வெள்ளி, 7 மே, 2010

சத்திய ஞான சபையை வள்ளலார் பூட்டியது எதனால்?


வடலூரில் சத்திய ஞான சபை !


வடலூரில் சத்ய ஞான சபையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்.ஆணைப்படி  கட்டளைப்படி எக்குறையும் இல்லாமல் கட்டிமுடித்து வைக்கிறார் வள்ளலார்.

சத்திய ஞான சபையின் வரைபடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வரைந்து வள்ளலாரிடம் கொடுத்துள்ளார் ,

சத்திய ஞான சபையை கட்டிமுடித்து நிறைவு பெற்ற பின்பு.சன்மார்க்க  அன்பர்களுக்கு ஓர் கட்டளை வைக்கிறார்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய
ஞானசபை
விளக்கப் பத்திரிக்கை

இன்று தொடங்கி சபைக்கு
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும் 
சாலைக்கு
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்
சங்கத்திற்கு
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்
பெயர் வழங்குதல் வேண்டுமென்று கட்டளையிடுகிறார்.

இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ்ஜோதி சித்தி வெளிப்படும் வரைக்கும், ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும், பித்தளை முதலியவற்றுள் செய்த குத்து விளக்கு வேண்டாம். தகரக்கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி, கரண் சுத்தி உடையவர்களாய் திருவாயிற்படிப் புறத்தில் இருந்துகொண்டு விளக்கு எற்றி பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது, எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது, உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்துச் செய்விக்க வேண்டும் என்று தெளிவாக சொல்கிறார்.

நாலு நாட்களுக்கு ஒருமுறை காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும், பெரியரைக் கொண்டாயினும், உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும், தூசு துடைப்பிக்கப் புகும்போது, நீராடிச் சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக்கொண்டு புகுந்து, முட்டிக்காலிட்டுக்கொண்டு தூசு துடைக்கச் செய்விக்க வேண்டும். விளக்கு வைக்கின்ற போதும் இங்கனமே செய்விக்கவேண்டும்.

விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவரும், எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியரும், பொருள், இடம், போகம் முதலியவற்றில் இச்சை சிறிதும் இல்லாதவர்களாய் தெய்வ நினைப்புள்ளவர்களாய், அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும். விளக்கு வைக்கும்போதும், தூசு துடைக்கும் போதும், நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும். யாரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே புகுதல் கூடாது. ஞானசபைத் திறவுகோல் ஒருவர்கையிலும் வெளிப்பட இறுத்தல் கூடாது. அத்திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோளை ஆஸ்தான காவலுத்தரவாதியா இறுக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

இதன் தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன் என்று ஆங்கிரச வருடம் ஆடி மாதம் 5ந் தேதி 1873ம் வருடம் வெளியிடுகிறார். இப்படிக்கு சிதம்பரம் இராமலிங்கம் என்று கையொப்பமிட்டு ஞான சபை விளக்கப் பத்திரிகையை வெளியிடுகிறார்.

ஞான சபையின் உண்மை !
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு இட்ட கட்டளைப்படி சபையை கட்டி முடித்து சபையின் செயல்பாடு குறித்து விளக்கமாய் தெளிவுபட எழுதி வைத்துள்ளார்.

வள்ளலாரின் உடம்பு, சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என்னும் முத்தேகசித்தி பெற்று யாருக்கும் வெளிப்படக் காட்டாமல் சாதாரண மனித உடம்பு போலவே அன்பர்களுக்கு காட்சி கொடுத்துக்கொண்டுவந்து இருக்கிறார்.

சபை கட்டுவதற்கு முன்பே தன் தேகத்தை ஒளி தேகமாய் மாற்றிக்கொண்டுள்ளார் என்பது.அவருடன் இருந்த சன்மார்க்க  அன்பர்களுக்கு தெரியாது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அழைத்துப் போவதற்காக,மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் தங்கி கொண்டு  காலம் தாழ்த்திக் கொண்டு வந்திருக்கிறார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சபைக்கு வரும் காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றார்.

வள்ளலார் அறிவித்தபடி சபையை கவனிக்க அன்பர்கள் தவறி விடுகிறார்கள் ஆதலால் வள்ளலாருக்கு வருத்தம் ஏற்படுகிறது, கோபத்தோடு சபையை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மேட்டுக்குப்பம் சென்றுவிடுகிறார்.

வள்ளலார் எண்ணத்தின்படி  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்பெரும் சித்தி சபையின் உள் வெளிப்பட்டு இருக்க வேண்டும். வள்ளலாரும் அருட்பெரும் ஜோதி ஆண்டவரும் சத்திய ஞான சபையின் உள்ளே கலந்திருக்க வேண்டும். வள்ளலார் ஒளிதேகம் சபையின் உள்ளே  வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வள்ளலார் எண்ணப்படி அவை நடைபெறவில்லை.

வள்ளலாருடன் நீண்டகாலம் பழகி இருந்தவர்களே வள்ளலார் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளவில்லை. வள்ளலாரே அவர்களை நினைத்து மிகவும்  வேதனை பட்டுள்ளார். வள்ளலாருடன் இருந்தவர்கள் வள்ளலாரிடம் அன்பும் பாசமும் பணிவும்  வைத்திருந்தார்களே தவிர சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க முடியாதவர்களாய் இருந்திருக்கின்றார்கள்.

காரணம் -- சாதி, மத, சமய, இன பற்றுதல்களை அவர்களால் விட்டுவிட முடியவில்லை. அந்த அளவிற்கு சமய மதக் கொள்கைகள் அவர்கள் உள்ளத்திலே ஆழமாய் பதிந்து இருந்ததே காரணமாகும்.

வள்ளலார் கூரிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்களே தவிர எவராலும் கடைபிடிக்க முடியவில்லை என்பது உண்மையாகும்.

வள்ளலாரே வேதனையுடன் சொல்லி உள்ளார் .இவ்வளவு காலம் என்னுடன் இருந்தும்.பழகியும்.நான் சொல்லும் சுத்த சன்மார்க்க கொள்கைகள் என்னவென்று உங்களால் புரிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை என்று வருத்தப்பட்டு வெளிப்படுத்து கின்றார் . 

இனி சன்மார்க்க அன்பர்களாகிய நாம் வள்ளலார் கூரிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து வள்ளலார் வழியிலே நடப்போம் என்பதை உறுதியெடுத்துக்கொள்வோம்!  இது சுத்த சன்மார்க்க காலம் ,நாம்  பெற வேண்டியதை இக்காலத்திலே பெற்றுக் கொள்ள வேண்டும்.என்பது வள்ளலார் கட்டளை ஆணையாகும்.

வள்ளலார் பாடல் !

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச் சிவ நெறி என்று உணர்ந்து சேர்ந்திடுமின் நீண்டு

வருநெறியில் எனை யாட்கொண்டு அருள் அமுதம் அளித்து  வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளம் கொண்டு அருளிப் பெருங் கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறியில் வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே !

என்னும் ''ஞான சரியை'' தலைப்பின் பாடலில் தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார் ..

இந்த உயர்ந்த மனித பிறப்பில் பெற வேண்டியதை காலம் உள்ளபோதே பெற்றுக் கொள்வோம்.

இதன் தொடர்ச்சி அடுத்த கட்டுரையில் வெளிப்படும்.

அன்புடன் ஆனமநேயன் ஈரோடு கதிர்வேல்.

மீண்டும் வலைப்பூ பூக்கும்...

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு