வெள்ளி, 5 ஜனவரி, 2024

ஆன்மாவை அறிவதே ஆன்மீகம்!

*ஆன்மாவை அறிவதே ஆன்மீகம்!* 

*இவ்வுலகமும் இவ்வுலகில் உள்ள சராசர பேதங்களில் முக்கியமாவுள்ள சரமாகிய ஜீவராசிகளும் கற்ப பேதமும் தோன்றி உய்யும் பொருட்டு,பஞ்சபூத அணுக்களும் அநேகவிதமான வாயு பேதங்களும்,அநேகவிதமான கிரகங்களும்,மற்றும் உள்ள அனைத்தும்,அநாதியில் கடவுளால் உண்டு பண்ணப்பட்டு இருக்கின்றன, இவைகள் யாவும் ஆன்மாக்கள் வந்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று இறைவனும் தொடர்பு கொள்வதற்காகவே இவ்வுலகம் படைக்கப் பட்டதாகும்.*

*உலகில் தோன்றிய உயிர் இனங்களான ஊர்வன, தாவரம்,பறவை,மிருகம்,தேவர்,அசுரர்,மனிதர்.இந்த தேகங்களில் உயர்ந்த அறிவுள்ள தேகம் மனித தேகம் மட்டுமே....* 

*மனித உடம்பை நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன,*

*1,அகம் என்பது ஆன்மா இயங்கும் இடம் 2,அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் இயங்கும் இடம்,3,புறம் என்பது மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் கரணங்கள் இயங்கும் இடம்,4, கண் காது மூக்கு வாய் மெய் (உடம்பு) என்னும் இந்திரியங்கள் இயங்கும் இடம், மேற்படி தேகத்தில்  ஆன்மா தனித்திருக்கும், அதாவது ஜீவன் மனம் முதலிய அந்தக்கரண கூட்டத்தின் மத்தியில் தனித்து இயங்கிக் கொண்டு இருப்பதே ஆன்மா என்னும் உள் ஒளி என்பதாகும்.*

*வள்ளலார் சொல்வதை கவனிக்கவும்!*

*ஆன்மாவும் ஆண்டவரும்!*

*இந்த பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யாரெனில்,நான் ஆன்மா சிற்றணு வடிவினன்,மேற்படி அணு கோடி சூரியப் பிரகாசமுடையது,லலாட ஸ்தானம் இருப்பிடம்,கால்பங்கு பொன்மை,முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம் இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய ஏழு திரைகளுண்டு,*

*அவையாவன !*
1,கறுப்புத் திரை
2,நீலத்திரை
3,பச்சைத்திரை
4,சிவப்பத்திரை
5,பொன்மைத்திரை
6,வெண்மைத்திரை
7,கலப்புத்திரை
என்னும் ஏழு மாயாத்திரைகளாகும்... 

*உயர்ந்த மனித தேக ஆன்ம அறிவைக்கொண்டு இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் நான்கு வகையான ஒழுக்கங்களை கடைபிடித்தால் மட்டுமே ஏழுவகையான திரைகள் யாவும் விலகும்.*

*திரைகள் விலக விலக தேகமாற்றம் உண்டாகும்,இந்திரிய, கரண ஒழுக்கத்தால் சுத்ததேகமும்,ஜீவ ஒழுக்கத்தால் பிரணவதேகமும்,ஆன்ம ஒழுக்கத்தால் ஞானதேகமும் உண்டாகும்,இந்த மூவகையான தேகத்திற்கு முத்தேக சித்தி என்று பெயர் சூட்டுகின்றார் வள்ளல் பெருமான்.* 

*சுத்த பிரணவ ஞானதேகத்தால் மட்டுமே ஆன்மாவைக் கண்டு களிக்க முடியும். ஆன்மாவைக் கண்டால் மட்டுமே இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காணமுடியும்.இதுவே ஆன்மீகம் என்பதாகும்.*

*கடவுளின் தன்மை !* 

*ஆன்மாக்கள் யாவும் இறைவன் குழந்தைகள் என்பது யாவரும் அறிந்த உண்மையே! ஆனால் அந்த இறைவன் யார் ? என்பதை  25-11- 1872 ஆம் நாள் வடலூரில், வள்ளல்பெருமான் உலக மக்களுக்காக வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார்*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !*

*இயற்கை உண்மையர் என்றும்,இயற்கை அறிவினர் என்றும்,இயற்கை இன்பினர் என்றும்,நிர்குணர் என்றும்,சிற்குணர் என்றும்,நித்தியர் என்றும்,சத்தியர்என்றும்,ஏகரென்றும்,அநேகரென்றும்,ஆதியரென்றும்,அனாதியரென்றும்,அமலரென்றும்,அற்புதரென்றும்,நிரதிசயரென்றும்,எல்லாமானவரென்றும்,எல்லாம் உடையவரென்றும்,எல்லாம் வல்லவரென்றும்,குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும்,நினைத்தும்,உணர்ந்தும்,புணர்ந்தும்,அனுபவிக்கின்ற தனித்தலைமைப் பெரும் பதியாகிய தனிப் பெருங்கருணைக்  கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*

*வள்ளல்பெருமான் பாடல்!*

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!*

*வள்ளல்பெருமான் கண்டு களித்து கலத்து கொண்டு வெளிப்படுத்திய கடவுள்,இதற்குமுன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப் பட்ட ஏற்பாட்டு கத்தர்கள் மூர்த்திகள் கடவுளர்கள் தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் எல்லா தேவர்களும் எல்லா கடவுளரும் எல்லா தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களை குறித்து எதிர்பார்க்கின்ற படி எழுந்தருள்கின்ற தனி தலைமை பெரும்பதி கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எண்பவராகும்,*!

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை !*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் பாலிக்கும் இடமே வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்பதாகும்*  

*வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ளதை சுருக்கமாக அப்படியே பதிவு செய்கிறோம்!*

*உலகத்தினிடத்தே பெறுவதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே*

*அறிவு வந்த கால முதல்
அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்
அடைந்து   அறியாத அற்புத குணங்களையும்,
கேட்டு அறியாத அற்புதக்கேள்விகளையும்,
செய்து அறியாத அற்புச் செயல்களையும்,          
கண்டு  அறியாத அற்புதக்காட்சிகளையும்,
அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும்.,
இத்தருணந் தொடங்கிக்கிடைக்கப்  பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்தியவுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி  இருக்கின்றேன்

*நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று *எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சயமாகிய ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்*

*அவ்வாறு    விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய  சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற்*

*பலவேறு  சமயங்களிலும்,     
பல்வேறு மதங்களிலும்,
பலவேறுமார்க்கங்களிலும்,
பல்வேறுஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி  இறந்திறந்து வீண்  போகின்றார்கள்*
 *இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்,*

உண்மையறிவு,
உண்மையன்பு,
உண்மையிரக்கம் முதலிய
சுபகுணங்களைப் பெற்று நற்செய்கை யுடையராய்,எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தைதயும்பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த *உண்மைக் கடவுள் தாமேதிருவுள்ளங் கொண்டு சத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ்செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.*

 *ஆகலின், அடியிற் குறித்த தருணந் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப்பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல்மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டுபெருங்களிப்பும்  அடைவீர்கள்.!*

*ஆன்மாவை அறிந்தால் ஆன்மாவின் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறியலாம்,ஆண்டவரை அறிந்தால் அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம், ஆதலால் ஆன்மாவை அறிதலே ஆன்மீகம் என்பதாகும்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன்
*சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் தயவுதிரு ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு