சனி, 1 மே, 2010

வள்ளலார் இறைவனிடம் வேண்டும் விண்ணப்பம்

இயற்கை உண்மையரென்றும் இயற்கை அறிவினர் என்றும், இயற்கை அன்பினர் என்றும், நிர்குணர் என்றும், சிற்குணர் என்றும், நித்தியர் என்றும், சத்தியர் என்றும், ஏகரென்றும், அநேகர் என்றும், ஆதியர் என்றும், அநாதியர் என்றும், அமலர் என்றும், அருட்பெருஞ் ஜோதியர் என்றும், அற்புதர் என்றும், நிரதிசயர் என்றும், எல்லாமானவர் என்றும், எல்லாம் உடையவர் என்றும், எல்லாம் வல்லவர் என்றும் குறிக்கப்படுதல் முதலிய அளவுகடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளால் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற,

தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுளே!

தேவரீர் திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியோர்களாகிய நாங்கள் சிற்றறிவாற் செய்துகொள்ளும் சிறு விண்ணப்பங்களை திருச்செவிக்கு ஏற்பித்தருளி எங்களை வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் உங்கள் திருவருட் சமூகத்தை அடைந்த உண்மை ஞானிகளின் பெருமைகளை படித்து அறிந்து தேடி கண்டுபிடித்து உண்மையான கடவுள் யார்? என்று கேட்டு அறிந்துகொள்ள ஆசைப்பட்டதுண்டு ஆனால் யாரும் உண்மையான கடவுள் யார் என்பது தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறோம் இன்னும் எங்களுக்கு அந்த உண்மையான கடவுளின் அறிமுகம் கிடைக்கவில்லை என்று கண்களில் நீர்விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

"கருணாநிதியாகிய கடவுளே!”

நாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி எங்களை காத்தருளி உண்மையை தெரிவிக்க வேண்டும்.

இம்மனித தேகத்தில் செலுத்திய காலத்தும் தாய் வயிற்றிலும் சிசு பருவத்திலும் குமாரப்பருவத்திலும் பல்வேறு அவத்தைகளால் அறிவின்றிருந்தோம் ஆதலின் "தேவரீர் பெருங்கருணைத் திறத்தை" அறிந்துகொள்ளாமல் வீண்போது கழித்தோம் அப்பருவம் கழிய இப்பருவத்தினிடத்தே

எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருள்களையும், மற்ற எல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கம் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலம் தருவித்தும், எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மையன்பால் கருத்தில் கருதி வழிபாடி செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின் கண் வெளிப்பட்டு விளங்குமென்று அறிந்தேன்.

அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாத, பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைதல் கூடுமென்று அருளறிவால் அறிந்துகொண்டோம். எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட உணர்த்தி அருளப்பெற்றும்.

அவ்வருள் பெற்றது தொடங்கி "கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம் கடவுள் திருவருள் விளக்கம் எந்நாளடைவோம்?” மரணம், பிணி, மூப்பு முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும்? என்றுமழியாத பேரின்பசித்தி எக்காலம் கிடைக்கும் என்று எண்ணி எண்ணி வழிதுறை தெரியாமல் வருந்துகின்ற தருணத்தே,
"களைப்பறிந் துதவும் கருணைக்கடலாகிய கடவுளே!”

தேவரீர் நெடுங்காலம்மரண முதலாகிய அவத்தைகளால், துன்பமுற்றுக் களைப்படந்த உங்களை அவ்வவத்தைகளினின்றும், நீங்கி, களைப்பும் கலக்கமுந் தவிர்த்து, அழியாத பேரின்பசித்தியை அடைவித்தற் பொருட்டாகவே,

இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் பூர்வஞான சிதம்பரத்தின் வடக்கே பார்வதிபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூரிலுள்ள உத்தர ஞான சித்திபுரத்தில் யாம் அளவுகடந்த நெடுங்காலம் சித்தியெலாம் விளங்கத் திருவறுள் நடஞ் செய்வோ மென்றும் அதுதருணம் மிகவும் அடுத்த சமீபித்த தருண மென்றும், அப்பதியினிடத்தே, யாம் அருள்நடம் புரிதற்கு அடையாளமாக ஓர் ஞானசபை காணுதல்வேண்டுமென்றும், திருவருட் குறிப்பால் அறிவித்ததுமின்றி, அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாதோர் தடைகளுமின்றி அத்திருஞானசபையையும் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய, தேவரீர் பெருங்கருணையைக் கருதுந்தோறும் பெருங்களிப்படைகின்றோம். . இனி அத்திருஞானசபையை அலங்கரித்தல் வேண்டுமென குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்கத் தொடங்குகின்றோம்.


அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே!

தேவரீர் அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள் செய்யம் இவ்வலங்காரத் திருப்பணியில் எவ்வித்தாலும், யாதொரு தடையும் வாராத வண்ணம் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தருளல் வேண்டும்.

"சர்வ வல்லபராகிய தனித்தலைமை க் கடவுளே!”

அத்திருவலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மையடியர்களாக்கி , உண்மை அறிவை விளக்கி உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை அடைவித்து நித்தியர்களாக்கி, வாழ்வித்தல் வேண்டும்.

“எல்லாமுடைய அருட்பெருஞ் ஜோதி அற்புதக் கடவுளே!”

இதுதொடங்கி எக்காலத்தும், சுத்தசன்மார்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்: வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும், சுத்தசன்மார்க்கதின் முக்கிய இலட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும் என்று வள்ளலார் இறைவனிடம் வேண்டினார்.

எல்லாமாகிய தனித்தலைமை
“அருட்பெருஞ் ஜொதி ஆண்டவரே!”
தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

இப்படி,
சிதம்பரம், இராமலிங்கம்.


லேபிள்கள்:

1 கருத்துகள்:

24 டிசம்பர், 2020 அன்று PM 7:23 க்கு, Blogger خدمات تسويق 01016261727 கூறியது…

شركة مكافحة حشرات بالقطيف
شركة مكافحة حشرات بالدمام
شركة مكافحة حشرات بالخبر
شركة مكافحة حشرات بالظهران

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு