வெள்ளி, 19 ஜனவரி, 2024

மெய்மொழி ஒழுக்க நெறிகள்!

*மெய்மொழி ஒழுக்க நெறிகள்!*

*மனிதகுலம் பெற வேண்டிய நான்கு வகையான புருஷார்த்தங்கள்!*

*அவையாவன:?*

1,சாகாத கல்வி கற்றல்,
2,தத்துவங்களை நிக்கிரகம் செய்தல்,
3,ஏமசித்திபெறுதல், 
4,கடவுளின் நிலையறிந்து அம்மயமாகுதல்  
 *இந்நான்கையும் பூரணமாக அடைதல் வேண்டும்.*

*நான்கு வகை ஒழுக்கம்!*

 1. இந்திரிய ஒழுக்கத்தை கடைபிடித்தலே  சாகாக்கல்வி கற்பதாகும் 
2. கரண ஒழுக்கத்தை கடைபிடித்தலே தத்துவங்களை நிக்கிரகம் செய்வதாகும், 
3. ஜீவ ஒழுக்கத்தை கடைப்பிடித்தலே ஏமசித்தி பெறுவதாகும், 4. ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடித்தலே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.

1. இந்திரிய ஒழுக்கம் என்பது யாதெனில்?

*இந்திரிய ஒழுக்கம் என்பது!
நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் *ஞானேந்திரிய ஒழுக்கமும்;*

இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல், மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் *கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.*

*கரண ஒழுக்கம் என்பது !*

*சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் மனத்தை நிறுத்துதல்,*

*பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.*

*ஜீவ ஒழுக்கம் என்பது!*

*எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.*

*ஆன்ம ஒழுக்கம் என்பது !*

*எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.*

*இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்* 

*ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா.*

*ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும்.* அன்றியும்-

இவ் வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று, *இடந் தனித்திருத்தல், இச்சையின்றி நுகர்தல், தெய்வம் பராவல், பிறவுயிர்க்கிரங்கல், பெருங்குணம் பற்றல், பாடிப்பணிதல், பத்தி செய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிப்பழகி இருத்தல் வேண்டும்.* 

அன்றியும்-

*சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்* *அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம்*

*தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும்,வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்கானுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம்.* 

*ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி*, *அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும்,*
*அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும்.* 

அன்றியும்-

*உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், பொதுப்பட நல்லறிவு, கடவுள் பத்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று,*
 *உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலியவாகக் குறித்த நற்செய்கைகளையும் உள்ளபடி பெற்று, சித்திவளாகம் என்னும் இம்மஹா சந்நிதானத்திற்றானே தரிக்கப்பெறவும்;*

*உலகமுகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்; நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய்,* 

*எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித் தருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம்புனைதல் முதலிய திருப்பணியினிடம் நமது கரணேந்திரியங்களை விடுத்துக் குதூகலத்துடன் விந்துவிளக்கம் நாதஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்;* 

*ஆண்டவனாரது அருளற்புத ஞானசித்தத் திருமேனியின் மங்கலத் திருக்கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங்குளிர ஆனந்தக் கண்­ர்கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெறும் பெரும் புண்ணிய முடையவர்களாய் எதிர்படவாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்:*

*நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவுவந்தகால முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் -*

*வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தி னுள்ளே - பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.*

*இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்.
இங்ஙனம் நமது ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலையிலக்கான பொய்யாப் பெருமொழி* யென்னும் *கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த மந்திரத் திருவருண் மெய்ம்மொழிகளின் சுருக்கம்.*

*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை !*

*சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்களே மரணத்தை வெல்லும் தகுதி பெற்றவரகளாவார்கள்,அவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்.*

தொடரும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு