செவ்வாய், 20 செப்டம்பர், 2016

5-10-2016,,வள்ளலார் அவதார தினம் !

5-10-2016,,வள்ளலார் அவதார தினம் ! 

திருஅருட்பிரகாச வள்ளலார் !

அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்கச் சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !...வள்ளலார் 

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ,அகம் கருத்து, புறம் வெளுத்து,வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி அழிந்து கொண்டும் உள்ளார்கள். மெய்ப்பொருளான இறைவன் யார் ? என்னும் உண்மைத் தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .

உலக மக்கள் அனைவரையும் திருத்தி. இகத்தே இந்த பிறவியிலே அருளைப் பெற்று அழியாமல் வாழ்ந்து மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் என்கிறார்.வள்ளலார் .

இகம்,பரம்,என்ற இரண்டு வழிகள் உண்டு பரம் யாருக்கும் தெரியாது.யாரும் பார்த்ததும்  இல்லை .அந்த பரத்தை இந்த பிறவியிலே இங்கேயே கண்டு அனுபவித்து ,அருளைப் பெற்று, பரத்தில் உள்ள இறைவனிடம் தொடர்பு கொண்டு  ''பேரின்ப பெருவாழ்வு ,என்னும் சாகாக் கல்வியை கற்று '' உயர்ந்த வாழ்க்கை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் என்னை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்  என்று வள்ளல்பெருமான அவர்கள் தன்னுடைய வருகையைப் பற்றி திருஅருட்பா என்னும் அருள் நூலில் தெளிவாகத் தெரியப் படுத்தியுள்ளார்கள்.

வள்ளலார் பிறப்பு  

தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் .சிதம்பரத்திற்கு வடமேற்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில், கிராமக் கணக்கராக இருந்தவர் இராமய்யா என்பவர் .அவருக்கு ஐந்து மனைவியரும் மகப்பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே ,இராமய்யா அவர்கள் ஆறாவது மனைவியாக,சென்னையை அடுத்த சின்னக்காவணத்தில் பிறந்து வளர்ந்த சின்னம்மையை மணம் புரிந்தார் .அவர்களுக்கு சபாபதி,பரசுராமன் ,என்னும் இரு ஆண் மக்களும் உண்ணாமுலை,சுந்தராம்பாள் என்னும் இரு பெண் மக்களும் பிறந்தனர்.

ஒரு நாள் இராமய்யா இல்லாத நேரம் ,அவர் வீட்டிற்கு சிவனடியார் உருவத்தில் இறைவன் சென்றார்.அம்மா ! பசிக்கிறது உணவு தாருங்கள் !என்று சிவனடியார் கேட்க !,அக்குரல் கேட்டு வெளியே வந்த சின்னம்மை நமஸ்காரம் செய்து ,உள்ளே வாருங்கள் என்று அன்புடன் அழைத்து அமரவைத்து இலைப்போட்டு உணவு பரிமாறினார் .''பசி நீங்கிய சிவனடியார்'' என்னுடைய பசியை போக்கிய உனக்கு,உலகம் எல்லாம் உள்ள அனைத்து ஜீவன் களுடைய பசியைப் போக்கும் ஒரு ஞானக் குழந்தை பிறக்கும் என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு வெளியே சென்றார் .சின்னம்மை பின் தொடர்ந்து வெளியே வந்து பார்த்தார் சிவனடியாரை காணாவில்லை மாயமாக மறைந்து போய் விட்டார் .

இராமய்யா வந்தவுடன் நடந்த விபரங்களை சின்னம்மைச் சொல்ல இருவரும் இறைவனிடம் சென்று, இது என்ன சோதனை ! என்று முறையிட்டார்கள் .சிவனடியார் சொல்லிய வண்ணமே பத்தாவது மாதத்தில், 5--10--1823-,ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள்,சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் இருபத்தோராம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை, 5--30, மணியளிவில் ஐந்தாவது மகவாக அவதரித்தார், அக் குழந்தைக்கு இராமலிங்கம் என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

சிதம்பர வழிபாடு !

பிறந்த குழந்தையை முதன் முதலில், ஐந்தாவது மாதத்தில் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபடச் சென்றார்கள்.சிற்சபையில் நடராஜப் பெருமானை வழிபட்டபின்,சிதம்பர ரகசியத்திற்காக அனைவரும் அதன்முன் வந்து நின்றனர்.திரையை நீக்கி அப்பைய தீஷிதர், தீப ஆராதனை காட்டினார் .சின்னம்மைக் கையிலிருந்த ''ஐந்து மாதக் குழந்தை இராமலிங்கம்,கலகல வென்று சிரித்தது'' .அந்த சிரிப்பொலி நடராஜர்  சன்னதியே அதிர வைத்தது. அதைக் கண்ட அப்பைய தீஷிதர் அக் குழந்தையை  வாங்கி நடராஜர் முன் படுக்க வைத்து காலில் விழுந்து வணங்கி ,இக்குழந்தை சாதாரணக் குழந்தை அல்ல ! இது ஒரு ஞானக் குழந்தை என்று போற்றி, புகழ்ந்து,வாழ்த்தி பிரசாதம் கொடுந்து வழியனுப்பி வைத்தார். ஐந்து மாதக் குழநதையாக இருக்கும்போதே ,உலக ரகசியத்தை சிதம்பர ரகசியத்தின் வாயிலாக இறைவன் காட்டிவிட்டார் என்பதை அவர் எழுதிய திருஅருட்பாவில் பின்னாளில்,பதிவு செய்துள்ளார் .

குடும்பம் சென்னை செல்லுதல் !

இராமலிங்கத்தின் எட்டாவது திங்களில் தந்தை இராமய்யா காலமானார். சின்னம்மை தம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான பொன்னேரிக்குச் சென்றார் .சிலமாதங்கள் கழித்து தம் மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.மூத்த பிள்ளையாகிய சபாபதி அவர்கள்,  காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி ஆசிரியரிடம் கல்வி பயின்று புராணச் சொற்பொழிவு செய்வதில் வல்லவராகிக் குடும்பத்தை நடத்தி வந்தார் .

இராமலிங்கத்தையும் தாம் பயின்ற ஆசிரியர் இடமே, கல்வி கற்க அனுப்பி வைத்தார் .இராமலிங்கத்தின் அறிவுத் தரத்தையும் ,பக்குவ நிலையையும் கண்ணுற்ற மகாவித்துவான் இவருக்கு கல்வி போதிக்கும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர்ந்தார் .இராமாலிங்கம் சென்னையில் உள்ள கந்தக் கோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்று தோத்திரம் செய்வதும் ,கவிபாடுவதும் பழக்கமாகக் கொண்டார் .அதைக் கண்ட மக்கள் அவர் பின்னாடி, கூட்டம் கூட்டமாக தொடர ஆரம்பித்தார்கள்.

கல்லாமல் உணரவும்,...சொல்லாது உணர்த்தவும் வல்லவர் என்று உணர்ந்த அம்மா ,அண்ணார்,அண்ணியார், அக்காள் அனைவரும் அவர்மேல் மிகுந்த பாசங் கொண்டு இருந்தனர்..இராமலிங்கம் எப் பள்ளியிலும் பயின்றதில்லை,...எந்த ஆசிரியர் இடமும் கற்றதில்லை....எந்த குருவிடம் உபதேசம் பெறவில்லை,...எந்த நூல்களும் படித்ததில்லை .கற்க வேண்டியதை இறைவனிடமே கற்றார் .கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார். கல்வியும் கேள்வியும் இறைவனிடமே பெற்றதே அன்றி வேறு எவரிடத்தும் பெறவில்லை என்பது அவர் எழுதிய திருஅருட்பா வாயிலாக அறியமுடிகின்றது .

வீதியிலே விளையாடித் திரியும் சிறு பிள்ளைப் பருவத்தே,
அருட்பாடல்களைப் பாடும் வல்லமைப் பெற்று இருந்தார்.''உருவத்திலே சிறியேனாகி ஊகத்தில் ஒன்றுமின்றித் தெருவத்திலே சிறுகால் வீசி ஆடிடச் சென்ற அப்பருவத்திலே நல் அறிவளித்தே உனைப் பாடச் செய்தாய் '' என்றும் ''பாடும் வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய பருவத்தே அணிந்தணிந்து பாடு வகைப் புரிந்தாய்'' என்றும் ''ஐயறிவிற் சிறிதும் அறிந்து அனுபவிக்கத் தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அப்பருவத்து எளியேன் மெய்யறிவிற் சிறந்த எவரும் களிக்க உனைப்பாடி விரும்பி அருள்நெறி நடக்க விடுத்தனை ''என்று திரு அருட்பாடல்களில் பதிவு செய்துள்ளார் .இதுபோல் அகச்சான்றுகள் ஏராளமாக உள்ளன.

கன்னிச் சொற்பொழிவு !

சென்னையில் உள்ள சோமு செட்டியார் என்பவர்,பெரிய தனவந்தர் அவர் வீட்டில்  ஒவ்வொரு வருடமும் புராணச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து வைத்து இராமலிங்கத்தின் அண்ணார் சபாபதி அவர்களை சொற்பொழிவு செய்ய அழைப்பார்,..அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை ,தம்பி இராமலிங்கத்தை அழைத்து நீ போய் ஒன்று, இரண்டு பக்தி பாடல்களை பாடிவிட்டு வா ,நாளை நான் வருவதாக சோமு செட்டியார் இடம் சொல்லிவிட்டு வா என்று அனுப்பி வைத்தார் .

இராமலிங்கம் அன்று நிகழ்த்திய கன்னிச் சொற்பொழிவு.... ''புயல் மழைப்போல் அருள் மழை அருவிப்போல் கொட்டியது ''  அவையோர் அனைவரையும் மெய்மறக்க செய்தது .அனைவரும் அதிசயித்துப் போகும் அளவிற்கு, ''உலகு எல்லாம் அறிந்து ஓதற்கு அறிபவன் '' என்னும் ஒரு வார்த்தைக்கு மட்டும்,இரவு நெடுநேரமாகியும் அவரே நிறுத்தும் அளவிற்கு சொற்பொழிவு ஆற்றினார் .அன்று முதல் அவரையே தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றுமாறு அனைவரும் வேண்ட, அதற்கு இசைந்து சொற்பொழிவு ஆற்றினார் .அந்த சொற்பொழுவு சென்னை நகரம் முழுவதும் பரவியது .அன்றுமுதல் சென்னையில் உள்ள படித்த பண்டிதர்கள், சான்றோர்கள்,படித்தவர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் அணிதிரண்டு அவர் பின்னாடி செல்ல ஆரம்பித்தார்கள்.அவருக்கு அப்போது ஒன்பது வயதாகும்.

மாணாக்கர்கள் !

சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பன்மொழிப் புலவர் வேலாயுதம் என்பவர் ,இராமலிங்கம் புலமையில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் கடிய நடையில் தாமே நூறு செய்யுள்களை இயற்றிக் கொண்டுவந்து ,இவை சங்ககாலச் செய்யுள்களில் உள்ள பழைய ஏடுகளில் காணப்பட்டன என்று இராமலிங்கத்திடம் காட்டினார்.அவற்றைக் கண்ணுற்று இவை சங்கக் காலப் பாடல்கள் அல்ல ,சங்கப் பாடல்களில் இவ்வளவு குற்றம் இருக்காது .இவைப் பொருள் இலக்கணம் தெரியாத கற்றுக் குட்டி பாடியவை எனக் கூறினார் .அதனைக் கேட்டதும் வேலாயுதனார் தம் செய்கைக்கு நாணி தலைகுனிந்து உண்மையைக் கூறி சரணடைந்தார் .அன்றிலிருந்து தன்னுடைய் பணியை விட்டுவிட்டு ,இறுதி வரை இராமலிங்கத்தின் தலைமைத் தொண்டராக, சீடராக இருந்தார் அவருடன் ஆயிரககணக்கான தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

சங்கராச்சாரியார் சந்தேகம் தெளிதல் !

சமஸ்கிருத மொழியில் உள்ள வேத தோத்திரப் பாடல்களில் சிலவற்றிற்கு சங்கராச்சாரியார் அவர்களுக்கு பொருள் விளக்கம் தெரியவில்லை.அவற்றை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று பலமுறை சிந்தித்துக் கொண்டே இருந்தார்.அவருடைய சீடரில் ஒருவர்...சுவாமி ! சென்னையில் உள்ள கந்த கோட்டத்தில் இராமலிங்கசுவாமி என்பவர் ஒருவர் வந்து இறைவனைப் பற்றி பாடிக் கொண்டே இருப்பார் .அவர்களைக் கேட்டால் சந்தேகம் தெளிவடையும் என்று கூறினார் .அதற்கு அவர் ! எனக்கே தெரியாத விளக்கத்தை, ..பள்ளிகூடம் செல்லாது படிக்கத்தெரியாத அவருக்கு என்னத் தெரியப்போகுது என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு ,...இருந்தாலும் உன்னுடைய விருப்பம் போல் ஏற்பாடு செய் ! பார்க்கலாம் என்று சொல்ல ! இருவரையும் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கினார்கள் .

இருவரும் பலமணிநேரம் உரையாடிவிட்டு, இராமலிங்கம் அவர்கள் சமஸ்கிருத மொழியில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாக விளக்கினார் அதைக் கேட்ட சங்கராச்சாரியார் மெய் சிலிர்த்து ஆச்சரியப்பட்டுப்  போனார்.சம்ஸ்கிருத மொழியில் இவ்வளவு பெரிய உண்மைகள் இருக்கிறதா என்பதை அறிந்த அவர் ''உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும்  ''சமஸ்கிருத மொழி தாய் மொழிதானே ?'' என்று இராமலிங்க பெருமானிடம் கேட்டார்.அதற்கு அவர் ஆம் ! ..சமஸ்கிருதம் தாய் மொழிதான் ! அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் .ஆனால்..தாய் என்று ஒன்று இருந்தால் ,தந்தை என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா '' ?

சமஸ்கிருதம் தாய் மொழி என்றால் ! ''தமிழ் தந்தை மொழி "' என்று தமிழுக்கு முதலிடம் கொடுத்தார்.அதைக்கேட்ட சங்கராச்சாரியார் வாய் அடைத்து மவுனமானார்.இந்த சந்திப்பின் நடந்த  உண்மைகள் சென்னை நகரம் முழுவதும் பரவியது..இராமலிங்கத்தின் மீது அளவில்லா பக்தியும் பாசமும் கொண்டு மக்கள் அதிகமாக அவர் பின் தொடர்ந்தனர் .

சென்னையை விட்டு செல்லுதல் !        

இராமலிங்கத்தின் எண்ணம் சிந்தனை,சொல், செயல் அனைத்தும் இறைவன் பால் அதிகமாக சென்றதாலும் மக்கள் அதிகமாக அவருடன் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமலும்,சென்னையில் இருந்தால் தன்னுடைய இறை அருளுக்கு பாதிப்பு உண்டாகும் என்பதாலும், தன்னுடைய முப்பத்தைந்தாம் வயதில் சென்னையை விட்டு தல யாத்திரையாக ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சென்று கவிபாடும் செயலில் ஈடுபட்டு சிதம்பரம் தில்லையம்பதியில் சில நாட்கள் தங்கினார் .

{அப்பொழுதே சென்னைப் பட்டினம் என்பதை  தருமமிகு சென்னை என்று பல பாடல்களில் பாடி உள்ளார் }

அங்கு இருப்பதற்கும் மனம் செல்லாமல் வடலூருக்கு அடுத்த கருங்குழி என்னும் கிராமத்தில், மணியக்காரர் வேங்கட ரெட்டியாரின் அன்பிற்கு பாத்திரமாகி அவர் இல்லத்திலே தங்கி அருட்பாடல்களை எழுதிக் கொண்டு இருந்தார்.

தண்ணீரால் விளக்கு எரித்தது !

கருங்குழி வீட்டின் அறையில் ஒருநாள் இரவு ,இராமலிங்கப் பெருமான் அவர்கள் ''திருஅருட்பா ''எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே எண்ணெய்ச் சொம்பு என எண்ணித் தண்ணீர்ச் சொம்புவை எடுத்து விளக்கில் வார்த்தார் விளக்கும் நன்றாக இரவு முழுவதும் எரிந்தது.தண்ணிரில் விளக்கு எரிந்த அவ் அற்புதத்தை சென்னை நகரில் உள்ள தன்னுடைய அன்பர்களுக்கு பாடல் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார் .இவைப் போல் மேலும் பலப் பல அறிய அற்புதங்களை இறைவனுடைய அருளால் கிடைத்தது என்பது அவருக்கு தெரியவருகிறது .எதையும் அவர் வெளியே சொல்லாமல்.காட்டாமல் அருட்பா பாடல்கள் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்.

அவர் எழுதிய அருட் பாடல்களை முழுவதும் முதல் ஐந்து திருமுறைகளாக தொகுத்து ''திருஅருட்பா''என்னும் தலைப்பில் பேராசிரியர் வேலாயுதம்,மற்றும் அவர்களுடைய அணுக்கத் தொண்டர்கள் சேர்ந்து 1867.ஆம் ஆண்டில் வெளியிட்டார்கள் .அவை மக்கள் மத்தியிலே பெரும் வரவேற்பைப் பெற்றது.இராமலிங்கம் என்னும் பெயரை திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் பெயராக வேலாயுதம் அவர்கள் முன்மொழிய அன்பர்கள் எல்லாம் அவ்வாறே ஏற்றுக் கொண்டார்கள் .ஆனால் வள்ளலார் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை, அவை ஆராவாரத்திற்கு அடுத்த பெயர் என்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை.அவர் சித்திபெறும் வரை ,சிதம்பரம் இராமலிங்கம் என்றே தமது பெயரை எழுதி கொண்டு வந்தார் .மக்கள் உள்ளங்களில் ''திரு அருட்பிரகாச வள்ளலார்'' எனற பெயர் நிலைத்து விட்டது.

நீதி மன்றம் செல்லுதல்.!

சாதி சமயம் மதம் எல்லாம் பொய்யான கற்பனைக் கதைகள் .''கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்'' என்பதை திரு அருட்பாவில் ,பல  பாடல்கள் வாயிலாக வள்ளலார் தெரியப்படுத்தி எழுதி உள்ளார் ..அவற்றைக் கண்ணுற்ற சமய வாதிகள் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர் ....

வள்ளலார் எழுதியது திருஅருட்பா அல்ல ,அவை மருட்பா என்று ,சமயவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ,யாழ்பாணத்தில் உள்ள ஆறுமுக நாவலரை அழைத்து வந்து மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.வள்ளலாருக்கு சம்மன் வந்தது ,சம்மனை வாங்க மறுத்து விட்டார்.தன்னுடைய சீடர் வேலாயுதம் அவர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டு கோர்ட்டு சம்மனை கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டார்.நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது இராமலிங்கம் இராமலிங்கம் என்று குரல வந்தது ..திடீர் என்று இராமலிங்கம் கூண்டுக்குள் 
( வந்து நின்றார் )பிரசன்னமானார் .நீதிபதி முதற்கொண்டு அனைவரும் எழுந்து கை கூப்பி வணக்கம் செய்தனர்...நீதிபதியும் தன்னை யறியாமல் எழுந்ததை உணர்ந்து சமாளித்துக் கொண்டு,ஆறுமுக நாவலரைப் பார்த்து .நீங்கள் தானே வழக்குத் தொடர்ந்தவர் என்று கேட்க ஆமாம் என்று அவர் பதில் சொல்ல ,இராமலிங்கம் வந்தவுடன் அவரைப் பார்த்து எழுந்து வணக்கம் சொன்னீரே, ஏன் ? என்று கேட்க ,அதற்கு அவர் பெரியவர்,உயர்ந்தவர்,அனைவராலும் மதிக்கத்தக்கவர்,பாராட்டத் தக்கவர் . ஆதலால் வணக்கம் சொன்னேன் என்று சொல்ல ..நீங்களே பெரியவர், உயர்ந்தவர் என்று ஒப்புக் கொண்டதால் ,அவர் எழுதியது ''திருஅருட்பா'' தான்,மருட்பா அல்ல என்று தீர்ப்பு வழங்கினார்.இந்த செய்தி தமிழகமெங்கும் தீப்போல் பரவியது .அவர் புகழ் மேலும் அதிகமாக மக்கள் மத்தியில் பரவலாயிற்று .

ஆனால் வள்ளலார் நீதி மன்றம் செல்லவில்லை, வடலூரில் உள்ள தருமச்சாலையில் தன்னுடைய அன்பர்களிடம் உரையாடிக்கொண்டு இருந்தார் என்ற செய்தி நீதிமனறத்தில் இருந்த வந்த அன்பர்கள் அறிய, வள்ளலார் இதை வெளியில் சொல்லவேண்டாம் என்று அடக்கிவிட்டார்.நீதி மன்றத்திற்கு சென்றது வள்ளலார் உருவில் இறைவனே சென்றார் என்பது உண்மையாகும் .

தருமச்சாலை அமைத்தல் !

பல தெய்வங்களை வணங்கி அத்தெய்வங்களைப் பற்றி ஆயிரக்கணக்கான பக்தி பாடல்கள் இயற்றி வந்த வள்ளல்பெருமான் இறுதியிலே, அவைகள் எல்லாம் தத்துவங்களே ஒழிய உண்மையான கடவுளகள் அல்ல என்பதை உணர்ந்த வள்ளலார் ....உண்மையானக் கடவுள் ஒருவரே !அவரே அருட்பெரும் ஜோதியாக உள்ளார் என்பதை மக்களுக்கு போதித்து வந்தார்,அந்த அருட்பெருஞ் ஜோதிதான எல்லா ஆன்மாக்கள் உள்ளும், உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளது .அதுவே அருட்பெருஞ் ஜோதியாகும் .அதனால் எந்த உயிர்களையும் அழிக்கக் கூடாது !.உயிர்க்கொலை செய்யக் கூடாது ! புலால் உண்ணக்கூடாது.என்று தன்னுடைய அன்பர்களுக்கும்.பொது மக்களுக்கும்  கட்டளை இட்டார். ''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்''என்ற அவர் வார்த்தை மக்கள் மத்தியிலே நிலைப் பெற்றுவிட்டது.

இறைவனுடைய அருளைப்பெற வேண்டுமானால் ,உயிர்கள் மேல் அன்பு,தயவு,கருணைக் காட்டவேண்டும் என்றார்.,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் பசி பட்டினி ,வறுமை போன்ற கொடுமைகளில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த உலகத்தில் பசி ,பட்டினி,வறுமை என்னும் கொடுமையால் மக்கள் அழிந்து விடக் கூடாது என்பதை உணர்ந்து ,வடலூர் மக்களிடம் எண்பது காணி இடம் இலவசமாகப் பெற்று 23--5--1867 ,ஆம் ஆண்டு தருமச்சாலையைத் தொடங்கிவைத்தார் அன்றிலிருந்து இன்றுவரை பசி என்று வந்தவர்களுக்கு மூன்று வேளையும் உணவு கொடுக்கப்பட்டு வருகின்றன.

''அறிவு விளங்கிய ஜீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு'' என்றார்.''...''உயிர் இரக்கமே இறை வழிபாடு'' என்றார்....''கருணை ஒன்றே இறை அருளைப் பெறும் துவாரமாகும்'' என்றார் .எங்கே கருணை இயற்கையில் உள்ளன  அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி ! என்னும் உண்மையை மக்களுக்குப் போதித்து வந்தார் .

வள்ளலாரின் கொள்கைகளில் முதன்மையானது முக்கியமானது;-- ஜீவகாருண்யம் என்பதாகும்.ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார்.இறைவனுடைய கோட்டையின் உள்ளே இருக்கும் அருளைப் பெற வேண்டுமானால் ஜீவ காருண்யத்தால் மட்டுமே பெறமுடியும் .வேறு பக்தி வழிபாடு, தியானம் ,தவம்,யோகம்,போன்ற எந்த செயல்களாலும் இறைவனுடைய அருளைப் பெறமுடியாது என்பதை மக்களுக்குப் போதிக்க தருமச்சாலையைத் தோற்றுவித்தார் .ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய தருமச்சாலையில் அவரவர்களால் முடிந்த பொருள் என்னும் கருணையை செய்து அதனால் வரும் ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள் என்பதை எழுதிவைத்துள்ளார்.அவற்றை ஏற்றுக் கொண்ட மக்கள் தங்குதடை இல்லாமல் உணவுப்பொருள்கள் வாரி  வழங்கிக் கொண்டு வருகிறார்கள் .அவர் ஏற்றிவைத்த அடுப்பு அணையாமல் இன்றுவரை எரிந்து கொண்டு ஏழைகளின் பசிக் கொடுமையைப் போக்கிக் கொண்டு வருகிறது.

சன்மார்க்க கொள்கைகள் ;---

1,கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !
2,ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
3,கடவுளின் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது !
4,புலால் உண்ணலாகாது (மாமிசம் ) !
5,சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது !
6,சாதி ,சமயம்,மதம்,போன்ற வேறுபாடுகள் கூடாது !
7,இறந்தவரைப் புதைக்க வேண்டும் எரிக்க கூடாது !
8,கணவன் இறந்தால் மனைவி  தாலி வாங்கக் கூடாது !
9,மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது !
10,பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் !
11,பெண்களுக்கும் யோகம் தியானம் முதலியவைகளை சொல்லித் தரவேண்டும் !
12,ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் .
13,எதிலும் பொது நோக்கம் வேண்டும் !
14,கருமாதி திதி போன்ற சடங்குகள் செய்யக் கூடாது 
15,ஏற்றத் தாழ்வு மக்களிடம் இருக்கக் கூடாது !
16,எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாது காக்க வேண்டும் !
17,புராணங்களும் இதிகாசங்களும் முடிவான  உண்மையை தெரிவிக்க மாட்டாது  !


போன்ற கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டும் ,போதித்துக் கொண்டும் இருந்தார் ////

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !

வள்ளல்பெருமான் அவர்கள் தன்னுடைய கொள்கைகளை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக,சாதி ,சமயம்,மதம்,இனம்,மொழி,நாடு என்ற பேதம் அற்ற. ஒரு புதிய பொது மார்க்கத்தை தோற்றுவித்தார் அதற்கு பெயர் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்று பெயர் வைத்துள்ளார் .அச் சங்கத்தின் கொள்கைகள் ;--.

நம்வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அன்று ஏழைகளை அழைத்து ''அன்னவிரயம்'' செய்யவேண்டும் .இதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கக் கொள்கைகளாகும் அக் கொள்கைகளைப் பின்பற்றவும் பரப்பவும் 1865 ,ஆம் ஆண்டில் வடலூரில் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.சன்மார்க்க அன்பர்கள் வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறார்கள்.

மனிதன் ஒழுக்கமுடன் வாழ வேண்டுமானால்;--- .இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்,என்னும் நான்கு ஒழுக்கங்களை கடைபிடித்தால் மனிதன் மனிதனாக வாழ்ந்து இறை நிலையை அடையமுடியும் என்பதால் ஜீவ காருண்யம் என்னும் உரைநடை நூலை முதன்முதலில் எழுதி வைத்துள்ளார் .அவை மக்கள் மத்தியிலே இன்றுவரை பாராட்டப்பட்டு வருகிறது

''மனிதனின் மரணம் இயற்கை அல்ல செயற்கையால்தான் மரணம் வருகின்றது .மரணத்தை வெல்லும் வழி உண்டு என்பதை கண்டுபிடித்து தானும் ''மரணத்தை வென்று''  வாழ்ந்து காட்டி, மற்றவர்களும் மரணத்தை வென்று வாழமுடியும் என்பதை உலகுக்கு பறைசாற்றி உள்ளார் ''.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

உண்மையானக் கடவுளை ஒளிவடிவமாக கண்ட வள்ளலார் ,அதற்கு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ! என்னும் பெயர் வைக்கிறார் ,அப்பெயரை இறைவனே எடுத்துக் கொடுத்தார் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே ,சாதி சமயம்,மதம்,போன்ற வேறுபாடுகள் இல்லாத உலகப்  பொது வழிபாட்டு முறையை மக்களுக்கு காட்டவே ;--வடலூரில்...உலகில் உள்ள  எட்டு திக்கு மக்களும் வந்து வழிபட வேண்டி ,எண்கோண வடிவில் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' 25 --1--1872 ,ஆம் ஆண்டு அமைத்து இன்று வரை ஜோதி தரிசனம் காண்பித்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து வழிப்பட்டு தம் குறைகளை நீக்கி அருள் பெற்று ,மனம் நிறைவு பெற்று சென்று கொண்டுள்ளார்கள் .

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கை --உயர்ந்த அறிவுள்ள மனிதன் இறை அருளைப்பெற்று ஊன உடம்பு, ஒளிதேகமாக மாற்றிக் கொண்டு சாகாமல் இருக்கமுடியும்,சாகாமல் வாழமுடியும்  என்னும் பேருண்மையை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து காட்டினார் ....''சுத்த சன்மார்க்க மரபு, என்பது எதுவெனில்  அவை மனிதன் சாகாதிருப்பதே'', ,''சாகாதவனே சன்மார்க்கி'' என்பது வள்ளல் பெருமானின் உபதேசமாகும்.---''என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்''என்பது அவரது முடிந்த முடிவான கொள்கையாகும்./''முழுமையான பரிபூரண இறை அருளைப் பெற்றால் மரணம் இல்லாமல் மனிதன் வாழமுடியும்'' எனற உயர்ந்த கொள்கையை விஞ்ஞானம் ,அறிவியல் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு விளக்கி வைத்துள்ளார் .

அழியும் பொருளான மல உடம்பை,அழியாத அருள் உடம்பாக மாற்ற முடியும் என்ற உண்மையைக் கண்டு பிடித்து வாழ்ந்து காட்டியவர் . மனித உடம்பின் உள்ள பூதத் அணுத் துகள்களை அருள் துகள்களாக [ ஒளியாக } மாற்றும் வேதியல் மாற்றத்தைக் கண்டு பிடித்தவர் வள்ளல்பெருமான் .

அழியும் பொருளை விட்டு அழியாத அருளை பெற வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய வழிபாட்டு முறைகளாகும். 

மனித பிறப்பு என்பது உயர்ந்த அறிவுள்ள பிறப்பாகும்.மனிதன் தன்னுடைய உடம்பை இறை அருளால் ,சுத்த தேகம்,பிரணவதேகம் ,ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று கொண்டால் இறைவனுடைய தேகமான ஒளிதேகமாக மாற்றிக் கொண்டு இறப்பு ,பிறப்பு இல்லாமல் கடவுளுடன் சேர்ந்து ஐந்தொழில் வல்லபம் பெற்று ''நித்திய சுத்த சத்திய வாழ்வு ''என்னும் ''கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு'' வாழ்வதே மனித பிறப்பின் முக்கிய கொள்கைகளாகும் என்பதை வலியுறித்திக் கொண்டே இருந்தார் .

சித்திப் பெற்ற இடம் !

வள்ளல்பெருமான் சொல்லியதோடு இல்லாமல்,சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டினார் .வடலூருக்கு தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்திற்கு  சென்று அங்கேயே  உறையத் தொடங்கினார் அவர் தங்கி இருந்த இடத்திற்கு ''சித்திவளாகத் திருமாளிகை'' என்று பெயர் .அவர் அங்கே ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் நான் இப்போது இந்த அறையில் சென்று இறைவனோடு இரண்டற கலக்கப்போகிறேன் ,பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ''இந்தக்கதவை சாத்திக் கொள்ளுங்கள் ,அப்படி யாராவது  பார்க்க வேண்டும் என்று பார்க்க நேர்ந்தால் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் ,வெறு வீடாகத்தான் இருக்கும் ''என்றும் ,

நீங்கள் அனைவரும் நான் சொல்லிய வண்ணம் உங்கள் வாழ்க்கையில் ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடியுங்கள் நீங்களும் என்னைப் போன்ற பெரிய பேரின்ப ஆன்ம லாபத்தை அடைவீர்கள் இது சத்தியம் ,இது சத்தியம் .என்று சொல்லி உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்,

சித்தி பெற்ற ஆண்டு 30--1--1874,--ஸ்ரீமுக வருடம் தைமாதம் பத்தொன்பதாம் நாள் வெள்ளிக்கிழமை ,அப்போது அவருக்கு வயது ஐம்பத்து ஒன்றாகும் .

வள்ளலாரின் செய்தியை அறிந்த கடலூர் மாவட்ட ஆங்கிலேய ஆட்சியாளர் மற்றும் தாசில்தார் போன்ற அதிகாரிகள் வந்து மக்கள் முன்னிலையில் கதவை திறந்து பார்த்தார்கள் வெறு வீடாகத்தான் இருந்தது .வள்ளலார் இறைவனோடு கலந்து பேரின்ப சித்தி என்னும் பெருவாழ்வு பெற்றுவிட்டார் ,என்பதை அரசு பதிவேட்டில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.இவை யாவும் உண்மை செய்திகளாகும்..

வள்ளலார் அவர்கள்.சித்திப் பெற்றபின் அவர் எழுதிய ஆறாம் திருமுறை என்னும் திருஅருட்பா வெளியிடப்பட்டது..அதில் அனைத்து உண்மைகளும் தெள்ளத்தெளிவாக உள்ளன.''உலக ரகசியங்களையும்,.உயிர்களின் பிறப்பு இறப்பு ரகசியங்களையும்,கடவுள் யார் என்ற உண்மைகளையும்.,உலகம் முழுவதும் சாதி,சமயம்,மதம்,அற்ற சகோதர உரிமையுடன் வாழ வேண்டும்.உலகம் முழுவதும் அமைதி நிலவவேண்டும்''..''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை ''அனைவரும் கடைபிடிக்க வேண்டும் .''ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு....உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு'' என்பதை மிகவும் வலியுறுத்தி எழுதி வைத்துள்ளார்.

மேலும் ;--உரைநடை நூல்கள் அதிகம் இல்லாத காலத்தில் மனுமுறை கண்ட வாசகம்,...ஜீவகாருண்ய ஒழுக்கம் ,...ஒழிவியல் ஒடுக்கம்,...தொண்டமண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரைநடை,...சின்மயதீபிகை...போன்ற உரைநடை நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழ் நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வள்ளல்பெருமான் ஒருவரே .மேலும்,தமிழ் நாட்டில் முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியவரும் அவரே ! நூல் ஆசிரியராக ,உரை ஆசிரியராக ,பதிப்பாசிரியராக ,போதக ஆசிரியராக,,ஞான ஆசிரியராக ,வியாக்கியான கர்த்தராக ,சித்த மருத்தவராக ,அதற்கும் மேலே கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் .எனப் பன்முகங் கொண்ட அருளாளர் வள்ளல்பெருமான் அவர்கள்.சுமார் ஆறாயிரம் அருட்பாடல்களை எழுதி வைத்துள்ளார்.

நமது இந்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வள்ளலாரின் வாழ்க்கை வரலாறுகளையும்.கொள்கைகளையும் ,பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் பாடப்புத்தமாக கொண்டு வந்தால் எதிர்கால மாணவர்கள்.ஒழுக்க நெறியோடு வாழ்வதற்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்பது சன்மார்க்க சான்றோர்களின் விருப்பமும் வேண்டுதலுமாகும்.

நமது தமிழக அரசு வள்ளலார் வருவிக்க உற்ற நாளை ஆன்மநேய ஒருமைப்பாட்டுத் தினமாக கொண்டாடி மகிழ்கின்றது ,ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஐந்தாம் நாளன்று மதுக்கடைகளும், மாமிசக்கடைகளும் சட்டப்படி அடைக்கப்பெற்று வள்ளலார் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியதாகும் ;.நம்முடைய தமிழக அரசும் ,மத்திய அரசும் வள்ளலார் அவதரித்த நாளை உலக ஒருமைப்பாட்டுத் தினமாக அதிகாரப் பூர்வமாக அறிவித்து மக்கள் பயன் அடைய செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

இதுவே வள்ளலாரின் வாழ்க்கையின் சிறிய சுருக்கமாகும்.மேலும் அருட்பாவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யாருளர் நீ சற்றே அறை ! ;---வள்ளலார்

அருட்பெருஞ் ஜோதி !

என்றும் உங்கள் ஆன்மநேயன்;--
ஈரோடு --செ, கதிர்வேல்
போன் ;--9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு