சனி, 9 அக்டோபர், 2021

அண்டங்களை ஆட்சி செய்பவர்!

 *அண்டங்களை ஆட்சி செய்பவர்!* 


*வள்ளலார் பாடல்!*


ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே

உன்னமுடியா அவற்றின்


ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்

உற்றகோ டாகோடியே


திருகலறு பலகோடி ஈசன் அண்டம் 

சதாசிவ அண்டம் எண்ணிறந்த

திகழ்கின்ற மற்றைப் 


பெருஞ்சத்தி சத்தர்தம்

சீரண்டம் என்புகலுவேன்

உறுவும் இவ் வண்டங்கள் அத்தனையும் 


*அருள்வெளியில்*

உறுசிறு அணுக்களாக

ஊடசைய *அவ்வெளியின் நடுநின்று* *நடனமிடும்*

*ஒருபெருங் கருணைஅரசே*


*மருவிஎனை ஆட்கொண்டு* *மகனாக்கி அழியா*

*வரந்தந்த* *மெய்த்தந்தையே*

*மணிமன்றின் நடுநின்ற*

 *எலாம்*

*வல்ல நட* *ராஜபதியே*.! 


மேலே கண்ட பாடலில் இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி நடராஜபதி என்னும் அருட்பேரொளி எங்கிருந்து செயல்படுகிறது என்பதை விளக்குகிறார். 


*வள்ளலார் சொல்லும் கடவுள் நாம் வணங்கும் வழிபடும் சமயம் மதம் சார்ந்த கடவுள்களில் ஒருவர் அல்ல என்பதை அறிவுள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்*.


*இவ் உலகமே தெரியாத மக்கள் மற்றும் உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரியாத மக்கள்  கடவுளை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்*


நாம் வாழும் பஞ்ச பூத உலகம் ஒன்று மட்டும்தான் நமக்குத் தெரியும் அதுவும் முழுதாய் தெரியாது தெரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் குறைவு. *அருள்பெற்றால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்*


*ஐந்து பூதங்களின் உருண்டையான இவ்வுலகத்தின் அடி முடி நடு பக்கம் அளவு எவ்வளவு என்றே தெரிந்துகொள்ள முடியாது. அதற்குத் தகுந்த அளவுகோலும் கிடையாது. கணக்கு வழக்குகளும் எண்ணில் அடங்காது நீண்டுகொண்டே போகும் கணக்கு வழக்குகளில் அடக்கமுடியாது என்றால் *பலகோடி உலகங்களையும் அண்டங்களையும் தெரிந்து கொள்வது எங்கனம்?*  


*வள்ளலார் பாடல்!* 


கிளக்கின்ற மறைஅளவை ஆகமப் பேரளவை

கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை


விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்

மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே


அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே

அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே


துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்

சொன்ன வெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.! 


*வேதங்கள் திருமறைகள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்கள் மற்றும் அறிவியல் விஞ்ஞான அணு ஆராய்ச்சி வல்லுனர்கள் எல்லாம்  அவரவர்களுக்கு தெரிந்த அறிவுசார்ந்த அருள்சார்ந்த மெய் அளவை ஒளிஅளவை அணு வேகத்தின் அளவுகளை வைத்து அளந்து பார்த்தார்கள் அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்திட கண்டார்களேத் தவிர அளவு கண்டார்கள் இல்லை என்கின்றார் வள்ளலார்* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


பலகோடி அண்டங்களை படைத்து காத்து இயக்கிகொண்டு இருக்கும் அருட்பேரொளி சிந்தாமல் சிதராமல் மாபெரும் சக்திவாய்ந்த பெருங்கருணை பெருந்தொழிலை இயக்கிக்  கொண்டுள்ளவர்தான் அருட்பெருஞ்ஜோதி நடராஜபதி என்பவராகும்.


அவரின் தன்மை எவ்வாறாக உள்ளன என்பதை வள்ளலார். சொல்லுவதை பாருங்கள்.


இயற்கை உண்மையர் என்றும்,


இயற்கை அறிவினர் என்றும்,


இயற்கை இன்பினர் என்றும்,


நிர்க்குணர் என்றும்

சிற்குணர் என்றும்,


நித்தியர் என்றும்,


சத்தியர் என்றும்,


ஏகர் என்றும்,


அநேகர் என்றும்,


ஆதியர் என்றும்,


அமலர் என்றும்,


அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்றும்,


அற்புதர் என்றும்,


நிரதிசயர் என்றும்,


எல்லாமான வர் என்றும்,


எல்லாமுடைய வர் என்றும்,


எல்லாம் வல்லவர் என்றும்,


குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த


*திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்*


துதித்தும்,


நினைத்தும்,


உணர்ந்தும்,


புணர்ந்தும்,


அனுபவிக்க விளங்குகின்ற *தனித்தலைமை பெரும் பதியாகிய பெருங்கருணை கடவுளே*! 


என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றி தெளிவாகச் சொல்லுகிறார். 


*நாம் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரே உண்மைக் கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு என்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை* *சாதி சமயம் மதம் சாராத (சாதி சமயம் மதம் கடந்த )  சர்வதேச பொது மையமாக  வடலூரில் அமைத்தவர் வள்ளலார் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் நம்மைப் படைத்தவர்* *நம் சிரநடு சிற்சபையில்  ஆன்ம ஒளியாக இயங்கி இயக்கிக் கொண்டுள்ளார்*


*வள்ளலார் பாடல்!* 


*அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்*

*அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்*


*பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்*

*போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்*


*இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்*

*எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்*


*தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்*

*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!*


மேலே கண்ட பாடலிலே மிகத் தெளிவாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப்பற்றியும் அவர் விளங்குகின்ற இடத்தைப் பற்றியும் தெளிவாக எளிய தமிழில் சொல்லியுள்ளார்.

படித்து உணர்ந்து பின்பற்றுங்கள் தகுதிக்கு தகுந்தவாறு ஆன்மலாபமும் அருள் லாபமும் பெறலாம்.


*மேலும் குடும்பம் நடத்தும் சமய மதம் சார்ந்த தெய்வங்களையும் வணங்குவோம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் வணங்குவோம் என்றால் உங்கள் விருப்பம்* *அதனால் கிடைக்கும் நன்மையும் தீமையும் உங்களைச் சார்ந்த்தே !*


*அருட்பெருஞ்ஜோதி தான் மனிதனின் தலை நடுவுள் அணுவாய் அருகிக் கிடப்பது உண்மையில் ஆன்மா என்னும் ஒளியாகும்.எனவே நாம் தொடர்பு கொள்ள வேண்டியது நம்தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே என்பதுதான் உண்மையான அன்பான  வழிபாடாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு