செவ்வாய், 2 நவம்பர், 2021

ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளை நானே !

 *ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளை நானே !*


*ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியின் இன்ப உணர்ச்சியில் ஒன்று சேரும்போது தாயின் வயிற்றில் கரு  உருவாக்கப்படுகிறது. கரு வளர்ந்து  உருவமாகி உருப்புக்கள் வளர்ந்து தத்துவங்கள் தழைத்து தன்னைத்தானே இயங்கும் வரையில் தாயின் கருவறையில் இருந்து  பத்தாவது மாதத்தில்  குழந்தை முழு வளர்ச்சி பெற்று கருவறையை விட்டு வெளியே வந்து இவ்வுலகைப் பார்க்கிறது. தாய் வேறு குழந்தை வேறாக பிரிக்கப்படுகிறது.* 


*குழந்தை வேறாக பிரிந்தாலும் தாய் தந்தையரின் அரவணைப்பில் வளர்ந்து வருவது உலகம் அறிந்த உண்மையாகும். அக்குழந்தையிடம் தந்தை அன்பைக் காட்டுகிறார் தாய் பாசத்தைக் காட்டுகிறார்*. 


*குழந்தை வளர்ந்து தனக்கு கொடுக்கப்பட்ட தேகசுதந்தரம் ஜீவசுதந்தரம் போகசுசந்தரம் என்னும் மூன்றுவகையான சுதந்தரத்தை பெற்று வாழ்கின்றபோதும் தாயிடம் உண்மையான பாசத்தையும் தந்தையிடம் உண்மையான அன்பையும் காட்டி கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியுடன் பெருமைப்படும் அளவிற்கும் பாராட்டும்படிக்கும்  வாழ்ந்தால் மட்டுமே தாய் தந்தையர் அக்குழந்தையை  *நல்லபிள்ளை* என்று பாராட்டிப் போற்றப்படுவார்கள் .


*தாயிடம் ஜீவ தன்மையுள்ள உயிர் இரக்கமுள்ள பாசத்தையும் தந்தையிடம் அறிவுசார்ந்த உண்மையான அன்பையும் கொடுத்து வாழ்கின்ற குழந்தைகள் தாய் தந்தையரால் மகிழ்ச்சியுடன்  பாராட்டிப் போற்றப்படுவார்கள். தாய் தந்தையரால் போற்றப்படுகின்ற பாராட்டப்படுகின்ற குழந்தைகளை உலகமே பாராட்டி போற்றப்படும் என்பதுதான் உண்மையாகும்*.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள்!*


*தந்தை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இவ்வுலகிற்கு  அனுப்பி வைக்கப்பட்ட ஆன்மாக்கள் மாயை என்னும் தாயின் அரவணைப்பில் ஐந்துபூத அணுக்களின் கூட்டுச்சேர்க்கையின் அன்பால் உணர்ச்சியால் (உஷ்ணத்தால்)   உடம்பையும் உயிரையும் எடுத்து இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு வருகிறது.*  


*உடம்பு உயிர் எடுத்த உயர்ந்த அறிவுடைய மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள் மாயை என்னும் தாயிடம் உண்மையான பாசத்தையும் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் உண்மையான அன்பையும் காட்ட வேண்டுவதே ஆன்மாக்களின் இயற்கை குணமாகும்.* 


*இந்த உண்மைத் தெரியாமல் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மனித ஆன்மாக்கள் பொய்யான தாய் தந்தையரைத் தொடர்புகொண்டு அறியாமையாலும் அஞ்ஞானத்தாலும் மறைதியாலும் தீவினையாலும்  கரணங்களான மனம் புத்தி சித்தம் அகங்காரத்தின் செயல்களால் இந்திரியங்களான கண் காது மூக்கு வாய் உடம்பு என்னும் உருப்புகளின் துணைக்கொண்டு மனம்  போனபடி பொய்யான வாழ்க்கையில் வாழ்ந்து  (பிறந்து பிறந்து இறந்து இறந்து) உருமாற்றம் அடைந்து கொண்டே உள்ளார்கள்.* 


*உண்மையான தாய் தந்தையர் யார் ? என்பதையும் அவர்களை எவ்வாறு ?  தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் அருளைப்பெறும் வழியையும் மரணத்தை வெல்லும் கல்வியும் கற்கவேண்டி மனிததேகம் பெற்ற ஆன்மாக்களுக்கு சொல்லி தெளிவுபடுத்தி  புரியவைக்கவே வள்ளலார் இவ்வுலகிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவராகும்.*


*வள்ளலார் பாடல்!*


மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்

மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்


இனமுற என் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்

இருந்திடு நீ என்சொல்வழி ஏற்றிலை 

ஆனாலோ


தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்

சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே


நனவில்எனை அறியாயோ யார்என இங் கிருந்தாய்

*ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே*.!  


*மனம் எனும் பேய்க்குரங்கை அடக்கி தன் உண்மை நிலை அறிந்து எல்லாம்வல்ல தனித்தலைமை பெரும்பதியான தலைவனை அறிந்ததால் அந்த தனிப்பெருங் கருணை உள்ள தலைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வள்ளலாருக்கு ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளை என்ற பெயரையும் பட்டத்தை வழங்கிஉள்ளார்*.


*மேலும் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டு தொடர்பு கொண்டு இணைந்து சுத்த உஷ்ணத்தினால் சிற்சபையை மறைத்துக்கொண்டுள்ள திரைகள் விலகி   அருளைப்பெற்று  பிறப்பு இறப்பு அற்ற (அருள் ஒளிஉடம்பு) மரணத்தை வெல்லும் தகுதியைப் பெற்றுக் கொண்டதால் தனக்கு உயிரையும் உடம்பையும் கொடுத்த மாயை என்னும் தாயின் உபசரிப்பு இனிமேல் எனக்கு வேண்டாம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே  எனக்கு எல்லாம் உபகரிக்கின்றது ஆகையினால் தந்தையுடன் செல்ல எனக்கு விடையும் அனுமதியும் வழங்க வேண்டும் என தாயான மாயையிடம் கேட்கிறார் வள்ளலார் அதன் விளக்கப்பாடல்*


*வள்ளலார் பாடல்!*


 பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை *நீதான்*

*பெற்றவுடம் பிது* சாகாச் சுத்தவுடம் பாக்கி

ஒருஞானத் 


*திருவமுதுண் டோங்குகின்றேன்* இனி நின்

*உபகரிப்போர் அணுத்துணையும்* உளத்திடைநான் விரும்பேன்


*அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின்றது* நீ

அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க


தெருளாய உலகிடை என் சரிதமுணர்ந் திலையோ

*சிற்சபை என் அப்பனுக்குச் *சிறந்தபிள்ளை நானே.!*


மேலே கண்ட பாடலிலே மிகவும் தெளிவாக வள்ளலார் தெரியப் படுத்துகின்றார் 


*ஞானசபைத் தலைவனுக்கு சிறந்த பிள்ளையாகவும்  நல்லபிள்ளயாகவும் வாழ்ந்து அருளைப்பெற்று மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்துள்ளார் வள்ளலார். அதே நேரத்தில் மாயையால் படைக்கப்பட்ட உயிர் இனங்களுக்கு எந்தவிதமான துன்பம் துயரம் அச்சம் பயம் தராமல் அன்பு தயவு கருணை இரக்கம் கொண்டு ஜீவ காருண்ய உணர்வோடு ஜீவ நேயத்துடனும் ஆன்மநேயத்துடனும் வாழ்ந்ததால் *தாயான மாயையானது* தடை இல்லாமல் தந்தையுடன் அனுப்பி வைக்கின்றது என்ற உண்மையை  உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.


*நாமும் ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளையாக வாழ்ந்து அருளைப்பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு