புதன், 7 பிப்ரவரி, 2018

வள்ளலாரைப் பற்றி ஒரு சிறிய செய்தி !

 வள்ளலார் பற்றிய இன்று ஒரு துளிச்செய்தி!

பரதேசி என்றால் பரம்பொருள் நாட்டம் கொண்டார் என்று பொருள். வள்ளற் பெருமான் ஆரம்ப காலத்தில், இராமலிங்க பரதேசி என்றுதான் அழைக்கப்பட்டார். இன்றும் பழைய ஆவணங்களிலும், வரலாற்றுக் கோப்புகளிலும் இந்த உண்மையை நாம் காணலாம்.

பரதேசி நிலையில், சமாதிவரை முயன்று, இறுதியாகத் தங்கள் முயற்சிகளை நிறுத்திக்கொண்டு,  முடிவில் சிவத்தோடு அந்தச் சமாதி நிலையில் ஐக்கியமானவர்களே நாயன்மார்கள். இதற்கு முக்தி நிலை என்று பெயர்.

இதுபோலவே, அனைத்துச் சமயமத மார்க்கத்தார்களும், அவரவர்களின் கர்த்தாக்களின் பேரில் பக்தி வயப்பட்டு முடிவிலே முக்தியில் ஐக்கியம் ஆகின்றார்கள்.

இந்த முக்தியாகிய சமாதியில் மூர்ச்சை ஆகாமல், அந்த முக்தி நிலையைத் துவக்கமாகக் கொண்டு, அதற்கும் மேலாகப் பல அருள் நிலைகளைக் கடந்து, அந்தப் பரமாகவே ஆகும் பாக்கியத்தை ஒரு மனிதனுக்கு இயற்கையுண்மை வடிவினர் இயல்பாகவே கருணை செய்துள்ளார்.

இதை, இந்து மதத்திலுள்ள ஆதிசங்கரரும் ஒத்துக்கொண்டு, அந்த அருள்நிலையை அத்வைத நிலை என்று அருளியுள்ளார்.

அந்த ஆதிசங்கரருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, திருமூலர் என்ற ஒரு தமிழ் அருளாளர்தான் இந்த இயற்கை உண்மையை மிகத்தெளிவாக அனுபவித்து விளக்கியவர்.

இவருடைய ஆன்மீக அறிவியல் உண்மைகளை இன்று உலகம் முழுவதும் ஆய்வு செய்துகொண்டும், ஒத்துக்கொண்டும் வருகிறது.

இவற்றுக்கெல்லாம் உண்மை உதாரணமாக விளங்குபவர்தான், நம்முடைய தமிழகத்தில் வருவிக்கவுற்ற வள்ளற்பெருமான். எல்லோரும், தன்னை மட்டுமே இறை அவதாரமாக, இறை மகவாக வெளிப்படுத்திக் கொண்டிருந்த இந்த உலகர்கள் மத்தியில், 'எல்லாச் சீவர்களும் சிவமே', 'உயிருள் யாம் எம்முள் உயிர்' - என்று போதித்தும், சாதித்தும் வாழ்ந்து காட்டியவர்கள் வள்ளற்பெருமான்.

நாம் எல்லோருமே வள்ளலார் அடைந்த உன்னதமான அந்த மரணமில்லாப் பெருநிலையை அடையமுடியும் என்கின்ற இயற்கையுண்மையை அறிந்து கொண்டால், ஒருவரை ஒருவர் மதம்கொண்டும், கோபம்கொண்டும் சாடமாட்டோம்.

சமயம் என்பது வழிபாடு. மதம் என்பது ஒரு வழிபாட்டின் தத்துவம். இவை இரண்டும் ஆன்மீக பள்ளியின் அடிநிலைகளே. அவ்வளவுதான்! பள்ளிக்குப் போகாமல், நேரடியாக எம்.ஏ, டாக்டர் பட்டங்கள் வாங்குகின்றவர்களும் உண்டு.

ஒரு குழந்தை வளர்ச்சிக்கு அதன் தாயின் கருப்பை அவசியம்தான். ஆனால், அங்கு வருடக்கணக்கில் அக்குழந்தை வசிக்கக்கூடாது.  ஏன? இறந்து போகும்! அதுபோலத்தான், சமயங்களும், மதங்களும்! ஒரு குறிப்பிட்ட காலத்தில், அவற்றிலிருந்து வெளியில் வந்துவிட வேண்டும். வரமாட்டோம், அங்கேதான் இருப்போம் என்றால், இருங்கள்... இறப்பதும், வாழ்வதும் அவர்களின் முயற்சி பேதங்களே!

ஆகவேதான், வள்ளற்பெருமான் சமயங்களையும், மதங்களையும் சுத்த சன்மார்க்கத்திற்கு அன்னியம் என்று சொல்ல வில்லை. அனன்னியம் என்றார்கள். அதாவது படிநிலை அனுபவங்கள் என்றார்கள்.

அதே சமயத்தில், சமயமதங்களின் பொய்யான போதனைகளைத்தான் கண்டித்தார்கள்.  ஆன்மீக உண்மை விளக்கமும், அவற்றின் அனுபவமும் அடையாதவர்களுக்கு, சமயமதங்களிலுள்ள அனுபவங்களை, முதல் இரண்டு ஒழுக்கங்களாகவும், அதற்குமேல் மானுடத்தை வளர்க்கச் சீவ ஒழுக்கத்தையும், அதற்கும் மேல் முடிவாக, 'எல்லா உயிர்களையும் தம்முயிர்போலப் பாவிக்க' - ஆன்ம ஒழுக்கத்தையும் போதித்தார்கள். வாழ்ந்து காட்டியும், இன்றும் நம்மோடு வாழ்ந்துகொண்டும் சாதிக்கின்றார்கள்!

வார்த்தைகளைத் தடிமனாகப் பேசுகின்றவர்கள், சமயமத வாதிகளாக இருக்கலாம். ஆனால், ஆன்மீகப் பாலர் பள்ளியில் அவர்கள் நுழையக்கூடத் தகுதி அற்றவர்கள் ஆகின்றார்கள்.

உண்மைகளை ஆய்ந்துணர முயல்வோமாக!

நன்றி, வணக்கம்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு