அருள் வாழ்க்கையும் ! பொருள் வாழ்க்கையும் !
*அருள் வாழ்க்கையும்! பொருள் வாழ்க்கையும்!*
ஆன்மாவின் வாழ்க்கையானது *பொருள்வாழ்க்கை*.
*அருள்வாழ்க்கை* என இரண்டு வகையாக உள்ளன.
அதேபோல் ஆன்மாக்கள் வாழும் உலகமும் வாழப்போகும் உலகமும். பல வண்ணங்களாக பல வடிவங்களாகவும் பலப்பல அடுக்குகளாக பல உலகங்களாக எண்ணில் அடங்காத பிரிவுகளாக.
பலவகை தோற்றங களாக பரந்து விரிந்து ஒன்றோடு ஒன்று மோதாமல் தன்னைத்தானே இயங்கிக்கொண்டு உள்ளன.
*( படைத்து காத்து இயக்கிக் கொண்டுள்ள இயற்கை உண்மைக்கடவுளை கண்டுபிடித்த ஒரே அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார்)*
*பொருள் வாழ்க்கை*
பொருள் நிறைந்த பஞ்சபூத இவ்வுலகில் ஆன்மாக்கள் வந்ததால் பொருள் உடம்பு எடுத்துள்ளது. *பொருள் உடம்பு எடுத்துள்ளதால் பொருள் மீது ஆசை அதிகரித்துள்ளது.* அருளின் உண்மைத் தன்மை அறிந்து கொண்டு இருந்து இருந்தால் அருளின் மீது ஆன்மாவிற்கு ஆசையும் பற்றும் விருப்பமும் அதிகரித்திருக்கும்.
உயர்ந்த அறிவுள்ள மனிதநேகம் எடுத்த ஆன்மாக்கள் பஞ்ச பூத உலகமான *மாயை உலகில்* .
மண்.நீர்.
அக்கினி.காற்று.
ஆகாயம் கலந்த பொருள் உடம்பு மட்டுமே பெற்று வாழமுடியும்.
மேலும் பொருள் உடம்பினால் இன்பம் துன்பம்.பிறப்பு இறப்பு.நினைப்பு மறைப்பு.வெற்றி தோல்வி. மண்ணாசை.
பெண்ணாசை.
பொன்னாசை மற்றும் ஆசை பேராசை. பாவம் புண்ணியம்.இரவு பகல் மற்றும் பசி. பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம் கொலை போன்ற அவத்தைகள் சூழ்ந்து கொண்டே இருக்கும்.
ஆன்மாக்கள் தனித்து வாழமுடியாது உருவம் உள்ள *உபகாரத்தால் கிடைத்த* தாய் தந்தை குடும்பம் குழந்தைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு வாழ்ந்து இறுதியில் மாண்டு போவதே பொருள் உலகின் சிற்றின்ப வாழ்க்கையாகும்.
*ஆன்மாக்கள் பொருள் உடம்பு பெற்றதால் பொருள் மீது ஆசை அதிகமாயிற்று. ஆசை அதிகமானதால் பாவம் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் பிறந்து பிறந்து. இறந்து இறந்து முடிவு இல்லாமல் இன்பம் துன்பங்களை தொடர்ந்து அனுபவித்து இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன*.
மேலும் வாழ்க்கையில் விருப்பு வெறுப்புடன் வாழ்ந்து.மேலும் நிலை இல்லாத அற்ப ஆசைகளான பட்டம் பதவி புகழ்.ஆட்சி அதிகாரங்களுக்காக அலைந்து திரிந்து பெற்று முழுமையாக அனுபவிப்பதற்குள் வயது முதிர்ந்து நோய்வாய்பட்டு இறந்து மீண்டும் பிறந்து இறந்து கொண்டே வாழும் வாழ்க்கையே மாயை உலகின் வாழ்க்கை யாகும். மேலும் பஞ்சபூதங்கள் நிறைந்த நிரந்தரம் இல்லாத சிற்றின்ப வாழ்க்கையே பொருள் உடம்பு பெற்ற வாழ்க்கையாகும்.
*பொருளினால் உருவங்கள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.பொருள் உள்ள இடத்தில் அருள் இருக்காது.அருள் உள்ள இடத்தில் பொருள் தேவைப்படாது.* *அருள் வாழ்க்கையே அழியாத வாழ்க்கையாகும்*
*அருள் பெறில் துரும்புமோர்* *ஐந்தொழில் புரியுந்*
*தெருளிது வெனவே செப்பிய சிவமே* !
*அருளறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம்*
*மருளறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே* !
*அருட்சுகம் ஒன்றே அரும்பெறற் பெருஞ்சுகம்*
*மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச் சிவமே!*
என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளலார் பதிவு செய்துள்ளார்.
*அருள் வாழ்க்கை*
உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள் மட்டுமே அருள் பெற்று அருள்வாழ்க்கை வாழும் தகுதி பெற்ற ஆன்மாக்களாகும். *அருள் பெற்ற
உடம்பிற்கு அருள் தேகம் என்றும்* *ஆன்மதேகம் என்றும் ஒளிதேகம் என்றும் பெயராகும்.*
*ஆன்மாக்களின் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு *அருள் பூரணம் பெற்று* *ஆண்டவர் போல் தனிப்பெருங் கருணையுடன்* பிறப்பு இறப்பு இல்லாமல்.
தோற்றம் மாற்றம் இல்லாமல்.
நினைப்பு மறைப்பு இல்லாமல்.
பகல் இரவு எதுவும் தெரியாமல். *எக்காலத்தும் நிரந்தரமான நிலையான பேரின்ப சித்தி பெரு வாழ்க்கையே அருள் வாழ்க்கையாகும். அவற்றிற்கு முத்தேக சித்தி என்றும்.மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் சொல்லப்படுகிறது.*
அந்த உயர்ந்த இன்பத்தை பற்றி விளக்குவதற்கு வார்த்தைகளே கிடையாது.
எண்ணால் எழுத்தால் வார்த்தைகளால் சொல்ல இயலாது.
*அருள் உணர்வுகளால்* அனுபவித்துதான் தெரிந்து கொள்ள முடியும்
*அதே நேரத்தில் அந்த தேகத்திற்கு ஐந்தொழில் செய்யும் பதவி உயர்வும்*
*அதற்குண்டான அருள் ஆற்றலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வழங்கப்படுகிறது*
மேலே கண்ட *அருள் வாழ்க்கையும் ஐந்தொழில் வல்லபமும் பெற்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்தான் நமது திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.* தான் பெற்ற பெரிய ஆன்ம இன்ப லாபத்தை எல்லா ஆன்மாக்களும் பெறவேண்டும் என்பதே வள்ளலாரின் பேராசையாகும். *என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்பார்*
அருள் பெற்ற ஆன்மாக்களின் தேகம் *அருள்தேகம் என்றும் ஞானதேகம் என்றும் சொல்லப்படுகிறது.* அந்த தேகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.எந்த தடையும் இன்றி எங்கு வேண்டுமானாலும் தன் விருப்பம்போல் நினைத்த மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லுவதற்கும் செயல்படுவதற்கும் அனுபவிப்பதற்கும் தகுந்த அருள் ஆற்றல் கொண்டதே அருள் தேகமாகும்.அருள் தேகத்திற்கு ஒளிதேகம் என்றும் சொல்லப்படும்.
*வள்ளலார் பெற்ற தேகத்தைப் பற்றி பதிவு செய்துள்ள பாடல் !*
காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்
என் தந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!
மேலும் ஒருபாடல் !
ஆராலும் அறிந்து கொளற் கரியபெரும் பொருளே
அம்மே என் அப்பா என்ஐயா என் அரசே
காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான
சித்திபுரத்தமுதே என் நித்திரை தீர்ந் ததுவே.!
மேலே கண்ட பாடல்களில் அருள் தேகத்தின் வல்லபத்தைப்பற்றி எளிய தமிழில் தெளிவாக விளக்கி பதிவு செய்துள்ளார்.
*அருள் வழங்கும் கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படையாக சுட்டிக்காட்டி சொல்லியுள்ளார்.*
*காட்டியதோடு அல்லாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தான் தங்கியிருந்த மேட்டுகுப்பத்திற்கு வரவைத்து அவருடன் கலந்து கொண்டவர்தான் வள்ளலார்.*
*உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் எடுத்ததே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று.ஊன உடம்பான பொருள் உடம்பை அருள் உடம்பாக மாற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனித்தேகம் இறைவனால் கொடுக்கப் பட்டதாகும்.*
*சாகாக்கல்வி*
மனிதகுலம் அருள் பெறும் வழியைத் தெரிந்து கொள்வதற்கு *சங்கம் சாலை சபையை வடலூரில் தோற்றுவித்துள்ளார்* சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற தலைப்பில் 1872 ஆம் ஆண்டு வடலூரில் தொடங்கியுள்ளார். சங்கத்தில் அங்கத்தினராக சேர்ந்து.வள்ளலார் சொல்லியுள்ள
*இந்திரிய ஒழுக்கம்*.
*கரண ஒழுக்கம்.*
*ஜீவ ஒழுக்கம்.*
*ஆன்ம ஒழுக்கம்*
போன்ற நான்கு ஒழுக்க நெறிகளை தடம் பிறழாமல் கடைபிடித்து அதில்
*பயிற்சி பெறுவதற்காக சாகாக்கல்வி கற்கும் அருள் கல்வி கூடத்தை தொடங்கி வைத்துள்ளார்*. *அருள் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அச்சங்கத்தில் பதிவு செய்து சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு அவசியம் கற்று கொள்ள வேண்டும்*.
*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்*
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான்என அறிந்த அறிவே
தகும்அறிவு
மலம்ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த
பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும்
விளைய விளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாதலுற எலாம் வல்ல சித்தாகிநிறை
வான வரமே இன்பமாம்
மன்னும் இது நீ பெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபு என்று உரைத்தகுருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றிஅருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நட ராஜபதியே.!
மேலே கண்ட பாடல் வாயிலாக 1.சாகாக்கல்வி. 2.உண்மைஅறிவு. 3.மலத்தை வெல்லும் தனித்த பூரண வல்லபம். 4.ஐந்தொழில் செய்யும் தொழிலே மெய்த்தொழில்.
மேலே கண்ட நான்கு வகையான மெய்பொருளைக் கற்கும் முறைகளையும் ஒருங்கே கற்று காதல் கொண்டு எல்லாம்வல்ல சித்து வகைகள் யாவும் பெற்று. நிறைவான பூரண வரம் பெற்று அனுபவிப்பதே பேரின்பமாகும்.
*பேரின்பத்தை பெறுவதற்கு கற்கும் கல்வியே சாகாக்கல்வி என்பதாகும்*.
சாகாக்கல்வி கற்கும் கலையை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார்.
உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் எடுத்துள்ள மக்கள் அருள்வாழ்க்கை வாழ்வதற்கு விருப்பமா ? பொருள் வாழ்க்கை வாழ்வதற்கு விருப்பமா ? என்பதை அவரவர்களே விருப்பத்தோடு தேர்வு செய்து கற்கவேண்டும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு