ஜீவகாருண்யம் என்றால் யாதெனில்?
*ஜீவகாருண்யம் என்றால் என்ன?*
*அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு !*
*உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள்இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம இன்ப லாபத்தை காலம் உள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்!*
*ஜீவகாருண்யம் என்பது மனிதர்களுக்கு மட்டும் உணவு அளிப்பது அன்று*
*வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனிக்க வேண்டும்!*
*ஜீவகாருண்யம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது !*
*சீவகாருணிய ஒழுக்கத்தில் முக்கியமாக எல்லா மனிதர்களுக்கும் பொதுவில் பசியினால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்து ஆகாரத்தினால் திருப்தி இன்பத்தை உண்டுபண்ண வேண்டு மென்றும்,*
*பசியைப்போல் வேறு வகையினால் சீவகொலை நேரிடுவதானால் அந்தச் சீவகொலையைத் தம்மாற் கூடிய வரையில் எவ்விதத்திலாயினும் தடை செய்து உயிர் பெறுவித்துச் சந்தோஷ’ப்பிக்க வேண்டுமென்றும், பிணி பயம் முதலிய மற்ற ஏதுக்களால் சீவர்களுக்குத் துன்பம் நேரிடில் அத்துன்பங்கள் தங்களால் நீக்கத்தக்கவை களாகில் நீக்கவேண்டுமென்றும்,*
*மனித ஜீவர்கள் தவிர மற்ற ஜீவர்களுக்கும் உபகாரம் செய்ய வேண்டும்*
*மிருகம் பறவை ஊர்வன தாவரம் முதலியன சீவர்களிடத்துப் பயத்தினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந் துன்பத்தையும் எவ்விதத்தும் நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும், அவற்றுள் துஷ்ட சீவர்களிடத்தும் சிறிது பயத்தினால் வருந் துன்பம் மாத்திரமே யல்லது கொலையினால் வருந்துன்பங்களைச் செய்யப்படாதென்றும்,*
*இவ்வகை முழுதும் சீவ காருணியமேயாதலால் எல்லா உயிர்களிடத்தும் சீவ காருணியம் வேண்டுமென்று கடவுளால் ஆணை செய்ததென் றறியவேண்டும்*
*உயிர்க்கொலை ஜீவகாருண்யம் அல்ல !*
*ஒரு சீவனைக் கொன்று ஒரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கமே யல்லவென்றும், கடவுள் சம்மதமும் அல்லவென்றும், இவைகட்கு முழு விரோதமென்றும் அறியவேண்டும்.*
*எல்லா ஜீவன்களிடத்தும். கடவுள் உள் ஒளியாக விளங்குகின்றார்!*
*எல்லாச் சீவர்களும் இயற்கையுண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கின்றபடியாலும், கடவுள் இயற்கை விளக்கம் மாறுபடும் போது சீவத் தன்மை இல்லாதபடியாலும், கடவுளியற்கை விளக்கமும் ஜீவனியற்கை விளக்கமும் ஒன்றோடொன்று மாறுபடாதாகலாலும், கடவுளியற்கை விளக்கமுஞ் சீவன் இயற்கைவிளக்கமும் அந்தந்தத் தேகங்களினும் விளங்குகின்ற படியாலும்*,
*ஒரு சீவனை வதைத்து அதனால் மற்றொரு சீவனுக்குப் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கத்திற்கு முழு விரோதமென்றே அறியவேண்டும்.*
*எல்லா ஆன்மாக்களும் ஒரேத் தன்மை உடையது எல்லா உயிர்களும் ஒரே தன்மை உடையது, உடம்புகள் மட்டும் வெவ்வேறு வடிவம் வெவ்வேறு வண்ணம் வெவ்வேறு உருவம் மாறுபடுகின்றது.*
*வள்ளலார் பாடல்!*
வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
மன்னிய உண்மை ஒன்றென்றே
எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
திறையும்வே றெண்ணிய துண்டோ
அண்ணல் நின் பாதம் அறியநான் அறியேன்
அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
தெளிவித்துக் காப்பதுன் கடனே.!
*மேலே கண்ட பாடலின் வாயிலாகத் தெரியப்படுத்துகின்றார்*
*அருள் எவ்வாறு கிடைக்கும்!*
*வள்ளலார் பாடல்!*
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.!
*எல்லா உயிர்களையும் எந்த பேதமும் இல்லாமல் தம் உயிர்போல் பாவிக்கும் தன்மையை வரவைத்துக் கொள்ள வேண்டும்,எல்லா ஆன்மாக்களும் சகோதர உரிமைகொண்ட ஒரே தன்மை உடையது என்று அறிந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்து பேதம் இல்லாமல் நேசிக்க வேண்டும்*
*அவ்வாறு நேசிக்கின்றவர் எவரோ அவர் உள்ளத்தில் நடம் புரிகின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்/ அந்த உண்மையின் உளவு தெரிந்தவரே! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி, மரணத்தை வென்று சுத்த பிரணவ ஞான தேகத்தை பெற்று வாழ்வாங்கு வாழும் தகுதிப் பெற்றவர்களாவார்கள்.*
தொடரும்...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு