வியாழன், 2 ஜூன், 2016

யோகம் சிறந்ததா ? தோத்திரம் சிறந்ததா ?

யோகம் சிறந்ததா ? தோத்திரம் சிறந்ததா ?

ஒருநாள் வள்ளல் பெருமானை அன்பர்கள் ''யோகம் முதலியன செய்ய எங்களால் இயலாதனவா இருக்கின்றன ; ஆதலால் நாங்கள் ஈடேறுதற்கு  உரிய ஒரு இலகுவான  மார்க்கத்தைத் தேவரீர் திருவாய் மலர்ந்து அருளால் வேண்டும் ''என்று விண்ணப்பித்தார்கள்

வள்ளலாரும் அதற்கு விளக்கம் சொன்னார் '' இது இக்காலம் கடையுகமாகிய கலியுகத்தில்'' உங்களால் யோகம் முதலிய சாதனங்களை இயற்ற  முடியாது,ஆதலால் நீங்கள் தொத்திரத்தையே ஈடேறும் மார்க்கம் எனக் கொள்ளுங்கள் என்று இசைத்தனர்.

ஞான தீப விளக்கம் !

இதையே சித்தி விளாகத்தில்  ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் உள்ளிருந்த விளக்கைத் திரு மாளிகைப் புறத்தில் வைத்து ' தடைபடாது ஆராதியுங்கள் '' இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம்,இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் இந்த பாடலில் உள்ளபடி தோத்திரம் செய்யுங்கள் என்று ;--

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே !

என்னும் 28, பாசுரங்கள் அடங்கிய பாடலில் கண்டபடி ,தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் ,நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் ,இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்,;--

மேலும் ஸ்ரீமுக வருடம் தை மாதம் வள்ளலார் திருகாப்பிட்டுக் கொள்ளும் தருணம் வெளியிட்டவை யாகும்.

நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம் .பார்த்து அவ நம்பிக்கை அடையாதீர்கள் .ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது  வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் .என்னைக் காட்டி கொடார் ,

சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம் .நாம் திருக்கதவை மூடி இருக்கும் காலத்தில் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார்.

என்று மண்ணுலகை விட்டு அருள் ஜோதி மயமானார்.இப்போது ஒளி உடம்பாக அருட்பெருஞ்ஜோதியாக இவ்வுலகை ஆண்டு கொண்டு உள்ளார் .

ஞான சித்தர் காலம் !

வள்ளலாருக்கு முன்னாடி இருந்த காலம் ;--இதுவரையில் கர்ம சித்தர்கள் உடைய காலம் அதனால் சமயங்களும் மதங்களும் மதங்களும்,பரவி இருந்தன ,

இப்போது வரப்போகிறது (இப்போது நடைபெறுகின்றது ) ஞான சித்தருடைய காலம்,இனிமேல் ஜாதி ,சமயம்,மதம் முதலான ஆசாரங்கள் எல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆசாரம் ஒன்றே விளங்கும்.

சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்கள்,மூர்த்திகள்,ஈசுரன்,பிரம்மா,சிவம்,முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருக்குமே ஒழிய அதற்கு மேல் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும்.

சமய மதங்களில் சொல்லிக்கிற கர்த்தாக்கள் உடைய சித்திகள் யாவும் ,சர்வ சித்திகள் உடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சித்தியின் லேசங்கள்.
அந்த சர்வ சித்தி உடைய கடவுளுக்கு ஒப்பு ஆகமாட்டார்கள் ,கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள்.

இப்போது இருக்கும் வேதம், ஆகமம்,புராணங்களிலும் சமய ,மதங்களிலும் லட்சியம் வைக்காதீர்கள்.அப்படியும் வைத்தால் சமரச சுத்த சன்மார்க்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது.வராவிட்டால் நீங்கள் அடையப் போகிறது ஒன்றுமே இல்லை.

ஆதலால் அதுகள் எல்லாம் பற்று அற விட்டுவிட்டு ,சர்வ சித்தியை உடைய அருட்பெருஞ்ஜோதி கடவுள் ஒருவரே என்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்ய வேண்டும்...என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

வழிபாடு செய்வது எப்படி ?

அப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு உரிய கடவுளை வழிபாடு செய்வதற்குச் சாதனம் இருவகை ;;ஒன்று பர உபகாரம் ..ஒன்று சத்விசாரம் ,,

பர உபகாரம் என்பது ;-- தேகத்தாலும்,வாக்காலும்,திரவியத்தாலும் உயிர்களுக்கு உபகாரம் செய்வதாகும்.

சத் விசாரம் என்பது ;--நேரிட்ட பஷத்தில் --ஆன்ம நேய சம்பந்தமான தயா விசாரத்தொடு இருப்பது..கடவுளது புகழை விசாரித்தல்,ஆன்மாவின் உண்மையை விசாரித்தல்,தன்னுடைய சிறுமையைக் கடவுள் இடத்தில் விண்ணப்பம் செய்தல்.இந்த மார்க்கத்தால் தான் சுத்த தேகம் பெற வேண்டும்.
என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் ..

எனவே நாம் யோகம் முதலிய சாதனங்கள் எதுவும் செய்ய வேண்டாம் .ஒவ்வொரு வீட்டிலும் அருள் ஞான தீபம் ஏற்றி தோத்திரம் செய்யுங்கள் .கடவுள் தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் தீபத்தின் முன் அமர்ந்து உங்களின் குறைகளை சொல்லி வழிபடுங்கள் .உங்களால் முடிந்தால் ஜீவ காருண்யம் என்னும் பரோபகாரம் செய்யுங்கள் இந்த இரண்டு வழியைத் தவிர வேறு வழிகளில் சென்று காலத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள் .

எல்லாம வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நம்புங்கள் எல்லாம நல்லதே நடக்கும் ..எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ..

அன்புடன் ஆனம்நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896.


   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு