அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 5 அக்டோபர், 2021

நேர் வழியில் செல்வோம் உண்மை அறிவோம்!

 *நேர் வழியில் செல்வோம் உண்மை அறிவோம்!* 


*துறையிது வழியிது* *துணிவிது* *நீசெயும்முறையிது* *வெனவே மொழிந்த மெய்த் துணையே!* ( அகவல்) 


*நாம் செல்ல வேண்டிய துறையை தெரிந்துகொண்டு அங்கு செல்வதற்குண்டான நேர்வழியைக் கண்டு கொண்டு தவிர்க்க வேண்டியதை தவிர்த்து பயம் இல்லாமல் துணிச்சலுடன் சென்றால் மட்டுமே பெறவேண்டியதை பெறமுடியும் கிடைக்க வேண்டியது திருவருளாலே கண்டிப்பாய் கிடைக்கும்.*


நாம் செய்யும் ஒவ்வொரு சொல்லும்  செயலும் எண்ணமும் பயனுமும் வாழ்க்கை முறையும் நேர்மறையாக இருக்க வேண்டும் அதாவது தடம் மாறாமல் நேர்வழியில் சென்றால் மட்டுமே வெற்றி நிச்சயம் கிட்டும். 


*வள்ளலார் ஆரம்ப காலத்தில் வாழையடி வாழைஎன வந்த திருக்கூட்டாத்தார்கள் சொல்லிய  வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து பார்த்தார் வள்ளலார்.*

 *வள்ளலாருக்குமுன்னாடி தோன்றிய அருளாளர்கள் வாழ்ந்து காட்டிய ஆன்மீக சிந்தனையாளர்கள் வழியில் பயணம் செய்தார் முழுமையான  இறை அருள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தார்*. 


*அவர்கள் சென்ற பாதையில் செல்கின்ற தருணம் தத்துவங்களைத்தான் காணமுடிந்த்து*

*இயற்கை உண்மை கடவுளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை காணமுடியவில்லை. முன்னாடி சென்ற ஆன்மீக அருளாளர்கள் பதிவு செய்த கொள்கைகளும் அவர்கள் சென்ற  பாதைகளும் தவறானது என்பதை வள்ளலார் அறிந்து கொண்டார்* 


*முன்னாடி சென்ற ஆன்மீகவாதிகள் சொல்வதையும் அவர்கள் சென்ற பாதையில் சென்றால்  சிறு ஒளி உண்டாகும் அதனால் பல்லிளித்து இருமாந்து கெடநேரிடும் என்பதை  அறிந்த தெரிந்த வள்ளலார் புதிய நேர்பாதையை எனக்கு காட்ட வேண்டும் என்று இறைவனிடமே முறையிட்டார் அழுதார் கெஞ்சினார் புலம்பினார் வேண்டினார் உணவு உண்ணாமல் உறக்கம் கொள்ளாமல் இரவு பகலாக இடைவிடாது ஆன்மாவைத்  தொடர்பு கொண்டார்.விடை கிடைத்தது பலன் கிடைத்தது*


*வள்ளலார் பாடல்!*


தேடியதுண்டு நினது உரு உண்மை தெளிந்திடச் சிறிது நின்னுடனே


ஊடியதுண்டு பிறர்தமை அடுத்தே உரைத்ததும் உவந்த்தும் உண்டோ


ஆடிய பாதம் அறியநான் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி


கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக் கூறவும் கூசும் என் நாவே! 


*வள்ளலார் பாடல்!*


சரியை ஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்


புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்றறியேன்


பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்


உறியதோர் 

இச்சை எனக்கிலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்.! 


*உலகியலில் ஆன்மீகவாதிகளால் பின்பற்றும் ஆன்மீகப் பாதைகளான சரியை கிரியை யோகம் ஞானம் போன்ற கலைகளில் எனக்கு ஆசையில்லை*

அவற்றால் கிடைக்கும். முக்தியிலும் ஆசையில்லை என்கிறார்.


மேலும் சொல்லுகிறார் !


*இறக்கவும் ஆசையில்லை* இப்படி நான் இருக்கவும் ஆசையில்லை இன்றினி நான்


*பிறக்கவும் ஆசை இல்லை* உலகெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே


சிறக்கவும் ஆசை இல்லை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்றில்லை


*துறக்கவும் ஆசைஇல்லை துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன்றிலையே* ! 


இப்படி உலகியல் வாழ்வியலில் எந்த ஒரு ஆசையும் இல்லாமல் வாழ்ந்த வள்ளல் பெருமானுக்கு எதன் மீதுதான் ஆசை கொண்டார் என்பதைப் பார்ப்போம்.


வள்ளலார் பாடல் !


எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணிநல் இன்புறச் செயவும்


அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை அகற்றியே அச்சம் நீக் கிடவும்


செவ்வையுற் றுனது திருப்பதம் தபாடிச் சிவசிவ என்றுகூத் தாடி


ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.! 


*சுயநலம் இல்லாமல் எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு என்பதை அறிந்து அவ் வுயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்ற வேண்டும் என்ற ஆன்மநேயத்துடன் பொதுநல நோக்கத்தோடு பொது உரிமையோடு வாழும் வாழ்க்கையே வேண்டும் என ஆண்டவரிடம் கேட்கிறார்.இதுவே வள்ளலாரின் தனிசிறப்பாகும்* 


*மேலும் உடற்பிணி உயிர்பிணி மரணப்பெரும்பிணி வராமல். என்னைக் காப்பாற்ற வேண்டும் என கேட்கிறார் வள்ளலார்*


*உண்மை ஒழுக்கம் தயவு கருணை ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் இயற்கை உண்மை கடவுளிடம் விண்ணப்பம் வைத்து முறையிட்டு இடைவிடாது வேண்டி விண்ணப்பம் செய்த வள்ளல்பெருமானை கருணையே வடிவமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கைவிடுவாரா*?


*நீ நினைத்த நன்மை எல்லாம் யாம் அறிந்தோம் நினையே நேர்காண  வந்தனம் என்று வள்ளலார் முன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தோன்றுகிறார்*


தோன்றியது மட்டுமல்ல  வள்ளலார் சொல்லுவதை கேளுங்கள்.


*தந்தேகம் எனக்கு  அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார்* 


*எந்தேகம் அதிற்புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்திறையவர் காலையிலே*


*வந்தே இங்கு அமரந்து அருள்வார் ஆதலினால் விரைந்து மாளிகையை அலங்கரித்து வைத்திடு இதற்குச்* 


*சந்தேகம் இல்லை என்றன் தனித்தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மீது சத்தியம் சத்தியமே* !  


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்றதால் அருள்உடம்பு என்னும் மாளிகையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நுழைந்து நிறைந்து பேரின்பசித்தி பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்*.

*இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.* 


*ஒவ்வொரு மனிததேகம் எடுத்துள்ள உயர்ந்த அறிவுள்ள ஆன்மாக்களும் வள்ளலார் காட்டிய நேர் வழியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகளான ஜீவகாருண்ய ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ளும் சத்விசாரம் என்னும் நேர்வழியில் சென்றால் மட்டுமே பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம்.* 


தவறான ஆன்மீக நெறிகளில்  செல்லாமல் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க செந்நெறியில் செல்வோம்.


*வள்ளலார் பாடல்!*


பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ


புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்


தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


*பல சமயங்கள் மதங்கள் தோன்றியதாலும் அவற்றின் தவறான கடவுள் கொள்கைகளாலும்  மக்களை இருளில் மூழ்கடித்து விட்டார்கள்.  இருள் சூழ்ந்த மக்களால் ஒழுக்க நெறிகளை கடைபிடித்து அருளைப்பெற முடியாமல் அழிந்து கொண்டே உள்ளார்கள்*


*இனி எதற்கும் கவலைப்பட வேண்டாம் எல்லோருக்கும் பொதுவான அருள்பெறும் வாய்ப்புள்ள  செந்நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வள்ளலார் வடலூரில் தோற்றுவித்துள்ளார்* அறிவுள்ள மனிதகுலம் அவற்றில் இணைந்து நேர்வழியில் சென்று ஒழுக்க நெறியை கடைபிடித்து சாகாக்கல்வி கற்று மரணத்தை வென்று பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்பதை மேலே

 கண்ட பாடலின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.


*சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்பார் வள்ளலார்* 


*உண்மை அறிவோம் நேர்வழி செல்வோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

9865939896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக