வெள்ளி, 15 அக்டோபர், 2021

ஆசை உண்டேல் வம்மின் இங்கே !

 *ஆசை உண்டேல் வம்மின் இங்கே !*


*வள்ளலார் பாடல்!*


*ஆசைஉண்டேல் வம்மின் இங்கே* *அருட்சோதிப் பெருமான்*

*அம்மையுமாய் அப்பனுமாய்* *அருளும்அரு ளாளன்*


ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்


தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே


*மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்*

*முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.!* 


*வள்ளலார் மனித குலத்தை பார்த்து ஆசை உண்டேல் வம்மின் இங்கே என்று அன்புடன் அழைக்கின்றார்*.


*எங்கே ? அழைக்கின்றார்* *எதற்காக அழைக்கிறார் ?*


*வடலூர் பெருவெளிக்கு  அழைக்கின்றார்*


*வடலூர் பெருவெளிக்கு வந்தால் நல்ல வரம் பெறலாம் என்கிறார்*  


மனிதர்கள் நல்ல வரம் பெறுவதற்காக உலகம் எங்கும் உள்ள ஆன்மீக ஆலயங்களுக்கும் தேவாலயங்களுக்கும் சர்சுக்களுக்கும் மசூதிகளுக்கும் மற்றும் புண்ணிய ஸ்தலங்கள் என்று சொல்லப்படும் எல்லா இடங்களுக்கும் சென்று தங்கள் குற்றம் குறைகளை நிவர்த்தி செய்து மன்னித்து அருள்புரிய வேண்டும் என்று  வேண்டி வேண்டி  அலைந்து அலைந்து திரிந்து திரிந்து அவதிக்கு உள்ளானார்களேத் தவிர எந்த கடவுளாலும் எந்த இடத்திலும் நல்ல வரம் வழங்க முடியவில்லை. 


*ஆதலால் நல்ல வரம் பெற்று இன்பம் அடைய ஆசை உள்ளவர்கள் இங்கே வாருங்கள் என ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார்.* *நல்ல வரம் வழங்கும் ஒரே இடம் வடலூர் மட்டுமே!*


*எனக்கு அருள் வழங்க வருகிறார்* 


நானும். உங்களைப்போன்று பல கடவுள்களைத்தேடி  அலைந்தேன் எந்த கடவுள்களாலும் எந்த பயனும் எந்த இன்பமும் எந்த லாபமும் கிடைக்கவில்லை *இறுதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மை நிலை அறிந்து இடைவிடாது தொடர்பு கொண்டேன் என் உண்மை ஒழுக்க நிலை அறிந்து அருள் வழங்குவதற்கு நான் இருக்கும் இடம்தேடி வருகின்றார்* 


*வள்ளலார் பாடல்!*


*பாதி இரவில்* *எழுந்தருளிப் பாவி யேனை* *எழுப்பிஅருட்*

*சோதி அளித்தென் உள்ளகத்தே* *சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்*


*நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும்பேற்றை*

*ஓதி முடியா* *தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே*.!


என்னை பாதி இரவில் எழுப்பி

*எனக்கு அருள்ஜோதி வழங்கி என் உடம்பிலே உயிரிலே உள்ளத்திலே கலந்து துலங்குகிறாய் நீதி நடம் செய்கின்ற அழியாத நிதியை வழங்கியுள்ளாய் நான்பெற்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வான அருள்பூரண லாபத்தைப்பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை*

எனக்கு மட்டும் கிடைத்தால் போதாது என்போல் உலகம் முழுவதும் உள்ள மனிதகுல ஆன்மாக்களும் பெறவேண்டும் என்ற கோரிக்கையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வைக்கிறார்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு *நான் அமர்ந்து அருள்வழங்க பொதுவான ஒரு சமரச சுத்த சன்மார்க்க சத்திய  ஞானசபையை தோற்றுவிக்க வேண்டும் என ஆணையிடுகிறார்*.


*அருள் வழங்கும் ஒரே தெய்வம் !*


எல்லா உலகங்களையும் எல்லா  ஆன்மாக்களையும் எல்லா உயிர்களையும் எல்லாப் பொருள்களையும் மற்றை எல்லாவற்றையும் *படைத்தல் காத்தல் துரிசுநீக்கல் அருளல் பக்குவம் வருவித்தல்* போன்ற ஐந்தொழில் செய்கின்ற ஒரே கடவுள் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே* ! *அவரைக் கண்டேன் களித்தேன் களிப்புற்றேன் அருள் பெற்றேன் கலந்து கொண்டேன்* என்கிறார்


*அந்த இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் வழங்க வேண்டும் என்பதற்காக ஆண்டவர் ஆணைப்படி 1872 ஆம் ஆண்டு வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவித்துள்ளார் வள்ளலார்.*


*வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கு வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று உலகில் உள்ள எல்லோரையும் வாருங்கள் வாருங்கள் என அன்போடு அழைக்கின்றார்.*

*நீங்கள் வருவதோடு மற்றவர்களையும் அழைத்து வாருங்கள் என அன்புடன் கருணையோடு சொல்லுகின்றார்.*


*வள்ளலார் பாடல்!* 


*சத்தியவான் வார்த்தைஇது* *தான்உரைத்தேன் கண்டாய்*

*சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்*


*இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்*

*இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்*


*சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்*

*தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்*


*செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்*

*திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!*


மேலே கண்ட பாடலில் வள்ளலார் தெளிவாகச் சொல்லுகிறார்.


*இது நான் சொல்லவில்லை சத்தியவான் வார்த்தையாகும்* *யாரும் சந்தேகப் படவேண்டாம் இனிவரும் தினங்கள் யாவும் இன்பம் உறும் தினங்கள் என்கிறார் அறியாமையாலும் அஞ்ஞானத்தாலும் அலட்சியத்தாலும் இறந்துபோனவர்களும் மீண்டும் மனிதப்பிறப்பு எடுத்து வடலூருக்கு வந்தால் போதும் இன்பம் பெறும் தினங்களாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்கி ஏற்றுக்கொள்வார்*


*காரணம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செங்கோல் எங்கும் செல்கின்றது* 


வள்ளலார் இறுதியாக வடலூரைப்பற்றிச் சொல்லுகிறார்.


*இதுதருணம் தொடங்கி  வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகில் கருதியவண்ணம் பெற்று களிப்படைவதும் அன்றி இறந்தவர் உயிர்பெற்று எழுதல் மூப்பினர். இளமை பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பு அடைவீர்கள் என்கிறார்*


மேலும் எல்லோருக்கும் தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்குக் கோடி கோடிபங்கு அதிகமாக உதவி கிடைக்குபடியான இடம் இந்த இடம் இது ஆண்டவர் கட்டளை என தெளிவு படுத்துகிறார்.


*நாம் இனி ஆண்டவரைத் தேடி புறத்தில் அலையவேண்டாம் வடலூர்வந்தால் பெற வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம்*.


*வள்ளலார் பாடல்*!


அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்


பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்


இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்


தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்*.! 


*நம் சிரநடு சிற்சபை தோற்றமே சத்திய ஞானசபையாகும் அதன் உள்ளே விளங்கும் உள் ஒளியே  அருட்பெருஞ்ஜோதியாகும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு