செவ்வாய், 14 டிசம்பர், 2021

சாவதுதான் பெரிய பாவம்!

 *சாவதுதான் பெரிய பாவம் !* 


*உலகிலே பெரிய பாவச்செயல் சாவதுதான்(இறப்பு) என்கிறார் வள்ளலார்*


*பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்லப் படுகிறது* 


*உலகியல் சட்டத்திலும் பெரிய  இறுதி தண்டனை மரண தண்டனைதான் என்பது அனைவரும் அறிந்ததே* *அதேபோல் இறைவன் படைப்பிலும்  மரணம் என்பதும் பெரிய தண்டனையாகும்*


*இந்த உண்மை தெரியாமல் சாவதும் பிறப்பதும் இயற்கையானது  என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் நடந்து கொண்டே வருகிறது*. 


*ஆன்மா சாகாதது (அழியாதது) உயிர் உடம்புதான் சாகும் ( அழிந்துவிடும்) என்பது உலக ஆன்மீகவாதிகளின் ஒட்டுமொத்த  கருத்துகளாகும்*


ஆன்மா உயிர் உடம்பை விட்டு பிரிந்தால்  சொர்க்கம் வைகுண்டம் கைலாயம் பரலோகம்  மோட்சவீடு அடைந்துவிடும் என்றும் பொய்யான கற்பனை கட்டுக்கதைகளை கட்டி மக்களிடம் விதைத்து விட்டு சென்றுவிட்டனர். 


ஆன்மா உயிர் உடம்பு எடுத்து மரணத்தை வெல்ல முடியாமல் மரணம் அடைந்தால் நல்வினை தீவினைக்குத் தகுந்தாற்போல் மீண்டும் பிறப்பு எடுக்கும் ஆனால் எந்த பிறப்பு என்பது  எவருக்கும் தெரியாது அதுதான் ரகசியம்.


*மேலும் சிலர் ஜீவசமாதி அடைந்து விட்டார்கள் என்றும் பஞ்ச பூதங்களில் கலந்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள்.* *எதில் கலந்தாலும் எவ்வாறு வாழ்ந்தாலும்  இறந்தாலும் அவர்களுக்கும் மீண்டும் பிறப்பு உண்டு என்பதே உண்மை என்கிறார் வள்ளலார*


*ஆனால் வள்ளலார் இவை யாவும்  பொய்யான கற்பனைக் கதைகள்  என்று தான் வாழ்ந்து மரணத்தை வென்று  நிரூப்பித்து காட்டியுள்ளார்*  


*வள்ளலார் பாடல்!*


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே 


நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே


உலைவறும் இப் பொழுதே நல் தருணம்என நீயே

உணர்த்தினை வந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே


சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


*உலகில் உள்ள ஆன்மீக வரலாற்று கதைகள் கொள்கைகள் யாவும் பொய்யானது என்றும். கற்பனையானது என்றும். எல்லாம்வல்ல  இயற்கை உண்மை கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் அறிந்து தெரிந்து கொண்டேன் என்கிறார்*.

மேலும் ஒரு பாடலில் சொல்லுகிறார்


வள்ளலார் பாடல்! 


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற *பெரும்பாவம்* தன்னைஎண்ணி


நோவது இன்று புதியது அன்றே என்றும் உளதால் இந்த 

நோவை நீக்கி


ஈவது மன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவ ராலே


ஆவதொன்றும் இல்லை என்றால்  அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே ! 


என்ற பாடலில் *சாவதையும் பிறப்பதையும் தடுத்து வெற்றி பெற வேண்டுமானால் நம்மைப்படைத்த  இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள்பெற்றால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்* 


*மற்றைய தத்துவ கலைகளான கடவுள்களை தொடர்புகொண்டு வணங்குவதாலும் வழிபடுதலாலும் காடு மலை குன்று குகை போன்ற இடங்களில் சென்று தியானம் தவம் யோகம் செய்வதாலும் எந்த பயனும் கிடைக்காது மரணத்தை வெல்லவும் முடியாது என்கிறார் வள்ளலார்* 


*ஆன்மாக்கள் உயிர்  உடம்பு எடுத்து பிறப்பதும் இறப்பதும் மீண்டும்  பிறப்பு எடுப்பதும் தொடர்கதையாக உள்ளதால்  இவற்றை தடுத்து நிறுத்திவிடலாம் மரணத்தை வென்றுவிடலாம் என்னோடு சேர்ந்துவிடுங்கள் என்று அன்போடு ஆன்மநேயத்தோடு அழைக்கிறார்*


வள்ளலார் பாடல்! 


இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

*எல்லாம்செய் வல்லசித்தி* இறைமையும்பெற் றிடலாம்


அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்

அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்


பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே


வன்புடையார் பெறற்கரிதாம் மணியே சிற் சபையின்

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.! 


என்று அன்புடன் அழைக்கின்றார்.


*உலக வரலாற்றில் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் ? என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தி காட்டியவர்.அக்கடவுள்தான் ஆன்மாக்களையும் உலகங்களையும் உயிர்களையும் மற்றும் உள்ள எல்லா பொருள்களையும் படைத்தவர். அவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்றால் மட்டுமே மரணத்தை வெல்லமுடியும் என்ற உண்மையை வெளிப்படுத்தி காட்டி உள்ளார்.அதற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும் புதிய மார்க்கத்தை தொடங்கி வைத்தவர் வள்ளலார்* 


வள்ளலார் பாடல் !


இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்

*இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்*


மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


*சிறந்திடுசன் மார்க்கம் ஒன்றே* *பிணிமூப்பு* *மரணம்*

*சேராமல்* *தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே*


*பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு*

*பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.!* 


ஒவ்வொருவரும் இறக்கும் போது கூடி கூடி சேர்ந்து சேர்ந்து தலையிலும் மார்பிலும் அடித்து அடித்து அழுகின்றீர் இறவாத வரம் பெறுவதற்கு உண்டான வழி இருக்கிறது காட்டுகிறேன் வாருங்கள் என்றும்  அதற்குண்டான வழியையும் ஒழுக்கத்தையும் சொல்லித்தருகிறேன் என்றும் சொல்லுகிறார். 


*செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகிறது என்பதுபோல் ஒவ்வொருவரும் அதே வேலையை செய்து கொண்டுள்ளீர்கள்* இனி அவ்வாறு  அழ வேண்டியதில்லை.


*நாம் செய்ய வேண்டியது மரண தண்டனையில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இதுவே மனிதப்பிறப்பின் வெற்றியாகும்* *இதற்கு ஒரே வழி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதேயாகும்* *தொடர்புகொள்ளும் வழியைக் கற்றுத்தருவதே  சாகாக்கல்வியாகும்* *கற்றுத்தரும் இடமே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாகும்*


*கற்றுத்தருபவர்கள் சாகாமல் இருக்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்* 


வள்ளலார் பாடல்! 


*சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்*

*சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்*


மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்

மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்


ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்

எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்


தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்

*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!*


*நமக்கு உண்மையான  குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு எவரும் இல்லை இருக்கவும் முடியாது இருக்கவும் கூடாது.*


மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே

யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி! ( அகவல் வரிகள்) 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு