உண்மையான தாய் தந்தை !
*உண்மையான தாய் தந்தை !*
*வள்ளலார் பாடல்!*
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம் முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
*சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!*
*தாய் தந்தையர் எனும் இரண்டும் இல்லாமல் உயிரும் உடம்பும் தோன்றாது*
*தாய் தந்தை இணைந்தால் குழந்தை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த்தே.தாயையும் தந்தையும் படைத்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்*
அதனால்தான் தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்கிறார்.
*ஆன்மாவை அனுப்பியவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதால் தந்தையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.உயிரையும் உடம்பையும் கொடுப்பதால் தாய் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்*.
*நமது கண் கண்ட தெய்வம் மனித உருவில் உள்ள தாய் தந்தை என்பவர்களாகும்*. *நமது கண்களுக்குத் தெரியாமல் நமது தாயையும் தந்தையும் படைத்தவர் தான் உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.*
*ஒரு ஆண் உருவத்தையும் ஒரு பெண் உருவத்தையும் படைத்தால் தான் ஆன்மா வேறு ஒரு உருவத்தை உருவாக்கமுடியும்.இவை எண்ணிப்பார்க்க முடியாத அதிசயம் அற்புதம் எவராலும் செய்ய முடியாத அற்புத செயலாகும். இதுதான் அருள் அற்புத செயலாகும்*
*நாம் தாய் தந்தை என்று சொல்லுவது பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்ட ஓர் உபகார கருவிகளேயாகும்.அதாவது உடம்பு என்னும் வீடாகும். உபகார கருவிகள் உண்மையான தாய்தந்தை ஆகாது.*
*ஒரு குழந்தை உண்டாக ஆண் சுக்கிலம் பெண் சுக்கிலம் என இரண்டுவிதமான வீரியமான உணர்ச்சியுள்ள சுக்கிலம் தேவைப்படுகிறது*.
*சுக்கிலத்தால் உண்டாகும் உயிர் உடம்பு என்னும் பொருள்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆன்மாவை விட்டு விலகிவிடும்*.
*ஆதலால் அவை நிரந்தரம் இல்லை. அந்த சுக்கிலம் உணவினால் உண்டாகும் வீரியமுள்ள உணர்ச்சியைத் தூண்டும் திரவமாகும்* *சுக்கிலத்தால் உண்டாகும் எந்த பொருளும் நிலைபெறாது.*
*அழிஉடம்பை அழியாமை ஆக்கும் வகையை கண்டுபிடித்தவர் வள்ளலார்*
*ஆன்மா மனித தேகம் எடுத்து உண்மையான தாய் தந்தையரைத் தொடர்புகொண்டு அருள் பெற்றால் மட்டுமே அழியுடம்பை அழியாமல் ஆக்கும் வகையை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள முடியும்.*
*வள்ளலார் பாடல் !*
அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்
பின்படு தீமையின் முன்படு கின்றீர்
இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே!
மேலே கண்ட பாடலில் உயிர் வந்தவழியும் உடம்பு வந்த வழியும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.உண்மையான அம்மாவையும் அப்பாவையும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றீர். பல வடிவங்களில் வண்ணங்களில் உடம்பு என்னும் உருவங்கள் தோன்றுகின்றன என்பதையும் அறியீர்கள்.
*நமது உடம்பின் உள்ளே சிரநடு சிற்சபையில் உள் ஒளியாக நம்மை இயக்கிக் கொண்டு உள்ள மெய்ப்பொருளான ஆன்மாக்களின் வண்ணம் வேறு வடிவம் வேறு அல்ல. எல்லா ஆன்மாக்களும் ஒரேத் தன்மை உடையது -என்பதையும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள்*
*ஆகையால்தான் உடம்பின் பல வடிவங்களையும் வண்ணங்களையும் பார்த்து உயிர் இரக்கம் இல்லாமல் அன்பு தயவு கருணை இல்லாமல் துன்பப்படும் ஜீவன்களுக்கு பிச்சையிட்டு உண்ணவும் மனம் இல்லாமல் பின்னாடி வரும் தீமைகளுக்கு முன்பட்டு வாழ்கின்றீர் என்கிறார்.
*உயர்ந்த அறிவுள்ள மனிதர்களாகிய நம்மவர்களைப் பார்த்து அறிவு விளக்கம் பெறாமல் வாழ்கின்ற பித்துலகீரே என்கின்றார்* *பித்துலகீரே என்றால் பைத்தியம் பிடித்தவர்களே என்பது பொருளாகும்*
*பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்க வந்தவர்தான் வள்ளலார்*
*அனைத்து பைத்தியங்களையும் குணப்படுத்த ஒரே மருந்துதான் அதுதான் ஞானமருந்து என்னும் அருள் மருந்தாகும்* *அதாவது அருள் அமுதமாகும்.*
அந்த அருள் அமுதம் ஒவ்வொரு ஆன்மாவிலும் உள்ளது அவற்றை எடுக்க முடியாமல் ஏழு விதமான மாயா வண்ணத் திரைகளால் மறைக்கப்பட்டுள்ளது. அத்திரைகளை நீக்கும் வழியைக் காட்ட வந்தவர்தான் வள்ளலார்.
*வள்ளலார் பாடல்!*
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னை என்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!
*ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகளின் கதவுகளை திறக்க நாம் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரே ஒருத்தர் உள்ளார் அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*.
அவரைத் தொடர்பு கொள்ள இரண்டு எளிய வழிகளை காட்டியுள்ளார் வள்ளலார்.அவை ஜீவகாருண்யம் என்னும் (உயிர்இரக்கம்) பரோபகாரம்.
சத்விசாரம் என்னும் இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களாகும்.
இவற்றை முழுமையாக கடைபிடிப்பவர்கள் எவரோ அவருடைய திரைகள் விலகி அருள் என்னும் நன்னிதி சுரந்து உடம்பும் முழுவதும் பரவி உயிர் உடம்பு முழுவதும் ஒளிமயமாகி இறைவனுடன் கலக்க வேண்டும்.
இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.
*தாயாகவும் தந்தையாகவும் நம்மை பாதுகாக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வோம்* மரணத்தை வெல்வோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு