புதன், 21 ஆகஸ்ட், 2019

சன்மார்க்கத்தை மாற்றாதீர்கள் !

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
                   *மாற்றாதீர்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*இசையாமல்  போனவர் எல்லாரும் காண இறவாப் பெருவரம் நான் பெற்றுக் கொண்டேன்*
*வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு*
*நசையாதே என்னுடைய நண்பது வேண்டில் நன்மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம் தன்னில்*
*அசையாமல் நின்று அங்கே........* அருட்காட்சி என்ற தலைப்பில் இரண்டாவது பாடலாக வள்ளலார் நமக்காக எழுதிய பெரிய அறிவுரை இது. சன்மார்க்கத்துக்கு இசையாமல் அதிலிருந்து கொண்டே அலைந்து திரிபவர்கட்காக சொல்லப்பட்ட வரி இது. பெருமானாரின் இளவயது முதல் ஏற்பட்ட அனுபவத்தை ஏற்காதவர்கட்கு நடுவில், அவர்கள் காணும்படியாக இறவா வரத்தை தான் பெற்றதையும், வசை(குற்றம்)யாதும் இல்லாத மேற்குதிசை உணர்த்தும் பொன்வண்ணம் (ஏமசித்தி-பொன்னுடம்பு) பெற்றதையும், நசைவு (ஈரம்) கொண்டவர்கள் என் அன்பு வேண்டில் *நன்மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம் தன்னில் அசையாமல் நின்று* தயவால் உன்னை உயர்த்திக்கொள் அவமானப்படாதே எனச் சொல்கிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
சன்மார்க்கம் என்பது பறவை மார்க்கம் என உரைநடையில் எழுதுகிறார். பறவை மார்க்கம் என்பது என்னவென்னில், மிருகங்களோ மனிதர்களோ ஒரே இடத்திற்குச் செல்ல வேண்டுமானால் அவை வளைந்தும், நெளிந்தும் செல்லும். தேய்ந்த பாதையில், குளம், குன்றுகள் இருந்தால் அவைகளைச் சுற்றிக் கொண்டும், சில இடங்களில் போக வேண்டிய இடம் மேற்கு திசையில் இருந்தாலும் கிழக்கிலும் தெற்கிலும் வடக்கிலும் கூட சுற்றிக்  கொண்டு போக நேரிடும். ஆனால் பறவைகளோ அடைய வேண்டிய இடத்தை ஒரு நேர்க்கோட்டில் விரைந்து, பறந்து அடைந்துவிடும். செல்ல வேண்டிய இடத்தை பார்த்துக் கொண்டே செல்லும். ஒரு கல் தூரத்திலுள்ள இடத்தை கடக்க பறவை ஒரு கல் தூரம் மட்டுமே பறந்து கடக்கும். ஆனால் மற்றவை மூன்று கற்கள் தூரம் கூட நடக்க வேண்டியிருக்கும். இது உண்மை!
==========================
ஆன்மிகத்தின் குறிக்கோளான இறைநிலையடைதல் என்பது - சன்மார்க்கத்தில் - ஜீவகாருண்யத்தின் துணை கொண்டு விரைந்து அடையலாம். மற்ற மார்க்கங்களில் நெடுந்தூரப் பயணம் (விரதம், ஜெபம், சரியை, கிரியை, இயமம், நியமம்) செய்ய வேண்டியிருக்கும். இந்தப் பறவைகள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவும் எப்படி துணை புரிந்தது யென்னில்...
நாம் உண்ணும் தானியங்கள், பழங்கள் போன்றவைகளை மனிதனுக்கு முன்னால் தோன்றிய பறவையினம் உணவாகக் கொண்டு - எவையெல்லாம் உயிர் வாழ்வதற்கு தகுதியான உணவோ அவற்றை தம் கூடுகட்குக் கொண்டு சென்றும், உண்டும், எச்சமிட்டும் மீண்டும் அத்தாவரங்கள் இப்பூமியில் முளைக்க வழி செய்தன. ஒவ்வாதவை - விஷத்தன்மை உள்ளவைகளை உண்ட பறவைகள் மரணமுற்று அத்தானியம், பழம் போன்றவைகளை முளைக்காமல் செய்து நம்மைக் காத்தன! ஒரு ஊருக்குள் செல்லும் போது நம்மை முதலில் வரவேற்பது அங்குள்ள பறவைகளின் சப்தமாகத்தான் இருக்கும். இப்படிப் பல குணங்களைக் கொண்ட  பறவைகட்கு இரண்டு சிறகுகளை இறைவன் படைத்தான். இதே நோக்கத்தில் வள்ளலாரும் பறவைமார்க்கமாம் சன்மார்க்கத்திற்கு சிறகுகள் ஜீவகாருண்யமும்,  சத்விசாரமுமே என்றார்! அதன் மூலம் நாம் பெற வேண்டியது ஆன்மநேயமும் ஆன்மலாபம் ஆகிய இரண்டு மட்டுமே என்கிறார். சன்மார்க்கத்தில் இவ்வளவே!
~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தப் பறவைகள் தத்தம் கூடுகளில் அப்படியே அமர்ந்திருந்தால் அதன் சிறகுகள் கூட மிகுந்த பாரமாகத் தெரியும். ஆனால் சிறகுகளை விரித்துப் பறக்கும் பறவைக்கு வானம் கூடத் தொடும் தூரத்தில் இருக்கும். மனிதர்கட்கும், மிருகங்கட்கும் கைகள், கால்கள் போன்றவை வித்தியாசமான நீளம் வளைவுகளைக் கொண்டிருக்கும். ஆனால் பறவைகளின் சிறகுகள் இணையாக இருப்பதைப் போல ஜீவகாருண்யமும், சத்விசாரமும் இணையானதே. அப்படி இருக்கும் போது ஆங்காங்கே பட்டிமன்றம் என்ற ஒன்றை இறக்குமதி செய்து வள்ளலார் சொன்னதில் எது உயர்ந்தது என ஒரு கூட்டத்தார் பேச இன்னொரு சாரார் அதையே தாழ்ந்தது எனப் பேச எப்படி சன்மார்க்கத்தினர் அனுமதிக்கின்றனர்? *நீ யார்?* எனக் கேட்டால் பதில் சொல்ல எந்த மனிதனாலும் முடியாத போது வள்ளலார் எழுதிய அருட்பாவிலுள்ளதை உயர்த்தி ஒருவரும், தாழ்த்தி இன்னொருவரும் பேச எப்படி மனம் வருகிறது?  பல்வேறு மேடைகளில் பட்டிமன்ற நிகழ்வுகள் இருப்பதால் நாமும் அதற்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுவதா பட்டிமன்றம்? அவர்களில் எவருமே இறைவனை பற்றி பேசாதவர்கள். உங்களை வழிநடத்தும் பெருமானார் யாவரும் பெற்றிடாப் பேறு பெற்றவர். தன்னை வெளிக்காட்டாது மறைத்து இருந்தவர். அப்படியிருக்க அவர் வழியில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் நாம், பேசியமர்ந்தவுடன் இன்னொருவரைப் பார்த்து புன்னகையுடன் நான் வாதிட்டேன் மிக அற்புதமாயிருந்ததல்லவா எல்லோரும் கை தட்டினார்களே அது போதும் என்பர்!
==========================
உதாரணமாக:- வள்ளலார் எழுதியவைகளை இரண்டாக்கி - ஆறாம் திருமுறையே உயர்ந்தது- போன்ற தலைப்பில் வாதிட வழி செய்வதும், மேடையமைப்பதும், கூட்டம் கூட்டுவதும் நியாயமே என்பது பலரின் நினைப்பு. அப்படியானால் வள்ளலாரே பார்வையிட்டு ஒன்று முதல் நான்கு திருமுறைகளையும் பதிப்பித்தாரே அது ஏன்? அவரைவிட அதிகமாக தெரியும் என்பதாலா? இல்லை இவர்கள் வேறு IDEPLOGY யை சார்ந்தவர்கள் அவ்வப்போது பொழுதுபோக்குக்காக வந்து பேசுகிறார்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~
*பொருட்பதம் எல்லாம் புரிந்து மேலோங்கிய அருட்பதம் அளித்த அருட்பெருஞ்ஜோதி (அகவல் 323)*
இவர்கள் ஐந்து திருமுறைகளிலுள்ள பதங்கட்கெல்லாம் பொருள் புரிந்து அருட்பதம் அடைந்து விட்டார்களா? ஐந்து திருமுறைகளைப் பிரித்து அதைப் படிக்காமல் கூடுகளில் அமர்ந்துள்ள பறவைகள் சிறகை விரித்து பறக்காமலேயே வானத்தை தொட நினைக்கின்றதா?
*எட்டிரண்டு அறிவித்து என்தனை ஏற்றி பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த்தந்தையே (அகவல் 1132)* என்ற வரியில் கண்டபடி இவர்கட்கு எட்டிரண்டு அறிவிக்கப்பட்டு, இப்போது பட்டிமண்டபத்தில் வந்தமர்ந்துள்ளனரா? நான்கு திருமுறைகளை பதிப்பித்து ஆறு திருமுறைகளை எழுதி தீர்ப்பு வழங்கிய நீதியரசராம் வள்ளலார் புத்தகத்தை - கீழே சாதாரண எழுத்தர்கள் தீர்ப்பை விமர்சிப்பதும், மாற்றமுனைவதும் தவறு!
==========================
ஒன்றைப்புரிந்து கொண்டு செயல்பட்டால் நன்மை பயக்கும். பறவை ஒரு கிளையின் மீது அமரும்போது அந்தக்கிளை உடைந்து விழுந்து விட்டால் என்ன செய்வது என பயப்படாது. காரணம் அது கிளையை நம்பி அமரவில்லை. தன் சிறகை நம்பி அமர்கிறது. கிளை உடையும் போது அது பறந்துவிடும். ஆனால் அக்கிளையிலுள்ள அணில், குரங்கு போன்றவை கிளையுடன் கீழே விழும். பறவைகள் நானும் அணில் என்று நினைத்து கீழே விழுந்ததாக சரித்திரம் இல்லை.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*வாய்ஜாலம் காட்டும் பட்டிமன்றம் எனும் கிளையை நம்பி சன்மார்க்கம் இல்லை. ஜீவகாருண்யம், சத்விசாரம் என்னும் சிறகுகளை கொண்டதே சன்மார்க்கம். அதே மார்க்கத்தில் அசையாமல் நில்லுங்கள். மாற்றானைப் பார்த்து அதை மாற்றாதீர்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆக்கம்
*K.N.உமாபதி*
 ஆசிரியர், தீபநெறி
K.K.நகர், சென்னை
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு