அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

சனி, 5 நவம்பர், 2022

சாதி சமய சழக்கை விட்டேன்!

 *சாதி சமய சழக்கை விட்டேன்!* 


பொறுமையாக படிக்கவும்!


*சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் !*


*சாதியும் மதமும் சமயமும் பொய்*! 


*சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் !*


*சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி!*


*எனபன போன்ற பலநூறு பாடல்களிலும் உரைநடைப் பகுதிகளும் சாதி சமயம் மதங்கள் யாவும் பொய் என்றும்  அவற்றைச் சார்ந்த தெய்வங்களும்  அத் தெய்வங்கள் பெயரால் செய்யப்படுகின்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் யாவும் சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரானவை தடையானவை என்றும் தெளிவாக சொல்லியும் எழுதியும் வைத்துள்ளார் வள்ளல்பெருமான்* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுவதற்கு தடையாக இருப்பதே சாதி சமயம் மதம் போன்றவை என்பதை மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார்*


*சன்மார்க்கிகள்  தினமும் வழிப்பாட்டில் செய்யும் விண்ணப்பம்!*


*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!*


*இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,* 


*வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.*


*எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!*


*தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!*


*என்று தினமும் வழிப்பாட்டில் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.* அவற்றின் உண்மை என்னவென்று அறிவைக் கொண்டு அறிந்து விலகி விட்டோமா ?


*மேலும் சொல்கின்றார்!*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்!*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்* 


*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்.* 


*அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.* 


என்றும் எளிய தமிழில் புரியும்படி சொல்லி உள்ளார்.


மேலும்...


*சுத்த சன்மார்க்க சாதனம்!*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது;* 


*கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்"*


*சன்மார்க்க சாதனம்!*


*சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்*. 


*இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.!*


மேலும்...


*நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*


*ஏனென்றால்,? அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*


*இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.* 


*அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*


மேலும்....


*இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.** 


*இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்*?


*உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்.? "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** *என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.* 


*உண்மைக் கடவுள் யார்? என்பதை தெரிந்து கொள்ளாமல் என்னை தெய்வம் என்று சுற்றுகிறார்கள்!*


*சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள்.* 


*ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. "தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள்.* 


*ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன்.*


*இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் - சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது -* 


*அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்*


*வள்ளலார் இவ்வளவு தெளிவாக  சொல்லியும் சன்மார்க்கி என்று சொல்லிக் கொள்ளும் அன்பர்கள் சாதி சமய மதங்களை விட்டு வெளியே வராமல் சாதி சமய மதம் சாத்திரம் போன்ற குப்பையிலே உழன்று கொண்டு. இருப்பது சுத்த சன்மார்க்கத்திற்கு அழகல்ல என்கிறார் வள்ளலார்.*


வள்ளலார் பாடல்!


சாதியும் மதமும் சமயமும் சாத்திரக் குப்பையும் தணந்தேன்


நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்


ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா *அருட்பெருஞ்ஜோதி* என்று அறிந்தேன்


ஓதிய அனைத்தையும் நீ அறிந்தது நான் உரைப்பது என் அடிக்கடி உனக்கே ! 


மேலும் பாடல்!


சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே


ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்

ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும் நிறை ஒளியே


*ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க* *எனைத்தான்*

*ஓதாமல் உணர்ந்துணர்வாம்* *உருவுறச்செய் உறவே*


சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே!   


*இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்களிலும் உரைநடைப் பகுதிகளிலும் தெரியப்படுத்துகின்றார். நாம்தான் அறிவாலே அறிந்து கொள்ள வேண்டும்*


*வள்ளல் பெருமானை எல்லோருக்கும் பிடிக்கும் அதுதான் அவர் தனித்தன்மை*


*சமய சன்மார்க்கியா ?*

*மத சன்மார்க்கியா ?*

*சுத்த சன்மார்க்கியா ?*


*என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்* 


வள்ளலார் பாடல்!


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை


எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் *சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்*


*பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்*

*பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.!*


*எல்லா பற்றுகளையும் விட்டுவிட்ட சுத்த சன்மார்க்கிகளால்தான் அருளைப் பெற முடியும் மரணத்தை வெல்ல முடியும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக