இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம்!
*இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம்!*
*என் மார்க்கம் இறப்பு ஒழிக்கம் சன்மார்க்கம் தானே என்று வள்ளலார் திருஅருட்பாவில் பதிவு செய்கின்றார்.*
*வள்ளலார் பாடல்!*
உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன் அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
கரணம்எலாம் கலங்கவரும் மரணமும் சம் மதமோ
சற்றும் இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.!
*வள்ளலார் தோற்றுவித்த மார்க்கம் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்னும் தனி மார்க்கமாகும்*
*வள்ளலார் பாடல்!*
திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித் துண்மை உரைத் தேனே.!
*இந்த மார்க்கம் சமய மதங்களை சார்ந்த சரியை,கிரியை,யோகம் சார்ந்த மார்க்கம் அல்ல ! சாகாக்கல்வியை போதிக்கும் ஞான மார்க்கமாகும்.சமய மதங்களைச் சார்ந்தவர்கள் இந்த மார்க்கத்தில் வந்து சேரலாம்,சேர்ந்து விட்டபிறகு சமய மதங்களை முற்றும் பற்று அற விட்டு விட்டு வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை மட்டும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி சொல்லி உள்ளார்*
*மரணத்தை வெல்ல எவராலும் முடியவில்லை !*
*இதுநாள் வரை மரணத்தை வெல்ல எவராலும் முடியவில்லை என்ற குற்றசாட்டு மக்கள் மத்தியில் கேள்வி கனைகளாக கேட்கப்படுகிறது.பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள்*
காரணம்!
*இங்கு உள்ளவர்கள் எவரும் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கவில்லை.சமய மதங்களை சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள், ஒன்றுகிடக்க ஒன்றை உளறிக்கொண்டே உள்ளார்கள். ஆதலால் அவர்களுக்கு அறிவு விளக்கமும், ஆன்ம விளக்கமும், அருள் விளக்கமும், கடவுள் விளக்கமும் தோன்றாமல் அறியாமை, அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளால் மறைக்கப்பட்டு இருக்கின்றது,சாதி சமய மதங்களின் கொள்கைகளை விட்டு விலகி சுத்த சன்மார்க்க கொள்கையை மட்டும் பின்பற்றினால்.அறிவு விளக்கம்,ஆன்ம விளக்கம்,அருள்விளக்கம்,கடவுள் விளக்கம் தன்னைத்தானே விளங்கும்.அப்போது பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்.*
*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்!*
*வள்ளலார் சொல்லியதை தினமும் படித்தும் கேட்டும் வருகிறோம், எவரும் பினபற்றாமல் உலக வாழ்க்கையிலே நீந்திக் கொண்டே உள்ளோம்.ஆதலால் மரணம் என்னும் பெரும்பாவி வந்து கொண்டே உள்ளன.*
*சுத்த சன்மார்கத்திற்கு உரியவர்கள்!*
*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்*!
*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.*
*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.!*
*இந்த உண்மையை அறிந்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்களால் மட்டுமே மரணத்தை வெல்லமுடியும்,*
*சுத்த சன்மார்க்க சாதனம்!*
சுத்த சன்மார்க்க சாதனம்
*சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்: பரோபகாரம், சத்விசாரம், பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது.*
*சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல். இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று ( சுத்ததேகம், பிரணவதேகம்,ஞானதேகம்) தேகங்களைப் பெற வேண்டும்.!*
*சாகாத்தலை.வேகாக்கால்,போகாப்புனல் என்பது சுத்த சன்மார்க்க சாகாக்கல்வி பயிற்சியாகும்இது சாதாரண பயிற்சி அல்ல,அதி தீவிர பெருமுயற்சியான பயிற்சி வேண்டும். அதாவது ஆன்மாவே கோடி சூரிய பிரகாச உஷ்ணம் உடையது. அந்த உஷ்ணத்தைவிட அதிக உஷ்ணத்தை உடையது அருள் உஷ்ணம்.(சுத்த உஷ்ணம்) அந்த உஷ்ணத்தை தாங்கும் அளவிற்கு உடம்பை மாற்றம் செய்ய வேண்டும்*
*இயற்கை உண்மை கடவுளின்,இயற்கை விளக்கமான அருள் பிரகாசத்தின் உஷ்ணத்தை சுத்த சன்மார்க்கிகள் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக அதாவது வேதியல் மாற்றம் போல் உருமாற்றம் செய்ய வேண்டும். அவற்றை தாங்கும் சக்தி பெற வேண்டும். அதுதான் ஒளி உடம்பு என்பதாகும். அதன் பின்புதான் இயற்கை இன்பமான கடவுள் நிலை அறிந்து ( ஞானதேகம்) அம்மயமாக மாறமுடியும் இதுவே மரணத்தை வெல்லும் நேர் வழிகளாகும்*
சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி!
சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதியநாதியா மருட்பெருஞ் ஜோதி!
சாதி சமயச் சழக்கைவிட் டேன் அருட்
சோதியைக் கண்டேனடி - அக்கச்சி அருள்
சோதியைக் கண்டேனடி.!
சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
மேதினியிற் சாகாத வித்தையைக் கற்றது
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்! அற்புதமே ! அருள் அற்புதம் அற்புதமே !
தொடரும்...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன்
*முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*
1 கருத்துகள்:
All are very good
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு