புதன், 21 மார்ச், 2018

அருட்பெருஞ் ஜோதி!

அருட்பெருஞ்ஜோதி !
             அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
             அருட்பெருஞ்ஜோதி !
     வள்ளல் பெருமான் ஆரம்பத்தில்
சமயப் பற்றுடன்தான் வாழ்ந்தார்களா?
   அல்லது வாழ்ந்து காட்டினார்களா ?

    ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு எனது பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.

       நமது வள்ளல் பெருமான்,
இறையே திருவாய்,
திருவே கருவாய்,
கருவே உருவாய் ,
உருவே இராமலிங்க வள்ளலாய் ,
ஆறுமாதக் குழந்தையிலேயே அஞ்ஞானத்திரை அறுந்து விழுந்திடவும்,

ஏழுவயதிலேயே அருளொளி கிடைக்கப்பெற்று இறைவனால் ஆட்கொள்ளப்பட்டும் ,
ஓடியாடி விளையாடும் குழந்தைப் பருவத்திலேயே முக்தியை எய்திய இளம் ஞானியாய் வாழ்ந்தவர்கள் நமது வள்ளல் பெருமான் , அதற்கு சாட்சி  அருட்பாவிலேயே தெளிவாக பலஇடத்தில் விளக்கி இருக்கின்றார்கள்.

   அப்படி ஞானத்தில் ஞானம் என்ற படியில் வாழுகின்ற ஒரு முக்திப்பெற்ற ஞானி சாதி மதம் சமயம் கடந்த ஒரு பரம்பொருளால் ஆட்கொள்ளப்பட்டு
வாழும் ஞானி , எங்கும் எதிலும் சிவத்தைக் காணும் ஞானி ,
தன்னை சமயத்தில் புகுத்திக்கொள்வார்களா ?

 நாம் இங்கு நன்றாக சிந்தித்து
பார்க்கும்பொருட்டு
பெருமான் வார்த்தைகளில் இருந்து ஒருசிலவற்றை இப்பொழுது பார்ப்போம்;

    சமரச சுத்தசன்மார்க்க சத்தியப் பெருவிண்ணப்பத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
தாம் அறிவு ஒருசிறிதும் அற்று "சிற்றனுப் பசுவாய்" இருந்த நிலையில் இருந்து "
"பகுதிப் பேரணு உருவிலும்"பிறகு
"பூதப் பேரணு உருவிலும்" பிறகு
"பௌதிகப் பிண்ட வடிவிலும்"
 யாதொரு குறையும் ஏற்படாவண்ணம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உற்ற துணையாக இருந்து காத்து வளர்த்து ஆளாக்கியதை சொல்லும் போது,
   
       ஓடியாடும் சிறு பருவத்திலேயே எனக்கு "ஜாதிய ஆசாரம், ஆசிரம ஆசாரம், என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென அறிவித்து அவைகளை அனுட்டியாமல் என்னை தடைசெய்வித்து, அப்பருவம் ஏறும்தோறும் ஏறும்தோறும் எனதறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேனிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்க வைத்தருளினீர் .
  "எனக்கு வாலிபப் பருவம் தோன்றுவதற்கு முன்னரே "எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக்கடவுள் ஒருவரே என்கின்ற மெய்யறிவை விளக்குவித்து அருளினீர்"

    அவ்வாலிபப் பருவம் தோன்றியபோதே சைவம்,வைணவம்,சமணம்,பவுத்தம் முதலாகப் பலபெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும், தெய்வங்களும்,கதிகளும்,
தத்துவசித்தி விகற்பங்கள் என்றும்,அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்தவேதங்கள்,ஆகமங்கள்,
புராணங்கள்,சாத்திரங்கள் முதலிய கலைகளெல்லாம் தத்துவ சித்தி கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே அறிவித்து அச்சமய ஆசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெய்துவித்தருளினீர்";
என்று ,

      பெருமான் தனது சிறுபருவத்திலேயே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான் கடவுள் என்று திருவருளால் உணர்த்தப் பெற்றிருந்தும்,பிறகு எதற்காக
ஒன்பது வயதில் கத்தகோட்ட முருகப்பெருமான்மீதும்,
பிறகு திருவொற்றியூர் பெருமான்மீதும்,
மற்றும் வைத்தீஸ்வரன் வைத்தியநாதசுவாமி,
தில்லை நடராஜர் முதலிய சைவசமய திருக்கோயில்களுக்கு அடிக்கடிச் சென்று அத்தலங்களில் அந்தந்த மூர்த்திகளின்மீது பற்றுவைத்து ஸ்தோத்திரங்களை மெய்யுருக இயற்றியும் அழுதும் தொழுதும்,பல ஆயிரம் பாடல்களை அருட்பா திரட்டாக கொடுத்தருளியுள்ளார்கள் என்று நாம் அவசியம் அறிந்து உணர்ந்திடல் வேண்டும்.

    வள்ளல் பெருமான் சைவ சமயத்தில் வாழ்வதற்கு என்று வந்தவராக இருந்தால்,
சைவ சமய சிவனடியார்களின் அடையாளச்சின்னமான "காவி வேட்டியும், சிவசொரூபமான ருத்திராட்சத்தையும் "இளம்வயதிலேயே அணிந்திருக்க வேண்டும் இல்லையா ?
இதுதான் இதற்குமுன் வந்த சிவனடியார்களாகிய நால்வர் முதல் அனைவரும் அணிந்திருந்த அடையாளங்கள் ஆகும்.

ஆனால் நமது வள்ளல் பெருமான் ஞானமே உருவானவர்கள் அதுமட்டுமல்ல வள்ளல் பெருமான்
இவ்வுலகிற்கு வருவிக்கவுற்றதன்
நோக்கமே இவ்வுலகில் இதுவரை இருந்த சமய மத மார்க்கங்கள் அனைத்தையும் சுத்தசன்மார்க்கம் என்ற ஒரு சத்திய ஞானமார்க்கத்தின் கீழ் கொண்டுவந்து இவ்வுலகை சுத்தசன்மார்க்க உலகமாக மாற்றி ஆன்மாக்கள் அனைத்தையும் சுத்தசன்மார்க்க வாழ்வில் வாழச் செயவதற்கு என்பதேயாகும்.

     அப்படி வந்த நமது பெருமான் சமயமத மார்க்கங்களின் அடையாளங்களை அணியாமல் ஞானாச்சார வாழ்விலேயே வாழ்ந்தார்கள்.

அதனால்தான் சைவ அடையாளமாகிய" காவியும் ருத்திராட்சமும் " அணியவில்லை என்பதுவும் , அதுமட்டும் இல்லாமல்
காவிக்கும் வெண்மைக்கும் பெருமான்கூறும் விளக்கத்தையும்
பாருங்கள்;

 காவி என்பது தத்துவங்களை செயித்து தயவை பெறுவதற்கான யுத்தக்குறி அல்லது அடையாளமாக தரிப்பது காவியாகும்.

ஆனால் வெள்ளை என்பது அந்த தயவைப் பெற்றதற்கு அடையாளமான வெற்றிச் சின்னமாகும்  என்று

காவி தயவைப் பெறுவதற்கான முயற்சி,வெள்ளை தயவைப் பெற்றுக்கொண்டதற்கான வெற்றி;
என்றும் விளக்கம் தெரிவித்துள்ளார்கள்;

இதுவே பெருமான் மற்ற அருளாளர்களில் இருந்து மாறுபட்டு தயவின் அடையாளமாக சிறுவயதுமுதல் வெள்ளையாடை அணிந்ததன் காரணம் என்பதையும் உணருகின்றோம்.

 அருட்பா அகவலில்கூட ,
"சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி" என்று எனக்கு சிறுவயதிலேயே சாதி சமயம் மதம் எல்லாம் பொய் என்று ஆண்டவர் உணர்த்தியதாகவும் சொல்லுகின்றார்கள்;

  இப்படி இளம்வதிலேயே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான் கடவுள் என்றும் ,சாதி மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யென்றும் உணர்த்தப்பெற்ற பெருமான் ஏன் சிறுவயதுமுதல் சைவ சமயத்தில் இருந்து பலக்கடவுள்களை பாடித் தோத்திரம் செய்தார்கள் ?

   இங்குதான் உற்று கவணித்தல் வேண்டும், பெருமான் தான் வந்தநோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதும்,
இத்தனை ஆண்டுகாலம் இவ்வுலகில் நிலைகொண்டிருந்த அனைத்து சமய மதங்களையும் ஒருநிலைப்படுத்த வேண்டும் என்பதும்,
புதியதாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மையை வெளிப்படுத்தும் சுத்தசன்மார்க்கம் இவ்வுலகில் நிலைபெறவேண்டும் என்பதற்காகவும்,

   ஒரு ஆன்மா தான் அடையவேண்டிய பேரின்ப பெருவாழ்வாகிய ஆன்மலாபத்தை அடைவதற்கு  இந்த சமயமும் மதமும் முற்றும் பயனற்றது என்பதை இவ்வுலகவர்களுக்கு வெளிப்பட உணர்த்த வேண்டும் என்பதற்காகவே , வள்ளல் பெருமான் அப்போது தழைத்து ஓங்கி இருந்த புலைகொலை தவிர்த்த சைவ சமயத்தில் தன்னைப் புகுத்தி
திருவருள் துணைநிற்க இவ்வுலகவர்களுக்காக வாழ்ந்து காட்டினார்கள்.

முடிவில் உண்மையை வெளிப்படுத்தும் காலம் வந்தவுடன்,
சுத்தசன்மார்க்கத்தை தோற்றுவித்து,
இவ்வுலகத்திற்கு உண்மைக்கடவுளை காட்டுவித்து , அக்கடவுளுக்கு என்று ஒரு ஆன்மதிருக்கோயிலாக சத்தியஞானசபையை நிறுவித்து,
உண்மைக்கடவுளை அடையும் எளியவழி ஜீவகாருண்யமே என்பதை உணர்த்த "சத்திய தருமச்சாலையையும்" தோற்றுவித்து,
 
      சாதியும் மதமும் சமயமும் எல்லாம் வீண்வீணே அதற்கு நானே சாட்சி என்பதை அறிவீர் என்று,
 தான் ஏன் இத்தனைகாலம் சமயத்தில் வாழ்ந்ததற்கான காரணத்தின் உண்மையை அப்போதுதான் நமக்காக வெளிப்படுத்துகின்றார்கள்.

  ஆம் நான் இத்தனை இண்டுகாலம் சமயத்தில் பற்றுவைத்து வாழ்ந்து வந்தேன் ஆனால் எந்தவிதப் பயனும் இல்லை , அச்சமயத்தை விட்டு வெளியே வந்தேன் , ஆண்டவர் எனக்கு அனைத்தையும் காட்டுவித்து என்னை இதுவரை யாரும் ஏறாத மேல்நிலைக்கு ஏற்றுவித்தார்கள்;

  நான் சமயத்தில் எவ்வளவு பற்றுவைத்திருந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும் ,
அதற்கு சாட்சியாக நான் இயற்றிய தோத்திரங்களையே கவணியுங்கள்,
அந்த தோத்திரத்தையும் மற்றவர்களுடைய தோத்திரத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று தாம் சமயக்கடவுள்கள்மீது ஏன் தோத்திரம்
இயற்றினோம் என்ற காரணத்தையும் இப்பொழுது வெளிப்படுத்துகின்றார்கள்.
     என்னை இந்த மேல்நிலைக்கு ஏற்றுவித்தது "தயவு"என்னும் சாதனமே என்று
தனது உண்மையை வெளிப்படுத்துகின்றார்கள்;

  ஆம் சகோதரர்களே நமது பெருமான் சிறுவயதிலேயே எல்லா ஞானத்தையும் பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் கடவுள் என்பதை அறிந்து அனுபவித்திருந்தாலும், நமக்காக நமது உலகவருக்காக அவர்கள் சமய மதங்களை விட்டு வெளிவரவேண்டும் என்பதற்காக,
தான் சமயத்தில் இருந்து வாழ்ந்தேன் அதில் பயனில்லை ,
அந்த சமயத்தை விட்டு வெளியில் வந்தேன் சுத்தசன்மார்க்கம் சார்ந்தேன் ,அடைந்தேன் பெருவாழ்வு என்று தன்னையே சாட்சியாகவும்,
தனது வாழ்வையே காட்சியாகவும் காண்பித்து நம் அனைவருக்கும் மாற்றத்தை கொடுத்து வாழ்விக்க வேண்டும் என்றும், நாம் அனைவரும் சமயத்தைவிட்டு வெளிவரவேண்டும் என்ற பெருங்கருணையில் சமயத்தில் வாழ்வதுபோன்று வாழ்ந்து காட்டினார்கள் நமது பெருமான் என்பதை அறிவோம் உணர்வோம்,சுத்தசன்மார்க்கம் சார்வோம்;
.....நன்றி,
......வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ,
........பெருமான் துணையில்,
..........வள்ளல் அடிமை,
.............வடலூர் இரமேஷ்;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு