அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

வள்ளலார் வருவிக்க உற்ற நாள்!

 *வள்ளலார் வருவிக்க உற்ற நாள் !*


 05-10-2021 ஆம் நாள் வள்ளல்பெருமான் அவர்கள் இவ்வுலகிற்கு இறைவனால் வருவிக்க உற்ற நாளை *ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினமாக* ஒவ்வொரு ஆண்டும் உலகம் எங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. 


*உலகில் தோன்றிய ஞானிகள்  அருளாளர்கள் சித்தர்கள் மற்றும் ஆன்மீக போதகர்கள் எல்லோரும் இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று. மனிதர்களுக்கு மட்டும் நன்மை பயக்கும் வகையில் பலவிதமான ஆன்மீக போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் எண்ணம் சொல் செயல் வழியாக அவரவர்களுக்கு தெரிந்த வகையில் தெரிவித்துள்ளார்கள். ஆனால் வள்ளலார் எல்லா உயிர்களும் இன்பம் அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்* 


*வள்ளலார் பாடல்!*


வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே


வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்


நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்


ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.! 


என்னும் பாடல்வாயிலாக  *தாவரம் முதல் மனிதர்கள்வரை  துன்பப் படுவதை சகிக்க முடியாமல் வாடினேன் இளைத்தேன் நொந்தேன் நடுக்குற்றேன் என்கிறார்* *அதுதான்  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்*  *அதுவே வள்ளலாரின் தனிசிறப்பாகும்*


*வள்ளலார் பாடல்*


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்


சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


*உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே*.!


மேலே கண்ட பாடல் வாயிலாக வள்ளலார் தன்னை இறைவன் எதற்காக வருவிக்க உற்றார் என்ற விபரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.


*வள்ளலார் வருவிக்க உற்ற நாளை சன்மார்க்கிகளாகிய நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழ்கிறோம்* 

*அது அவசியமானதுதான்* *வள்ளலார்  சொல்லியவாறு வாழ்க்கையில் நாம் கடைபிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் கைமாறாகும்*


*ஆன்மீகம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக கடவுளைப் பற்றியும் வழிபாடுபற்றியும் கடவுளிடத்தில் இருந்து அருளைப் பெறுவது பற்றியும் பேசிக் கொண்டே வருகிறது.மேலும் சிற்றின்பம் பற்றியும் பேரின்பம் பற்றியும் பேசாத அருளாளர்களே இல்லை என சொல்லலாம்*


*உயர்ந்த அறிவுள்ள மனிதபிறப்பு !*


*அருளைப்பெற்று என்றும் அழியாத  பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வு அடைய வேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனிதபிறப்பு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஆன்மாவிற்கு கொடுக்கப்பட்டு உள்ளது* 


*இதுவரையில் மனித இனம் பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழும் வழிதெரியாமால் அகம் கருத்து புறம் வெளுத்து பிறந்து பிறந்து இறந்து இறந்து  வாழ்ந்து   அழிந்து பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளார்கள்* 


பிறப்பு இறப்பு அற்ற அருள் உடம்பை (ஆன்மதேகம்) பெறுவதே வள்ளலார் காட்டிய புதிய ஆன்மீகமாகும்.


*மனித குலம் பரத்தில் சென்று அருளைப்பெற்று வாழ்வது சரியான முறையான வழிஅல்ல*. *இகத்தே  அதாவது இந்த பஞ்ச பூத உலகமாகிய இவ்வுலகிலே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு வகையான வாழ்க்கை முறைகளில் தடம் மாறாமல் வாழ்ந்து பின்பு உலகப் பற்று அற்று இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே இகத்தே பரத்தைப் பெற்று வாழும் வாழ்க்கையாகும் என்கிறார் வள்ளலார்*


*வள்ளலார் பாடல் !* 


இறந்தவரை எடுத்திடும் போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன் அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


*சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே* *பிணிமூப்பு மரணம்*

*சேராமல்* *தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே*


*பிறந்தபிறப் பு இதில் தானே* *நித்திய மெய் வாழ்வு*

*பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே*.! 


*மேலே கண்ட பாடலில் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.இறந்துவிட்ட பிறகு சொர்க்கம் நரகம் கைலாயம் வைகுண்டம் பரலோகம் சத்தியலோகம் சிவலோகம் மோட்சம் என்பது எல்லாம் அடையமுடியாது*.

*உடல் உயிரை விட்டு ஆன்மா பிரிந்தால்( இறந்தால்) அடுத்து நன்மை தீமைக்குத் தகுந்தாற்போல் தீவினை நல்வினைக்குத் தகுந்தாற்போல் எதாவது ஒருபிறப்பு மீண்டும் கட்டாயம் ஆன்மாவிற்கு கொடுக்கப்படும் என்பது ஆண்டவர் ஆணையாகும்.*அதுவே நியதியாகும் *ஆதலால் இறந்தவரை எடுத்திடும் போது சத்தம் போட்டு புலம்பி அழுவது அழகல்ல. பிணி மூப்பு மரணம் வராமல் வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்வதே இறவாத பெருவரம் பெறும் வாழ்க்கையாகும் என்கிறார் வள்ளலார்*


இதுநாள் வரையில் மக்கள் தெரிந்து கொள்ளாத தெரிந்து கொள்ள முடியாத  உண்மையைத் தெரிந்து கொள்ளவே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* 1872 ஆம் ஆண்டு வடலூரில்  புதிப்பித்து தோற்றுவிக்கிறார்.அச்சங்கத்தின் வாயிலாக *சாகாக்கல்வியை* கற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்கிறார்.


*உலக வரலாற்றில் சாகாக்கல்வி கற்க சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூரில் தோற்றுவித்தவர் வள்ளலார் ஒருவரே !*


*அக்கல்வியை கற்று தேர்ச்சி பெறுவதற்கு  *இந்திரிய ஒழுக்கம்*

*கரண ஒழுக்கம்*

*ஜீவ ஒழுக்கம்*

*ஆன்ம ஒழுக்கம்*

*என நான்கு ஒழுக்கங்கள் மிகவும் அவசியமாகும் என்று சொன்னவர் வள்ளலார் ஒருவரே*


*ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று புதுமைப் புரட்சி செய்தவர் வள்ளலார் ஒருவரே* 


*இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே என்கின்ற உண்மையை வெளிச்சம் போட்டு உலகிற்கு சொன்னவர் வள்ளலார் ஒருவரே*! 


ஒருமை என்பது கடவுள் ஒரேவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற கடவுளின் உண்மை நிலை அறிந்து அதன் மயமாக மாறவேண்டும் என்று சொன்னவர் வள்ளலார். 


*தயவு என்னும் கருணைதான் என்னை தூக்கிவிட்டது எனவும் அந்த தயவு வருவதற்கு ஒருமை வரவேண்டும்* *ஒருமை வந்தால் தயவு தானே வரும்.தயவு வந்தால் ஏறாநிலைமிசை ஏறலாம் என்று புதிய கோணத்தில் மக்களுக்கு போதித்தவர் வள்ளலார்*


*ஜீவ காருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர் வள்ளலார் ஒருவரே* 


*கடவுளும் கருணையும் ஒன்றே என்றவர்*


*ஒரு கடவுளைத் தொடர்பு கொள்வதே சிறந்த ஒழுக்கமாகும் என்றவர்*


*அந்த ஒழுக்கத்தை கடைபிடிக்க லகுவான இரண்டு வழிகளையும்  சொல்லி  அவற்றையும் வடலூரில் தோற்றுவிக்கிறார்*.


*ஒன்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை.ஒன்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்பதாகும்* 


*சத்திய தருமச்சாலை வழியாக சென்றால் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் கைகூடும். எனவேதான் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கின்றார்.*

அதுவே  அருளைப்பெறும் வழியாகும்.


*அருள் வழங்கும் இடம்*


அடுத்து  ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கத்தால் இயற்கை உண்மை கடவுள் விளங்கும் இடமான சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையால் அருள் வழங்கும் இடமாகவும் அருளைப்பெறும் இடமாகவும் சத்திய ஞானசபையை வடலூரில் தோற்றுவித்துள்ளார்.


அருளைப் பெறுவதற்கு உயிர் இரக்கமான *பரோபகாரம்* *சத்விசாரம்* என்னும் இரண்டு வழிகளே போதும் என்கின்றார்


*எனவே நாம் பெறவேண்டியது அருள் அருள் அருள் என்பது மிகவும் முக்கியமானதாகும்*  *பொருளை அருளாக மாற்றுவதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்*.


*வள்ளலார் வருவிக்க உற்ற நாளான அக்டோபர்  05-10-2021 ஆம் நாளான அன்று அன்னதானம் வழிபாடுசெய்து விழா எடுப்பதுடன் சாகாக்கல்வி கற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி மரணம் இல்லாப்பெருவாழ்வு வாழ்வதற்கு முயற்சி செய்வதே ஒவ்வொரு சன்மார்க்கிகளின் முக்கிய விரதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். 


*வள்ளலார் பாடல்!*


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்க முடியாதே

*சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால்* அதனை


எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழி கொண்டு உலகீர்


*பற்றியபற் றனைத்தினையும் பற்றற விட்டு* *அருள்* அம்

பலப்பற்றே பற்றுமினோ எற்றும் இறவீரே*.! 


*சன்மார்க்க சங்கத்தவர் மீது நம்பிக்கை வைத்து மேலே கண்ட பாடலை பதிவு செய்கிறார் வள்ளலார்.வள்ளலாரின் நம்பிக்கையை பூர்த்தி செய்வதே சன்மார்க்கிகளின் கடமையாக ஏற்றுக்கொண்டு வள்ளலார் வருவிக்க உற்றநாளில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும்*


வள்ளலார் மக்களுக்கு சொல்லியதோடு நிறுத்தாமல் எவ்வாறு வாழ வேண்டும் என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார்.


*தன்னுடைய பூத உடம்பை அருள் உடம்பாக (ஒளிதேகம்) மாற்றிக்கொண்டு வடலூருக்கு அடுத்து நான்கு மைல் தொலைவில் உள்ள மேட்டுகுப்பம் என்னும் இடத்தில் ஸ்ரீமுக வருடம் தைமாதம் 19 ஆம் நாள் 30-01-1874 ஆம் தேதி இரவு 12 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து கொண்டார்* 


*நாமும் வள்ளலார் போல் *வாழ்வோம் வாழ்ந்து காட்டுவோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக