சனி, 8 மே, 2010

அருட்பெருஞ்ஜோதி யார்?


அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங் கருணை!
அருட்பெருஞ்ஜோதி!

திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அறிமுகப்படுத்திய கடவுள்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்.

அவற்றிற்கு இயற்கை உண்மை !இயற்கை விளக்கம் !இயற்கை இன்பம் !என்று விளக்கம் தந்துள்ளார் 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதால் உருவமுள்ள கடவுளாக எண்ணிவிடக் கூடாது. அது ஒரு மாபெரும் அருள் பேரொளியாகும் --பல கோடி அண்டங்களையும்,பல கோடி ஆன்மாக்களையும், ஆன்மாவிற்குள் உள்ள  உயிர்களையும் உயிர்த் தோற்றங்களையும் அணுக்களையும் அணுக்களின் ஆற்றல்களையும் அணுக்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் அண்டங்களையும், மற்றை எல்லாவற்றையும் ஆண்டுகொண்டு (அதாவது ஆட்சி செய்துகொண்டிருப்பதால்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று பெயர் சூட்டியுள்ளார்.

அவர் எப்படி உள்ளார் என்பதை விளக்குகிறார்!

இயற்கையில் தானே விளங்கு கின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்க்குகின்றவர் என்றும் ,இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும்,எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லாப் பதங்களையும்,எல்லாச் சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லா கலைகளையும்,எல்லாப் பொருள்களையும் ,

எல்லா தத்துவங்களையும்,எல்லாத் தத்துவிகளையும்,எல்லா உயிர்களையும்,     எல்லா செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் எல்லா பயன்களையும்,எல்லா அனுபவங்களையும் ,மற்றை எல்லா வற்றையும்,

தமது திருவருள் சத்தியால் ;--

தோற்றுவித்தல் ,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல் ,பக்குவம் வருவித்தல் ,விளக்கஞ் செய்வித்தல் ,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,

எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப் பெரும் தலைமை வகிப்பவர் --அருட்பெருஞ்ஜோதியர் என்றும் --சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக கடவுள் ஒருவரே,அகம,புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில்,அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

இயற்கை உண்மை !

அவர்தான் அருட்பெரும் சோதியர் என்பவராகும்,! இதற்கு வள்ளலார் வைத்த பெயர் இயற்கை உண்மை என்பதாகும்,இயற்கை உண்மை என்பது பிறப்பு இறப்பு இல்லாதது,என்றும்,எக்காலத்தும்  அழிவு இல்லாதது,தோற்றம் மாற்றம் இல்லாதது,எக்காலத்தும் நிலைப் பெற்றது, இயற்கை உண்மை என்பது அருட்பெரும் வெட்ட வெளியாகும்,

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பார்ப்போம் !

வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலாம்
வகுக்குமடி வெளிகள் எல்லாம் வயங்கு வெளியாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
இசைத்த பரவேளியாகி இயல் உபய வெளியாய்
அண்ணுறு சிற்பர வெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
அமர்ந்த பெருவெளியாகி அருள் இன்ப வெளியாத்
திண்ணமுறுந் தனி இயற்கை உண்மை வெளியான
திருச் சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

பஞ்ச பூதங்களில் உள்ள வெளி -- பல கோடி அண்டங்களுக்கும் இடை இடையே உள்ள வெளிகள், மற்றும் உள்ள பல கோடி வெளிகளுக்கும் வெளியே -அமைந்துள்ள இயற்கை உண்மை பெருவெளியே,திருச் சிற்றம்பலம் என்னும் தனி வெளியில் உள்ளதுதான் அருட்பெரும்ஜோதி என்னும் அருள் வெளியாகும்.

வெளியைப் பற்றி மற்றும் ஒருபாடல் வருமாறு !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
அருட்பெரும் தலத்து மேனிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெருஞ் சித்தி என் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெருஞ் ஜோதி என்னரசே !

இந்த வெளியைக் கண்டவர்கள் யாராவது உண்டா ?எந்த அருளாளர்கள் யாராவது கண்டது உண்டா ?அந்த இடத்திற்கு யாராவது சென்றது உண்டா ?

இதுவரையில் தோன்றிய சமய மதவாதிகள் கண்டுள்ள வெளி எது என்றால் ஒரு அண்டத்திற்கும் மற்று ஒரு அண்டத்திற்கும் இடையே உள்ள வெளியைக்  கண்டு உள்ளார்களே தவிர அருட்பெரு வெளியைக் கண்டவர்கள் இல்லை !

அருட்பெரு வெளி என்பது,பலகோடி அண்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொள்ளும் பேரண்டமாகும்.அங்கே இருப்பது , அருட்பெருஞ்ஜோதி என்னும் ஓர் பிரம்மாண்டமான பேரொளியாகும், அதற்குமேல் உயர்ந்த எந்த ஜோதியும் இல்லை, எந்த ஒளியும் இல்லை. அதனால்தான் அருட்பெருஞ்ஜோதிக்கு சமமானது நிகரானது அருட்பெரும்ஜோதியே யாகும் !

அருட்பெருஞ்ஜோதிக்கு சமமானது அருட்பெருஞ்ஜோதிதான் என்பதை தெளிவுபடுத்துகிறார் வள்ளலார்.அதனால்தான் 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என இரண்டுமுறை மகாமந்திரத்தில் முதலில் அறிமுகப்படுத்துகிறார்.

இயற்கை விளக்கம்,!

இயற்கை விளக்கம் என்பது -- தனிபெருங்கருணை என்பதாகும் இயற்கை உண்மையான அருட்பெரும்ஜோதியின் உள் இருந்து வெளியே விளக்கமாக தோன்றும் ''அருள் ''தனிப்பெருங் கருணை என்பதாகும்.,இவை  ஈடு இணை இல்லாத பெருங் கருணையாகும், பேதமில்லாத கருணையாகும்.அன்பும் தயவும் சேர்ந்த தனிப்பெருங் கருணை யாகும் .

இந்த தனிப்பெரும் கருணையால் தான் அனைத்தும் தோற்றம் தந்து விளக்கம் பெறுகிறது.அதனால் இயற்கை விளக்கம் என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளலார் .அந்த அருள் பெருவெளியில்  இருந்துதான் அனைத்தும் தோன்றுகின்றன .

இயற்கை விளக்கம் என்னும் பாடலைப் பார்ப்போம்.!

சார்பூத விளககமொடு பகுதிகளின் விளக்கம்
தத்துவங்கள் விளக்கம் எல்லாம் தருவிளக்க மாகி
நேராதி விளக்கமதாய்ப் பரை விளக்கமாகி
நிலைத்த பராபரை விளக்கமாகி அகம் புறமும்
பேராசை விளக்கமதாய்ச் சுத்த விளக்கமதாய்ப்
பெரு விளக்கமாகி எல்லாம் பெற்ற விளக்கமதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கமதாம்
திருச் சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

இயற்கை உண்மை என்னும் அருட்பெரும்ஜோதியின் கருணையினால்{அருளால் } அனைத்தும் விளக்கம் பெறுவதால் இயற்கை விளக்கம் என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளலார் ,

இந்த உண்மையைத் தெரியாமல் சமய மத வாதிகள் கண்டபடி உளறிக்  கொண்டு இருக்கிறார்கள்,இயற்கை உண்மை என்னும் அருட்பெரும்ஜோதிக்கும் உருவம் இல்லை! இயற்கை விளக்கம் என்னும் தனிப்பெரும் கருணைக்கும் {அருளுக்கும் }உருவம் இல்லை ! எந்த தெய்வங்களாலும்,எந்த கடவுளாலும் எந்த இறைவனாலும் கொடுக்க முடியாத கருணைதான் --தனிப பெருங்கருணை என்பதாகும்.

அடுத்து இயற்கை இன்பம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார் !

இயற்கை இன்பம் -இயற்கை இன்பம் என்றால் என்ன ?எல்லா அண்டங்களிலும் உள்ள  எல்லா உயிர்களுக்கும் பேதம் இல்லாமல்,சமமாக
 அருளைக் கொடுத்து இன்பம் அடைய செய்விப்பது தான் இயற்கை இன்பமாகும் .தான் உயிர்களுக்கு அருளைக் கொடுத்து இன்பம்{மகிழ்ச்சி } அடைய செய்வித்து தன்னைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது இயற்கை இன்பமாகும் .அதுவே நான்காவதாக சொல்லிய அருட்பெரும்ஜோதி என்பதாகும்

இயற்கை இன்பத்தைப் பற்றி,வள்ளலார்  பதிவு செய்துள்ள பாடலைப் பார்ப்போம்.

இடம் பெரும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக
இன்பம் உயிரின் இன்பம் முதல் எய்தும் இன்பமாகித்
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம்
சத்தியப் பேரின்பம் முத்தி இன்பமுமாய் அதன்மேல்
நடம பெறும் மெய்ப் பொருள் இன்பம் நிரதிசய இன்பம்
ஞான சித்திப் பெரும்போக நாட்டரசின் இன்பமுமாய்த்
திடம் பெற ஓங்கிய இயற்கைத் தனி இன்பமயமாம்
திருச் சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

இந்திரிய இன்பம்,கரண இன்பம்,உயிர்களின் இன்பம் ,ஆன்ம இன்பம்,அறிவு இன்பம்,சத்திய பேரின்பம்,முத்தி இன்பம்,மெய்ப்பொருள் இன்பம்,அதிசிய இன்பம்,ஞான சித்தி இன்பம்,அருள் அரசாட்சியை நடத்தும் இன்பம்,கடவுள் நிலை அறிந்து அதன் மயமாகும் இன்பம் --போன்ற அனைத்து இன்பங்களையும் தருவதுதான் இயற்கை இன்பமாகும் .

இயற்கை இன்பத்தை முழுவதுமாக பெற்றவர்தான் நம்முடைய அருட் தந்தை என்னும் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கும்,- நாம் அனைவரும் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் --இயற்கை உண்மை,--இயற்கை விளக்கம் --இயற்கை இன்பம் --என்னும் மெய்ப் பொருளைக் கண்டு கொள்வதற்கு வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையில் வாழ்க்கை வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.

சமய மதங்களை பின் பற்றினால் உண்மை விளங்காது !       

இவ்வுலகிலுள்ள சமய, மத, தெய்வங்களாகிய மாயா உருவங்களாகிய, கல்லிலும், செம்பிலும்,பொன்னிலும், மரத்திலும், மண்ணிலும் கடவுள்கள் இல்லை, கருணையும் இல்லைஅவைகள் யாவும் மனிதர்களால் உருவாக்கியுள்ள விளையாட்டு பொம்மைகளாகும். அவைகள் யாவும் தத்துவ கற்பணை கதைகளாகும் என்கிறார் வள்ளலார்.

மனிதர்கள் முதல் தேவர்கள் வரை கருணை யிருக்கிறது. இவர்களால் கிடைக்கும் கருணையானது இவர்கள் மூலமாகக் கிடைப்பதில்லை. அருட்பெருஞ்ஜோதியிடத்தில் இருந்து பெற்று மற்றவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அதையும் அவர்களிடத்திலிருந்து எளிதில் பெற்றுக்கொள்ள முடியாது.

பொய்யான மந்திரம், தந்திரம், விரதம், அபிஷேகம், ஆராதணை, வேடிக்கை வினோதங்கள், பொய்யான வழிபாட்டுமுறைகள் போன்ற குழந்தைத்தனமான விளையாட்டுகள் விளையாடி அற்பமான கருணையை பெறவேண்டியுள்ளது.

ஆதலால் இடைத்தரகர்களாகிய சமய,  மத தெய்வங்களை நம்பவேண்டாம். அவர்களிடமிருந்து பெறவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வியாபாரிகள். இலாபம் சம்பாதிக்க பார்கிறார்கள். நாம் நேரடியாக அருட்பெருஞ்ஜோதியிடம் இலவசமாக கருணையை பெற்றுக்கொள்ளலாம். நமக்கு இடைத்தரகர்கள் வேண்டாமென்று உலகமக்கள் அனைவரையும் ஆன்ம நேயத்துடன் அழைக்கிறார் நம் வள்ளல் பெருமான் அவர்கள்.

அடுத்து மகா மந்திரத்தில் ஒரு அருட்பெருஞ்ஜோதி யென்று சொல்கிறார். இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கும், பொருள்களுக்கும், வடிவங்களுக்கும், வண்ணங்களுக்கும், குணங்களுக்கும், செயல்களுக்கும் மற்ற எல்லாவற்றிற்கும் காரண காரியமாய் தகுதிக்குத் தகுந்தாற்போல் முறைத் தவறாமல், பேதாபேதமில்லாமல் எல்லாவற்றிற்கும் தானே காரணமென்பதை உணர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும் "ஒரே ஒளிதான் அருட்பெருஞ்ஜோதி" என்றும், அவரே முழுமுதற்கடவுளென்றும் கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்பதை குறிக்கும்வகையில் மகாமந்திரத்தில் அருட்பெருஞ்ஜோதியென்று முடிக்கிறார்.

அருட்பெருஞ்ஜோத அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


என்னும் மகாமந்திரம் எல்லா மந்திரங்களுக்கும் மூலமாக, ஆதியாக உள்ளதால் எல்லாவற்றிற்கும் நன்மையே செய்வதால் ஈடு, இணையில்லாததால் மகா மந்திரமென்று பெயர்சூட்டியுள்ளார் வள்ளலார்.


ஒன்றுமலார் இரண்டுமலார் ஒன்றும் இரண்டுமானார்
உருவமில்லார் அருவமில்லார் அருவுருவுமானார்
அன்றுமுளார் இன்றுமுள்ளார் என்றுமுள்ளார் தமக்கோர்
ஆதியில்லார் அந்தமில்லார் அருட்பெருஞ்ஜோதியினார்
என்று கணல் மதியகத்தும் புறத்தும் விளங்கிடுவார்
யாவும் இலார் யாவும் உளார், யாவும் அலார் யாவும்
ஒன்றுறு தாமாகி நின்றார் திருச்சிற்றம்பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்

என்று வள்ளலார் ஆறாம் திருமுறையில் பதிவிளக்கம் என்ற தலைப்பில் மேலே கண்ட பாடலை பதிவு செய்துள்ளார். உலகிலுள்ள அனைவரையும் வாழவைக்கும் அருமையும் பெருமையும் வாய்ந்த மகாமந்திரத்தை தினந்தோரும் உச்சரித்தால் எல்லா நலமும் கிடைக்கும் என்பது சத்தியம்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் மற்ற தெய்வங்கள் போல் குடும்பம் நடத்தும் தெய்வம் அல்ல என்பதை--வள்ளலார் எப்படி பதிவு செய்துள்ளார் என்பதைப் பார்ப்போம்

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் குணங்கள்
ஏதும் இலார் தத்துவங்ககள் ஏதும் இலார் மற்றோர்
செயற்கை இல்லார் பிறப்பு இல்லார் இறப்பு இல்லார் யாதும்
திரிபு இல்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புறு வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தருமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

மேலே கண்ட பாடலில் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் உண்மை நிலைகளை தெளிவாக எளிய தமிழில் பதிவு செய்துள்ளார் இதற்கு விளக்கமே தேவை இல்லை சாதாரண மனிதர்களில் இருந்து பெரிய படிப்பு படித்தவர்கள வரை புரிந்து கொள்ளும்படி விளக்கி உள்ளார்--- நம் அருட் தந்தை அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் .

இந்த உலகம் தோன்றியதில் இருந்து உண்மையான கடவுளை யாரும் காண வில்லை --பொய்யான கற்பனைக் கடவுள்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார்கள். அதனால் மக்கள் பிறந்து பிறந்து-- இறந்து இறந்து வீண் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

குடும்பம் நடத்தும் கடவுள்களை ,கோவில்களில் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள் அவர்களால் எந்த பயனும் இல்லை,

கடவுள் நம் உடம்பில் உள்ள தலைப் பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கும் மேலே சிற்சபை என்னும் இடத்தில் ஆன்ம ஒளியாக உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளார் .அதுவே அருட்பெரும்ஜோதியாகும் ,அந்த சிற்சபையின் கண்ணே மனதை செலுத்த வேண்டும் இதுவே இறை வழிபாடாகும் .

அலைபாயும் மனதை சிற்சபையில் செலுத்தி நிறுத்த வேண்டுமானால் --ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் தேவைப்படுகிறது.--அதாவது உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும்,இருக்க வேண்டும்,மேலும் உயிர்களுக்கு வரும் துன்பங்களான --பசி,கொலை,பிணி,இச்சை எளிமை,பயம்,துன்பம் ,போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் .நம்மால் முடிந்த அளவுக்கு செய்தால் போதுமானதாகும்.

இறை வழிபாடு என்பதே ஜீவ காருண்யம் !
உயிர் இரக்கம் என்பதே இறை வழிபாடாகும்.!

அதனால்தான் வள்ளலார் --கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !என்றார்.

தயவு உடையோர்  எல்லோரும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவரே !
அருள் உடையோர் எல்லோரும் சன்மார்க்க சங்கத்தை அடைந்தவர் !   

மூட நம்பிக்கையில் மனதை செலுத்தாமல் --உண்மை மார்க்கமான சன்மார்க்கத்தில் அறிவை செலுத்தி --உண்மைக கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள் .உங்களுக்கு எல்லா நன்மைகளும் உங்களைத் தேடிவரும் .

வள்ளலாருக்கு அழியா வரம் தந்த அருட்பெரும்ஜோதி ஆண்டவர் எங்கு உள்ளார் என்பதை மேலும் தெளிவாக ஒரு பாடலை பதிவு செய்கிறார் !

ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையை
உன்ன முடியா அவற்றின்
ஓராயிரம் கோடி மாலண்டம் அரன்அண்டம்
உற்ற கோடா கோடியே
திருகலறு பலகோடி ஈசன் அண்டம் சதா
சிவன் அண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர் தஞ்
சீரண்டம் என் புகலுவேன்
உருவுறு இவ் அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில்
உறு சிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடு நின்று நடனமிடும்
ஒரு பெருங் கருணை அரசே
மருவி எனை யாட்கொண்டு மகனாக்கி அழியா
வரம் தந்த மெய்த் தந்தையே
மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம்
வல்ல நடராஜ பதியே !

அளவிட முடியாத அண்டங்களை எல்லாம் தன் வசமாக்கிக் கொண்டு அருள் வெளியின் நடு நின்று நடனமாடிக் கொண்டு இருக்கும் உன்னுடைய பெருமையை எப்படி புகழ்வேன் ,அண்டங்கள் எல்லாம் சிறு சிறு அணுக்களாக அசைந்து கொண்டு இருப்பதை எனக்கு காண்பித்து -என்னையும் ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரமும் {அருள் }தந்த மெய்த் தந்தையே !நீ ஒருவர்தானே தெய்வம் --இந்த பெருமையை எப்படி உரைக்க முடியும்

இதை ஏன் சமய மதவாதிகள் தெரிந்து கொள்ளாமல் பொய்யான தெய்வங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார்கள் .என்று வேதனைப் படுகிறார் வள்ளலார் .

மேலும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் பெருமையை வள்ளலார் சொல்லுவதை பாருங்கள் கேளுங்கள்.!

காய் எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒரு பெருங்
கருணை அமுதே எனக்குக்
கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
காட்சியே கனக மலையே
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனித்
தலைவனே நின் பெருமையைச்
சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
சார்கின்ற தோறு அந்தோ
வாயெலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும்
மதிஎலாம் தித்திக்கும் மென்
மன்னிய மெய் அறிவெலாம் தித்திக்கும் என்னில் அதில்
வரும் இன்பம் என் புகல்வேன்
தூயெலாம் பெற்ற நிலைமேல் அருட் சுகம் எலாம்
தோன்றிட விளங்கும் சுடரே
துரிய வெளி நடுநின்ற பெரிய பொருளே அருட்
ஜோதி நடராஜ குருவே !

என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவர் --பெருமையை போற்றி புகழ்ந்து அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்து போகிறார் வள்ளலார் கருணையே வடிவமாக இருக்கும் அருட்பெரும்ஜோதி ஒன்றே உண்மைக கடவுளாகும்.

உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொதுவான கடவுளை --தமிழ் நாட்டில் உள்ள வடலூர் என்னும் இடத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார் வள்ளலார் அந்த இடத்தைப் பற்றி வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள்.

உத்தர ஞான சித்திபுரம் என்றும் ,உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும் ,பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலால் குறிக்கப் பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்கினற தெய்வப் பதியின் இடத்தே இயற்கை விளக்க நிறைவாகி உள்ள ஓர் சுத்த சிவானுபவ ஞானசபையில் --இயற்கை உண்மை நிறைவாகிய திரு உருவைத் தரித்து இயற்கை இனப் நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திரு நடச்செய்கையை ,எவ்வுயிரும் இன்பம் அடைதல் பொருட்டே செய்து அருள்கின்ற --

அருட்பெரும்ஜோதியிராய் அமர்ந்து அருள் புரிந்து கொண்டு உள்ளார் .

அளவு குறிக்கப் படாத நெடுங்காலம் அளவு குறிக்கப் படாத சித்திகள் எல்லாம் விளங்க அமர்ந்து விளையாடிக் கொண்டு உள்ளார் .ஆதலால் அனைவரும் வந்து வந்து தரிசிக்கப் பெருவீர்களானால் கருதிய வண்ணம்,பெற்று பெருங் களிப்பு அடைவதும் அன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல் --மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பு   அடைவீர்கள் .  
    
இது சத்தியம் !இது சத்தியம் !

உங்கள் அன்பில் என்றும் ;;-ஆன்மநேயன் கதிர்வேலு .

மீண்டும் தொடரும் ;--

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு