ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

திருக்கதவும் திறத்தல்!


திருக்கதவும் திறத்தல்!

அருட்பெருஞ்ஜோதி !
                அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
                 அருட்பெருஞ்ஜோதி !
வேதாகம சூதனைத்தும் உணர்ந்தேன்.
       *****************************
      ஆன்மநேய உறவுடைய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் .
     
          வள்ளல் பெருமான்ஆறாம் திருமுறை" திருக்கதவு திறத்தல் " என்ற தலைப்பில் பத்து பாடல்கள் இயற்றி , அருட்பெருஞ்ஜோதி திருவுருவைக் காட்டிடவேண்டியும்,
அருட்பேரொளி தனது பேரான்மாவில் கலந்து நிறைந்திடவேண்டியும், இரண்டற்ற ஜீவாத்மா பரமாத்மா அத்துவைத நிறைவை வேண்டியும் வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்பெருவெளி திருக்கதவை திறந்து அருள்பாலித்திடவேண்டுகின்றார்கள்.

    அதில் 8 வது பாடலின் பொருளைக் காண்போம்.

8. வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் 
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி 
உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர் 
எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே 
தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய் 
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

     எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி என்தந்தையே, இவ்வுலகில்,
ஆன்மாக்கள் கடவுள் நிலை அறிந்து முத்தி சித்தியோடு சிவானுபவத்தைப் பெற்று சுத்தசன்மார்க்க சுகப்பெரும் நிலையாகிய அருட்ஜோதி இயற்கை என்னும் முத்தேக சித்திநிலையைப் பெறவேண்டும் என்பது அருள்நியதி,

   ஆனால் இதுவரை இவ்வுலகில் வகுக்கப்பட்ட வேதங்களாகிய
ரிக்,யசுர்,சாமம், அதர்வணம் என்ற நான்கு வேந்தங்களும் ,
ஆயுர்வேதம்,அருத்த வேதம், தனுர்வேதம்,காந்தர்வ வேதம் முதலிய நான்கு உபவேதங்களாலும் கூறப்பட்ட நெறிகளும்,

   ஆகம சாத்திரங்கள் வகுத்துக் காட்டிய அறநெறிகளும்,

    சிவபுராணம்: 10,விஷ்ணுபுராணம் :4,
சூரிய பூராணம்:2,கந்தபுராணம் :1,
அக்கினிப்புராணம் :1 ஆக பதினெண் புராணங்களும் சொல்லிக்காட்டிய நெறிகளும்,

  இராமயணம், மகாபாரதம் முதலிய இரண்டு இதிகாசங்களும் அவற்றில் விதித்த கற்பனை நெறிகளும் ஆகிய எல்லா நெறிகளும் ஓதுகின்ற (கூறுகின்ற) உபாயங்களையும் இரகசியங்களையும் உள்ளதை உள்ளபடியே  உணர்ந்திட  எனக்கு உணர்த்தி பேரருள்செய்தாய்,

மேலும் இஸ்லாம்.கிருத்தவம்.பவுத்தம்.ஜயனம் போன்ற மத நெறிகளும்.அவற்றில் உள்ள கற்பனைக் கடவுள்களையும்.. ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை நெறிமுறைகளையும்.

    நானும் அனைத்தையும் குற்றம் குறை இல்லாமல் அறிந்து உணர்ந்தேன்.

   ஆனால் அவற்றால் ஆன்மாக்கள் அடையவேண்டி ஆன்ம லட்சியத்தை.ஆன்ம இன்ப லாபத்தை.ஆன்ம இன்ப வாழ்வை அடையமுடியாது என்பதை தெள்ளத்தெளிவாகவும் எனக்கு உணர வைத்தாய் தந்தையே.

    ஆகலில் இதுவரை எனது காலம் வீணாகியதுபோதும் இனி ஒருகணமும் இவற்றில் கிடந்து வீண்பொழுதைக் கழிப்பதற்கு எள்ளளவுக்கூட எனக்கு எண்ணம் இல்லை தந்தையே.

      எனவே தாங்கள் தனிப்பெருங்கருணையுடன் எனது ஆன்மாவில் புணர்ந்து எனது ஆன்ம மலக் குற்றங்கள் அனைத்தும் தீர்ந்திடவே  எல்லாம் செயவல்ல ஞானசித்தியையும் கொடுத்து அருள்செய்வாய் எனது சித்தத்தில் இருந்து ஆளும் அருட்பெருஞ்ஜோதி திருநடத் தந்தையே.

     என்று வள்ளல்பெருமான் வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் முதலியவைகள் அனைத்தும் கடவுள் உண்மையை வெளிப்பட தெரிவிக்கமுடியாமல் ,
ஆன்மலட்சியத்தை அடைவதற்கு போராடும் ஆன்மாக்களுக்கு வழிதுறைகாட்டி மரணத்தை வென்று அருள்வாழ்வில் வாழ்வதற்கு வழிக்காட்ட இயலாமல் , மேலும் மேலும் பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலிலேயே தள்ளி அலைக்கழிக்கின்றது .
என்பதைக்கூறி உலகவர் அனைவரையும் தனக்கு மரணத்தை தவர்த்துருளி அருள்வாழ்வைக்கொடுத்த சுத்தசன்மார்க்க பெருநெறிக்கு உலகவர் அனைவரையும் அழைத்து ஆன்மலட்சியத்தை அடைய நம்மையும் தாயமை உணர்வோடு அழைக்கின்றார்கள்.

இதுவரை இருந்த நமது வீணான காலமும் பிறவிகளும் வீணாகியது போதும் இனியும் பலப்பிறவிகள் வீணாகவேண்டாமே ;

இப்பிறவியிலேயே பெற வேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டியது மனித பிறப்பின் லட்சியமாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வு!
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு