சனி, 3 பிப்ரவரி, 2024

வள்ளலார் காதலித்த கணவர்!

*வள்ளலார் காதலித்த கணவர்!*

*அனுபவமாலை97 ஆவது பாடல்!*

அருட்சோதித் தலைவர் எனக் கன்புடைய கணவர்
அழகியபொன் மேனியை நான் தழுவிநின்ற தருணம்

இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம் போ யினவால்
எங்கணும் பே ரொளிமயமாய் இருந்தன ஆங் கவர்தாம்

மருட்சாதி நீக்கி எனைப் புணர்ந்த ஒரு தருணம்
மன்னு சிவா னந்தமயம் ஆகி நிறைவுற்றேன்

தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
திருச்சபைக் கண் உற்றேன் என் திருக்கணவ ருடனே.! 

*அருட்பெருஞ்ஜோதியை காதலித்தார்,அருட்ஜோதியை  மறைக்கும் ஜட தத்துவங்களை கடந்தார் வென்றார், அருபெருஞ்ஜோதியுடன் கலந்தார் அருட்பெருஞ்ஜோதி யாகவே ஆனார்!*

*வள்ளல்பெருமான் போல் ஆண்டவரை காதலித்தவர்கள் உலகில் ஒருவரும் இல்லை*

*வள்ளல் பெருமானே ஆறாம் திருமுறையில் நற்றாய் கூறல் என்னும் தலைப்பில் பதிவு செய்கின்றார்!*

காதல் கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
கண்டுகொள் கணவனே என்றாள்

ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
உவந்திலேன் உண்மையீ தென்றாள்

பேதை நான் பிறிதோர் புகலிலேன் செய்த
பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்

மாதய வுடைய வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.! 

*மேலும் எக்காலத்திலும் உன்னை நான் மறக்கவே மாட்டேன் ஏன்? என்றால் என்னை நீ மறப்பதே இல்லை நான் எவ்வாறு உன்னை மறப்பேன் என்கின்றார்*

*வள்ளலார் பாடல்!*

நான்மறந்தேன் எனினும் எனைத் தான்மறவான் எனது
நாயகன் என் றாடுகின்றேன் எனினும் இது வரையும்

வான்மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை
மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என் னுடைய

ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
உலகம்எலாம் மறந்தேன் இங் குன்னை மறந் தறியேன்

பான்மறந்த குழவியைப்போல் பாரேல் இங் கெனையே
பரிந்து நின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.! 

 *மேலும் எக்காலத்திலும் உன்னை மறக்க மாட்டேன் மறந்தால் உயிர்விடுவேன் என்று சத்தியம் வைத்து சொல்கின்றார்,அந்த அளவு இடைவிடாது காதல் கொள்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்*

*வள்ளலார் பாடல்!*

உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ

என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்

அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே

இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.! 

*இவ்வாறு இடைவிடாது நம் பெருமகனார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு காதலிப்பதை தெரிந்து அறிந்து புரிந்து கொண்ட ஆண்டவர் வள்ளல் பெருந்தகையை ஆறத்தழுவி இணைந்து அணைந்து தன்னுடைய அருளை வாரி வழங்கி மகிழ்கின்றார் அனுபவித்த இன்பத்தை வெளிப்படுத்துகின்றார்.*

*வள்ளலார் பாடல்! அனுபவமாலை!*

கண்கலந்த கணவர் எனைக் கைகலந்த தருணம்
கண்டறியேன் என்னையும் என் கரணங்கள் தனையும்

எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
இறை அளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்

விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
வினைத்துயர் தீர்ந்தடைந்த சுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்

உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
துற்றதென எனை விழுங்கக் கற்றதுகாண் தோழி.! 

*அதன் பின் கண் கலந்த கணவர் அருட்பெருஞ்ஜோதியர்  ஊனில் கலந்து, உயிரில் கலந்து வினைத் துயர் தீர்ந்து அருள் ஒளிஉடம்பு பெற்று தான் அடைந்த பேரின்ப சித்திப் பெருவாழ்வில்  அடைந்த வெற்றியின் பதவியைப் போற்றி முரசு கொட்டுகிறார்,கீழே உள்ள பாடல்!*

*வள்ளலார் பாடல்!*

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!  

*என்னைப்போல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக்  காதலித்தவரும், என்னைப்போல் பூரண அருளைப் பெற்றவரும், என்னைப்போல் சாகாவரம் பெற்றவரும், என்னைப்போல் அருள்ஆட்சி பெற்றவரும், என்னைப் போல் அருட்ஜோதியில் கலந்தவரும், எவ்வுலகிலும் எவரும் இல்லை என்கின்றார் வள்ளல் பெருமான்.*

*நாமும் வள்ளல் பெருமானைப்போல் வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதியை அடைய வேண்டும் என்பதே வள்ளலாருடைய விருப்பமாகும்*

*எல்லா மனித ஆன்மாக்களுக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காதலிக்கும் தகுதி உண்டு என்கின்றார்*

*வள்ளலார் பாடல்!*

நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்

சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் - 

தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும் 

எவ்வுலகில்
யார்உளர் நீ சற்றே அறை.!

*மேலே கண்ட பாடல்களும் மேலும் திருஅருட்பா பாடல்கள் யாவும் வள்ளல்பெருமான் வகுத்துதந்த சுத்த சன்மார்க்க கொள்கைகளை  பின்பற்றுவதற்கும்,இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும், அளவிடமுடியா ஆக்கமும் ஊக்கமும் பெருமுயற்சியும் ஒளி பெறும் ஏக்கமும், உணர்ச்சியும் ஆசையும் அன்பும் காதலும் மோகமும் வேகமும் நமக்கு இடைவிடாது தொடர்பு கொள்ள தூண்டுகின்றன.*

*என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்பதே வள்ளல்பெருமான் அருள் வாக்காகும்*

*அருள் பெறுவதற்கும் மரணத்தை வெல்வதற்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காதலிப்பதற்கும் ஆசைப்பட வேண்டும்!*

*வள்ளலார் பாடல்!*

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

ஏசறநீத் தெனை ஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்

தேசுடைய பொதுவில் அருள் சித்திநடம் புரியத்
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே

மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.! 

*நான் சொல்வது எல்லாம் மற்றவர்கள் சொல்வதுபோல் மோசமான உரை என்று நினைந்து தயங்காதீர்கள் உண்மையைச் சொல்லுகின்றேன் வாருங்கள் வாருங்கள் என்று ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அனைவரையும் அழைக்கின்றார்*

*மாயையால் மயக்கும் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யை விட்டுவிட்டு அருட்பெருஞ்ஜோதிமேல் ஆசை கொண்டு அருள் பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம்.*

தொடரும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு