வெள்ளி, 21 மே, 2010

நித்தியானந்தா பற்றி தமிழக முதல்வருக்கு கடிதம்

19-3-2010,
ஈரோடு மாவட்டம்.

பெரியாரின் பகுத்தறிவும் அண்ணாவின் உலக அறிவும் இரண்டையும் சேர்ந்த பொது அறிவுக்கு இரைபோடும் மாண்புமிகு முதலமைச்சர் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதும் விண்ணப்பம் நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல மெய்ப் பொருளை வேண்டிக்கொள்கிறேன்.

ஆன்மிகம் என்ற பெயரில் கடவுள் பெயரை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் காவி உடை சாமியார்களும், துறவி, சந்நியாசி என்ற ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும் மற்றும் வேறு பல வழிகளில் போலி சாமியார்களும், புற்று ஈசல் போல் நாட்டில் பரவிக் கொண்டு வருகிறார்கள். மக்களும் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து வீண் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு அடிப்படைக்காரணம் பேராசையே. ஆசையே அழிவிற்கு காரணம் என்ற உண்மையை உணராத மக்கள் பொய்யை உண்மை என்று நம்பி ஏமாந்து அழிந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

ஏமாற்றுக்காரர்கள் முதலில் - அரசியல் வாதிகளையும், உயர் அதிகாரிகளையும், பெரும் பணக்காரர்களையும் அழைத்து அவர்கள் தலைமையில், யோகம், தவம், தியானம், மந்திரம் தந்திரம் அபிஷேகம், ஆராதனை, வழிபாடு போன்றவற்றை நடத்தி நம்பவைத்து ஏமாற்று வேலையை ஆரம்பிக்கிறார்கள். அதைப் பார்த்த மற்ற சமூகத்தில் உள்ள பெரியவர்களும் திரைத்துறையை சார்ந்தவர்களும் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்கள் பலரும் போக ஆரம்பித்து விடுகிறார்கள். பெரிய, பெரிய ஆட்களே நம்பித் தானே போகிறார்கள் நாமும் போகலாம் என்ற ஆசைகள் மக்கள் மத்தியில் தோன்றிவிடுகிறது. அதன் அடிப்படையில் நடுத்தர மக்கள் ஏமாந்து வீண் போக ஆரம்பித்து விடுகிறார்கள். கூட்டம் சேர்ந்து விடுகிறது. ஏமாற்றுக்காரர்களுக்கு வேட்டையாட வசதியாகி விடுகிறது. பணம் பறிக்கும் வேலையை மிக சுலபமாக ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கவலையே இல்லாமல் போய் விடுகிறது.

சில பல போலி சாமியாகள் மாட்டிக்கொண்டாலும் மக்கள் திருந்துவதாக இல்லை. திருந்தவே மாட்டார்கள். சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருந்தாலும் திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதற்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் வாதிகளும் அரசியல் தலைவர்களும் பெரும் பணக்காரர்களும், அரை குறை ஆன்மிக வாதிகளும் உடந்தையாக இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

மாயைக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் என்ன என்பதே தெரியாத ஆன்மிக வாதிகள் எல்லா மதத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

இவ்வுலகை கடவுள் படைத்தாலும்  கடவுளை இவர்களால் படைக்க முடியுமா? மனிதர்களால் கடவுளை படைக்க முடியாது என்பது உண்மை.

கடவுள் இவ்வுலகை படைத்தாலும் கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகம் கிடையாது. பஞ்சம் பூதங்களான மாயையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதை தெரியாத ஆன்மிக வாதிகளும் மக்களும் மாயா உருவங்களை கடவுள் என்றும், தத்துவங்களை கடவுள் என்றும், மனிதர்களை கடவுள் என்றும் நம்பி வீண் பொய் கொண்டு இருக்கிறார்கள்.

இதனுடைய உண்மை இரகசியங்களை வள்ளலார் திரு அருட்பா நூலில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் வள்ளலாரைத் தவிர வேறு எந்த ஞானிகளுக்கும் தெரியாது என்றே சொல்ல முடியும்.

அதனால் தான் கோயில்,ஆலயம், சர்ச், மசூதி, பிரமீடு போன்ற சமய மதங்களில் உள்ளது போல் அமைக்காமல் ஜாதி, மதம், சமயம் ஆசாரங்களற்ற எல்லாவருக்கும் பொதுவாகிய உருவ வழிபாடற்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வடலூரில் 1872 -ஆம் ஆண்டு தோற்றி வைத்துள்ளார். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார். அதற்காக வடலூரில் சத்திய தருமச் சாலையை 1867 -ல் துவங்கிவைத்துள்ளார். இன்று வரை ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய அன்னதானம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.


வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞான சபையில் வள்ளலார் கூறிய படி வழிபாட்டு முறையை செயல் படுத்தாமல் சமய, மத வாதிகள் உள்ளே பகுந்து கொண்டு வள்ளலார் கருத்துக்களுக்கு மாறாக செயல் பட்டு வந்தார்கள்.


எங்களைப் போன்றவர்களின் எதிர்ப்புகளால் பல ஆண்டுகளாக போராடி பல ஆட்சியாளர்கள் செய்ய முடியாத காரியத்தை நீங்கள் தான் தீர்த்து வைத்தீர்கள். அதற்க்காக வள்ளலார் வழியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமர சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் அன்பர்களின் சார்பில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம். 


 கடவுள் உருவமற்றவர் கல்லிலும், செம்பிலும், தங்கத்திலும், மரத்திலும், மண்ணிலும் கடவுள் இல்லை கடவுள் ஒளி மயமானவர். அவர் எல்லா உடம்பிலும் உயிரொளியாக  இயங்கிக்கொண்டு இருக்கிறார். அதைத்தான் ஆன்மா என்கிறார்கள். உள்ளமே பெருங்கோயில் ஊன் உடம்பே ஆலயம். ஆலயமான உடம்பில் வாழும் உயிர்களுக்கு தொண்டு செய்யுங்கள் கருணை புரியுங்கள் அதுவே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார். 


ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்துதல் வேண்டும் என்றார். வள்ளலார் கூறும் கடவுள் வழிபாடு ஜீவகாருண்யம். பசித்த ஏழைகளுக்கு உணவளிப்பதே இறைவழிபாடு என்றார்.


வள்ளலார் காட்டிய வழியிலே ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கும் உங்கள் காலத்தில் ஏழைகளின் பசியை போக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். பட்டினி இல்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 


பசி, பிணி இரண்டும் மனிதனை கொள்ளும் விஷமாகும் இவை இரண்டையும் காப்பாற்றி கொண்டு இருக்கிறீர்கள். இதவே கடவுள் தொண்டாகும் இதுவே கடவுள் வழிபாடாகும். 


மக்கள் தொண்டே மகேசன் தொண்டாகும். ஆதலால் நீங்கள் போலி சாமியார்களையும், போலி மடாதிபதிகளையும்,போலி ஆசிரமங்களையும், போலி குடில் போன்ற வற்றையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தயவு தாட்சண்யம் இன்றி, போலிகளை கைது செய்து சட்டப்படி சிறையில் அடைக்க வேண்டும்.


நம் நாட்டிலே முறையான ஆன்மிகமும் இல்லை முறையான வழிகாட்டுதலும் இல்லை. ஆன்மிகத்தை பற்றி போதிப்பதற்கு ஆன்மிகவாதிகளின் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்ற கட்டும் பாடும் இல்லை. 


அரை குறை எல்லாம் ஆன்மிகம் பேசுகிறது, அரை குறை எல்லாம் ஆன்மிக நூல்கள் எழுதுகிறது, அரை குறை எல்லாம் அதற்க்கு ஆதரவு தருகிறது. ஏதும் தெரியாத அப்பாவி மக்கள் பார்த்து கேட்டு படித்து வீண் போய் கொண்டு இருக்கிறார்கள். 


இந்து மதம் மட்டும் அல்ல எல்லா மதங்களிலும் உலக மக்களின் அறியாமையை பயன் படுத்தி குழப்பி கொண்டு தான் இருக்கிறார்கள். 


கண்களுக்கு தெரியாத கடவுளை பற்றி யார் யார் எதை வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், வணங்கலாம், வழிபடலாம் கடவுள் பெயரால் கொலையும் செய்யலாம். என்ற மூட நம்பிக்கைகள் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பரவிக் கிடக்கிறது. ஆதலால் தான் போலி சாமியார்கள் போலி வேடம் போட்டு மக்களை ஏமாற்றி கொண்டு  இருக்கிறார்கள்.


கடவுள் கொள்கையால் தான் இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம், மத வாதம் மித வாதம், பயங்கரவாதம், நக்சல் பார்ட்டிகள், எல்லைத் தகராறுகள்,  அணு ஆயுதப்  போர்கள், குண்டு வெடிப்பு போன்ற போர்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. 


எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோருக்கும் ஓர் இறை என்பதை அறியாத மத வாதிகளால்தான் குழப்பமும் போராட்டமும் போர்களும் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம் கடவுள் ஒருவே என்பதை அறியாத ஆன்மிக வாதிகளின் செயல்களாகும்.


நம் தமிழகத்தில்  உங்கள் தலைமையில் பகுத்தறிவு ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது பகுத்தறிவு பகலவன் பெரியாரின் கொள்கைகளையும், பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலையும், தலைமை ஏற்று வழி நடத்தி போற்றி பாதுகாத்து கடைப்பிடித்து செயல் பட்டு கொண்டு இருக்கிறீர்கள். தமிழக முதல்வராகிய நமது கலைஞர் என்ன செய்ய போகிறார் என்பதைத் கமிழக மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். 


மூட நம்பிக்கைக்கு முடிவு கட்டுமா? எப்படியோ போகட்டும் என்று விட்டு விடுமா?

சட்டத்தின் பிடியில் இருந்து நித்தியானந்தா போன்ற போலி சாமியார்கள் தப்பி விட்டால் மக்களை காப்பாற்றுவது கடினமாகி விடும். பல கோடிகள் வைத்திருக்கும் நித்தியானந்தா பல கோடிகளை தூக்கி எரிந்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்வாரா எல்லாம் உங்கள் செயலில் தான் இருக்கிறது.

அரசும் அதிகாரிகளும் என்ன செய்ய போகிறார்கள், சட்டமும் நீதி மன்றமும் என்ன தீர்ப்பு வழங்க போகிறது என்பதை மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.

பல கோடிகள் வெல்லுமா? சட்டமும் நீதியும் வெல்லுமா? எது வெல்லப் போகிறது என்பதை மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

நித்தியானந்தாவின் லீலைகள் தமிழ் நாட்டில் நடக்க வில்லை கர்நாடகாவில் தான் நடந்தது ஆதலால் தமிழக காவல் துறை வழக்கை கர்நாடகாவிற்கு மாற்றியுள்ளதாக  தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. தமிழக மக்களும் நித்தியானந்தாவின் மோசடியில் சிக்கி உள்ளார்கள். நித்தியானந்தா வும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை காவல் துறை கவனிக்கவில்லையா?

இதை தமிழக முதல்வர்தான் கவனிக்க வேண்டும். மோசடியில் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

மோசடி நாயகன், காம வெறி சாமியார் மக்கள் பணத்ததை கடவுள் பெயரை சொல்லிக் கொண்டு ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழி. தங்க சிம்மாசனம் அமைத்து தரிசனம் கொடுக்கும் சமய துரோகியின் முக மூடியை கிழித்து எரிய வேண்டும்.

நித்தியானந்தா என்பவன் ஒரு சாதாரண மனிதன், காம உணர்ச்சி உள்ளவன், அவன் சாமியும் அல்ல, துறவியும் அல்ல, கடவுளும் அல்ல. போலி வேடம் போட்டு மக்களை ஏமாற்றும் குற்றவாளி என்பதையும் அவன் மக்களை ஏமாற்றி சேர்த்து வைத்த சொத்துக்களையும் மடங்களையும் ஆசிரமங்களையும் அரசு கைப்பற்றி சமுதாய நலனுக் காக பயன் படுத்த வேண்டும்.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய நீங்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள். திருவள்ளுவர் மனிதன் வாழ்வதற்கு வழிகாட்டியவர். வள்ளலார் மனிதனாக வாழ்ந்து ஒளி தேகம் அடைந்தவர். மூட நம்பிக்கைகளையும், கலை உரைத்த கற்பனை களையும் குழி தோண்டி புதைத்தவர். ஜாதி, மத, சமய, இன வேறுபாட்டை எல்லாம் பற்றற விட்டால் தான் மனிதனாக வாழ முடியும் என்றார் வள்ளலார்.

பெரியாருக்கும் அண்ணாவிற்கும் முன்னாடியே பகுத்தறிவு கொள்கைகளை நம் தமிழ் நாட்டில் விதைத்தவர். அவரை இன்னும் நம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வில்லை. அவரை சமய வாதியாகவே சமய வாதிகள் போற்றி வருகிறார்கள். ஆதலால் அவருடைய முற்போக்கான பகுத்தறிவு கொள்கைகள் மக்கள் மத்தியில் முடங்கி கிடக்கிறது. அவர்களிடம் இருந்து வள்ளலாரையும் அவர் எழுதிய திரு அருட்பாவையும் காப்ற்ற வேண்டியது நமது தமிழக அரசின் கடமை யாகும்.

திரு அருட்பா முழுவதும் அறிவியல், வேதியல், விஞ்ஞானம், மெய்ப்பொருள் அடங்கியதாகும். உலக ஆராய்ச்சிக்கு பயன்படக் கூடியதாகும். உங்கள் ஆட்சியில் தமிழ் செம்மொழி ஆனது தமிழர்கள் உலகம் முழுவதும் பாராட்டப் படுகிறார்கள்.

வள்ளலார் தமிழில், தமிழ் நாட்டில் பிறந்ததற்காக நன்றியும் பெருமையும் அடைவதாக தன் அருட்பாவில் குறிப்பிடுகிறார். தமிழ் மெய்மொழி என்று எழுதுகிறார். உலகிலேயே முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி என்கிறார்.

மேலும் அனைத்தும் தெரிந்த தமிழக முதல்வர்கள் ஆகிய நீங்கள் போலியான குற்றவாளிகளை கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்தி சரியான தீர்ப்பு வழங்கி தண்டிக்க வேண்டுமாய் கேட்டுக்க் கொள்கிறேன்.

பெரும் மதிப்பிற்குரிய தமிழக முதல்வராகிய நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கடிதம் எழுதுகிறேன்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
செ.கதிர்வேல்.

லேபிள்கள்:

1 கருத்துகள்:

17 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:32 க்கு, Blogger SUNDARAN கூறியது…

கடவுள் இவ்வுலகை படைத்தாலும் கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகம் கிடையாது. பஞ்சம் பூதங்களான மாயையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. - என சொல்லியுள்ளீர்கள். இவ்வுலகை படைத்த இறைவனால் , இவ்வுலகை நிர்வகிக்க முடியாதா? இந்த மாயையை யார் படைத்தது? அந்த நிர்வாகத்தை கடவுள் மாயையிடம் விட்டதற்கு காரணம் என்ன? மாயைக்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம்?

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு