சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறை !
சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறை !
தியானம் செய்யும் முறை !
நாம் சுத்த சன்மார்க்கம் என்றும் சத் விசாரம் என்றும் மேடை மேடையாக பேசிக் கொண்டே உள்ளோம் அகத்தில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்வதே இல்லை .
நமக்கு காலம் இல்லை, எனவே வள்ளல்பெருமான் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காமல் அக அனுபவத்திற்கு வாருங்கள் என்று அழைக்கின்றார் .
எனவே சுத்த சன்மார்க்கம் தியானம் என்னும் ஞான சரியையில் உள்ளபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்கின்றார் .
தியானம் செய்யும் முறை !
தியானம் செய்ய வேண்டுமானால் ஏதாவது ஓர் உருவத்தைப் பார்த்து தியானிக்க வேண்டும் நிஷ்களமாய் இருக்கப் படாது என்று தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளல்பெருமான் .
ஏதாவது உருவம் என்றால் இங்கே ஞான தீபம் எனற விளக்கை வைத்து தியானிக்க வேண்டும் என்று பொருளாகும்.
தியானம் செய்ய வேண்டுமானால் கண்களைத் மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்களைத் திறந்து கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் ...
நாம் ஒவ்வொருவரும்
நம் வீட்டில் தனியாக ஒரு அறையோ அல்லது பூசை அறையோ இருக்க வேண்டும். அந்த அறையில் வள்ளலார் சொல்லியபடி நான்கு சதுரம் கொண்ட தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும். அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும்.
அதில் ''நல்ல எண்ணெய் '' அல்லது ''தேங்காய் எண்ணெய்'' அல்லது பசுநெய் ..ஊற்றி சிறிய திரியைப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அந்த தீபத்தின் முன்னாடி நான்கு அடி தூரம் தள்ளி நாம் கிழே ஒரு விரிப்பை போட்டு அதன் மேல் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் ஞான தீப சுடர் ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் ...
தீபம்,.. அலை பாயாமல் எரிய வேண்டும் .கண்கள் தீப சுடர் ஒளியை மட்டும் தான் பார்க்க வேண்டும் .ஏன் என்றால்
நம்முடைய ஆன்மாவிற்கும்,ஜீவனுக்கும் ,மனதிற்கும்,கண்களுக்கும் ,அந்த திரு விளக்கிற்கும் நெருங்கிய சம்பந்தம் (தொடர்பு ) இருக்கின்றது .என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .
நம்மால் எவ்வளவு நேரம் தீபத்தைப் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .
எந்த நேரம் முக்கியமான நல்ல நேரம் என்றால்? காலை நான்கு மணியில் இருந்து ஆறு மணிவரை தியானம் செய்வது மிகவும் அவசியமானதாகும்.அந்த நேரம் அமுதக் காற்று வீசும் நேரமாகும்.
வள்ளலார் சொல்லுவது ;--
இவ் உலகத்தில் விஷக் காற்று,...உஷ்ணக் காற்று,...பூதக்காற்று,..அமுதக் காற்று என்று நான்கு வகைகளாக நான்கு பிரிவுகளாக காற்று நிறைந்து இருக்கின்றது .
நாம் அமுதக் காற்றை அதிகம் சுவாசிக்காமல் மற்ற மூன்று காற்றுகளையும் அதிகம் சுவாசித்துக் கொண்டு உள்ளோம்.அதனால் சீக்கிரம் மரணம் வந்து விடுகின்றது .எனவே நாம் அமுதக் காற்றை சுவாசிக்கும் பழக்கத்திற்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அமுதக் காற்று என்பது இவ் அண்டத்தில் இரவில் அருணோதயம் தொடங்கி உதய பரியந்தம் அமுதக் காற்று வியாபகமாய் இருக்கின்றது .அக்காலத்தில் ஜீவர்கள் நன் முயற்சியில் இருப்பது விசேஷ நலம் என்கின்றார் .
அதாவது பகல் இரவு நேரங்களில் பல கோடி மைல்களுக்கு மேலே ஆண்டத்தில் அமுதக் காற்று நிறைந்து இருக்கும் ,காலை நேரங்களில் மட்டும் பூமியை நோக்கி வருகின்றது ..எல்லா உயிர்களும் இன்பம் அடையும் பொருட்டு கீழ் நோக்கி வருகின்றது...அந்த காலத்தை அமுத காலம் என்றும் அமுத யோகம்,என்றும்,சங்கம காலம் என்றும்,சொல்லுவார்கள் .
அதனால்தான் கோயில்களில் திருப் பள்ளி எழுச்சி என்று அதி காலை வழிபாடு செய்வார்கள்.கடவுளை எழுப்புவதாகவும் சொல்லுவார்கள்.அது அமுதக் காற்று வீசும் காலம் என்று யாரும் மக்களுக்கு சொல்லவில்லை.வள்ளல்பெருமான் தெளிவாகச் சொல்லி உள்ளார்
தேகாதி பிண்டத்தில் மேற்படி அமுதக் காற்று வியாபகமாய் இருக்குங் கால் ,ஜீவர்களுக்கு இதுவரையில் தாங்கள் அறியாதது ஆன கடவுள் விளக்கம் உண்டாகும் .என்று தெளிவாக விளக்கி தெரியப்படுத்தி உள்ளார்
மேலும் அமுதக் காற்றை சுவாசிக்க நாம் காலையில் எழுந்து தீபத்தைப் பார்த்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.
அப்படி அமுதக் காற்றை சுவாசித்து தியானம் செய்வதால்,ஜீவர்களுக்கு அறிவு விளக்கம்,மன நெகிழ்ச்சி,மன உருக்கம்.மன மகிழ்ச்சி. இந்திரிய அடக்கம்,கடவுள் பக்தி,முதலிய யாவும் விளங்கும் என்கின்றார் ,அக் காலத்தை அமுதக் காற்றின் வியாபக காலம் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்கின்றார் . அப்படி அந்த அமுதக் காற்றை சுவாசிக்க நாம் அதிகாலையில் எழுந்து ஞான தீப தியானம் செய்ய வேண்டும்.
ஞான தீப ஒளியும் அமுதக் காற்றும் மிகவும் அவசியமாகும்.
நம்முடைய உடம்பில் ஒளி எப்படி உள்ளே செல்கின்றது ?
நம் உடம்பின் ஐம் புலன்கள் {கண்...காது....மூக்கு ....வாய் ...உடம்பு) என்பதாகும் அதில் முக்கியமானது,முதன்மையானது இந்திரியங்களில் உள்ள கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் புறத்தில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோம்
ஐம் புலன்களான கண்,காது,வாய்,மூக்கு,உடம்பு என்பதில் முதல் இடம் வகிப்பது கண்கள் ,கண்களில் பார்க்கும் அனைத்தும்...நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் கரணங்கள் என்னும் ...மனம் ...புத்தி ....சித்தம் ...அகங்காரம் ...என்னும் கரணங்களில் உள்ள மனத்தில் பதிவாகின்றன.
கரணங்களில் முதன்மையானது மனமாகும் .கண்களில் பார்ப்பது அனைத்தும் மனதில் பதிவாகின்றது ...
அதே நேரத்தில் கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது...கண்களில் பார்ப்பது அனைத்தும் மனதில் பதிவாகும்.
மனதில் பதிவாகியது, அனைத்தும் ஜீவன் என்னும் உயிரில் பதிவாகும் ...ஜீவனில் பதிவானது அனைத்தும் ஆன்மா என்னும் உள் ஒளியில் பதிவாகும்,அந்தப் பதிவுகள் தான் அஞ்ஞானம், அறியாமை என்னும் மாயா திரைகள் என்பதாகும்.
நமக்கு வரும் ,துன்பத்திற்கும் துயரத்திற்கும், அச்சத்திற்கும், பயத்திற்கும், நோய்க்கும்,மரணத்திற்கும் அந்தப் பதிவின் அறியாமை,அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளே காரண காரியமாகும்.
துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் முதலியவற்றைப் போக்க வேண்டுமானால்,மரணத்தை வெல்ல வேண்டுமானால்,வெளியில் செல்லும் மனத்தை உள்ளே கொண்டு செல்ல வேண்டும்.அதை கண்கள் வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும்.
ஏன் என்றால் ? ஆன்மாவில் இருந்துதான்.ஜீவன் என்னும் உயிருக்கு ஒளி வழங்கப்படுகின்றது. ஜீவன் என்னும் உயிர் ஒளியிலிருந்து கரணங்களில் உள்ள மனதிற்கு ஒளி வழங்கப் படுகின்றது. மனத்தின் வழியாக இந்திரியங்களில் உள்ள கண்களுக்கு ஒளி வழங்கப் படுகின்றது..புற இருளைப் போக்குவது புற ஒளியாகும் ..அதேப்போல் அக இருளைப் போக்குவது அக தீப ஆன்ம ஒளியாகும்.
மனம் ;--
மனம் என்பது பேய் பிடித்த குரங்கு போன்றது...அதை சமய மதங்களில் சொல்லிய தியானம்,தவம்,யோகம் போன்ற வழி முறைகளால் அடக்கவே முடியாது.
மனதை அடக்க முடியாது,ஆனால் மனதை மாற்ற முடியும் என்கின்றார் வள்ளலார் .
மனதை அடக்க வேண்டுமானால்,மாற்ற வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .மாற்ற முடியும் மனிதன் மனதை மாற்றியே ஆக வேண்டும் .அதற்குத்தான் சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறைத் தேவைப்படுகிறது .
சுத்த சன்மார்க்க தியான முறைக்கு சத் விசாரம் என்று பெயர் வைத்துள்ளார் .மேலும் ,''ஞான சரியை'' என்றும் வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்.
புறத்தில் திரியும் மனத்தை அகத்தில் செலுத்த வேண்டும்.அதாவது மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் .சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடமாகும்.
அகம் என்பது ஆன்மா ! உள் ஒளியாக இருந்து உயிரையும், உடம்பையும்,இயக்கும் இடமே ஆன்மாவின் ஒளியே யாகும்.. ஆன்மாவை கண்கள் பார்க்க முடியாது,
அலைபாயும் மனத்தை கண்களின் துணைக் கொண்டுதான் உள்ளே செல்ல முடியும்.அப்போது தான் மனம் அடங்கும்.மனம் மாற்றம் அடையும்
கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது .அப்படி செய்வதை வள்ளலார் ....
கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக என்றார் வள்ளலார்
எனவே கண்களைத் திறந்து கொண்டுதான் சுத்த சன்மார்க்க தியானம் செய்ய வேண்டும் .
கண்களை மூடிக் கொண்டால் !
கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால், அளவு இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய்க் குரங்கு போன்றது.... அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் மனத்தை அடக்க முடியும் அதைக் கண்களால் தான் அடக்க முடியுமே தவிர, வேறு எந்த வழியாலும் அடக்க முடியாது.வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.
உருவங்களை வைத்தோ .உருவங்களைப் பார்த்தோ ,மந்திரம் சொல்லிக் கொண்டோ, மணியை எண்ணிக் கொண்டோ, தியானம் செய்வதால் எந்தப் பயனும் இல்லை ,அதனால் எந்த பயனும் இல்லை,நன்மையையும் இல்லை,மனமும் அகத்திற்குச் செல்லாது அடங்காது.
அந்த நேரம் எதோ ஒரு சிறிய உணரச்சி தோன்றி மகிழ்ச்சி ஆனந்தம் கிடைப்பதுபோல் தோன்றும் ,கொஞ்ச நேரத்தில் அந்த உணர்ச்சி மகிழ்ச்சி,ஆனந்தம் அழிந்துவிடும்,மேலும் மறைந்துவிடும் மேலும் பழைய நிலைக்கே மனம் திரும்பி விடுவோம் .
உருவம் அற்ற ஒளி !
ஆதலால் நம் கண்கள் உருவம் அற்ற, ஒளியை பார்த்து தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி.மனமும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ...ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்தது,படித்தது,கேட்டது,செய்தது ,உண்டது,அனுபவித்தது , அனைத்தும் மனம் ...ஜீவன் ,,,வழியாக ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுகள் தான் நினைவு அலைகளாக திரும்பி நமக்கு துன்பமும் ....துயரமும் ......அச்சமும்,...பயமும்,துக்கமும் ,.... நோயும்....இறுதியில் மரணமும் வந்து விடுகின்றது .
அந்த அசுத்த மாயா பதிவுகளை அறவே நீக்கினால் தான் மனம் அமைதி பெரும்,அலைபாயும் மனம் அமைதியடையும்,பின் அனைத்து துன்பங்களும் நீங்கும் .
ஆன்மாவை வெற்று இடமாக மாற்ற வேண்டும்.
ஆன்மாவில் முன்பு பதிவான பதிவுகளை அகற்ற சுத்த சன்மார்க்க ஞான தீப ஒளி தியானம் தான் முக்கியமானதாகும். மேலே கூரியபடி தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால்,தீப ஒளி கண்களின் வழியாக உள்ளே சென்று ஆன்மாவை மோதுகின்ற போது அந்த மோதலில் சுத்த உஷ்ணம் உண்டாகும்.
அந்த சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவில் பதிவாகி உள்ள அசுத்த மாயை என்னும் (அறியாமை என்னும் திரைகள் ) திரைகளை கரைத்து விடும்.
திரைகள் கரைந்தால்தான் ஆன்மாவில் உள்ள இயற்கை உண்மை அறிவு வெளிப்படும்,இயற்கை உண்மை அறிவு வெளிப்படும் போது,இயற்கை விளக்கம் என்னும் அருள் சுரக்கும் ,,இயற்கை விளக்கம் என்னும் அருள் சுரந்தால் இயற்கை இன்பம் என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்.
அறிவும்,அருளும் வெளிப்பட சுத்த சன்மார்க்க சத் விசாரம் என்னும் தியானம் அவசியம் செய்ய வேண்டும்.
தடைகள் இல்லாமல் கண்கள் மனம் இரண்டும்,ஜீவன் வழியாக ஆன்மாவை நேரடியாகத் தொடர்பு கொள்ளுவதே ஞான தீப வழிபாடாகும் .அதைத்தான் வள்ளலார் சிற்சபையின் கண் மனத்தை செலுத்துங்கள் என்கின்றார் .
மனம் நேரடியாக சிற்சபையில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள முடியாது ,,,புறத்தில் உள்ள தீபத்தை கண்கள் வழியாகப் பார்த்து மனத்தை அடக்கி ஜீவன் என்னும் உயிரின் வழியாக ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும் .
அதுவரையில் புறத்தில் சுத்த சன்மார்க்க ஞான தீப ஒளி வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
புறத்தில் பார்த்து வந்த தீப ஒளியின் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்கு அதே கண்கள் வந்து விடும்---பின் .உருவம் கரைந்து அருவமாகும் .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்துவைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் ..இதுதான் சுத்த சன்மார்க்க சத்திய ஞான தீப வழிப்பாட்டு முறையாகும் .
பசித்து இரு ...தனித்து இரு...விழித்து இரு ..
என்று வள்ளலார் சொல்லுகின்றார் ....
பசித்திரு ;---நாம் இறைவன் அருளைப் பெறுவதற்காக,வயிறு நிறைய உண்ணாமல் அருளை உண்பதற்காக, சுவைப்பதற்காக பசித்து இருக்க வேண்டும்.
தனித்து இரு ;--எந்த சாதி சமய,மதங்களின் தொடர்பு இல்லாமல் உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நினைத்துக் கொண்டும் தியானம் செய்து கொண்டும் தனித்து இருக்க வேண்டும்.
விழித்து இரு ;--உணவு அதிகம் உண்டால் தூக்கம் வந்து விடும் ..தூக்கம் வந்தால் அருளைப் பெற முடியாது .எனவே இறைவன் வருகையை நினைந்து தூங்காமல் விழித்து இருக்க வேண்டும்.என்று வள்ளல்பெருமான் அழுத்தமாக சொல்லுகின்றார்
எனவே பசித்து இருக்க வேண்டும்..தனித்து இருக்க வேண்டும்..விழித்து இருக்க வேண்டும் என்கின்றார் ..அதுதான் சுத்த சன்மார்க்க ஞான சரியை என்னும் ஞான தீப தியான முறையாகும்.
ஞான சரியை ;--
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையீன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கிறேன்
பொற்சபையில் சிற்சபையில் புதுந்தருணம் இதுவே !
என்று தெளிவாக ''ஞான சரியை'' என்னும் தலைப்பில் முதல் பாடலை பதிவு செய்து உள்ளார் .
இறைவன் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஒளி நம்முடைய ஆன்ம ஒளியாக உள்ளது.
நமது சிறுமையும்.ஆண்டவர் பெருமையும் அதை இடைவிடாது நினைந்து,நினைந்து உணர்ந்து உணர்ந்து ,நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ,ஊற்று போல் வரும் கண்ணீர் அதனால் உடம்பு நனைய வேண்டும் என்கின்றார் .
நாம் இடைவிடாது தீப ஒளியைப் பார்த்து தியானம் செய்யும் போது கண்ணீர் வரவேண்டும் ,கண்ணீர் வந்தால்தான் அறியாமை,அஞ்ஞானம் என்னும் அழுக்கு கரைந்து வெளியே வரும்.அதுதான் திரைகளை நீக்கும் வழியாகும்.
உண்மை அன்பால் இறைவனை நினைக்கும் போது அழுத கண்ணீர் மாறாது.ஆகாரத்தில் இச்சை செல்லாது என்பார் வள்ளலார்.
நமது நாயகன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!
நம்மை இரவு பகல் அறியாது இயக்கிக் கொண்டு உள்ளவர்தான் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ! ஒளியான அருள் நாயகன் என்பவராகும். அந்த உண்மை நாயகனை தொடர்பு கொண்டு ஆன்மா அருள் ஒளி விளக்கம் அடைந்து ,அதில் இருந்து ''அழியாத நிதியாகிய'', அருள் அமுதம் சுரக்கும் .அந்த அருள் அமுத நிதிதான் உடம்பையும்,உயிரையும் அழிக்காமல் பாது காக்கும்,அருள் அமுதமாகும்.
எனவே நாம் இடைவிடாது புறத்தில் உள்ள ஞான தீப தியானம் தினமும் கண்களைத் திறந்து கொண்டே செய்ய வேண்டும். கண்கள் அகத்தில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் வரை புற ஜோதி வழிபாட்டுத் தியானம் அவசியமாகும்.
மலம் ஒழிப்பு !
சமய மதங்களில் மலம ஒழிப்பு என்பார்கள் ,சமய மதங்களில் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது ஆணவம் மாயை,கன்மம், என்னும் மூன்று மலங்களை சொல்லுவார்கள். அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள்,தீட்ஷை கொடுக்கும் தகுதி மனிதர்களுக்கு கிடையாது.
சுத்த சன்மார்க்க உண்மைத் தெரிந்த அருளாளர்கள்,சுத்த சன்மார்க்க உண்மை வழியைக் காட்டிக் கொடுக்கலாம். ஊட்டிக் கொடுக்க முடியாது , அவரவர்களே முயற்சி செய்து மேலேற வேண்டும்..நம் பசியைப்போக்க நாம் தான் உணவு உட்கொள்ள வேண்டும்.
மரணத்தை வென்ற ''வள்ளலார் போன்ற சுத்த பிரணவ ஞான தேகிகளுக்கு மட்டுமே'' அவை சாத்தியமாகும். .அவர்கள் கண்பார்வை நம்மீது பட்டாலே போதும் நாம் தூய்மை உள்ளவர்களாக மாறி விடுவோம்.
வள்ளல்பெருமான்.. ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது என்கின்றார் .
மலம என்பது யாதெனில் ஆணவம், மாயை, கன்மம், மாமாயை, பெருமாயை என்னும் ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள பதிவுகளாகும் அதுவே மலங்களாகும்,
அதற்கு மலம் ஒழிப்பு என்பார்கள்.மலம் ஒழிப்பு என்றால் பதிவு அகற்றம் என்பதாகும். அந்த மலத்தை நீக்குவதற்காக தீட்சை கொடுப்பேன் என்பார்கள் , சாதாரண மனிதர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்
பல சகோதரர்கள்.. விபரம் தெரியாமல் நிறைய பணத்தை கட்டி தேவை இல்லாமல் சென்று தியானம் ...யோகம.... தவம் .....காயகல்பம் ...மனவளக்கலை ...குண்டலினி யோகம்..ஈசா யோகம், ராஜ யோகம் .ஆஷா யோகம்,வாழும் கலை, போன்ற தவறான பயிற்சி முறைகளை கற்று வீணாகக் காலத்தை விரையம் செய்து பொருளை இழந்து கொண்டு உள்ளார்கள்...அதனால் எந்தப் பயனும் இல்லாமல் துன்பப் படுகின்றார்கள்.அப்படி செல்வது,செய்வது அறியாமையாகும்,
மக்களுக்கு நிறைய மன உளைச்சல் ,டென்சன்,வாழ்க்கையில் விரக்தி,தோல்வி ,போன்ற துன்பங்களில் இருந்து விடுதலைப் பெற எதோ ஒன்றைத் தேடி அலைகின்றார்கள் .அவர்களைப் பயன் படுத்தி பணம் பறிக்கும் வியாபார நோக்கத்துடன் தியானப் பயிற்சி கூடங்கள் நாட்டில் நிறைய உள்ளன. .
விபரம் அறியாத மக்களை ஏமாற்றி நிறைய பணம் சம்பாதிக்கும்,மன்றங்களும்,தியானப் பயிற்ச்சி கூடங்களும்,தெய்வ நிலையங்களும்,மேலும் நிறைய அமைப்புகளும் உலகம் எங்கிலும் நிறைய உருவாகி விட்டது...
எனவே தான் வள்ளல்பெருமான் உண்மை உரைக்கின்றேன், வாருங்கள் ,உண்மையை தெரிந்து , உணர்ந்து அறிந்து கொள்ளுங்கள் என்கின்றார் ஏன் என்றால் நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும்.என்னுடைய நாயகன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர சொல்லிய உண்மை வார்த்தைகள் யாகும் என்கின்றார் ..
மலத்தை எவராலும் ஒழிக்க முடியாது !
அறியாமையின் செயல்களால் ஆன்மாவில் பதிவான திரைகள் என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது,அகற்றவும் முடியாது. அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும்,நீக்க வேண்டும்.வேறு ஒருவரால் ஒழிக்கவும் அழிக்கவும் முடியாது,நீக்கவும் முடியாது என்பதை அறிவால் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்....
தீதும் நன்றும் பிறர் தர வாராது ! என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கத்தாலும்,...சத்விசாரம் என்னும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் தியானத்தாலும் மட்டுமே மலம் என்னும் திரைகளை நீக்க முடியும் ,ஒழிக்க முடியும் என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார்.அதனைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தர மக்களும் தெரிந்து கொண்டு சுத்த சன்மார்க்க ''ஞான சரியை'' என்னும் தலைப்பில் அடங்கிய 28 பாடல்களில் பதிவு செய்துள்ளார்.அந்த பாடலில் உள்ளவாறு படித்து உணர்ந்து அறிந்து. ஆன்ம தியானம் முறையைக் கற்று செய்து வர வேண்டும் .
அப்படி செய்வதால் உங்கள் பிரச்சனைகள் யாவும் ஒரே நேரத்தில் செலவு இல்லாமல் தீர்ந்து விடும்.
ஞான சரியை ;--
ஞான சரியை என்றால் ஞானத்தின் முதல் படியாகும்.அதற்குமேல் ஞான கிரியை ,..ஞான யோகம்,,..ஞானத்தில் ஞானம் ..என்பதாகும்.
முதற்படியில் ஏறி விட்டால் அடுத்தப்படிகள் சீக்கிரம் ஏறிவிடலாம் என்கின்றார்.
ஞானம் என்றால் சுத்த அறிவு என்பதாகும்.வள்ளலார் சொல்லியது அனைத்தும் அறிவு சார்ந்த செயல் முறை மார்க்கமாகும்.அதற்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்று பெயர் வைத்துள்ளார் ..அவர் காட்டிய மார்க்கத்தில் உண்மையைத் தவிர ,பொய்க்கு இடமே இல்லை...
ஞான சரியையில் 28,பாடல்களில் மரணத்தை வெல்லும் வழியைத் தெளிவாக விளக்கி உள்ளார் .அதிலே இரண்டும் எட்டும் உள்ளது எட்டும் இரண்டும் தனித்தனியாக இயங்கிக் கொண்டு உள்ளது எட்டையும் இரண்டையும் சேர்த்தால் பத்து என்று வருகின்றது,பத்து என்றால் பற்று என்பதாகும்.
எதைப் பற்ற வேண்டும் மெய்ப்பொருளைப் பற்ற வேண்டும்! மெய்ப்பொருள் எங்கே உள்ளது ?
நம்முடைய உடம்பில் உள்ளது.எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள் .உடம்பில் அகம் என்னும் இடத்தில் ஆன்மா என்னும் உள் ஒளியும்..அகப்புறம் என்னும் இடத்தில் உயிர் ஒளியும் உள்ளது !
உடம்பை இயக்குவதற்கு உயிரும் ஆன்மாவும் தேவைப் படுகின்றது.இரண்டு என்னும் ஆன்மாவும் உயிரும் இல்லை என்றால் .எட்டு என்ற உடம்பு இயங்காது வேலை செய்யாது,
உடம்பு என்ற எட்டும் ,..உயிர்,,,ஆன்மா என்ற இரண்டும் சேர்ந்தால் ஒன்றாகி விடும் .ஒன்று என்பது தான் உள் ஒளி என்னும் ஆன்மாவாகும் ஆன்மாவில் இருந்துதான் உயிர் தோன்றுகின்றது,உயிர் வாழ்வதற்காக உடம்பு கட்டிக் கொடுக்கப் படுகின்றது.
உயிரையும் உடம்பையும் ஆன்மாவின் தன்மைக்கு மாற்ற வேண்டும்,அதற்கு ஒளி உடம்பு என்றும் .அதாவது ஆன்ம தேகம் என்றும் பெயர் , ஆன்ம இன்ப வாழ்வு என்றும் பெயர் வைத்துள்ளார் வள்ளலார் ..
ஆன்ம இன்ப வாழ்வில் தேகம் மூன்று விதமான மாற்றம் அடைய வேண்டும்.!
அதற்கு;-- சுத்த தேகம் ...பிரணவ தேகம்,...ஞான தேகம்.என்பதாகும் !
அதற்கு ;--இம்மை இன்பவாழ்வு ...மறுமை இன்ப வாழ்வு..பேரின்ப வாழ்வு என்பதாகும்.!
மூன்றும் ஒன்றாக இணைவதுதான் சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும் !
அதற்கு ''சுத்த பிரணவ ஞான தேகம்''என்றும் பெயர் வைத்துள்ளார் .. அதைத்தான் வள்ளலார் எட்டோடு இரண்டும் சேர்த்து எண்ணவும் அறியீர் எத்துணைக் கொள்கின்றீர் பித்து உலகீரே என்கின்றார்.
எட்டு இரண்டு என்பன இயலும் முதல் படி என
அட்ட நின்று அருளிய அருட்பெருஞ் ஜோதி ....என்றும்.
இப்படி கண்டனை இனி உறு படி எலாம்
அப்படியே எனும் அருட்பெருஞ் ஜோதி ..என்றும்.
எட்டு இரண்டு அறிவித்து எனைத் தனியே
பட்டி மண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே ....என்பார்
ஆன்மாவையும்,உயிரையும் விட்டு பிரிந்து விடும் தேகத்திற்கு பிணம் என்று பெயர் ..உடம்பையும்,உயிரையும்,ஆன்மாவையும், பிரியாமல் காப்பாற்றுவதே ''சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறையாகும்''.
வள்ளலார் சொல்லியது !
ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் ,உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ,தீபத்தை புறத்தில் வைத்து தடைபடாது, இடைவிடாது ஆராதியுங்கள் என்று தெளிவாக விளக்கி உள்ளார் .ஆதலால் தீபத்தை இடைவிடாது ,கண்களை திறந்து கொண்டு பார்த்து தியானம் செய்ய வேண்டும் .
கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .
கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .
என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
என்னிரு கண்ணே என் கண்ணுன் மணியே !
கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே
விளங்குகின்ற கற்பூர விளக்கே !
கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விணணிறைவே சிவ சிவ தனி மெய்ப் பொருள!
வள்ளலார் வாக்கு !
மேலே சொல்லியபடி செய்து பாருங்கள்,செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும்.
மற்றவர்கள் சொல்லுவதை, ஏதாவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும்.அதனால் பல் இளித்து இறுமாந்து கெட நேரிடும் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார் .
மேலும் ;---
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் --வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து இனி இங்கு
என் மார்க்கமும் ஒன்றாமே ...என்றும் மேலும் ...
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையும் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய்ந் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருள் நன்கு உணர்ந்து
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே ...
என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .....நம்முடைய அக அனுபவத்திற்கும்.அறிவு விளக்கத்திற்கும், அருளைப் பெருவதற்கும் எவை எவை தடையாக இருக்கின்றதோ அவற்றை எல்லாம் அப்புறத் தள்ளிவிட்டு .வள்ளல்பெருமான் சொல்லியதை மட்டுமே கடைபிடிக்க வேண்டும்.
ஆதலால் மேலே கூறிய வண்ணம் சந்தேகம் இல்லாமல் சுத்த சன்மார்க்க ஞான தீப ஒளியைப் பார்த்து தியானம் செய்து வாருங்கள் .தீபத்தை இடைவிடாது தொடர்பு கொண்டு தியானம் செய்பவர்களை,.. அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் இடைவிடாது தொடர்பு கொண்டு அருளை வழங்கி காப்பாற்றுவார் .
தியானம் செய்யும் அண்ட பிண்ட திசைகள் !
1,வடக்கு பாகம் ;-----நட்சத்திரப் பிரகாசம்.
2,கிழக்கு பாகம் ;-----சந்திரப் பிரகாசம்
3,மேற்குப் பாகம் ;-- சூரியப் பிரகாசம்
4,தெற்குப் பாகம் ;--அக்கினிப் பிரகாசம் ...
1,கிழக்கு;------திசையை நோக்கித் தியானம் செய்கின்றது போக சித்தியைப் பெறுவதற்கு ..
2,மேற்கு ;-----திசையை நோக்கித் தியானம் செய்கின்றது சொர்ண சித்தியைப் பெறுவதற்கு ..
3,வடக்கு ;----திசையை நோக்கித் தியானம் செய்கின்றது சித்த சுத்தியைப் பெறுவதற்கு ...
4,தெற்கு ;-----திசையை நோக்கித் தியானம் செய்கின்றது சாகாக் கலையை ...நித்திய தேகத்தையும் ஞான சித்தியைப் பெறுவதற்கு என்று திசைகளின் தன்மைகளை விளக்கமாக தெரிவித்து உள்ளார் .
வடக்கு ...காற்புறம்
தெற்கு ....தலைப்பாகம்
இதனால்தான் தெற்கு ஞானத்தில் சிறந்தது என்பதாகும்
வடக்கு அஞ்ஞானத்தில் அழுந்தியது என்பதாகும் .
தலை கீழ் ,,,கால மேல் என்பதற்கு நியாயம் ;--
மனிதனுக்கு மட்டும் தலை மேல் நோக்கி இறைவன் படைத்துள்ளார் ..மனிதன் மேலே செல்ல வேண்டும் என்பதால தலைகீழாக படைக்கப் பட்டு உள்ளது .
அதனால் தான் மனிதனுக்கு உயர்ந்த அறிவும் இறைவனால் கொடுக்கப் பட்டு உள்ளது .உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டிய நாம் உயர்ந்த அறிவு இருந்தும் தாழ்ந்த நிலையிலே வாழ்ந்து மரணம் அடைந்து கொண்டு வருகின்றோம்...இனி உயர்ந்த அறிவைப் பயன் படுத்தி மேல் நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சுத்த சன்மார்க்க ஞான தீப தியானப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அடி கீழ் ,....மூடி மேல் ...அடி தலை ..முடி கால் ,தலை கிழக்கு... கால் மேற்கு.. கிழக்கு தாழ்ந்தது,, .மேல் திக்கு உயர்ந்தது .மேலும் இவற்றை அனுபவத்தால் அறிக என்கின்றார் வள்ளலார் .
நாம் வள்ளலார் சொல்லியபடி சுத்த சன்மார்க்க ஞான தீப தியானம் செய்து வந்தால் அனுபவம் தானே விளங்கும் என்கின்றார் .வள்ளல்பெருமான் சொல்லியபடி ....
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--
ஆதியும் அந்தமும் இல்ல தோர் அம்பலத்தாடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலே ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி ..
மேலே கண்ட பாடலில் ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர் என்றும் அந்த ஜோதிதான் உங்களை மேலே ஏற்றி ,துன்பத்தை ஒழித்து சுகத்தைத் தரும் என்றும் .இது சத்தியம் என்றும் இறைவன் ஆணைப்படி சொல்லுகின்றேன் என்றும் ...மற்றையவர்கள் காட்டும் வழிகள் யாவும் கீழச் செல்லும் வீதி அதாவது மரணம் வரும் வழியாகும் என்றும், அது உங்களை அழித்துவிடும் என்றும் தெளிவாக விளக்கி உள்ளார் .
உண்மையான அக ஆன்ம ஒழுக்கமும் ,ஜீவகாருண்யம் மான புற ஒழுக்கமும்,அக விசாரமும்,புற விசாரமும், உள்ள ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ளவர்களின்,ஆன்மாவில் எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் உயிர்களின் தகுதிக்கு தகுந்தாற் போல் அருள் புரிவார் ..
இது சத்தியம்... .இது சத்தியம்,..இது சத்தியம்.
ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சுத்த சன்மார்க்க ''ஞான சரியை'' என்னும் ஞான தீப ஒளியின் சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறையாகும் ..
இதைத்தான் ஞான சரியைப் பாடலின் முதல் பாடலாக பதிவு செய்து உள்ளார் !
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே !
என்னும் பாடலின் வாயிலாக உண்மையை உணர்ந்து மெய்ப் பொருளைத் தெரிந்து ,அதனுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே அழியாத நிதியாகிய அருள் அமுதம் என்னும் நிதி கிடைக்கும் .
அருள் அமுதம் என்னும் அழியாத நிதி கிடைத்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.
அந்த அருள் அமுதம் உள்ள இடம் தான், சிற்சபை என்னும் ஆன்மா இருக்கும் இடமாகும்.
அந்த இடத்தைவிட்டு வேறு எந்த இடத்தை தேடினாலும் அருள் அமுதம் கிடைக்காது !
வள்ளல்பெருமான் தெளிவாக பதிவு செய்துள்ள பாடல் !
குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும் மனக் குரங்க்காலே நாணுகின்ற உலகிர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது
மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர்
பொறித்த சமயம் மதம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்
செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்
சித்தி எலாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே !
மேலே உள்ள பாடலில் குறிக்கும் சிவம் என்பது அருட்பெருஞ்ஜோதியைக் குறிப்பதாகும்.ஆன்மாவை குறிப்பதாகும்.
சமயத்தில் சொல்லும் சிவனைக் குறிப்பது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மக்கள் அப்படி நினைத்துக் கொள்வார்கள் என்பதால் அதை சுத்த சிவம் என்பார் வள்ளலார்.
சுத்த சிவம் என்பது ஒளியைக் குறிப்பதாகும்.
சுருக்கமாக சொல்லி உள்ளோம் விரிவாக புத்தகமாக வெளியிட்டு மக்களுக்குத் தரவுள்ளோம்.படித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் துணையாக இருப்பார் !
உங்கள் அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு