செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பொருமையாக படிக்க வேண்டும்.!

 *பொருமையாக படிக்க வேண்டும்* 


வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றி வருபவர்களும். சமயத்தையும் சன்மார்க்கத்தையும் பின்பற்றி வருபவர்களும்.புதியதாக வரும் அன்பர்களும். கீழே உள்ள கட்டுரையை அவசியம் படித்து தெரிந்து கொண்டால் மிகவும். பயன் உள்ளதாக இருக்கும். 


*திருஅருட்பா மூன்று பகுதிகளாக இருக்கின்றன*. 


முதல் பகுதி திருஅருட்பா பாடல்களில் முதல் ஐந்து திருமுறைகளைக் கொண்டது. இரண்டாவது பகுதி ஆறாம் திருமுறைப் பாடல்களை உடையது. மூன்றாம் பகுதி உரைநடைப் பகுதிகளை உடையது. 


திருஅருட்பா ஆறு திருமுறைப் பாடல்களையும் விளங்கிக் கொள்வதற்கு வேண்டிய சன்மார்க்க *விளக்கங்கள்.விண்ணப்பங்கள் திருஅருட்பா உரைநடைப் பகுதியில் இருக்கின்றன. திருஅருட்பா பாடல்களின் பொருள்கள், *உபாயப் பொருள்*, *உண்மைப் பொருள்*, *அனுபவப் பொருள்* என்று மூன்று வகைப்படும். உபாயப் பொருள் என்பது திருஅருட்பா பாடலில் எல்லாராலும் அறியக்கூடிய உபாயப் பொருள் - *அதாவது பொது அறிவுப் பொருள்*


உண்மைப் பொருள் என்பது திருஅருட்பா பாடல்களின் *சிறப்புப் பொருள்;* அதாவது நுட்பமான சத்தியப் பொருள். அனுபவப் பொருள் என்பது திருஅருட்பா பாடல்களில் இருக்கும் கடவுள் *அனுபவத்தை அறிவிக்கும் பொருள்*. இந்த அனுபவப் பொருளை விளங்கிக்கொள்ள திருஅருட்பா பாடலில் ஈடுபாடு உள்ளவர்களும், இறை நம்பிக்கை உள்ளவர்களும், ஜீவகாருண்ய ஒழுக்கம் உள்ளவர்களும் அமர்ந்து சத்விசாரம் செய்யவேண்டும். 


அதாவது தங்கள் தங்கள் அனுபவங்களை ஒப்பிட்டு விவாதித்து *முழு அனுபவ உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். அனுபவப் பொருள் இது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. *அந்தப் பொருளோடு ஒன்றவேண்டும்*. அதை *வாழ்க்கையிலும் மேற்கொள்ளப் பழகவேண்டும்.* இப்படி வாழும் வாழ்வுதான் அனுபவப் பொருளுடன் இணைந்து வாழும் முழு வாழ்க்கை ஆகும்.


*ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம், விண்ணப்பங்கள், வியாக்யானங்கள்,** *குறிப்பு விளக்கங்கள்* *திருமுகங்கள்* *அதாவது கடிதங்கள்,* *உபதேசப் பகுதிகள்* முதலிய திருஅருட்பா உரைநடைப் பகுதிகளை ஒரு முறைக்குப் பலமுறை படிக்கவேண்டும். படித்து அதன் அனுபவ உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொண்ட அனுபவ உண்மைகளை வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுக முயல வேண்டும்; *தொடர்ந்து முயலவேண்டும்*. 


திருஅருட்பா உரைநடைப் பகுதியைப் படித்துப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் மேற்கொள்வதற்கு ஒரு உறுதிப்பாடுவேண்டும். *சுத்த சன்மார்க்க லட்சியத்தோடு* திருஅருட்பா உரைநடையைப் பயில வேண்டும்.


அப்போதுதான் அதனால் உண்டாகும் பயனை அடைந்து அனுபவிக்கமுடியும். சுத்த சன்மார்க்க லட்சியம் என்பது *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை* *அதாவது எல்லா உயிர்களையும் நேசித்து அவைகளிடம் சகோதர உரிமை பாராட்டுவதாகும்*. 


வள்ளலாரின் உபதேசங்கள் அவர் உபதேசித்தபோது *பல அன்பர்களால் அவரவர்க்கு முடிந்தவரை; புரிந்தவரை *குறிப்பு எடுக்கப்பட்டவை*. வள்ளலாரின் உபதேசங்களை குறிப்பு எடுத்த அன்பர்களின் *கவனக் குறைவாலும், தவறாலும், தெளிவின்மையினாலும் சில இடங்கள் மாறுபட்டும் விடுபட்டும் இருக்கின்றன*. இந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்கி வள்ளலாரின் உபதேசங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு முதலில் இறைவன் நம்பிக்கை வேண்டும்.


 இரண்டாவது *திருஅருட்பா பாடல்களுடன் பொருத்தமாக இருக்கும் உபதேசப் பகுதிகள் எவை எவை என்று ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ளவும் வேண்டும்*. இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டால் இறைவன் *அதன் உண்மைப் பொருளையும் அனுபவப் பொருளையும் புரிந்துகொள்வதற்கு நமக்குத் துணைபுரிவார்*. இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே அதிக நாட்டம் உள்ளதாக இருக்கிறது. 


இதனால்தான் மக்களிடம் துன்பமும், துயரமும்.அச்சமும்.

பயமும். அழிவும் பெருகி வருகின்றன. இந்த வாழ்க்கைமுறை மிகத் தவறான முறையாகும்.


இதை முதலில் நாம் அடியோடு மாற்றியாக வேண்டும். அப்படி மாற்றிக்கொண்டு வாழப் பழகுவதற்குத் திருஅருட்பா பாடல்களையும் திருஅருட்பா உரைநடைப் பகுதிகளையும் துணையாகக் கொள்ளவேண்டும். *வள்ளலார் எவ்வளவு இரக்கத்துடனும், தயா பண்புடனும் வாழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.*

 வள்ளலாருக்குத் தான் எவ்வளவு எளிமை! எவ்வளவு இரக்கம்! எவ்வளவு ஜீவகாருண்யம். எவ்வளவு ஆன்மநேயம். எவ்வளவு தன்னடக்கம்! எவ்வளவு திருஅருள் நம்பிக்கை! இவற்றை நினைந்து நினைந்து; உணர்ந்து உணர்ந்து நாம் வாழ்க்கையில் தொடர்ந்து மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். 


*பரிபூரணமாகப் பின்பற்ற முயலவும் வேண்டும்*. தன்னை மறைத்தல் என்ற பண்பில், தன்னை வெளியே காட்டாமல் ர *தான் என்ற அகங்காரத்தை அடியோடு விடுவதைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார். *தன்னைப்பற்றியோ மற்றவர்களைப்பற்றியோ, போலி உலக விவகாரங்களைப் பற்றியோ, வள்ளலார் ஏதாவது கூறி இருக்கிறாரா?* இல்லை! இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன ? *இறைவன் அருளையே பெறவேண்டும் என்ற உண்மைதான்*..


*சாகாதவனே  சன்மார்க்கி*  என்ற உண்மை உணர்ந்து அருள் பெறுவதற்கு நேர்வழியை கடைபிடிக்க வேண்டும் 


இறைவன் அருளைப்பெற, நாம் என்ன செய்யவேண்டும்? *தயவே வடிவமாக கருணையே வடிவமாக* இருந்து ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் நாம் வாழ முயலவேண்டும். இப்போது நாம் அப்படி வாழ்கிறோமா ? என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


*வீண் விவாதங்களில் ஈடுபாடு கொள்ளாமல் ஒதுங்கி கொள்ள வேண்டும்*.


அழியக்கூடிய, துன்பம் தரக்கூடிய, புலன் பொறி இன்ப வாழ்க்கையிலே புறத்திலே மூழ்கிக் கிடக்கிறோம். இப்படி வாழ்வது வாழ்வு அல்ல என்கிறார் வள்ளலார்

நம் உள்ளே நமக்கு அழியா வாழ்வைத் தருகின்ற அகவாழ்க்கை அறிந்து அகத்திலே  *இயற்கை உண்மையாகிய அருட்பெரும் ஜோதி இருக்கிறது*. புறத்தில் அடிக்கடி மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருக்கும் நிலை இல்லாத பொருள்கள் இருக்கின்றன. இயற்கை உண்மையாகிய *நிலையான அருட்பெரும் ஜோதியை* நம்பாமல், மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருக்கும் நிலையற்ற பொருள்களை நம்பி *புலன்களின் போக இன்பத்துக்காகவே வாழ்கிறோம்*. 


இப்படி வாழ்வது வெறும் விலங்கு வாழ்க்கை. இந்த விலங்கு வாழ்க்கையை விட்டு, *சிரநடு சிற்றம்பலத்தில்* *இயங்கிக் கொண்டு இருக்கும்* ஆன்மாவை (உள்ஒளியை) இடைவிடாது தொடர்பு கொண்டு வாழ்ந்தால்.எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தோன்றும். தெரிந்து கொள்ளலாம்.


*உண்மை அறிதல்*


இங்கு ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். உள்முகமாகவே இருந்து ஒழிந்து போகவும்கூடாது. 

புற வாழ்க்கையிலேயே மிதந்து அழிந்து போகவும் கூடாது. வேறு என்ன செய்யவேண்டும்? இறைவனின் திருவடியை இறுகப் பற்றிக்கொண்டு, உயிர்களிடம் இரக்கம் காட்டி அவைகளுக்கு தொண்டு என்னும் பணிபுரிந்து கொண்டு வாழவேண்டும். நடைமுறையில் இப்போது நாம் உலகில் வாழ்கிற வாழ்க்கை, உண்மையான வாழ்க்கை அல்ல. இறைவனிடம் நாம் வைத்திருக்கும் பற்று உறுதியாக இருக்கவேண்டும். அதைப் பற்றிக்கொண்டே உலக உயிர்களிடம் தயவும் அன்பும் கருணையும் செலுத்தி வாழவேண்டும்.


 இப்படி வாழ்ந்தோமானால், நம் உள்ளே இருக்கும் ஒளிமயமான இறைவன் அங்கிருந்து அனகமாக விரிந்து, நம் உயிரிலும், மனதிலும், உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உயிர் அணுவிலும், நம் சூழ்நிலையிலும் பரவி நிலைகொள்வார். நம்மையும் நிலைபெறச் செய்வார். இவ்வாறு உள் இருந்து இறைத்தன்மை விரிந்து உருவாகும் வாழ்க்கைதான் *அனக வாழ்க்கை. சத்திய வாழ்க்கை.* இதனால் அகத்தில் இருக்கும் இன்பம் வளர்ந்து பொங்கி எங்கும் பாயும்.


எப்பொழுதும் ஆனந்தமயமாக நம்மை வாழவைக்கும். திருவருளின் துணையைக் கொண்டு, நம் உள் இருந்து தழைத்துப் பொங்கும் பேரின்ப வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.


நாம் அனுபவிக்கும் ஆனுபவ உண்மையை உலக மக்கள் அனைவர் இடமும் நாம் கொண்டு செல்ல  முயலவேண்டும்.


வள்ளலார் பாடல் ! 


சார்உலக வாதனையைத் தவிர்த்தவர் உள் ளகத்தே

சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை


நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்

நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி


ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை

எல்லாம் செய் வல்லபத்தை எனக்களித்த பதியை


ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்

உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.! 


மேலே கண்ட பாடல் மூலம் அறிந்து கொள்ளவும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு