புதன், 9 மே, 2018

இறைவனால் வருவிக்க உற்ற வள்ளலார்!

வள்ளலாரை இந்த உலகத்திற்கு இறைவன் வருவிக்கின்றார் !

எதற்காக இறைவன் வள்ளலாரை வருவிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால்... சுத்த சன்மார்க்கம் எங்கும் எல்லாம் விளங்கும்...

இந்த உலகத்திற்கு இறைவன் தன்னை ஏன் ? எதற்காக வருவிக்க உற்றேன்  என்பதை வள்ளலாரே மிகத்தெளிவாக கீழே கண்ட பாடலின் வாயிலாக தெரிவிக்கின்றார்...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

என்னும் பாடல் வாயிலாக தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார்...

உலகில் உள்ள மனிதகுலம் வாழ்க்கை முறை தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டு கொண்டே உள்ளார்கள்....

ஏன் எதனால் என்றால்.

மனிதன் உடம்பில் உள்ள அகம் என்னும் ஆன்மா விழிப்பு நிலை இல்லாமல் அறியாமை அஞ்ஞானம் என்னும் மறைப்பு சூழ்ந்து திரைகளால் மறைக்கப்பட்டு..கருமை வண்ணம் போல் கருத்து இருக்கின்றது...

உயர்ந்த அறிவை மனிதனுக்காக இறைவன் கொடுத்து இருந்தும்.அகம் என்னும் ஆன்மா கருத்து இருப்பதால் புறம் என்னும் உலக  வாழ்க்கையின் சிற்றின்பத்தில் பற்று கொண்டு. மனம் போனபடி வாழ்ந்து இறுதியில்  மண்ணோடு மண்ணாக மாண்டு போகின்றார்கள்.

ஆன்மாவிற்கு உயர்ந்த பிறப்பாகிய மனித பிறப்பை இறைவன் எதற்காக கொடுத்தார் என்பதை மனித இனம் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றது.

அகம் என்னும் ஆன்மாவைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் இறைவன். வள்ளலாரை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்..

ஆன்மா அகம் கருத்து புறம் வெளுத்துப் போனதற்கு யார் யார் ? எல்லாம் காரணம் என்பதை வள்ளலார் முதலில் பதிவு செய்கின்றார்.

வள்ளலார் பாடல் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசேதனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

என்ற பாடலை ஊன்றி படித்து. பொருள் உணர்ந்து கவனிக்கவும்.

இதுபோல் நிறைய பாடல்கள் உள்ளன.அதிலே இந்த பாடல் ரொம்பவும் முக்கியமான பாடலாகும்...

ஆதியில் இருந்தே பல பல அருளாளர்களால் பல பல சமயங்கள்.மதங்களைத் தோற்று வித்துள்ளார்கள்.அந்த சமயங்கள் மதங்கள் எல்லாம் ****பவநெறி*** என்கிறார் வள்ளலார்.
பவநெறி என்றால் பயன் இல்லாத நெறிகள் என்பதாகும்...பாவத்தை சம்பாதிக்கும் நெறி என்பதாகும்..கருமை உள்ள நெறியாகும்.குருட்டு நெறியாகும்.என்கிறார்.

சமய மதக் கொள்கைகள் தான் மனித இனத்தை அகம் கருத்து புறம் வெளுக்க வைத்துள்ளது என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லுகின்றார்..

எனவே தான் ***சாதியும் மதமும் சமயமும் பொய்*** என்று அருட்பெருஞ் ஜோதி அகவலில்  வெளிப்படையாய் சொல்லுகின்றார்...

எனவே..சாதி சமய மதங்களில் சிக்கி தவிக்கும்  மக்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்பதற்காகவே இறைவன் வள்ளலாரை வருவிக்க உற்றார் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...

சரி..சாதி மதம் சமயங்களை விடுவதால் மனித குலத்திற்கு என்ன லாபம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா !

எதையுமே நாமாக தெரிந்து கொள்வதில்லை.மற்றவர்கள் சொல்லியதை. எழுதி வைத்துள்ளதை படித்து தான் பின்பற்றி வாழ்ந்து வருகிறோம்..

உலகில் உள்ள அனைத்தும் சமய மதங்கள் சொல்லிய காட்டிய வேதங்கள் .ஆகமங்கள்.புராணங்கள்.இதிகாசங்கள்.சாத்திரங்கள் எழுதிவைத்துள்ளதைத் தான் பின்பற்றி வருகிறோம்....

அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதேகற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.

என்ற பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
சமயங்கள் மதங்களைப் பின் பற்றுவதால் மனிதகுலம் ஒற்றுமை இல்லாமல் வேற்றுமை ஓங்கி மனித நேயம் இல்லாமல்.ஆன்ம நேயத்தை அறிந்து கொள்ளாமல் போருற்று இறந்து வீண் போகின்றோம் என்கிறார் வள்ளலார்..

எனவே இறைவனிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இறைவனிடம் தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப் பெற முடியும்.அருளைப் பெற்றால் மட்டுமே மரணத்தை வென்று இறைவனிடம் செல்லமுடியும்...

வள்ளலார் பாடல் !

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடாது

உயிர்கள்பலபேதமுற் றங்கும்இங்கும்போருற் றிறந்துவீண் போயினார்

இன்னும்வீண்போகாத படிவிரைந்தேபுனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டி

மெய்ப்பொருளினை உணர்த்திஎல்லாம்ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி

நீ என்பிள்ளை ஆதலாலேஇவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வேறெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்குநீதிநட ராஜபதியே.

என்னும் பாடலில் உண்மையை உரக்க சொல்லுகின்றார்...

நீ என்பிள்ளை என்பதால் உனக்கு எல்லா உரிமையும் கொடுத்துள்ளேன்..

இந்த உலகமக்கள் இன்னும் வீண்போகாதபடி விரைந்து காப்பாற்ற வேண்டியது உன்னுடைய பொருப்பு கடமை என்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு ஆணை  யிட்டு  சொல்லுகின்றார் ...

எனவே வள்ளலார் உலக மக்களைத் திருத்த ***சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*** என்ற தனிநெறியை. பொது நெறியை.புதிய நெறியை.அருள் பெறும் நெறியை வள்ளலார் தோற்றுவித்துள்ளார்..

மனித இனத்தை காப்பாற்ற இறைவனால் வருவிக்க உற்ற... வள்ளலார் காட்டிய சுத்த சன்மாரக்க பொது நெறியைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.

எவற்றை விடவேண்டுமோ அவற்றை விட்டுவிட்டு எவற்றை பிடிக்க வேண்டுமோ அவற்றை பிடித்துக் கொண்டால் மட்டுமே இறைவனிடம் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற முடியும்..பூரண அருளைப் பெற்றால் மட்டுமே அகம் அனகமாக விரிந்து உடல் முழுவதும் நிறைந்து ஊன உடம்பு ஒளி உடம்பாக வேதியல் மாற்றம் அடைந்து ஆன்மா லாபம் பெற முடியும்.ஆன்மலாபம் பெற்றால் மட்டுமே இறைவன் ஏற்றுக் கொள்வார்..

வேறு தவறான குறுக்கு வழிகளில் சென்றால்.ஆன்ம லாபம் பெறுவது கடினம் . மரணம் நிச்சயம்...

வள்ளலார் பாடல் !

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படித்து உட் பொருள் நன்கு உணர்ந்து வாழ்ந்தால் அகம் வெளுத்து புறம் கருத்து அருளைப் பெற்று மரணத்தை வென்று .கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி.பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு