வியாழன், 22 ஜூன், 2023

ஆளுநர் ஆர் என் ரவி பேசியதற்கு பதில் !!

 வடலூரில் நேற்று 21-06-2023 மாலை வள்ளலார் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள்  “பத்தாயிரம் ஆண்டுகள் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று பேசி இருக்கிறார். 


ஆளுநரின் இந்த பேச்சால்  அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. வள்ளலாரின் கொள்கைக்கு நேர் எதிர் கருத்துடைய சனாதனவாதி இப்படிதான் பொய்யையும் புரட்டையும் பேசுவார்.
 
அதில் வள்ளலார் உச்ச நட்சத்திரம் என்று சொல்லுவது வள்ளலாரை ஆரிய கருத்தான சனாதனத்திற்குள் அடக்கும் சதி கருத்தாகும். அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிடும் ஆளுநரின் பேச்சு கண்டிக்கத்தக்கது. வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறிக்கு எதிரானது.

சனாதனம் என்பது மனிதர்களிடையே பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று  நால்வகை வருண வேறுபாட்டை கற்பிப்பதும் அதை இவ்வாறு நடைமுறைபடுத்த வேண்டும் என்ற ஆதிக்க கருத்தாகும். சாதி, தீண்டாமை உள்ளிட்டகூறுகளை உள்ளடக்கியதாகும். 

வர்ணாசிரமத்தை பின்பற்றுங்கள், சாதி தீண்டாமையை கடைப்பிடியுங்கள் என்று வள்ளலார் எங்கேனும் குறிப்பிட்டுள்ளாரா? 

வள்ளலார் அருளிய திருவருட்பா, உரைநடைப்பகுதி, திருமுகங்கள் (கடிதங்கள்) உள்ளிட்டவையிலிருந்து எங்கெனும் ஒரு வரியை காட்ட முடியுமா? காட்ட இயலாது.

ஆனால் வர்ணாசிரமம், ஆகமம், புராணங்கள், சாதி, மதம், சமயம் போன்றவற்றை கண்டிக்கின்ற திருவருட்பா ஆறாம் திருமுறை பாடல்கள் ஏராளம் ஏராளம். அதே போல் வள்ளலார் எழுதிய உரை நடை பகுதியிலும் ஏராளம் இருக்கின்றது.

வள்ளலார் ஆரம்பத்தில் சைவ சமயத்தை பின்பற்றிய காலத்திலும்கூட “மதம் என்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றே பாடினார்.

அதன் பிறகு சமய கருத்துகளிலிருந்து விலகினார். உருவ வழிபாட்டை மறுத்து சோதி வழிபாட்டை வலியுறுத்தினார்.

 1865-ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிறுவி சாதி, மதம், சமயம் போன்ற எவ்வித ஏற்றத்தாழ்வில்லா ”சமத்துவ ஆன்மிகமான சன்மார்க்க நெறி” நிறுவி செயல்படுத்தியவர் வள்ளலார்.

 வள்ளலார் 19-ம் நூற்றாண்டில் ”சாதியும் மதமும் சமயமும் பொய்” என்று முழங்கியவர். செயல்பட்டவர்.

இதற்கு வள்ளலார் இயற்றிய திருவருட்பா, உரை நடைப்பகுதிகளே சான்றுகள்

         வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
          வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
          சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
          என்ன பயனோ இவை. (5516)

மேற்கண்ட பாடலில் வேதம் என்றும் ஆகமம் என்றும் வீணே வாதம் புரிகின்றீர்கள்; அவற்றின் விளைபயனை நீங்கள் அறிய மாட்டீர்கள்; அவை பொய்யாகச் சொல்லப்பட்டனவே அன்றி உண்மையை வெளிப்படையாகத் தோன்றும்படி உரைக்கவில்லை; ஆகவே அவற்றால் ஒரு பயனுமில்லை என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே'' (5566)

சாதி, மதம், சமயம், சாத்திரம், கோத்திரம் உள்ளிட்ட தீயவற்றில் உழன்று உழன்று அழியாதீர்கள் என்கிறார் வள்ளலார்.

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே (4174)

இப்பாடலில்  நால்வருணம், ஆசிரமம் (பிரமச்சரியம், கிருகத்தம், வானப் பிரகத்தம், சந்நியாசம்) ஆசாரம் உள்ளிட்டவையில் கூறப்பட்டவையெல்லாம் பிள்ளை விளையாட்டு. பிறர் மேல் கூறப்படும், வருண வகைகளை உடம்பின் தோல் வருணம் கொண்டு அறிகின்றவர்கள் யாருமில்லை; எனவே இவற்றில் மயங்காமல் நீ விழித்துப் பார்ப்பாயாக என இறைவனே தனக்கு சொல்லி அருளினான் என்று திருவருட்பாவில் பதிவுச்செய்துள்ளார். 

மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணாச் சிரமம் எனுமயக்கமும் சாய்ந்தது (4503)
மதம் சமயங்களின் பெயரால் நடத்தப்படும் தீய செயல்களையும் நடைமுறைகளையும் மனிதர்களிடையே சாதி, தீண்டாமை பிரிவினைகளை ஏற்படுத்தும் வர்ணாசிரமத்தை பொய் என்கிறார்.

இப்படி நூற்றுக்கணக்கான பாடல்கள் திருவருட்பா ஆறாம் திருமுறையில் இருக்கின்றது.

வர்ணம், ஆசிரமம், ஆசாரம், சாத்திரம் இதெல்லாம் குப்பை என்கிறார் வள்ளலார் இதை ஆளுநர் ஏற்பாரா?

மேலும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். (சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்)

இப்படி சாதி, சமயங்கள், மார்க்கங்கள், வருணம், ஆசிரமம் போன்றவை சுத்த சன்மார்க்கத்தின் தடைகள் என்று அறிவித்த வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று ஆளுநர் கூறுவது தெரியாமல் அல்ல தெரிந்தே சூழ்ச்சியாக சொன்னது.
 சுத்த சன்மார்க்க நெறிக்கு எதிரானது. இவை கண்டிக்கத்தக்கது. 

சனதானத்திற்கு நேர் எதிராக எல்லா உயிர்களுக்கும் சமம் என்ற கொள்கைக்  கொண்ட ஆன்மிக மக்கள் அமைப்பாக இருப்பது சன்மார்க்க நெறியாகும், இவை சனாதனவாதிகளுக்கு பெரும் நெருடலாக இருக்கிறது.

 அவற்றை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம், இதை  சன்மார்க்க அன்பர்களும் தமிழர்களும் புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும். 

சன்மார்க்கத்தை விழுங்க முயலும் சனாதனவாதிகளின் சதியை வள்ளலாரின் சமத்துவ ஒளி கொண்டு விலக்குவோம்...!

தோழமையுடன்
வே.சுப்ரமணியசிவா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு