வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கொலை செய்யாதே ! புலால் உண்ணாதே !

 கொலை செய்யாதே ! புலால் உண்ணாதே ! 


உலகில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாய்பேசாத உயிர்களைக் கொன்று அதன் புலாலை உண்பது .உயர்ந்த அறிவு பெற்ற  மனிதர்களின் பழக்கமாக உள்ளது.


உலகில் உள்ள சாதி.சமயம்.மதங்கள்   உயிர்க்கொலை செய்வதற்கும்  புலால் உண்பதற்கும் தடையாக இல்லாமல் கண்டும் காணாமல். இலைமறை காய்மறையாக. உள் ஒன்று வைத்தும் புறம் ஒன்று பேசியும் ஆன்மீகம் என்ற பெயரில். மக்கள் செய்யும் தவறான உணவு உட்கொள்ளும் வாழ்க்கை முறையை கண்டும் காணாமல் இருப்பது ஆன்மீகத்தின் ஆழகல்ல.ஆன்மீக கொள்கை அல்ல. 


ஆன்மீகம் என்றால் என்ன ? 


இறைவனால் படைக்கப்பட்ட ஆன்மாவையும் உயிரையும் உடம்பையும் பாதுகாப்பதே ஆன்மீகம் என்பதாகும்.


*உயிர்க்கொலை செய்வதும் புலால் உண்பதும் உலகின் மிகப்பெரிய வியாபாரமாகி விட்டது*.


இதுவே நாட்டின் அழிவுப்பாதைக்கு முக்கிய காரிய காரணமாகும்.


இன்றைய விஞ்ஞானம். அறிவியல். வேதியல்.பவுதீகம்

படித்தவர்கள்.மற்றும் எல்லாம் தெரிந்தவர்கள்.மக்களைக் காப்பாற்றும் 

அரசியல் ஆட்சியாளர்கள் அனைவரும்.உண்மை உணராமல். அறியாமையால் தவறு செய்து கொண்டே உள்ளார்கள்.


உயிர்க்கொலை செய்வதும் அதன் புலால் உண்பதும் மன்னிக்க முடியாத குற்றம் என்பதை திருவள்ளுவரும்.

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானும்.வெளிப்படையாக இவ்வுலகிற்கு சொல்லி உள்ளார்கள்.


இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கு எல்லா உரிமையும் உண்டு.


இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை என்கிறார் வள்ளலார். *இயற்கை மரணம் வரலாம் செயற்கை மரணம் செய்யக்கூடாது*


*உலகில் அக இனத்தார் புற இனத்தார் என இரண்டே சாதியை மட்டுமே பிரித்தார் வள்ளலார்*. 


இறைவனிடம் அருள் பெறும் தகுதி உடையவர்கள் யார் என்றால் ?  


உயிர்க் கொலை செய்யாமலும்  புலால் உண்ணாமலும் உள்ளவர்களே *அக இனத்தவர்கள் ஆவார்கள்*.அருள் பெறும் தகுதி உடையவர்கள்.அவர்களைப் புண்ணியவான்கள் எனப்  போற்றப்படுவார்கள்.


உயிர்க்கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் *புற இனத்தவர்கள் ஆவார்கள்*.

இறைவனிடம் தொடர்பு கொள்ளவும்.அருள் பெறவும் தகுதி அற்றவர்கள். இயற்கைக்கு விரோதமானவர்கள்.மகா பாவிகள் என தூற்றப்படுவார்கள் என்கிறார் வள்ளலார்.


வள்ளலார் பாடல் ! 


உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்

உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்


பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே


நயப்புறு சன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே


மயர்ப்பறு மெய்த் தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும்

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.! 


புற இனத்தவராக இருந்தாலும் பசி என்று வந்து விட்டால் பசி தவிர்தல் மாத்திரமே புரிய வேண்டும்.மற்றை பண்பு பற்றியும் நன்மை பற்றியும் சொல்லாதீர்கள்.ஏன். என்றால் ?  அவர்கள் அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கின்றார்கள். 


அவர்கள் புலால் மறுத்து நல்வழிக்கு வரும்போது நற்பண்புகளை சொல்லுங்கள் இதுவே நம் ஆணை என்று அழுத்தமாக சொல்லுகின்றார். இதுபோல் எந்த ஞானிகளும் வெளிப்படையாக சொல்லவில்லை.


*புலால் உணவு மனித உடம்பிற்கு ஏற்றது அல்ல*


ஏற்க முடியாத புலால் உணவை (மாமிசம்) உண்பவர்களுக்கு.

*தீர்க்க முடியாத  தீராத பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும்.*


*அடுத்து மனித பிறப்பு கிடைக்கும் என்பது நிச்சயம் அல்ல*  


எனவேதான் கடவுளின் பெயராலும் மற்றபடி எந்த வேண்டுதலுக்காகவும் வாய்பேசாத உயிர்களை பலி கொடுக்க கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.


இவ்வுலகில் பட்டம் பதவி புகழ் பொருள் அதிகாரம் படைத்த எவராக இருந்தாலும். மற்றும் சர்வ வல்லமை பெற்ற ஞானிகளாய் இருந்தாலும். உயிர்களை கொலை செய்து அதன் மாமிசத்தை உண்ணுவதாக *மனதில் நினைத்தாலும்.*

அவர்களை மனிதனாக நினைப்பதே தவறான செயலாகும் என்கிறார் வள்ளலார்.


மனிதனை மனிதன். கொன்றால் தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என்பது மனிதனால் இயற்றப்பட்ட சட்டத்தில் இடம் உண்டு.


வாய்பேசாத எதிர்த்து கேள்வி கேட்காத அப்பாவி உயிர் இனங்களை குழந்தைபோல் வளர்த்து. மனிதனின் உணவிற்காக கொலை செய்தால் அவனுக்கு கொலைக்குற்ற தண்டனை தண்டனை ஏன் வழங்குவதில்லை.


மனித உயிர்களுக்கு ஒருசட்டமா? மற்ற உயிர்களுக்கு ஒருசட்டமா ? எல்லா ஆன்மாக்களும் எல்லா உயிர்களும் ஒரேத் தன்மை உடையது என்பதை இந்த மனித குலம் புரிந்து கொள்ளாதது ஏன் ? புரிய வைக்காதது ஏன் ? இது யார் குற்றம். சிந்திக்க வேண்டும்.


*மனுநீதிச்சோழன் இதே இந்திய  மண்ணில் ஆட்சி செய்தவன்தான்*.


வாய் பேசாத தாய்ப்பசுவானது. தான் ஈன்று எடுத்த  இளம் பசுங் கன்றானது தேர்க்காலில் அகப்பட்டு துடிதுடிக்க உயிர் இழந்த காட்சியைக் கண்டு தாங்கமுடியாத வேதனையால்  துயரத்தால் நீதி கேட்டு.

மனுநீதிச்சோழன் அரண்மனையில் உள்ள ஆராய்ச்சி மணியைத் தன். கொம்புகளால் அசைத்து மணியோசை எழுப்பி நீதி கேட்டது.


அரண்மனை மந்திரிகள் மூலமாக உண்மை அறிந்த மனுநீதிச்சோழன்.

பசுவின் கன்றை தேர்க்காலில் அகப்பட்டு கொன்றவன்  தன் மகன் வீதிவிடங்கன் என்று தெரிந்தும். இளம் பசுங்கன்று துடிதுடித்து இறந்த அதே இடத்தில் தன் மகனை கிடத்தி *தானே தேர் ஓட்டி சென்று* சக்கரத்தை மேலே ஏற்றி மகனை கொன்ற சம்பவம் வரலாறுகளில் படித்துள்ளோம்.


*மனுமுறைகண்ட வாசகம்* என்ற தலைப்பில் மனுநீதிச்சோழன் வரலாற்றை எளிய தமிழில் அழகான உரைநடையில் வள்ளலார் எழுதிவைத்து உள்ளார் அவற்றில். உள்ள செய்திகளை படித்து உண்மை தெரிந்து கொள்ள வேணுமாய்  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் வாழவேண்டும் வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.


கருணை மிக்கவர் எல்லா உயிர்களையும் தன்  உயிர்போல் நேசிப்பார்கள். *எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி* என்பார் வள்ளலார். கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார் 


*திருவள்ளுவர் கொல்லாமை புலால் மறுத்தல் என இரண்டு அதிகாரங்களாக 20 குறட்பாக்கள் தந்துள்ளார்*.


படித்து தெரிந்து கொள்ளவும்.உதாரணத்திற்கு ஒரு குறள்.


*தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்*

*எங்கனம் ஆளும் அருள்* ? 


தன் உடம்பை வளர்ப்பதற்காகப் பிற உயிர்களின் உடம்பைக் கொன்று தின்பவனுக்கு இறைவன் அருள் எங்கனும் எவ்வாறு கிடைக்கும் என்று கேள்வி எழுப்புகிறார்.


மேலும் ஒரு குறள்.


உண்ணாமை வேண்டும் புலால் பிறிது ஒன்றன் 

புண் உணர்வார்ப் பெறின் !


தோலை நீக்கிவிட்டால் உடம்பின் பகுதி புண் வடிவத்தில் தோன்றுகிறது.

சிறிது வெளியே தெரிந்தாலும் அருவருப்பு உண்டாகிறது. நமது உடம்பின் புண் நமக்கு அருவருப்பாக இருக்கிறது .

பிறருக்கும் அருவருப்பாகத் தோன்றுகிறது.


ஆதலால் அப்புண்ணை வெளிக்காட்டாமல் மறைத்து விடுகிறோம்.நாவின் சுவையை மட்டும் கொண்டு இந்த அருவருப்பை மறந்து விடுகிறோம்.


புண்ணுக்கு என்ன தன்மை உண்டோ அனைத்தும் புலால் என்னும் மாமிசத்திற்கு உண்டு.சுவையை மறந்துவிட்டால் அது மற்றோர் உடம்பின் புண் என்று அறிவோம்.

அருவருப்பு அடைவோம்.இதை உணர்ந்து புலால் மறுக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.


நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு என்பார் வள்ளலார்.நாறிய பிண்ணாக்கு என்பது *மலம்* என்பதாகும். மாமிசம் திண்பது நாறிய மலம் தின்பதற்கு சம்மானது என்கிறார்.


எனவே உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்கள் உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலால் உண்ணாமலும் இருந்தால் தனக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லதே நடக்கும்.


உலகில் உள்ள எல்லா உயிர்களும்  மகிழ்ச்சியுடன் வாழ்வேண்டும் என்பதே  இறைவன் சம்மதம்.

இயற்கையின் நியதி படைப்பு என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து புரிந்து வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

2 கருத்துகள்:

15 ஆகஸ்ட், 2020 அன்று 7:15 PM க்கு, Blogger mahendiran sri கூறியது…

திருச்சிற்றம்பலம்

 
15 ஆகஸ்ட், 2020 அன்று 7:15 PM க்கு, Blogger mahendiran sri கூறியது…

திருச்சிற்றம்பலம்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு