செவ்வாய், 3 நவம்பர், 2020

நீ அடைந்து விலக்குக மகிழ்க !

 *நீ அடைந்து விலக்குக மகிழ்க !*


*உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்!*

*விலக நீ யடைந்து விலக்குக மகிழ்க!*


*சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக*

*உத்தம னாகுக வோங்குக வென்றனை*! 


மேலே கண்ட திரு அருட்பெருஞ்ஜோதிஅகவல் வரிகளை ஊன்றி படித்து உணர்ந்து தெளிந்து அனுபவித்து வாழந்திடல் வேண்டும்.


*உலகினில் வாழும்  உயிர்களுக்கு அச்சம் பயம் துன்பம் துயரம் ஏழ்மை பசி பிணி  தாகம் இச்சை எளிமை பயம் கொலை மரணம் என்பதெல்லாம் தானே வருவதில்லை.உயிர்களாலேயே உயிர்களுக்கு துன்பம் யாவும் வந்து இறுதியில் மரணமும் வந்துவிடுகிறது.* 


*தீதும்  நன்றும் பிறர்தர வாராது*.


*மனித குலம்* 


உயிர்களால் மட்டுமே உயிர்களைக் காப்பாற்ற முடியும்.ஏன் என்றால் ? உயிர்களின் துணை கொண்டுதான் உயிர்கள் யாவும் வாழ்கின்றன.

உயிர்களாலே மட்டுமே உயிர்களை அழிக்கவும் முடியும்.

காப்பாற்றவும் முடியும்.


ஒவ்வொரு உயிரும் இதுவரையில் பலகோடி பிறவிகள் எடுத்து பலகோடி உயிர்களின் உழைப்பால் அவைகளின் உதவிகளால் உயர்ந்த பிறப்பாகிய மனித தேகம் கிடைத்துள்ளது என்பதை உயர்ந்த அறிவைக்கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்.


*உயிருக்கும் உயிருக்கும் மட்டுமே உலகில் போராட்டம் நடந்து கொண்டுள்ளன.*


உயிரையும் ஆன்மாவையும் உடம்பைவிட்டு வெளி யேற்றுகிறோம்  என்று தெரியாமல் உடம்பை அழிப்பதாக நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.


*ஆன்மா வாழ்வதற்கு

உயிரையும் உடம்பையும் கொடுத்தது மாயை மாமாயை பெருமாயை என்னும்  இவ்வுலக அதிகார நிர்வாகத் தலைவர்களாகும்*.  *உயிர் உடம்பை அழிக்காமல்  காப்பாற்றி திரும்பத் தரும் வரை மாயையால் பிறவிகள் கொடுத்துக் கொண்டே இருக்கும்*. 


*உயர்ந்த அறிவு*


*மனித குலத்திற்கு மட்டுமே இவ்வுலகில் நடைபெறும் ரகசியங்கள் மற்றும் உயிர்களின் வாழ்க்கை முறைகள் எல்லாவற்றையும் அறியும் உயர்ந்த அறிவான ஆன்ம அறிவு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது* ஆன்ம அறிவால் மட்டுமே இறைவனைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று உயிரையும் உடம்பையும் அழிக்காமல் *ஆன்மதேகம்.*

*ஆன்ம லாபம்* 

*ஆன்ம இன்பம்* பெற்று மரணத்தை வென்று வாழ்வதற்கு வழிபெற முடியும்


மனித பிறப்பு எடுத்தவர்களால் மட்டுமே இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவும் முடியும்.

அருளைப்பெறவும் முடியும்.


*ஆண்டவரைத் தொடர்புகொள்ள வேண்டுமானால் எல்லா உயிர்களையும் தம் உயிர்கள்போல் பாவித்து நேசிக்க வேண்டும்* மனிதன் மனித குலத்தை மட்டுமே காப்பாற்றினால் போதும் என்று நினைந்து மனித குலத்திற்கு மட்டும் உபகாரங்கள் உதவிகள் மற்றும் பசிக்கு உணவு வழங்கி வருகிறார்கள். மற்ற உயிர்களும் தம் உயிர்போல்தான் என்று நினைக்க அறிவு விளக்கம் பெறாமல் இருக்கிறார்கள்.


எல்லா உயிர்களிலும் இறைவன் நடம் புரிகின்றார் என்பதை வள்ளல்பெருமான் அறிந்து தெரிந்து சொல்லுகின்றார்.


*வள்ளலார் பாடல்!*


உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்

ஒருதிருப் பொது என அறிந்தேன்


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

பாடுகின்றேன் பொதுப் பாட்டே.! 


என்னும் பாடலின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார். எல்லா உயிர்களிலும் இறைவன் நடம்புரியும் இடம் என தெரிந்து.

அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்ற தெரிந்தவர்களே! அகற்றுபவர்களே *சுத்த சன்மார்க்க சுகநிலைப்பெற்று உத்தமனாகும் தகுதி உடையவர்களாகும்*.

*ஜீவகாருண்ய ஒழுக்கம்*


வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றுதான் சொல்லியும் எழுதியும் வைத்துள்ளார்.

*ஜீவன் என்பது உயிரைக் குறிப்பதாகும். எல்லா உயிர்களையும் பற்றிச் சொல்வதாகும்.* மனித குலத்திற்கு மட்டுமே சொல்லவில்லை.

*இந்த உண்மை தெரியாமல் வாய்பேசமுடியாத தடுத்து தற்காத்து கொள்ள முடியாமல் தவிக்கும் அப்பாவி உயிர்களைக் கொன்று உணவாக உட்கொள்கிறார்கள்*. 


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்*!


எத்துணையும் பேதமுறாது 

 *எவ்வுயிரும்

தம் உயிர்போல்* எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்

சிந்தைமிக விழைந்த தாலோ.! 


மேலே கண்ட பாடலிலே எத்துனையும் பேதமில்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் குணம் உள்ளவர். எவரோ அவர் உள்ளத்தில் தான் ஆண்டவர் 

மகிழ்ச்சியுடன் நடம்புரிவார் அருளை வழங்குவார் என்பதை மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.


சுயநலத்திற்காக மற்ற உயிர்களின் உழைப்பையோ.

உயிர்களையோ பயன் படுத்திக் கொள்ளாமல்.

அவைகளுக்கு வரும் துன்பங்களை நீக்கி காப்பாற்ற வேண்டும். மேலும் மற்ற உயிர்களுக்கு  துன்பம் உண்டாகும்  என்று முன்னமே அறிந்தபோதும் கேட்டபோதும் அவற்றை காலம் தாழ்த்தாமல் காப்பாற்ற வேண்டும். இவற்றை உண்மை அறிவால் அறிந்து முடிந்த அளவு ஜீவநேயத்தோடு ஜீவன்களை காப்பாற்றுவதே ஜீவகாருண்யம் என்பதாகும்.அதுவே ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.


ஜீவகாருண்ய ஒழுக்கத்தை

சுயநலம் இல்லாமல்  பொதுநல நோக்கத்தோடு செயல்பட்டு கடைபிடித்து வாழ்பவர்களின் உயிர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிச்சயம் காப்பாற்றுவார்.

*இதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் காட்டும் சுத்த சன்மார்க்க சுகநிலை என்பதாகும்.அந்நிலையைப் பெற்று வாழ்பவரே உத்தமன் என்பவராகும்.


*மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்!* 


மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்


கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்


எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்


நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை காண் எந்தாய் .! 


என்றும் மேலும்.


வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே


வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்


நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்


ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.!


இவ் உலகில் மண்ணில் தோன்றும் தாவரங்கள்  முதற்கொண்டு பஞ்ச பூதங்களிலும் உயிர்பெற்று வாழ்கின்ற எல்லா உயிர்களையும் இயக்குகின்றவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே  என்ற உண்மை அறிந்து கொண்டவர் வள்ளல்பெருமான்.

அதனாலே அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை கண்டு வாடியவர் வள்ளலார்.அதனால்  அவ்வுயிர்களைக் காப்பாற்றும் வரத்தை எனக்கு வழங்குதல் வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டுகின்றார். ஆண்டவரும்  தந்துவிடுகின்றார்.


*ஆன்மா  என்னும் உள் ஒளி*!


ஆன்மா என்னும் உள் ஒளியை இவ்வுலகில் வாழ்வதற்கு அனுப்பியவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையையும் அறிந்து கொண்டவர் வள்ளலார்.


உடம்பின் தோற்றங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஆன்ம ஒளி. உயிர்ஒளி  ஒரே ஒளித் தன்மை உடையது.

எனவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையின் உண்மை உணர்ந்து ஒவ்வொரு மனித தேகம் பெற்றவர்களும் ஒற்றுமை உணர்வை கடைபிடிக்க வேண்டும் என்கிறார்


எனவேதான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறார்.அதே நேரத்தில் எல்லாம் வல்ல  இயற்கை உண்மை தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து அருளைப் பெறுவதற்கு முக்கிய தடையாக உள்ளதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.


*வள்ளலார் நமக்காக சொல்லிக் கொடுக்கும் விண்ணப்பம்.*


எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!


இது தொடங்கி எக்காலத்தும் *சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். 

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்*.


எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!


தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்! 


மேலே கண்ட விண்ணப்பத்தை தினமும் சன்மார்க்க  சங்க வழிப்பாட்டில் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.சாதி சமய மதங்களின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களைத் தவிர்த்து.சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க தவறிவிடுகிறோம்.


முதலில் நாம் நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருள்பெற்றுக் கொண்டால் தான் உலக உயிர்களின் துன்பத்தை போக்க முடியும் என்பதால் நீ அடைந்து விலக்குக மகிழ்க என்கிறார்.


அருளைப் பெறுவோம் சுத்த சன்மார்க்க சுகநிலைப்பெற்று உத்தமன் ஆகி ஓங்குவோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு