சனி, 18 ஜூலை, 2020

கற்றது எல்லாம் பொய்யே !

*கற்றது எல்லாம் பொய்யே* !

வள்ளல்பெருமான் அவர்கள் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளவதற்கும் ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும் .
சரியை.கிரியை .யோகம். ஞானம் என்னும்  4×4 படிகளில்  ஞானத்தில் ஞானம் என்னும் 16 ஆவது படியைக் கடந்து
.உண்மையான இறைவன் யார் ? என்பதை அறிந்து அருள் பூரணம் பெற்று மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு உள்ளார்..

*வள்ளலார் பாடல்* !

சரியைநிலை நான்கும் ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனி கண் டறிந்தேன்

உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன் *மேல் உண்மைநிலை பெற்றேன்*

அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்

பெரிய சிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
பெற்றேன் இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.! ...என்கிறார்

மேலே கண்ட பாடலில் தெளிவாக தெளிவுபடுத்துகிறார்.
 சமய மதங்கள் சொல்லியுள்ள சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் 16 படிகளையும் தனித்தனியே கண்டு அறிந்தேன். அவர்கள் சொல்லாத்து சொல்ல முடியாத்து.செல்லாத்து செல்ல  முடியாதது. மேலும் தெரிந்து கொள்ள முடியாத மேல்நிலை தன்னில்  உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து.அதனுடன்  தொடர்புகொண்டு அருள் ஒளியால் உண்மை நிலைப் பெற்றேன் என்கிறார்.

*அதனால்தான் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பதிவு செய்கிறார்*.

*மூவரும் தேவரும் முத்தருஞ் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை* !

என்று துனிச்சலுடன் வெளிப்படையாக சொல்லி பதிவு செய்கிறார்.

மேலும் ஆறு அந்தங்களைப்பற்றி சமயங்களும் மதங்களும் உயர்வாக பேசுகின்றன.

வள்ளலார் சொல்லுகின்றார் .

சித்தாந்தம்.
வேதாந்தம்.
கலாந்தாம்.
யோகாந்தம்.
போதாந்தம்.
நாதாந்தம்

போன்ற ஆறு அந்தங்களின் நிலை அறிந்தேன்.அதற்கு அப்பால் நின்று ஓங்கும் பெரிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன்.இங்கு இறவாமை உற்றேன் என்கிறார்.

எனவேதான் பெரியன் அருட்பெருஞ்ஜோதி பெருங்கருணைப் பெருமான் பெரும் புகழைப் பேசுதலே பெரும் பேர் என்று அறிந்தேன் என்கிறார்.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை மனிதகுலம்  மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக அவரவர்களின் அறிவுசார்ந்த  அனுபவம் சார்ந்த . ஆன்மீக வாதிகளால். ஆன்மீக அருள் ஆராய்ச்சி யாளர்களால். விஞ்ஞானிகளால்.
கர்மசித்தர்.
யோகசித்தர்.
ஞானசித்தர் போன்ற சித்தர்களாலும் எண்ணில் அடங்காத அருள்நூல்களும்.
மற்றைய உலகியல் நூல்களும் எழுதிவைத்துள்ளார்கள்.இன்னும் எழுதிக் கொண்டே உள்ளார்கள்.

வள்ளலார் எழுதிய திருஅருட்பா ஆறாம் திருமுறையில் ஞானசரியை என்னும் தலைப்பில் ஒரு பாடல் பதிவு செய்கிறார்.

*வள்ளலார் பாடல் !*
கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

மேலே கண்ட பாடலை பலமுறை தொடர்ந்து படிக்க வேண்டும்.

இதுவரையில் உலகியலில் புறக் கண்களால் காணுகின்ற அனைத்தும் நித்தியமானது அல்ல அநித்தியமானது என்றும்..இதுவரை நாம் காதுகளால் கேட்டது எல்லாம் பழுதானது என்றும்.

இன்றுவரை நாம் கற்ற நூல்கள் (படித்த நூல்கள் ) அனைத்தும் பொய்யானது என்றும். உடம்பால் உள்ளத்தால்  களித்தது எல்லாமே வீணானது என்றும்.

இதுவரை நாம் உண்ட உணவுகள் அனைத்தும்  மலமாகத்தான் போகின்றது என்றும்.உட்கொண்டது அனைத்தும் குறைபாடுடையது என்றும்.

 இதுவரையில் உலகில் உள்ளோர் அனைவரும்  உண்மை அறிந்து கொள்ளாமல் வீணாக வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளோம் என்பதை வெளிப்படையாக சொல்லுகின்றார்.

*அதனால் என்ன பரவாயில்லை விடுங்கள்*.இனிமேலாவது முயற்சி செய்யுங்கள் என்கிறார்.

இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காதீர்கள்.

இனிமேலாவது  சமரச சுத்த சன்மார்க்க மெய்நெறியைக் கடைபிடித்து.மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து.எல்லோருக்கும் பொதுவாக விளங்கிக் கொண்டு இருக்கும் தனித்தலைமை பெரும்பதியாகிய நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று இறவாத வரம்பெற்று இன்பம் அடையலாம் வாருங்கள் வாருங்கள்  என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் .
உண்மை அன்புடன் அழைக்கிறார்.

பலகோடி பிறவிகளில் உயர்ந்த அறிவு பெற்றது மானிடப் பிறவியாகும். உயர்ந்த அறிவு பெற்ற மனிதன் தாழ்ந்த நிலைக்கு செல்லுவது அழகாகுமா ?

*உயர்ந்த அறிவு கொடுத்ததின் நோக்கம்*

*தன்னை அறிந்து இன்பம் உறவேண்டும்*.

 உபகாரத்தால் பெற்ற தாய் தந்தையை விட  உண்மைத் தாய் தந்தையான தலைவனை தொடர்புகொண்டு அருளைப்பெற்று. துன்பம் தொலைத்து இன்பமுடன் மகிழ்ச்சியுடன். ஆனந்தமுடன் வாழவேண்டும் என்பதே மனிதப்பிறவியின் அடிப்படை நோக்கமாகும்..

*அதுவே கடவுள் நிலை அறிந்து அதன்மயமாக தன்னை மாற்றிக் கொள்வதாகும்*.

உலகில் உள்ள காகும் கல்வியை கற்காமல்.
சாகாக்கல்வியை கற்றுக் கொடுப்பதுவே.
வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

மனிதனின் முடிந்த முடிவான வாழ்க்கையானது உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று சாகாவரம் பெற்று வாழ்வதாகும்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளன !

அண்டங்களில் உள்ளது யாவும் பிண்டங்களில் உள்ளன என்கிறார் வள்ளலார்.நாம் வெளியில் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை  தேவையும் இல்லை.எல்லாம் நம் உடம்பிலே நிரம்பி உள்ளன உள்ளன.

நம் உடம்பும் உயிரும் வந்த வழியைத் தெரிந்துகொண்டால் மட்டுமே .உடம்பையும் உயிரையும் அழிக்காமல் ஒளிதேகமாக  மாற்றும் வழியைத் தெரிந்து கொள்ளலாம்.

*அருள் நம் ஆன்ம சிற்சபையில் நிறைந்து உள்ளன*.

அவற்றை மாயா திரைகளால் மறைக்கப் பட்டுள்ளன

*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்* !

உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்

இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!

மேலே கண்ட பாடல் நம் ஆன்ம  அறிவை பயன்படுத்தி அருள் பெருவதற்கு வழியைக் காட்டுகிறது.

நம் மனமானது உலகியல் வாழ்க்கையில் இழுக்கும் புறக்கருவியாகும் .

மனத்தை வசப்படுத்தும் வழிதுறை தெரியாமல்.மனம்போனபடி பக்தி.தவம் .தியானம். யோகம் போன்ற பொய்யான பழக்க வழங்கங்களில் ஈடுபட்டு இன்பமும் துன்பமும் அடுத்து எண்ணி எண்ணி இளைத்து உயிரையும் உடம்பையும் காப்பாற்ற முடியாமல் இறுதியில் மரணம் வந்து விடுகின்றது.

*மரணம் வரும் எந்த கொள்கையும் உண்மை அல்ல*.

உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எல்லாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலரே என்கிறார்.

மரணம் அடைகின்றவர்கள் அனைவரும் ஏழைகளே என்கிறார் வள்ளலார்.

அருளைப்பெற்று மரணத்தை வென்றவர்களே பணக்கார்ர்களாகும்.

சன்மார்க்கம் சார்ந்த அன்பர்கள் உண்மை அறிந்து. அதன் உளவை அறிந்து அருள்பெறவேண்டும்

அவரவர்கள் செயல்பாட்டில்.அவரவர்கள் உடம்பை உயிரை தற்சோதனை செய்து கொள்ள வேண்டும்.

சந்தை படிப்பை கற்காமல்  நம் சொந்தப்படிப்பை கற்கவேண்டும்.

*சொந்தப்படிப்பு என்பது சிற்றம்பலக் கல்வியாகும்*.

*வள்ளலார் பாடல்* !

கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி

உற்றேன் எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்

பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்

பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!

மேலே கண்ட பாடலில் வள்ளலார் சாகாக்கல்வியை எங்கு எவ்வாறு கற்றேன் என்பதையும் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றதையும் வெளிப்படையாக சொல்லுகின்றார்.

பெற்றேன் உயர்நிலை பெற்றேன.
உலகில் உள்ளவர்களின் பிறர் நிலையை எப்போதும் நான் பற்றேன பற்றியதும் இல்லை என்கிறார்.

பற்றிய பற்று அனைத்தினையும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்பதை மிகவும்  அழுத்தமாக சொல்கிறார்.

மேலும் வள்ளலார் பாடல் !

சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்பு நம் சொந்தப் படிப்போ

விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்

பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்

அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி!

மேலே கண்ட பாடலில சொல்லியவாறு அது இது என்று அலையாமல்.
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி யை மட்டுமே கருணை உள்ளத்தோடு தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

சுத்த சன்மார்க்கம் என்பது இயற்கையான கருணை நெறியாகும்.

*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி* !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு