வெள்ளி, 25 நவம்பர், 2022

கண்டேன் களித்தேன் கலந்து கொண்டேன்!

 *கண்டேன் களித்தேன். கலந்து கொண்டேன்!*


*கண்களால் கடவுளைக் காணமுடியாது என்றார்கள் முன்னோர்கள்*


*கடவுளைக் காணமுடியும் என்றார் வள்ளலார்.*


*கடவுளைக் கண்டார் களித்தார் கலந்து கொண்டார் வள்ளலார்,*


*கடவுளைக் காண்பதற்கு அருள் பெறுவது ஒன்றே முக்கியம் என்கின்றார்,*


*அருள் பெறுவதற்கு உண்டான உண்மை வழியைக் கண்டுபிடித்து அதற்கான நேர்வழியைக் காட்டியவர் வள்ளலார் ஒருவரே !* 


*தன் ஆன்மாவைக் கண்டு  ஆன்மநேயத்தின் உண்மையை அதன் ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்து வாழ்பவரே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற முடியும் என்ற உண்மையை உலக மனித குலத்திற்கு தெரிவித்தவர் வள்ளலார்* 


*கடவுளின் அருளைப்பெறுவதற்கான பயிற்சியைப் பெறுவதற்காகவே  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூரில் தோற்றுவித்துள்ளார்.* 


*வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சங்கமே தலைமைச் சங்கமாகும்*


*அச் சங்கத்தின். தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே! அச் சங்கத்தை இயக்குபவர் வள்ளலார் ஒருவரே!* 


*ஆதாரம் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்!*


செத்தவர்கள் எல்லாம்  திரும்ப எழுந்துவரச் சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே 


*சுத்தசிவ சன்மார்க்க சங்கத் தலைவனே* நிற்போற்றும் என் மார்க்கம் நின் மார்க்கமே !


 மேலும் சன்மார்க்க சங்கத்தை நடத்துபவர் வள்ளலார் பாடல்!


உலகம் எல்லாம் போற்ற ஒளி வடிவனாகி இலக அருள் செய்தான் இசைந்தே திலகன் என 


*நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்* நம்பெருமான் தானே எனக்குத் தனித்து ! 


என்னும் பாடல்களிலே *தலைவர் யார்?* *நடத்துனர் யார்?* என்ற உண்மையை வெளிப்படையாக  தெரியப்படுத்தி உள்ளார் என்பதை சன்மார்க்கிகள் உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் 


*சாகாக்கல்வி!*சாகாக்கலை*


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக சாகாக்கல்வியும்,சாகாக்கலையும் (பயிற்சி) கற்றுக் கொள்வதே முக்கியமானதாகும், கற்றுக் கொடுப்பவரே வள்ளலார்*


*திருஅருட்பா ஆறாம் திருமுறை!*


*பயிற்சியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளை பின்பற்றும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளவே திருஅருட்பா ஆறாம் திருமுறை என்னும் அருள் நூலை எழுதி ( அருள் பொக்கிஷம்) வைத்துள்ளார்* 


*சாகாக்கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுத்த சன்மார்க்கி என்று பெயர் வைத்துள்ளார்* 


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்!*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய  சாதி சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.*


*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்.* 


*அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள்.* 


*அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள். எனத் தெளிவாக பதிவு செய்துள்ளார் வள்ளலார்.*


*சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய சாதனம்!*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது; கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன் என்கிறார் வள்ளலார்"* 


*மேலே கண்ட உண்மை உணர்ந்து ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் வள்ளலார்*


*மேலும் கடவுளே சொல்லியதாகச் சொல்கிறேன் என்கின்றார். !*


*கடவுள் ஒருவர் உண்டென்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை யாண்டவர் தெரிவித்தார்.*


*மேலே கண்ட உண்மையை உணர்ந்து வாழ்க்கையில்கடைபிடிப்பவர்களே சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றும் தகுதி உடைவர்கள் ஆவார்கள்* 


வள்ளலார் பாடல் !


அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்


எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்


செப்பாத மேனிலை மேல் *சுத்தசிவ மார்க்கம்*

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்


தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்

தலைவ நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.!


*சுத்த சன்மார்க்கம் என்பது பக்தி மார்க்கம் அல்ல !*


*சரியை கிரியை  மார்க்கத்தை தாண்டிய ஞானயோக மார்க்கத்தில் உள்ளவர்களுக்காக சொல்லியதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும் என்கின்றார்*.


வள்ளலார் பாடல் !


ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்

பாகமாம் பர வெளிநடம் பரவுவீர் உலகீர்


மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்

*யோக மாந்தர்க்குக் காலம் உண் டாகவே உரைத்தேன்.!*


மேலும் ஒரு பாடல்! 


வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது

மனமிக மயங்கிஒருநாள்

மண்ணிற் கிடந்து அருளை உன்னி உல கியலினை

மறந்து துயில் கின்றபோது


நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்து என்னை

நன்றுற எழுப்பி மகனே

*நல்யோகம்* *ஞானம் எனி னும் புரிதல் இன்றிநீ*

*நலிதல் அழகோ* எழுந்தே


ஈட்டுக நின் எண்ணம் பலிக்க *அருள் அமுதம்* 

உண்டு

இன்புறுக என்றகுருவே

என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்த பே

ரின்பமே என்செல்வமே


வேட்டவை அளிக்கின்ற நிதியமே *சாகாத*

*வித்தையில்* விளைந்தசுகமே

*மெய்ஞ்ஞான* நிலைநின்ற *விஞ்ஞான* கலர்உளே

மேவுநட ராஜபதியே.!


**மேலே கண்ட பாடல்களின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஞான சரியை ,ஞானகிரியை,ஞான யோகம்,ஞானத்தில் ஞானம் என்னும் சாகாக்கல்வியைக் கற்றுக் கொள்வதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்* 


*எனவேதான் இறுதியாக மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் புறத்தில், வள்ளலார் சொல்லியது, ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து..*


*இதைத். தடைபடாது ஆராதியுங்கள்  இந்தக்கதவைச் சாத்திவிடப் போகிறேன்,* 


*இனி கொஞ்சம் காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால்,உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல்*


*நினைந்து நினைந்து என்னும் தொடக்கமுடைய (ஞானசரியை) 28 பாசுரம் அடங்கிய பாடல்களில் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள்.*


*நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன்,இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று திருவார்த்தைகளால் அருளியுள்ளார்கள்.* 


*நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறேன்,பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்,ஒருகால் பார்க்க  நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் ,என்னைக் காட்டிக்கொடார்* என்று தெளிவாகச் சொல்லி உள்ளார்.


*வள்ளலார் இப்போது எங்கு இருக்கின்றார்? என்ன ரூபமாக இருக்கின்றார்? என்ன செய்து கொண்டு இருக்கின்றார்? என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்...*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

**9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு