புதன், 9 டிசம்பர், 2020

அருள் அறிவு ! மருள் அறிவு !

 *அருள் அறிவு ! மருள் அறிவு !*


*அருள் அறிவு அறிந்தவன் மரணத்தை வெல்கிறான்.மருள் அறிவில் வாழ்கிறவன் மரணத்தை தழுவுகிறான்*


மனித உடம்பின் ஒவ்வொருவருடைய ஆனமாவிலும் உண்மை அறிவும் அருளும்.இறைவன் நிறைந்து நிறைத்து வைத்து இருக்கின்றார்.


அவற்றை அறிந்து தெரிந்து உணர்ந்து பின்பற்றி வாழ்ந்து அனுபவிப்பவர்களே அறிவுள்ள உண்மையான உயர்ந்த சுத்த சன்மார்க்கம் சார்ந்த உயர்ந்த  மனிதர்களாவார்கள்.


மனிதர்கள் புறத்தை தேடித் திரியும் மனத்தால்.புத்தியால் உண்மையான அருள் அறிவை அறிய முடியாது.


மேலும் ஜீவகாருண்யம் இல்லாமல்  செயல்படும்  தவத்தால்.

தியானத்தால்.

பக்தியால். யோகத்தால் விரத்த்தால் உண்மையான அருள் அறிவை  அறிய முடியாது. 


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்* !


இறைவனால் படைத்தை உலக உயிர்களின் துன்பத்தை போக்கும் தயவு என்னும்  ஜீவகாருண்யத்தால் மட்டுமே அன்பும் அறிவும் தானே விளங்கும். *அன்பும் அறிவும் விளங்கும் இடம் சிற்சபை என்னும் ஆன்மா இருக்கும் இடமாகும்.*

ஆன்மாவில் இருந்து தோன்றுவதே அருள் அறிவு என்பதாகும்.


அருள் அறிவின் முதிர்ச்சியே கருணை என்பதாகும் *கருணையால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்கொள்ள முடியும். அவற்றைத்தான் சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறவேண்டும் என்கிறார் வள்ளலார்.அதேபோல் ஆன்மாவின் கருணைக் கொண்டு ஆண்டவரின் தனிப்பெருங கருணை பெறவேண்டும். கருணையால் மட்டுமே அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும் பெறவேண்டும் என்பதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும் ..* 

*வள்ளலார் அகவலில் பதிவு செய்துள்ளது*.


அருள் அறிவு வொன்றே அறிவு மற்றெல்லாம்

மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே!


*அறிவு இரண்டு வகை.... அருள்அறிவு*

*மருள்அறிவு என்பதாகும்*.


தன்னை அறிந்து. தன் தலைவனை அறிந்து.அருள் அறிவு பெற்று இன்பம் உற நினப்பது எதுவோ அதுவே ஆன்ம அறிவு அருள் அறிவு என்பதாகும். .


ஆன்ம அறிவு விளங்கும் போது தான் எல்லா உயிர்களும் தம் உயிர்போல் நினைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை  விளங்கும். ஆன்ம ஒற்றுமை உரிமை விளங்கினால் எல்லா உயிர்கள் மீதும் அன்பு.தயவு.

கருணை உண்டாகும்.

கருணையே வடிவமாக மாறுவதுதான் அருள் அறிவாகும்.


*மருள்அறிவு என்பது சுயநலம் சார்ந்த்து*.


வள்ளலார் கொள்கையான சுத்த சன்மார்க்க சங்கத்தை சார்ந்து  இருந்தாலும். பொது நோக்கம் இல்லாமல்

தங்களுக்காக.

தங்கள் குடும்பத்திற்காக.

தங்களைச் சார்ந்தவர்களுக்காக.தங்கள் சங்கம் சார்ந்தவர்கள்  மட்டுமே வளர்ந்தால் வாழ்ந்தால்  போதும் என்ற சுயநலத்துடன் இருப்பதுவே மருள் அறிவாகும்.


*பெருமைக்காக புகழுக்காக வாழ்வது*


பல சன்மார்க்க சங்கங்கள் ஜீவகாருண்யம் என்ற பெயரில்.பெருமைக்காகவும் 

புகழுக்காகவும்.பதவிக்காகவும். 

பாராட்டுக்காகவும் விளம்பரத்திற்காகவும்

பிறருடைய பணத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகவும்.   தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுவது மருள் அறிவாகும்.


*வள்ளலார் பாடல்*!


எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணி நல் இன்புறச் செயவும்


அவ்வுயிர் களுக்கு வரும் இடை யூற்றை அகற்றியே அச்சநீக் கிடவும்


செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி


ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.! 


எல்லா உயிர்களும் தன்னுயிர் போல் எண்ணி பொது நலநோக்கத்துடன் இன்புறச் செய்வதும்.அவ்வுயிர்களுக்கு வரும் துன்பத்தை அறிந்து அகற்றவும். இறை உணர்வோடு.

இயற்கை உண்மையோடு.

இயற்கை கருணையோடு அச்சம்.பயம்.துன்பம்.துயரம்.கொலை நேர்ந்தால் அவற்றைப் போக்கி காப்பாற்றுவதே.

காப்பாற்ற நினைப்பதே அருள் அறிவாகும்.


அருள் அறிவின் முதிர்ச்சி தான் கருணையாக மாறுகின்றது.

அகம் புறம் கருணை நிறைந்து ததும்பும்போது ஆன்மாவில் இருந்து அருள் சுரக்க ஆரம்பித்துவிடும்.


*கருணைக்கு தேவையானது*

*அன்பு.தயவு.உயிர் இரக்கம்.ஜீவகாருண்யம். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை*  கொண்டு வாழ்ந்தால் மட்டுமே கருணை என்னும் அருள்  நிறைந்து அகமும் புறமும் நிரம்பி வழிந்து ஊன  உடம்பை ஒளி உடம்பாக மாற்றி மரணத்தை வெல்லமுடியும்.


*ஆன்மாவில் உள்ள நன் நிதிதான் என்றும் அழியாத அருள் நிதியாகும்*  *சுத்த சன்மார்க்கம் என்பதே மருள் அறிவு நீங்கி அருள்  அறிவு பெறுவதாகும்*   


உயர்ந்த பிறப்பு உயர்ந்த அறிவு 

மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டதின் நோக்கமும்   இயற்கை உண்மையின் ரகசியம் அருள் அறிவு பெறுவதற்கே என்பதை அறிவால்  அறிந்துகொள்ள வேண்டும்.


*வள்ளலார் பாடல்*!


கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து

உயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்

தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற

கண்ணுடையோய் 


சிதையா ஞானப்

பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற

மலர் வாயோய் பொய்ய னேன்றன்


மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்

கசிந்துருக்கும் வடிவத் தோயே.!


மேலும்


கருணைக் கடலே அதில் எழுந்த கருணை அமுதே கனியமுதில்

தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே


பொருண் மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே

தெருண் மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே.?


மேலும்


கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுக மற் றெல்லாம்


மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்


இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்


தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.!


தனிப்பெருங் கருணை உள்ளவர் கடவுள் !  அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.. அவர்தான் ஒவ்வொரு ஆன்மாவிலும்.உயிரிலும்  உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு உள்ளவர்..


சிறு நெறியான சாதி சமய மதங்களின் மருள் நெறியைப் பின்பற்றாமல் .

அருள் பெறும் சுத்த சன்மார்க்க தனிநெறியை. நன்நெறியான அருள் நெறியைப் பின்பற்றிக் கொண்டு வாழவதே அருள் அறிவாகும்.


ஆன்மா என்னும் உள் ஒளியை  மறைத்துக் கொண்டுள்ள  அறியாமை அஞ்ஞானம் என்னும்  திரைகளை அகற்றும் வழி தெரியாமல்  வாழ்வதுதான் அறியாமை.அஞ்ஞானம் என்னும் திரைகளாகும்...அத்திரைகளை நீக்கும் வழியைத் தெரிந்துகொண்டு அகற்றுவதுதான்  *அருள் அறிவாகும்* அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் இந்திரிய .கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கத்தின் முக்கியமான ஜீவகாருண்ய ஒழுக்கம் நிறைந்த கொள்கைகளாகும் 


*நாம் ஆன்ம அறிவு விளக்கமும்.அருள் அறிவு விளக்கமும் பெற முடியாமல் .மருள் அறிவைக் கொண்டு வாழ்வதால் தான். இதுவரையில் சுத்த சன்மார்க்கத்தில் ஒருவரும் தேரவில்லை*


வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நேர்வழியில் செல்லாமல்.சாதி சமய மதங்களின் குறுக்கு வழியைப் பின்பற்றி. *குறுக்கு வழியே நேர்வழி என நினைத்து வாழ்வதே கண்மூடி பழக்கமாகும்*


*வள்ளலார்பாடல்*


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக


மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே


உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே


சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


மேலே கண்ட பாடலில் மருள் அறிவைப்பற்றி தெளிவுப்படுத்துகின்றார்.


அருள் பெறும் அருள் அறிவைப் பயன் படுத்த வேண்டும். அதற்குப் பெயர் தான் அருள் அறிவு என்கிறார் வள்ளலார்.


*வள்ளலார் திருஅகவலில் பதிவு செய்துள்ளது*!


 அருள் அறிவு வொன்றே யறிவு 

மற்றெல்லாம்

மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே!


அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்

மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே!


அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே

றறுக்குமென் றியம்பிய சிவமே!


 அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்

பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே!


 அருளறி யார்தமை யறியார் எம்மையும்

பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே!


அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை

பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே!


 அருள்வடி வதுவே யழியாத் தனிவடி

வருள்பெற முயலுகென் றருளிய சிவமே!


 அருளே நம்மிய லருளே நம்முரு

அருளே நம்வடி வாமென்ற சிவமே!


அருளே நம்மடி யருளே நம்முடி

அருளே நம்நடு வாமென்ற சிவமே !


 அருளே நம்மறி வருளே நம்மனம்

அருளே நங்குண மாமென்ற சிவமே!


அருளே நம்பதி யருளே நம்பதம்

அருளே நம்மிட மாமென்ற சிவமே!


 அருளே நந்துணை யருளே நந்தொழில்

அருளே நம்விருப் பாமென்ற சிவமே!


அருளே நம்பொரு ளருளே நம்மொளி

அருளே நாமறி வாயென்ற சிவமே!


அருளே நங்குல மருளே நம்மினம்

அருளே நாமறி வாயென்ற சிவமே!


அருளே நஞ்சுக மருளே நம்பெயர்

அருளே நாமறி வாயென்ற சிவமே!


 அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை

அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே!


அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை

அருளர சியற்றுகென் றருளிய சிவமே !


வள்ளலார் அருள் அறிவைத் தெரிந்து கொண்டு ஆன்மாவின் உள்ளே நுழைந்தார். ஒவ்வொரு திரைகளாக நீங்கினார். அகத்தில் உள்ள அருளை முழுமையாக சுவைத்தார் உடம்பு முழுவதும் அருளை நிரப்பினார். ஐம் பூத உடம்பை அருள் உடம்பாக மாற்றினார் மரணத்தை வென்றார்..பிறப்பு இறப்பு இல்லாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்.


நாம் வள்ளலார் போல் வாழ்வதற்கு மருள் அறிவை நீக்கி அருள் அறிவைப் பெற்று வாழ்வதற்கு எந்த தடைகளும் கிடையாது. மருள் அறிவினால்

தடைகளை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்..


தடைகளை நீக்குவோம் அருளைப் பெறுவோம்.


*வள்ளலார் பாடல்*!


பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்


இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே


அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்


நிச்சலும் பேரானந்த நித்திரைசெய் கின்றேனே.!


என்போல்  இவ்வலகம் பெறுதல் வேண்டும் என்பதே வள்ளலாரின் விருப்பமும் வேண்டுகோளாகும்


மருள் அறிவை நீக்கி.அருள் அறிவை பெருக்கி வாழ்வதே மரணத்தை வெல்லும் வாழ்க்கையாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் 

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு