புதன், 4 மே, 2016

ஜீரண சக்தியை எளிதாக்கும் கீரைகள்!
பொதுவாக உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருட்களை இலை, பூ, காய், தண்டு, கிழங்கு என ஐந்து வகையாகப் பிரிக்கலாம். அவற்றில் எளிதாகவும் விரைவிலும் ஜீரணம் ஆகக்கூடியவை கீரைகளே. பூ, காய், தண்டு, கிழங்கு போன்றவை தாமதமாக ஜீரணமாகக் கூடியவை.

தினமும் உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது. இரவில் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் குளிர்ச்சியாலும், தூக்கத்தினாலும் ஜீரண சக்தி குறைவதால் அவை சரியாகச் செரிக்காமல் இருக்கின்றன. இதனால் கீரைப் பூச்சிகள் வயிற்றில் வளர ஆரம்பிக்கின்றன. பெரும்பாலோருக்கு வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பிசம், வயிற்றிரைச்சல் போன்றவை ஏற்படும்.

கீரை, கறிகாய்களைப் பொடிப் பொடியாக நறுக்கி, நீர் சேர்த்து வேகவைத்து, பிழிந்து நீரை அகற்றி, எண்ணெய், கடுகு பெருங்காயம், மிளகு, இஞ்சி, புளிப்பு மாதுளை இவற்றை சேர்த்து சுண்டவைத்து சாப்பிட்டால் கேடு விளைவிக்காது. வயிற்றில் மல அடைச்சலை ஏற்படுத்தாது சுவையூட்டும்.

முளைக்கீரை:

அதிக ருசியும், பசியும் கொடுக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். உடலுக்கு வலுவேற்றி புத்துணர்வைத் தரும்.

தண்டுக்கீரை:

முளைக்கீரையின் முற்றியதே தண்டுக் கீரையாகும். இதில் இலை தண்டு இரண்டுமே உணவாகப் பயன்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதயத்திற்கு உகந்த கீரை. மலத்தை இளக்கும். இரத்தக் கொதிப்பு, இரத்த பேதியை கட்டுப்படுத்தும். வயிற்றுக் கடுப்பு, நீர்ச்சுருக்கை போக்கும் குணமுண்டு.

சிறுகீரை:

இதுவும் தண்டுக்கீரை இனத்தைச் சார்ந்ததுதான். கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இது நல்ல மருந்தாகும். இருமலைப் போக்கும். நல்ல குரல்வளத்தைக் கொடுக்கும். வயிற்றுப் புண், வாய்ப்புண்ணை நீக்கும். மூல நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். சொறி, சிரங்கு போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

பசலைக் கீரை:

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமுண்டு. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்கும். நீர்கடுப்பு, நீர் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்றவற்றைப் போக்கும். பித்தத்தைக் கட்டுப்படுத்தும். ஈரலை வலுவூட்டும்.

கொடிப்பசலை:

சிகப்பு, வெள்ளை என இருவகை உள்ளது. இரத்தக் கொதிப்பை அடக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீரை அதிகம் வெளியேற்றச் செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்யும்.

இதன் இலைச்சாற்றை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் சளித்தொல்லை நெருங்காது.

இதன் இலையை நீரில் போட்டு அலசினால் குழகுழப்புடன் ஒரு விதமான பசை வெளிப்படும். அதனைத் தலையில் பூச தீராத தலைவலி நீங்கும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

புளிச்ச கீரை:

அதிக புளிப்புச்சுவை கொண்டது. ஆந்திர மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.

பண்ணைக் கீரை:

துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவையுடையது. வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண், தொண்டைப்புண்ணை ஆற்றும். மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கும். கரப்பான், கிரந்திப் புண் இவற்றை குணப்படுத்தும். வறட்டு இருமலைப் போக்கும்.

புளியாரை:

புளிப்பு சுவையுடையது. நன்கு பசியைத் தூண்டும். மூலம், இரத்த மூலம், அஜீரண கோளாறுகளை குணப்படுத்தும். இதன் இலையை அரைத்து பரு, கொப்புளம், கட்டிகளின்மீது பூசினால் விரைவில் குணமாகும்.

பருப்புக்கீரை:

இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடையது. இரத்தத்தின் சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்கக்கூடியது. குடல் புண்ணை ஆற்றும். சீதபேதி, இரத்த பேதி, கல்லீரல் நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். இதன் இலையையும், விதையையும் அரைத்து தீக்காயங்களின் மீது தடவ புண்கள் விரைவில் ஆறும். இதன் இலையை அரைத்து கைகால் எரிச்சல் உள்ள இடங்களில் தடவினால் எரிச்சல் குணமாகும்.

புதினாக் கீரை:

நறுமணத்திற்கு மட்டும் உணவில் சேர்க்கிறோம் என்று நினைப்பீர்கள். ஆனால் இது அளப்பரிய குணங்களைக் கொண்டது. வாயுத் தொல்லையிலிருந்து விடுபட இதுவே சிறந்த கீரையாகும். உடல் வலியைப் போக்கும். ஜீரணச் சக்தியைத் தூண்டும்.

இதனை உலர்த்தி கஷாயமாக்கிக் குடித்தால் காமாலை, விக்கல், வயிற்றுவலி, குமட்டல், தலைவலி, சூதக வலி போன்றவை குணமாகும். இதன் பொடியை கொண்டு பல்துலக்கினால் வாய்ப்புண் ஆறும். வாய் மணக்கும்.

துத்திக் கீரை:

இதனைப் பருப்புடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் மூலவாயு தணியும். மலத்தை இளக்கி உட்புண்ணை ஆற்றும். சிறுநீரைப் பெருக்கும்.


ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு