழ்ச்சி, ஆன்ம இன்பத்தை உண்டாக்குவதே ஜீவகாருண்யம் என்பதாகும்*


*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும்  சிவமே ! (அகவல் வரிகள்) என்பார்*


*ஜீவன்களுக்கு உண்டாகும் ஏழுவகையான துன்பங்களை தங்கள் தங்கள் தகுதிக்குத் தகுந்தவாறு தக்கவாறு, தக்க நேரத்தில் உபகாரம் செய்பவர்களுக்கு மட்டுமே மோட்ச வீட்டின் உள்ளே பெட்டியின் திறவுகோல் என்னும் சாவி கிடைக்கும்,பெட்டியைத் திறந்து அதில் உள்ள அருளை அருந்தினால் மட்டுமே, உயிரும் உடம்பும் பாதுகாக்கப்படும்* 


*சாவிமட்டும் கிடைத்தால் அருள் நிறைந்த பெட்டி திறக்குமா என்றால் திறக்காது !*


*ஜீவகாருண்யத்துடன்,இடைவிடாது சத்விசாரம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அவர் அனுமதி ( நற்சான்று) பெற வேண்டும். பரோபகாரம்! சத்விசாரம்! என்கின்ற இரண்டும் சமமாக கடைபிடித்து வந்தால்தான் பெட்டியின்  பூட்டைத் திறந்து உள்ளே சென்று "அருள் சிவ ஞான மருந்தை" அருந்தி மரணத்தை வெல்ல முடியும் என்பதே வள்ளல்பெருமகனாரின் சத்திய வாக்காகும்*


*வள்ளலார் பாடல்!*


பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண்டு இது நீ

பெறுக என அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்


எட்டிரண்டும் தெரியாதே என் என்கையிலே கொடுத்தீர்

இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்


அட்டிசெய நினையாதீர் *அரைக்கணமும்* தரியேன்

அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக


வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை

மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.! 


*பசித்த ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க வடலூரில் சத்திய தருமச்சாலை தோற்றுவித்தும், மற்றும் உடற்ப்பிணி, உயிர்ப்பிணிகளைப் போக்கியும், இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டும், பஞ்ச பூத உணவுகளை உட்கொள்ளாமலும்,ஊற்றெழும் கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து அழுது புலம்பி கடவுளைக் காணவேண்டும் என்கின்ற தீராத காதல் உணர்வால், தூங்காமல் விழித்து,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை  எதிர்பார்த்து எதிர்பார்த்து வாழ்ந்து வந்த வள்ளல்பெருமானுக்கே திறவுகோல் கிடைத்தும் மேல்வீட்டுக் கதவைத் திறக்க தாமதப்படுத்தி உள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,* 


*காலதாமதம் செய்யும் ஒவ்வொரு அரை  கணத்திற்கும் வட்டியிட்டு வாங்குவேன் என ஆண்டவரையே எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் வள்ளல்பெருமான்*


*அருள் வழங்கி ஆட்கொண்டார்! பாடல்!*


சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது

தூயநல் *உடம்பினில்* புகுந்தேம்


இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே

*இன்புறக் கலந்தனன்* அழியாப்


பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்

பரிசு பெற்றிடுக பொற் சபையும்


சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்

தெய்வமே வாழ்கநின் சீரே.!


*மேலும் ஒருபாடல்!*


பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன் எனை


*உற்றே கலந்தான்* *நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்*


எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்


துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.!


*இதுவரையில் எவரும் பெற்றிடாத அருட் சிவ மருந்து என்னும் ஞான மருந்தை அருந்தி ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு, சுத்த பிரணவ ஞனத்தேகத்தோடு என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்*


*நமக்கு தொடர்ந்து உண்டாகும் பசிப்பிணி, உடற்ப்பிணி, உயிர்ப்பிணி,மரணப்பெரும்பிணி யாவையும் போக்குவதற்கு அருட்சிவ மருந்து என்னும் அருள் ஆனந்த மருந்தை பெற்று உட்கொண்டு மரணத்தை வென்று வள்ளல்பெருமான் போல் வாழ்வாங்கு வாழ்வோம்*


*வள்ளலார் அனுபவித்த மருந்து!*


*அம்பலத்தரசே அருமருந்தே ஆனந்தத் தேனே அருள் விருந்தே !*


அருட்பெருஞ்ஜோதி மருந்து - என்னை 

ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து..

பொருட் பெரும் போக மருந்து- என்னைப் புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து....


தொடரும்..


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு