ஞாயிறு, 19 ஜூலை, 2020

கல்பட்டு ஐயா ! வடலூர் !

கல்பட்டு ஐயா
----------------------------

வள்ளற்பெருமானாரின் முதன்மை தொண்டர் மற்றும் அணுக்கத் தொண்டர் கல்பட்டு ஐயா.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆன்ம நேய அன்புடையீர், வணக்கம்.

எப்படி 'அருட்பெருஞ்ஜோதி' இறைவன், நமது அருள்குருவான வள்ளலார் இருக்கும் குடிசைக்கே வந்து அவரை அடிமை கொண்டாரோ அதுபோல வள்ளலார், 'கல்பட்டு ஐயா' இருக்கும் இடத்திற்கே சென்று அவரை அடிமை கொண்டார் என்பதுதான் வேறுயெந்த சீடர்களுக்கும் கிடைக்காத சிறப்பை அவர் பெற காரணமாக உள்ளது.

மேலும் வள்ளலாரின் கட்டளைக்கிணங்க, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகத் திருமாளிகையில் வள்ளலார் திருவறையினுள் சென்றவுடன் அந்த அறை திருக்கதவுகளை வெளியிலிருந்து தாளிட்டவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. எனவே இவரை வள்ளலாரின் 'முதன்மை சீடர்' என்பர்.

பெருமானாரே தேடிச்சென்று ஆட்கொள்ளும் தகுதிபெற்ற
புண்ணிய உத்தமர்தான் " கல்பட்டு இராமலிங்கம்" என்னும் கல்பட்டு ஐயா.

உடல், பொருள், ஆவி மூன்றையும் பெருமானார்க்குத்
தத்தம்செய்து வாழ்ந்து கட்டியவர்.

சன்மார்க்க சங்க சாதுக்களுள் முதலானவர் , வள்ளல் பெருமானால் ஆட்கொள்ள பட்டவர், பெருமானால் ராமலிங்க மூர்த்திகள் என்றும் அழைக்கப்பட்டவர்,வள்ளல் பெருமானின் திருக்கரத்தால் உணவு உண்ணும் பெரும்பேறு பெற்றவர் கல்பட்டு அய்யா.

மேட்டுக் குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 30-01-1874 ஆம் ஆண்டு நள்ளிரவு மணி 12--க்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடன்  திருவருட்பிரகாச வள்ளலார் இரண்டறக் கலக்கும் முன் திருக்காப்பிட்டுக் கொள்ளும்பொழுது  கல்பட்டு ஐயாவும், தொழுவூர் வேலாயுத முதலியார் மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

கல்பட்டு ஐயா
---------------------------
விழுப்புரத்துக்கு அருகில் கல்பட்டு என்ற அழகிய சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் பிறந்தவர் கல்பட்டு ஐயா என்ற ஞானி. அவரது இயற்பெயர் ராமலிங்கம். சின்னஞ்சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி தமிழகமெங்கும் சுற்றித் திரிந்தார். வழிகாட்டும் குரு எவரும் இவருக்கு வாய்க்கவில்லை.

அப்புறம்தான், குருவைத் தேடி வேறெங்கும் செல்லவேண்டாம் என்ற ஞானம் அவருக்கு வந்தது. விருத்தாசலம் அருகே திருநறுங் குன்றத்தில் இருந்த குன்றுகளில் ஒன்றில் குடிசை போட்டுக்கொண்டு நிட்டையில் அமர்ந்தார்.

தன்னை நாடிவரும் அன்பர்களிடம் தனது ஞானாசிரியன் இன்ன மாதத்தில், இன்ன கிழமையில், இன்ன நாழிகையில் வருவார் என்று சொல்லிவிட்டு காத்திருக்கிறார். பலரும் கூடி நிற்கின்றனர்.

எங்கெங்கு இருந்து ஏதேது வேண்டினும் அங்கங்கு அருளும் அருட்பெருஞ்ஜோதி - என்று பாடிய வள்ளல் பெருமான் தமது சீடரைத் தேடிப் புறப்பட்டார். மாட்டுவண்டி செல்கிறது. வண்டியைத் திருக்கோவிலூருக்கு அனுப்பிவிட்டு தாம் மட்டும் நறுங்குன்றத்திற்கு நடந்தே செல்கிறார் வள்ளல் பெருமான். குன்றின் மீதேறிச் செல்கிறார். அங்கிருந்த குடிசையின் உள்ளே குனிந்து நுழைகிறார்.

கல்பட்டு ஐயா கண்விழித்தபோது வள்ளல் பெருமானின் அழகிய திருவடிகள் கண்ணில் படுகின்றன. நெடுஞ்சாண் கிடையாகக் காலில் வீழ்ந்த கல்பட்டு ஐயாவை கைதொட்டுத் தூக்கினார் வள்ளலார். ‘ஆட்கொள்ள வேண்டும் ஐயனே’ என்று அரற்றினார் கல்பட்டு ஐயா. ‘உத்தரவு வரும் காத்திரு’ என்று கூறி கல்பட்டு ஐயாவை வாரி அணைத்துக்கொண்டார் வள்ளலார்.

பிறகு, 'சிதம்பரத்தில் சில நாள் இருந்துவிட்டு, தன்னை வந்து பார்க்குமாறு அவரிடம் சொல்லிவிட்டுச் சென்றாராம் வள்ளலார்.

கருங்குழி வந்தது
----------------------------------
வடலூரில் சத்திய தருமச் சாலை தொடங்கப்படாத காலம். ஆனாலும் தம்மைத் தேடி வள்ளலார் வந்து சென்ற சிறிது காலத்துக்கெல்லாம் புறப்பட்டுவிட்டார் கல்பட்டு ஐயா. ஆம், இராமலிங்கத்தைத் தேடி இராமலிங்கம் புறப்பட்டுவிட்டது. கோடைக் காற்றிலே தாடி பறக்க, கண்கள் அடிவானத்திற்கு அப்பால் லயிக்க, கையிலே கம்புடன் சுடுமணலில் கால் கொப்பளிக்க வேகமாக விரைகிறது; வாட்ட சாட்டமான அந்தச் சிவந்த உருவம்.

இடையில் ஒரு சிற்றாடை, தோளிலே துண்டு, கையிலே கம்பு. கல்பட்டு ஐயாவை வரைந்துகாட்ட ஒரு வரி போதும். பசியோ வாட்டுகிறது. தாகம் நாவைச் சுருட்டுகிறது. ‘போ, தேடிச்செல்’ - உந்தித் தள்ளுகிறது மனம். தேடலில் தெளிந்தது திசை. கருங்குழி வந்தாயிற்று.

அதற்கு முன்னரே வள்ளல் பெருமான் தமது தொண்டர்களைக் கூழ் கரைத்து வைக்குமாறு கூறியிருந்தார். தொண்டர்களுக்குப் புரியவில்லை. யாருக்காக? கேள்வி எல்லோர் மனத்தையும் குடைகிறது.

நேராக உள்ளே நுழைந்த அந்த உருவம் கருணை வள்ளலின் காலடியில் வீழ்ந்தது. அழுதது, சிரித்தது. இருகரம் நீட்டி வள்ளல் வார்த்த கூழினை வாங்கிப் பருகியது. பருகிக் கொண்டே இருந்தது. வயிறு நிறைந்தும் நிறுத்தவில்லை. ஊற்ற, ஊற்ற இன்னும் இன்னும் என்று வாங்கி குடித்துக் கொண்டே இருந்தார் கல்பட்டு ஐயா. ‘போதாதாங்காணும்?’ என்று கேட்டு கூழ் வார்ப்பதை நிறுத்தினார் பெருமான்.

போதும் என்று சொல்ல மனம் வரவில்லை. கண்ணீர் வழியத் தலையாட்டுகிறார் கல்பட்டு ஐயா. முடிந்தது பயணம்தான், தேடல் அல்ல. சத்திய தருமச்சாலை பக்கத்தில் ஒரு குடிசையில் தவமிருக்கலானார் கல்பட்டு ஐயா. அக்காலத்தே வெப்பமிகுதியால் அவருக்கு உடம்பெல்லாம் சிரங்கு கண்டது. ஆனால், சாலை அன்பர்கள் அவருக்கு உணவு தரவும் மறந்தனர்.

வெளியூர் சென்றிருந்த வள்ளலார் திரும்பியதும் ‘கல்பட்டுக்கு உணவு போயிற்றா?’ என்று கேட்டார். எல்லோரும் கல்லாய்ச் சமைந்தனர். உண்மை புலப்பட்டது. தாமே உணவுக் கிண்ணத்துடன் கல்பட்டு ஐயாவிடம் சென்று கல்பட்டு ஐயாவின் கையில் தாமரை இலைவைத்து தமது கையால் உருட்டி சோற்றுக் கவளங்களை வைத்தார். வாங்கி வாங்கித் தின்றார் கல்பட்டு ஐயா.

‘வள்ளல் பெருமானுக்குத் தொல்லை தந்துவிட்டேனே’ என்ற ஆற்றாமையிலும் துடித்தார் கல்பட்டு ஐயா. ‘அடியாருக்கு சிவஞானிகள் தொண்டு செய்வது உண்டுங்காணும்’ என்று வள்ளலார் சிரித்தபடிக் கூறினார்கள்.

ஒரு நாள் மாட்டுவண்டி ஒன்றில் வள்ளலாரும் கல்பட்டு ஐயாவும் பயணம் செய்துகொண்டிருந்தனர். சற்று தூரம் சென்றதும் வள்ளலார் கல்பட்டு ஐயாவை நோக்கி ‘கிடக்க விரும்புதுங்காணும்’ என்று சொன்னார்கள். உடனே எம்பெருமான் தலையை தன் மடியில் தாங்கி தூங்க உதவிசெய்தார். பெருமானும் தூங்கலானார். வண்டி போய்க்கொண்டிருந்தது.

அச்சமயம் வள்ளல் பெருமானின் திருமுகத்தைக் குனிந்து பார்த்த கல்பட்டு ஐயா திடுக்கிட்டுப்போனார். பெருமானாரின் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் பெருக் கெடுத்து வழிந்துகொண்டிருந்தது. பெருகி வந்த கண்ணீர் தொடையை நனைத்து பின்னும் வழிந்து வண்டிப் பலகையை நனைத்தது.

கல்பட்டு ஐயாவின் மனம் பதைபதைத்தது. உடலில் நோவு ஏதும் கண்டதோ என்று எண்ணி கலங்கினார். எழுப்பவும் துணிவு வரவில்லை. அடுத்த ஊர் வந்தது. பெருமான் கண் விழித்து எழுந்தார். என்ன குறை என்று சொல்ல வேண்டும் என்று கல்பட்டு ஐயா விநயமுடன் வேண்டிக்கொண்டார்.‘ப்ச்...அதற்கில்லைங்காணும் இந்த உலகமெல்லாம் இப்படி இருக்கிறதே என்கிறதுக்குத்தாங்காணும்!’ என்றார் பெருமான்.

வள்ளல் பெருமானுக்கு தொழுதூர் வேலாயுதம், கருங்குழி புருடோத்தமன், காரணப்பட்டு கந்தசாமி என்று எத்தனையோ அணுக்கத் தொண்டர்கள் இருந்தாலும்

உலகுக்காக அவர் வடித்த ஏக்கக் கண்ணீரை ஏந்தும் பாக்கியம் கல்பட்டு ஐயாவுக்கு மட்டுமே கிடைத்தது.

யாருக்கும் கிடைக்காத பெரும் பேராக நித்திய தேகம் அடைய தற்போத சுதந்திரத்தை ஆண்டவருக்கு எழுதிக் கொடுக்கும் அடிமை சாசனத்தை
 கல்பட்டு அய்யாவுக்காக நமது பெருமானே திருக்கைச் சார்த்தி அடிமைச்சாசனம் வரைந்தருளினார்கள். இந்நிகழ்ச்சி வள்ளல் மேட்டுக்குப்பத்தில் விளங்கிய போது 12-05-1872 ல் நடந்தது.

அவ்விண்ணப்பம் பின்வருமாறு அமைந்துள்ளது.

""போதநாச வந்தனம் செய்த விண்ணப்பம்""

(விண்ணப்பத்தின் முழுத் தொகுப்பும் அடுத்த குறிப்பில் வெளியிடப்படும்)

சுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொண்டதும் கல்பட்டு இராமலிங்க சுவாமிகளும் தொழுதூர் வேலாயுத முதலியார் அவர்களும் வெளியில் பூட்டிட்டு சீல் வைத்தார்கள்.

என்று இதுபற்றிச் சத்திய ஞானசபை வழிபாட்டு விதிகளைக் குறித்து 23-02-1928 ல் வாக்குமூல அறிவிப்பு கொடுத்திட்ட திருப்பாதிரிப்புலியூர் இரத்தினம் என்பவர் குறிப்பிடுகின்றார்.

(மூன்று நாள் கழித்து அன்று இருந்த ஆங்கில அரசால் இந்த சீலை உடைத்து திருக்கதவை திறந்துபார்த்த போது அங்கு நம்பெருமான்.........நமது ஊணகண்களுக்கு காட்சியாகமலிருந்தார்........என்றும் எங்கும் இருக்கின்றார்........நமது ஊணக்கண்களுக்கு பழையபடி காட்சி கொடுக்கும் காலமும் மிக அருகில் கனிந்து வருகிறது.....)

இவ்வாறு நம்பெருமான் ஆணையிடும் இன்றியமையாக் கடமைகளைக் கல்பட்டு ஐயா நிறைவேற்றும் பொறுப்பினைப் பெற்று விளங்கினார்.

இப்படி வள்ளலாருடன் நெருக்கமாக இருந்தவர் கல்பட்டு ஐயா தான் ஏற்படுத்திய சத்திய தரும
சாலையை கல்பட்டு ஐயாவிடம் ஒப்படைத்துவிட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடன் இரண்டறக் கலந்தார். வள்ளலார் அவரின் கட்டளைப்படி, தரும சாலையின்
நடைமுறைகளைப் பின்பற்றி சுமார் 28 வருடங்கள் சத்திய தருமச்சாலையிலே தங்கியிருந்து நிர்வகித்து வந்தார் கல்பட்டு ஐயா.

கல்பட்டு ஐயா சமாதி அடைதல்
-------------------------------------------------------
வள்ளல் வழியில் மாறாத அன்புகொண்டு பணிசெய்தும், பரஞ்சுடர் கண்டுநிற்கும் யோகம் செய்தும் ஏறக்குறைய 35 ஆண்டுகள் வடலூர் பெருவெளியில் வாழ்ந்த கல்பட்டு ஐயா,

சுபகிருதுஸ்ரீ, சித்திரைமீ, 14ஆம் நாள் (26-04-1902) சனிக்கிழமை, கேட்டை விண்மீன் சதுர்த்தசி கூடிய நாளில் சமாதி கொண்டிட்டார். அன்பர்கள் அவரைச் சாலையின் கீழ்புறத்தில் அடக்கம் செய்தனர். அங்கே கோவிலும் எடுத்துள்ளனர். நினைவு ஆலயமாக இன்று அனைவர்க்கும் அது வழிகாட்டி நிற்கிறது.
இப்போதும்  அவருடை சந்நிதியில்
அணையா தீபம் அருள் ஒளி வீசிக்கொண்டு
இருக்கிறது.

நன்றி.

தயவுத்திரு.
ந. குருமூர்த்தி அய்யா அவர்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு