வியாழன், 10 செப்டம்பர், 2020

இது கடைசி வார்த்தை !

 *இது கடைசி வார்த்தை.*


வள்ளலார் 51 ஆண்டுகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் பூத தேக மனித உருவத்தோடு காட்சி கொடுத்துள்ளார்.


இறுதியில் அருள் தேகத்தோடு காட்சி கொடுத்தாரா ? அல்லது அருள் தேகத்தை மறைத்து மனித தேகத்தோடு காட்சி கொடுத்தாரா ? என்பதை சிந்திக்க வேண்டும்.


வள்ளலாருக்கு சுத்த தேகம்.

பிரணவதேகம்.ஞானதேகம் கிடைத்த பின்புதான் ஆறாம் திருமுறையை எழுதி வைத்துள்ளார். *அப்போது நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை என்கிறார்*

ஆனால்.ஆறாம் திருமுறை அப்போது வெளியிடவில்லை.

சித்தி பெற்ற பிறகு வெளியிடப்படுகிறது


சித்தி வளாகத்தில் கொடி ஏற்றி  பேருபதேசம் செய்கிறார்.

அப்போது *இது கடைசிவார்த்தை என்கிறார்.*


*வள்ளலார் சொல்லியது*


(சில குறிப்புகளை மட்டுமே சொல்லுகிறேன்) 


நான் சொல்லியவாறு விசாரணை முகத்தில் இருங்கள். 


*சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது.* 


ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.


இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, *கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார்* மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே *அகண்டமாகத் தெரிவிப்பார்*.


 ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். *இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். *இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள்*. 


*இது கடைசி வார்த்தை*. இது முதல் - கொஞ்ச காலம் - சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள். என்று சொல்லுகின்றார்.


மேலும் இங்கு இருப்பவர்களுக்கும் மற்றும் உலகத்தில் உள்ள அனைவருக்கும் சொல்லுகிறேன் என்கிறார்.


*வள்ளலார் உடன் இருந்தவர்கள் எவரும் சாதாரணமானவர்கள் அல்ல.  நன்கு உலகியல் ஆன்மீகம் தெரிந்த ஆன்மீகவாதிகள். இலக்கணம் இலக்கியம் சொற்பொருள் தெரிந்த பண்டிதர்கள்.படித்து பட்டம் பெற்ற பண்பாளர்கள்*.


இவ்வளவு நபர்கள்  முன்னிலையில் சித்தி வளாகத்தில் கொடியேற்றி பேருபதேசம் செய்கின்றார்.


அவர்கள் முன்னிலையில் *நீங்கள் இதுவரை இருந்த்து போல் இனியும் வீண்காலம் கழிக்காதீர்கள்* என்று சொல்லுகின்றார். வள்ளலார் உடன். இருந்தால் எதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களேத் தவிர அருள் பெறுவதற்கு முயற்சி செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.


 வள்ளலார் மீது அன்பும் பாசமும் பற்றும் கொண்டு இருந்தார்களேத் தவிர.வள்ளலார்  காட்டிய சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை ஒருவரும் பின்பற்றவில்லை.


வள்ளலார் சொல்லுவதை உற்று நோக்கி சிந்திப்போமானால் வள்ளலார் உடன் இருந்தவர்கள்.சாதி சமயம் மதங்களை விடமுடியாமல் வீண்காலம் கழித்துகொண்டு இருந்துள்ளார்கள் என்பது வள்ளலார் வார்த்தையால்  வெட்ட வெளிச்சமாக உண்மை வெளிப்படுகிறது.


மேலும் சொல்லுகின்றார்.


*வேலாயு முதலியாரைக் கேட்டால் மனித தரத்தில் சொல்லுவார்*.


வள்ளலார் சொல்லுவதை கவனிக்கவும்.


இது முதல் *சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில்*, நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள்.


 அந்த விசாரணை எது வென்றால்: *நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது?* என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது


 *வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார்*- அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். 


அல்லது, 

தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், *நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற *முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும்*. *அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும்*. 


அந்தப் பசுமை வர்ணம் எப்படிப் பட்டதென்றால், *கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது*. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக,


 இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு *ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடன் இருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்* என்கிறார்


*இங்கே வள்ளலார்  வேலாயுதமுதலியாரின்  சாதியை உபயோகப்படுத்துகின்றார்*.


காரணம் !  வள்ளலார் உடன் இருந்தவர்கள் *வேலாயுதமுதலியார் முதற்கொண்டு  அனைவரும் சாதிப் பற்றுதலை விடமுடியவில்லை என்பதால் அவர்கள் புரியும்படி சொல்லியும் *ஒருவரும் சாதி சமய மத்த்தை விடமுடியாமல் இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.*


வள்ளலார்.. உபசாரத்தால் பெற்ற  தாயார் தந்தையரை பெரியதாக நினைக்கவில்லை.

*உண்மையான தாய் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று பதிவு செய்கிறார்*.  அவர் பெயர் பின்னால் சாதியை பயன் படுத்தவில்லை. எல்லாவற்றிலும்

*சிதம்பரம் இராமலிங்கம் என்றே கைஎழுத்து எழுதியுள்ளார்* 


வள்ளலார் பாடல் ! 


தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்


வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்


காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம் முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்


சேயாக எனை வளர்க்குந் தெய்வம் மகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!


என்னும் பாடலிலே உண்மையான தாய் தந்தையர் யார் என்பதையும் அவர் இருக்கும் இடத்தையும் சுட்டிக் காட்டுகிறார்.


*சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி* !  என்கிறார் வள்ளலார்.


இப்போது நடைமுறையில் உள்ள சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும்  ஆன்மநேய அன்புடைய அன்பர்கள் வள்ளலார் சொல்லிய வண்ணம்  சாதி சமயம் மதம் போன்ற  பற்றை முழுவதும் தூக்கி எரிந்துவிட்டு சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுகிறீர்களா ?   என்பதை ஒவ்வொருவரும் தயவு செய்து சிந்திக்க வேண்டும்.


சாதி சமய மதம்.  போன்ற பற்றுடன் திருஅருட்பாவிற்கு சரியான அருள் விளக்கம் சொல்ல முடியுமா என்றால் நிச்சியமாக சொல்ல முடியாது.


வள்ளலார் பாடல் ! 


அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை

அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இம் மொழிகேள்


உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்

உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்


மறங்குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால்

மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங் கவர்பால்


இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.!  


மேலே கண்ட பாடல் எளிய தமிழில் விளக்கமாக பதிவு செய்துள்ளார்.மேலும்  விளக்கம் தேவை இல்லை.


மேலும் பாடல் !


 மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

*சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை*


எற்றிநின்று *தடுக்கவல்லார்* *எவ்வுலகில் எவரும்*

*இல்லைகண்டீர்* சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்


*பற்றிய பற்று அனைத்தினையும்* *பற்றறவிட்டு அருள் அம்பலப்*

*பற்றே* *பற்றுமினோ எற்றும்இற வீரே*.! 


உலகியல் பற்றை வைத்துக் கொண்டு

திருஅருட்பாவிற்கு சரியான விளக்கம் சொல்ல எழுத எவராலும் முடியாது.


வேலாயுதமுதலியாரைப் போல்  *மனித தரத்தில்* சாதி சமயம் மதம் கொள்கைகள் சார்ந்த கருத்தை வைத்துக்கொண்டு ஒருவாறு சொல்லலாம். 


*எல்லோரும்  முற்றும் துறந்த ஞானிகள் அல்ல*


சன்மார்க்கம் சார்ந்த  விளக்க கட்டுரைகள் கருத்துக்கள் அவரவர்களின் வாழ்க்கை பொறுத்து. புரிதல் பொறுத்து.அனுபவம் பொறுத்து வெளிப்படும். *இக்காலம் சுத்த சன்மார்க்கம்* வளர்ந்து வரும் காலம்.எல்லோரும் நன்கு சிந்தித்து புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.


*யாருடைய கருத்தையும் குறைத்து மதிப்பிடுவது அறியாமையின் உச்சம்*. மேலும் 

உள்வேக்காடு என்று வள்ளலார் சொல்லுவார்.


அவரவர்களுக்கு தெரிந்த புரிந்த அறிந்த கருத்துக்கள் கட்டுரைகள் வெளியிடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. வேண்டுவோர் எடுத்துக் கொள்ளட்டும்.

வேண்டாதார் ஒதுங்கி கொள்ளட்டும்.


என்  40 ஆண்டுகளை கடந்த சன்மார்க்க வாழ்க்கையில் 

இதுவரையில் அனைவருடைய முக்கியமான கட்டுரைகளையும் படிப்பேன் வேண்டியதை எடுத்துக்கொள்வேன்வேண்டாத்தை விட்டுவிடுவேன். எந்த குறைபாடுகளையும் சுட்டிக் காட்டமாட்டேன்.

அவர்களே நேரில் கேட்டால் பதில் சொல்வேன். 


*விசாரம் செய்ய வேண்டும் விவாதம் செய்வது சரியல்ல*


வாட்ஸ்அப்.பேஸ்புக்.மற்றும் வலைத்தளங்களில் என் கட்டுரை வெளியிட்டால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு சென்றடையும்.

அவ்வளவு குருப்பும் தனிநபர்களும் உண்டு.போனில் தொடர்பு கொள்பவர்களுக்கு எனக்கு தெரிந்த விளக்கம் சொல்லுவேன்.


தமக்கே எல்லாம்  தெரியும்.தாம் எழுதுவதே எல்லாம் சரிஎன்று நினைத்துக் கொண்டு மற்றவர்களின் கருத்தில்  குறை கூறுவது தங்களைப் பெரிதாக காட்டிக் கொள்வது எல்லாம்  சரியானது அன்று..


*வள்ளலார் சொல்வதை கவனிக்கவும்*


*கடவுளது திருவருளை எவ்வாறு பெறக்கூடும்*? 


*அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்ய மென்பது ஜீவர்கள் தயவு*. 


ஆதலால் சிறு வெளிச்சத்தைக் கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல், சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும்.


*அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது*? 


நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், 


*அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும்*, *அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிகின்றார்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.*


அத் தன்மையான அருள் பிண்ட அண்டத்தில் எவ்வண்ணமாய் விளங்குகின்றது? 


*காண்பார் காணுமிடம் காணப்படுமிடம்,*


 *அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம்*,


 *தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படுமிடம்,*


 *சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம்,*

*அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம்*, 


*கருதுவார் கருதுமிடம் கருதப்படுமிடம்*, 


*முகருவார் முகருமிடம் முகரப்படுமிடம்*, 


*கேட்பார் கேட்குமிடம் கேட்கப்படுமிடம்*


போன்ற வாழ்க்கை முறைக்குத் தகுந்தவாறு ஒவ்வொருவருக்கும் செயல் விளக்கம் தோன்றும் 


*இவ் வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன?*


 புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து, *நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணைக்கொண்டு*, 

இங்கு நன்கு கவனிக்க வேண்டும். *நன்மையே உருவாய் விளங்கும்* *பெரியாரைத் துணைக்கொண்டு* என்பது மிகவும் முக்கியமானதாகும்.


அவரால் கட்டளையிடும் திருப்பணியைக் கைக்கொண்டு இடையறாது செய்யில், அவ்வருளைப் பெறலாம் என்கிறார்.


அருளைப் பெறுவது சாதாரண காரியம் அல்ல.


*மூவரும். தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை*

என்கிறார் வள்ளலார். 


 *சாதாரண மனித அறிவால் அருள் கிடைக்காது.அருள் அறிவால் மட்டுமே அருள் கிடைக்கும்* .மனித அறிவுக்கும் அருள் அறிவுக்கும் இடையே நிறைய தடைகள். திரைகள் மறைத்துக் கொண்டு இருக்கிறது. தடையெல்லாம் திரை எல்லாம் நீக்கினால் தான் அருள் பெற முடியும்.


*நாம் எந்த தடையை திரையை நீக்கி உள்ளோம்* என்பதை சிந்திக்க வேண்டும். தங்கள் முகத்தை தங்களே பார்க்க முடியாது. கண்ணாடி என்னும் கருவியைக் கொண்டுதான் காணமுடியும். கருவிகள் இல்லாமல் காண்பதே ஞானம் என்பதாகும்.


வள்ளலார் பாடல் ! 


 திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே

திருவருளாம் பெருஞ்சோதித் திரு உருக் காட்டாயோ


உருக்கி அமு தூற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும்

ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ


கருக்கருதாத் தனி வடிவோய் நின்னை என்னுட் கலந்தே

கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய் யாயோ


செருக்கருதா தவர்க்கு அருளும் சித்தி புரத்தரசே

சித்த சிகா மணியே என் திருநடநா யகனே.! 


என்னும் பாடலிலே திரைகள் எல்லாம் தவிர்த்தே திருஉரு காட்டவேண்டும் என்கிறார்.


இரவு பகல் காணாது என்னை களிப்படைய செய்ய வேண்டும் என்கிறார்.


உடம்பில் உள்ள  அணுக்களை உருக்கி   உடம்பு உயிர் உள்ளம் எல்லாம் ஒளிமயமாக்க வேண்டும் என்கிறார்.


இந்த மாற்றம் செருக்கு அற்றவர்களுக்கு.தன்முனைப்பு இல்லாதவர்களுக்கு.உள்வேக்காடு அற்றவர்களுக்கு.

உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்களுக்கு. ஜீவகாருண்யமும் உயிர் இரக்கம் உடையவர்களுக்கு. ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடையவர்களுக்கு.

சாதி.சமய மதத்தை முற்றும் பற்று அற விட்டவர்களுக்கும்.


கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அனுபவத்தால் அறிந்து. வேறு தத்துவ கடவுள்களை வணங்காமல்.வழிபடாமல் உறுதியோடு வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின் பற்றுபவர்களால் மட்டுமே திரைகள் விலகி அருள் பெறும் வாய்ப்பு உண்டாகும்.


எந்த முயற்சியும் இல்லாமல் எதையும் விடாமல்  கனவு காண்பதால் எந்த காட்சியும் கிடைக்காது.

கற்பனையில் வாழ வேண்டியதுதான்


*அறிவு. இயற்கை உண்மை விளக்கம் பெற வேண்டும் என்கிறார் வள்ளலார்*.


வள்ளலார் பாடல் ! 


அறிவில் அறிவை அறியும் பொதுவில்

ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்


செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி

செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.! 


மேலும்


அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே

அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே


செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே

திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே


பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே

*பிறவாமல் இறவாமல்* எனைவைத்த பெருக்கே


தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே

தனிநடராஜ என் சற்குரு மணியே.! 


என்னும் பாடல்களிலே தெளிவு படுத்துகின்றார்.


குற்றம் புரிவது மனித இயல்பு குணமாகக் கொள்வது கடவுள் இயல்பு என்பதை புரிந்து கொண்டு குற்றம் புரியாமல் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.


*வள்ளலார் பாடல்* !


குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே


சிற்றம் பலவா இனிச் சிறியேன் செப்பும் முகமன் யாதுளது


தெற்றென் றடியேன் சிந்தை தனைத் தெளிவித்து அச்சந் துயர்தீர்த்தே


இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.! 


நாம் செய்யும் சிறு சிறு குற்றங்களையும் நீக்கி அச்சம் துயர் பயம் தீர்த்து இத்தருணமே அருட்ஜோதி வழங்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்கிறார் வள்ளலார்.


அதேபோல் அருள் பெறும் உரிமையைப் பெற நாம் தகுதி உள்ளவர்களாக மாற வேண்டும்.மாற்றிக்கொள்ள வேண்டும்.


*படமாட்டேன் பயப்படவும் மாட்டேன்*


*வள்ளலார் பாடல்*! 


படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனி நான்

பயப்படவும் மாட்டேன் நும் பதத்துணையே பிடித்தேன்


விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்

மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன் நும் அடியேன்


கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்

கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்


நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்

நல்ல திரு வருளாலே நான்தான்

ஆனேனே.! 


மனிதன் மரணம் அடைவதற்கு முக்கிய காரணம் 

*ஆகாரம்.மைத்துனம் தூக்கம்.பயம்* ஆகிய  நான்கும் ஆகும். 


இனி நான் பயப்படவும் மாட்டேன் என்கிறார் வள்ளலார். எவ்வளவு நேர்மை உண்மை ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் இவ்வளவு துணிச்சல் வரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 


சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சாதி சமய மதக் கொள்கைகள் அனைத்தையும் மனத்தில் இருந்து நீக்கியவர் வள்ளலார். 


சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்கிறார்.


அருள் பெறுவதற்கு தடையாக உள்ள எந்த தவறையும் செய்யாமல் இருந்ததால் வள்ளலாருக்கு *பயம் ஜீரோவாக இருந்த்து*


தவறு செய்பவர்களின் மனத்தில் பயம் குடிகொண்டு அவர்களை அழித்துவிடும்.

எனவேதான் பயம் ஜீரோவாக இருக்க வேண்டும் என்கிறார்.


மேலும். பேருபதேசத்தில் சாலைக்குப் போகும் கொஞ்சம் காலம்வரைக்கும் ஜாக்கிரதையாக மேற் சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டு இருங்கள் என்று சொல்லுகின்றார்.


*சாலைக்கு போகும் கொஞ்சம் காலம்வரை என்று சொல்லுகின்றார்* அதன் அர்த்தம் விளக்கம் என்ன என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம். 


நல்ல விசாரணை செய்வோம் நலமுடன் வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு