திங்கள், 29 ஜூன், 2020

இன்பம் துன்பம் என்றால் என்ன ?

*இன்பம் துன்பம் என்றால் என்ன ?*

இவ்வுலக மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் என இரண்டு வகை உள்ளது..

நாம் இன்பம் என்பதும்.துன்பம் என்பதும் இரண்டுமே துன்பம் தரும் வாழ்க்கைதான்.

மரணம் வராமல் வாழக்கூடிய வாழ்க்கை மட்டுமே இன்பம் தரும் வாழ்க்கையாகும்.

இவ்வளவு காலமாக வள்ளலார் சொல்லிய வண்ணம் ஜீவகாருண்யம் செய்தேன்.நிறைய சமரச சன்மார்க்க சங்கங்களைத் தோற்றுவித்து அன்னதானத்திற்கு உதவிகள் செய்தேன் .ஜீவகாருண்ய செம்மல் என்ற பட்டமும் பெற்றேன்..

இறுதியில் மரணம் வந்து என் உயிரும் பிரியப்போகிறது .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை கைவிட்டுவிட்டார் என்று புலம்பிக் கொண்டு இருப்பதால் எந்த பயனும் இல்லை.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மைக் கைவிட வில்லை.நாம்தான் ஆண்டவரை கை விட்டு விட்டோம்..என்பதை கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்...

*இறந்தவரை இந்த உலகம் போற்றினாலும் இறைவன் போற்றுவதில்லை.*.

சாகாதவனே சன்மார்க்க என ஆணித்தரமாக சொல்லி உள்ளார் வள்ளலார்.

ஆன்மாவின் உயிர்.உடம்பு பிறப்பும் இறப்பும் உண்டாவதுதான் பெரிய துன்பமாகும்...பிறப்பு இல்லாமல் வாழ்வதுதான் பெரிய இன்பம்...அதுதான் பேரின்பம் என்பதாகும்.

மீண்டும் இறப்பு பிறப்பு இல்லாமல் வாழ்வதற்குகாகவே உயர்ந்த அறிவுள்ள மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டது..

இதை அறியாமல் நாம் சமய மதக் கொள்கைகள் சொல்லியவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சன்மார்க்கத்தையும் பிடித்துக் கொண்டு வாழ்வதால் தான் மரணம் வருகின்றது...

வள்ளலார் பாடல் !

முயன்று உலகில் பயன் அடையா  மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே

இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலை பெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர்

துயின்று உணர்ந்து தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர்

பயின்று அறிய விரைந்து வம்மின் படியாத படிப்பைப் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே !

என்னும் பாடலிலே தெளிவாக விளக்கி உள்ளார்.

பலகாலம் முயன்றும் பயன் அடையாத மூடமான மதங்களின் கொள்கைகளைப் பிடித்துக் கொண்டு அழிந்து போகாதீர்கள்.

இப்போது உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் அருளாலே உலகத்தை மாற்றுவதற்காக.உலக மக்களைக் காப்பாற்றுவதற்காக. எழுந்து அருளல் இதுவே தருணம்.இவை தொடர்ந்து நடைபெறும்.

இறந்தவர்களையும் எழுப்பித் தருவார்.எனவே இனிமேலாவது நான் சொல்லுவதை கவனமாக கேட்டு வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளலார்...

நான் சொல்லும் படிப்பு அதாவது கல்வி.இதுவரையில் யாரும் படிக்காத படிப்பு.சொல்லித்தராத கல்வி.அதுதான் சாகாக்கல்வி என்கிறார்.

மேலும் சுகமும் துன்பமும் என்னவென்றே தெரியாமல் வாழ்க்கையை வீண் அடித்துக் கொண்டு உள்ளீர்கள்.இனிமேலாவது தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொள்ளுங்கள்.என்கிறார் வள்ளலார்.

பாடல் !

சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகில்
சூது அறிந்தீர் வாது அறிந்தீர் தூய்மை அறிந்திலரே

இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்தீர்
என் புரிவீர் மரணம் வரில் எங்குறுவீர் அந்தோ

அகம் அறியீர் அனகம் அறிந்து அழியாத ஞான
அமுதம் வடிவம் பெறலாம் அடைந்திடுமின் ஈண்டு

முகம் அறியார் போல்இருந்தீர் என்னை அறியீரோ
முத்தர் எலாம் போற்றும் அருட் சித்தர் மகன் நானே !

மேலே கண்ட பாடலில் தெளிவான தமிழில் அற்புதமாக தெரிவிக்கின்றார்.

ஒவ்வொருவரின் அகத்தில் உள்ள ஆன்மாவான உள் ஒளியைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று அந்த அருளை உடல் முழுவதும் (அனகம் ) பரவச்செயது ஊன உடம்பை அருள் ஒளி உடம்பாக (அமுதவடிவம் ) மாற்றிக் கொள்ளலாம். வாருங்கள் என அழைக்கின்றேன் .

என்னை அறியாதவர்போல் இருக்கின்றீர் நான் யார் தெரியுமா ? நீங்கள் எல்லாம் வாழ்த்தி வணங்குகின்ற சித்தர்கள் முத்தர்கள் எல்லோரும் போற்றும் அருட.பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்சித்தர் மகன் நான் என்பதை தெளிவுப் படுத்துகின்றார்..

நமது வாழ்க்கை !

நாம் ஆண் பெண் என்ற இரண்டு உருவங்களின் இன்பத்தில் தான் பிறந்தோம்.இன்பத்தில் பிறந்த நாம் இன்பம் அடைவது தானே நியாயம்.துன்பம் அடைவதற்கு என்ன காரணம்.?

நாம் இவ் உலகியலில் தோன்றியதில் இருந்து.உற்றவர்.பெற்றவர் மற்றவர் உடமைகள் உலகியலில் உள்ள சாதி.சமய.மதங்களின் கொள்கைகள் .பழக்க வழக்கங்கள் எல்லாம் நம்மைப் பற்றிக் கொண்டது அதுவே நமது அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளாக நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளன.

அத்திரைகளை நீக்க வேண்டும் என்கிறார் வள்ளலார் அத்திரைகளை எப்படி நீக்குவது ?  அத்திரைகள் நீங்கினால் மட்டுமே ஆன்மாவைத் தொடர்பு கொள்ள முடியும்.

ஆன்மாவின் திரைகள் நீங்கினால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு கொள்வார்.

தாய் தந்தையின் அன்பு என்னும் இன்பத்தில் இணைந்து சுக்கிலம் தோன்றி உயிர் உடம்பு பிறந்தது போல்...ஆன்மாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் அன்பு என்னும் இன்பத்தில் இணைந்து இன்பம் அனுபவிக்கும் போது அங்கே அருள் சுரக்கும்..

அந்த அருளால் உடம்பும் உயிரும் அழிக்காமல்..ஒளியாக மாற்றம் அடையும்..பஞ்ச பூத அணுக்களால் தோன்றிய உடம்பும் உயிரும் அருள் உடம்பாக மாற்றப்படும்..

இதைத்தான் ஞான சரியை முதல் பாடலிலே தெரிவிக்கின்றார்...

ஞானசரியை முதல் பாடல் !

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து  ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு

 நனைந்து நனைந்து அருள் அமுதே நன்நிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்து வனைந்து ஏத்துது நாம்  வம்மின் உலகியலீர்
*மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்ணர்*

 புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !

என்கிறார்...

புனைந்து உரையேன் பொய் புகலேன் என்கிறார்..அதாவது மற்றவர் போல் உண்மையை மறைத்து சொல்லவில்லை.பொய்யான கற்பனைக் கதைகள் போல் சொல்லவில்லை.

என் உரிமை நாயகன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஆனந்த கண்ணீர் கொண்டு அனைந்தேன் .

அழியாத நன் நிதியாகிய அருள் அமுதைந வாரி வாரி வழங்கி என் உடம்பு முழுவதும் நனைந்து நனைந்து பொங்கி எழும் பொருட்டு நிறைப்பி விட்டார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருமையும் புகழையும் நினைந்து நினைந்து.அதனால் கிடைக்கும் அருள் இன்பத்தை உணர்ந்து உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து.அன்பே நிறைந்து அனுபவித்தேன்.

அதனால் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றேன்..நீங்களும் அந்த மரணம் இல்லாப் பெருவாழ்வைப்  பெறலாம்..அதற்கு எந்த தடையும் இல்லை..வாருங்கள் வாருங்கள் என உலக மக்கள் அனைவரையும் அழைக்கின்றார்.

அருளைப் பெறுவதற்கு தடையாக இருப்பவை எவையோ அவை எல்லாம் நம்மிடம் இருந்து விளக்கிக் கொள்ள வேண்டும்..

எவை எல்லாம் உலக வாழ்க்கைக்கு நமக்கு சாதகமாக. உற்ற துணையாக இருக்கின்றது என்று நினைத்தோமோ .அவை எல்லாம் தடையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பாடலை பாருங்கள் !

புகுந்தருணம் இதுகண்டீர்  நம்மவரே நான்தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர்

உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற துணை அன்றே

மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோற்றேனே மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே

தகுந்த தனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே !

என்னும் பாடலில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

நம்மை படைத்தவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அவரிடம் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதற்காகவே மனிதப் பிறவி கொடுக்கப்பட்டது..

இந்த உண்மைத் தெரியாமல் நம்மை அழித்துக் கொண்டு இருக்கும் பற்றை எல்லாம் பற்றிக் கொண்டு உள்ளோம்..

எனவேதான் பற்றிய பற்று அனைத்தும் விட்டு அம்பலத்தில் ஆடுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பற்றை பற்றிக் கொள்ள வேண்டும்..என்கிறார்..

எனவே தான் இடைவிடாது ஜீவ காருண்யமும் சத்விசாரம் செய்யுங்கள் என்கிறார் வள்ளலார்.

ஜீவகாருண்யம் அன்பை பெறுவதற்கு... சத்விசாரம் அருளைப் பெறுவற்கு என்பதின் உண்மையை உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

அவ்விசாரம்...பரம் அபரம் என்று இருவகையாக இருக்கின்றது.. இவற்றில் பரம் என்பது...பரலோக விசாரத்தை குறிப்பதாகும்.அபரம் என்பது இகலோக விசாரத்தை குறிப்பதாகும்.

சத்விசாரம் என்பது பரலோக விசாரத்தையே குறிக்க வந்தது..

தண்ணீரில் உள்ள பாசியை நீக்குவது போல் நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடி இருக்கிற திரைகளை நீக்க வேண்டும்.அந்த திரைகளை நீக்க அதிகமான அதிதீவிர  சுத்த உஷ்ணம் வேண்டும்.வேறுவிதமான உஷ்ணத்தால் நீக்க முடியாது.அந்த உஷ்ணம் எதனால் உண்டாகும் எனில்...

உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமான ஆன்மாவைத் தொடர்பு கொண்டு..தோத்திரம் செய்கின்றதாலும்.தெய்வத்தை இடைவிடாது நினைக்கின்றதாலும் அதிக உஷ்ணம் உண்டாகும்.அந்த உஷ்ணத்தினால் ஆன்மாவை மறைத்துக் கொண்டு திரைகள் ஒவ்வொன்றாக விலகும்..

இதுதான் துக்க நிவர்த்தி என்கிறார். வள்ளலார்.துக்கம் என்னும் துன்பம் நீங்கினால் இன்பம் தானே பொங்கும். அந்த இன்பம் தான் பேரின்பம்.அதுவே பேரின்ப வாழ்வு என்பதாகும்..மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்...

பாடல் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம் செய்வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்

அன்புடையீர் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனகவடிவாகிப்

பொன்புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரியதாம் மணியே சிற்சபையின் மாமருந்தே
என்று உரைமின் தீமை எலாம்
தவிர்த்தே !

மேலே கண்ட பாலில் இன்பம் பெறுவதற்குண்டான வழியைச் சொல்லுகின்றார்.

தீமையை ஒழித்து.அருள் பெறும் நன்மை யைக் காட்டுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் கல்வியே சாகாக்கல்வியாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு