அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

ஓர் ஒளி உதயமானது ! பாகம் 3.

 

ஓர் ஒளி உதயமானது ! பாகம் 3

*வள்ளலார் கொள்கைகள்*

1.கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! அவரை உண்மை அன்பால் ஒளி ( ஜோதி) வடிவில் வழிபடவேண்டும்.

2.சிறிய தெய்வ வழிபாடுகள் கூடாது.அத்தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யக்கூடாது.

3. புலால் உண்ணல் ஆகாது.

4.சாதி.சமய.மதம் முதலிய வேறுபாடுகள் கூடாது.

5. எவ்வுயிரையும் தம் உயிர்போல் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கைகொள்ள வேண்டும்.

6.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்சவீட்டின் திறவுகோல்.

7.வேதங்கள்.ஆகமங்கள்.புராணங்கள்.இதிகாசங்கள்.சாத்திரங்கள் யாவும் உண்மையைத் தெரிவிக்க மாட்டாது.

8.இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது.கருமாதி திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம்.

9.கணவன் இறந்தால் மனைவி தாலிவாங்க கூடாது.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது.

10.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

போன்ற புரட்சிகரமான கொள்கைகளை வெளியிடுகிறார். 

*சாதி சமயம் மதங்கள் யாவும் பொய்யானது என்று உலகில் முதன்முதலில் குரல் கொடுத்தவர்தான் வள்ளல்பெருமான்*

*தருமச்சாலை தொடக்கம்* 

வள்ளலார் கொள்கையில் முதன்மையானது் சீவகாருண்யம். சீவகாருண்யத்தை இருவகையால் வற்புறுத்துவார்.

ஒன்று கொலை தவிர்த்தல் புலால் மறுத்தல்.

மற்றொன்று அற்றார் அழிபசி தீர்த்தல் என்பதாகும்.

ஏழைகளின் பசிப்பிணியைப் போக்குவதற்காக  வடலூரில் சத்திய தருமச் சாலையை 23-05-1867 இல் பிரபவ வைகாசி 11 ஆம் நாளில் நிறுவினார்கள்.

வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பு இன்றுவரை ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகிறது.1870 ஆம் ஆண்டுவரை தருமச்சாலையிலேயே வள்ளல்பெருமான்  தங்கினார்கள்.தருமச்சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாகவே வடலூருக்குத் தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பத்திற்கு சென்று அங்கேயே தங்கி விடுகின்றார்.

அவர் தங்கிய அந்த இடத்திற்கு *சித்தி வளாகம்* என்ற பெயரை வள்ளலாரே  சூட்டுகின்றார்.

1870 ஆண்டுமுதல் 1874 ஆம் ஆண்டு சித்தி பெறுகின்றவரை மேட்டுக்குப்பத்திலே உறைவிடமாக கொள்கிறார்கள்.

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை*

இயற்கை உண்மைக் கடவுளான  அருட்பெருஞ்ஜோதி யை ஒளிவடிவில் கண்ட வள்ளல்பெருமான். ஒளி வழிபாட்டிற்காக வடலூரில் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* *எண்கோண வடிவில் உலக அதிசயத் தோற்றத்துடன் கூடிய சத்திய ஞான சபையை*. 25-01-1872. பிரசோற்பத்தி தைமாதம் 13 ஆம்நாள் வியாழக்கிழமை பூச நன்னாளில் தொடங்கி வைத்துள்ளார்.

சாதி.சமயம்.மதம் போன்ற கொள்கைகள் இல்லாத. அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒளி வழிப்பாட்டு முறையை. உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைத்துள்ளார். அங்கே சாதி சமய.மதம் போன்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்கள்.

அபிஷேகங்கள் ஆராதனைகள்.படையல்கள்.மாலை மரியாதைகள்.மணிஓசைகள் எதுவும் கிடையாது. உண்மை அன்பால் சோதிதரிசனம் மட்டுமே கண்டு களிக்க வேண்டும் என்ற பொது நோக்கத்தோடு ஒளி வழிபாட்டுத் தரிசனம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

*மரணம் இல்லாப் பெருவாழ்வு*

*மனிதன் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்* என்பதற்காகவே மனிதனுக்கு உயர்ந்த அறிவை இறைவன் படைத்துள்ளார். உயர்ந்த அறிவை பயன்படுத்தி இறைவன் சொல்லியவாறு  வாழ்ந்தும் காட்டுகிறார் வள்ளல்பெருமான்.

மேட்டுக்குப்பத்தில் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நான்கு ஆண்டுகளாக  இடைவிடாது தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று *ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் செய்து கொள்கிறார்.*

ஒளி உடம்பு பெற்றால் மட்டுமே இறைவனைக் காண முடியும். இறைவனுடன் கலந்து கொள்ள முடியும் என்பது வள்ளலார் காட்டிய புதிய ஆன்மீக  நற்சிந்தனையாகும்.

மனித தேகமானது இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து இறை அருள் பெறுகின்ற போது சுத்த தேகம்.பிரணவ தேகம்.ஞானதேகம் என்ற மூன்றுவகையான தேக மாற்றங்கள் பெறமுடியும்.

அதற்கு *முத்தேக சித்தி என்று பெயர்*.வள்ளலார் முத்தேக சித்திப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் பெற்று மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து *பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்.*

*சாகாத்தலை.வேகாக்கால்.போகாப்புனல் அறிந்து சாகாக்கல்வி கற்று சாகாதவனே சன்மார்க்கி என்பது வள்ளலார் வாக்குமூலமாகும்.* இவ் உண்மைகள் யாவும் *ஆறாம் திருமுறையில்* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்ல சொல்ல வள்ளல்பெருமான் எழுதியதாகும். எனவேதான் நான் உரைக்கும் வார்த்தையாவும் நாயகன்தன் வார்த்தை என்று சொல்லுவார்.

ஒன்றில் இருந்து ஐந்து திருமுறைவரை வள்ளலார் சுத்ததேகம்.பிரணவ தேகத்தில்  எழுதியது.ஆறாம் திருமுறை மட்டும் ஞானதேகத்தில் எழுதியது.

மனித்தேகம் பெற்ற அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை முழுமையாக கடைபிடித்து. இறை அருள் பெற்று  என்போல்  இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்பதே வள்ளலாரின் அன்பான தயவான கருணையான வேண்டுதலாகும்.

வள்ளல்பெருமான் 647 கோடி சித்துக்கள் கைவரப்பெற்றவர் அவரின் அருள் வாழ்க்கையில் உலக மக்களின் நன்மைக்காக பல அற்புதங்களை செய்துள்ளார்.சுயநலத்திற்காக எந்த சித்துக்களையும் செய்தது இல்லை.

*நேரடி ஒலி ஒளி பரப்பு செய்த்து.!*

சிதம்பரம் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா ஒவ்வொரு வருடமும்சிறப்பாக நடைபெறுவது வழக்கம் தருமச்சாலை அன்பர்களுடன் வள்ளலார் சென்றுவருவது பழக்கமாக இருந்தது வள்ளலார் அருள் பெற்றவுடன் வெளியில் எங்கும் செல்வதில்லை.சிதம்பரம் திருவிழாவைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த அன்பர்களின் மனநிலையை அறிந்து கொண்ட வள்ளலார்.

தருமச்சாலை சுவற்றில் ஒரு வேட்டியை கட்டச்சொல்லி அன்பர்களை முன்னால் அமரவைத்து சிதம்பரத்தில் தடந்துகொண்டு இருந்த நிகழ்ச்சியை வடலூர் தருமச்சாலையில் எந்தவிதமான கருவிகள் மின் இனைப்புகள்  இல்லாத அக்காலத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து காட்டினார் வள்ளல்பெருமான்.வள்ளலாரின் அருள் ஆற்றலுக்கு இதுவே மாபெரும் சான்றாகும்.

*கொடியேற்றி உபதேசம் !*

22-10-1873 ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசித் திங்கள் 7 ஆம்நாள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முதன் முதலாக சுத்த சன்மார்க்க சங்கத்தின் உண்மைக் கொள்கையை  வெளிப்படுத்தும் முகமாக. மஞ்சள் வெண்மை கலந்த வண்ணங்களான *ஆன்மாவின் தன்மையை உணர்த்தும்* கொடியை வெளிமுகத்தில் கட்டி  நீண்ட உபதேசம் ஒன்றையும் செய்து அருளினார்கள்.

முடிந்த முடிபான சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கொண்ட அருள் நிறைந்த  உண்மை மகாஉபதேசமாகும்.திருஅருட்பாவில் உள்ளது படித்து தெரிந்து கொள்ளவும்.

*இறைவனுடன் கலந்தார்*

30-01-1874 ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாத்த்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து.இதைத் தடைபடாது ஆராதியுங்கள்.

இந்தக்கதவைச் சாத்திவிடப் போகின்றேன்.இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது  தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் *நினைந்து நினைந்து* என்னும் தொடக்கமுடைய ஞானசரியை 28  பாசுரங்கள் அடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வபாவனையை இந்த தீபத்திற் செய்யுங்கள்.நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.

நான் உள்ளே பத்து பதினைந்து தினம் இருக்கப் போகின்றேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு  வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.

என்னைக் காட்டிக்கொடார் என்று சொல்லிவிட்டு  திரு அறைக்குள் சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து கொள்கிறார்.

*வள்ளலாருக்காக  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் (வெயிட்டிங் ) காத்திருக்கும் அதிசயம்* நடந்தது

வள்ளலார் பதிவுசெய்துள்ள பாடல் ! 

என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் இன்று வந்து நான்இருக்கும் இடத்தில் அமர் கின்றார்

பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே எனது பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்

தன்சாதி உடைய பெருந் தவத்தாலே நான்தான் சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே

மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின் தனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே.! 

என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார். 

மேலும்...

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு

மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு!  

என்றும் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத தேகம் பெற்றேன் என்றும் பதிவு செய்கின்றார்.

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே கனலாலே புனலாலே கதிராதியாலே

கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் என்தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே ! 

என்பன போன்ற பல நூறு பாடல்களின் வாயிலாக திருஅருட்பா ஆறாம் திருமுறையில் மரணத்தை வென்ற வள்ளலார்.அனைவரும் வெல்ல முடியும் என்ற உண்மை அனுபவங்களை தெரியப்படுத்துகின்றார். 

வள்ளலார் 51 ஆம் வயதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் அருள் ஒளி தேகத்தோடு கலந்து கொண்டார். நாமும் வள்ளலார் கொள்கைகளை பின்பற்றி மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதே வள்ளல்பெருமானுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக