ஞாயிறு, 11 மார்ச், 2018

இறந்தால் அடுத்த பிறவி என்ன ?

இறந்தால் அடுத்த பிறவி என்ன ?

நாம் வாழும் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன. இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்.எல்லாம் அவன் செயல்  என்று கடவுள் மேல் பாரத்தை சுமத்துகின்றோம்.எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம் என்று சொல்லி ஆறுதல் அடைந்து கொள்கிறோம்.எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம் என்றால் நமக்கு என்ன வேலை.நாம் ஏன் உழைக்க வேண்டும்.குடும்பம் குழந்தைகள் என ஏன் வாழவேண்டும். எதுவுமே தேவை இல்லையே ! கடவுளுக்கும் நாம் வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை..

கடவுள் வேலை என்ன ?

கடவுள் ஆன்மாவை அனுப்பி. ஆன்மா இந்த பஞ்ச பூத உலகத்தில் வாழ்வதற்கு உயிரும் உடம்பும் கொடுத்து .ஏழு வகையான பிறப்புகளை கொடுத்து .இறுதியில் உயர்ந்த அறிவுள்ள மனித பிறப்பு கொடுக்கப் பட்டுள்ளன.

மனிதன் தன் விருப்பம் போல் வாழ்வதற்கு. தேக சுதந்திரம். போக சுதந்திரம். ஜீவ சுதந்திரம் என்ற மூன்று  வகையான  சுதந்திரம் இறைவன்  கொடுத்துள்ளார். அதோடு கடவுள் வேலை நிறைவு பெறுகிறது.அதற்கு மேல் இவ்வுலகில் வாழும் வாழ்க்கை.நன்மை
தீமை அனைத்திற்கும் காரண காரியம் நாம் தான் என்பதை அறியாமல் .கடவுள் மேல் பாரத்தை போட்டு கண்ட கண்ட கடவுள்களை எல்லாம் சுற்றி சுற்றி வலம் வந்து.காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என பிச்சை எடுத்துக் கொண்டுள்ளோம்... இதுதான் தன்னைத் தான் அறியாமை என்பதாகும்.

இதைத்தான் தன்னை அறிந்து இன்பம் உற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்கிறார் வள்ளலார்.

தன்னை அறிந்தால் என்னை அறியலாம்.என்னை அறிந்தால் தன்னை அறியலாம்... என்பதை ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொண்டால் தான் ஆன்மாவில் இருக்கும் அறிவு வெளிப்படும்....

மரணம் ஏன் வருகின்றது.!

நாம் தவறு செய்வதால் மரணம் வருகின்றது. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தனர்.என்பார் வள்ளலார்.சரி மரணம் வந்தால் அடுத்தப் பிறப்பு என்னவென்றாவது தெரியுமா ? என்றால் அதுவும் தெரியாது.எதுவுமே தெரியாமல் அற்ப ஆசைகளுக்கு தன்னை அடிமைப் படுத்திக் கொண்டு வாழ்ந்து.எல்லாவற்றையும் மறந்து.எல்லாவற்றையும் இழந்து இறுதியில் அனைத்தையும் விட்டுவிட்டு  மரணம் வந்து மாண்டு போகின்றோம்...

இறந்தவனுக்கு இருப்பவனைப் பற்றித் தெரியாது.இருப்பவனுக்கு இறந்தவனைப் பற்றித் தெரியாது..ஆனால் இறந்தவன் சொர்க்கம்.கைலாயம்.வைகுண்டம்.பரலோகம் சென்று மோட்சம் அடைந்துவிட்டார்.இறைவனோடு ஐக்கியமாகி விட்டார் என்று பொய்யான புளுகு மூட்டைகளை கட்டிவிடுகின்றார்கள்.

உலகில் பட்டம்.பதவி.புகழ்.ஆட்சி.அதிகாரங்கள் ஆன்மீக அறிவு எவ்வளவு பெற்று இருந்தாலும். மரணம் அடைந்து விட்டால் அவன் இந்த உலகத்தை விட்டு எங்கும் செல்ல முடியாது.மறுபடியும் கண்டிப்பாக பிறப்பு உண்டு.என்ன பிறப்பு என்று எவனுக்கும் தெரியாது...

தகுதிக்குத் தகுந்த பிறப்பு உண்டு என்று வள்ளலார் சொல்லுகின்றார்...

அடுத்த பிறப்பு எப்படி பிரிக்கப் படுகிறது ?

நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும் நன்மை.தீமை என்று பிரிக்கப் படுகின்றன. அதற்கு புண்ணியம்.பாவம் என்று இரண்டு பெயர் உண்டு.

புண்ணியம் என்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாகவும்.பின் சுகமாகவும் விளங்கும் இதற்கு புண்ணியம் செய்துள்ளோம் என்று பெயர்..

பாவம் என்பது... ஆரம்பத்தில் சுகமாகவும் பின் துக்கமாகவும் இருப்பது பாவம் செய்துள்ளோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

அறிந்து செய்த பாவங்கள் அறியாமல் செய்த பாவங்கள் என இரண்டு விதமான பாவங்கள் உண்டு..

புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வாறு அடைகின்றன என்றால் ?
மனம்.வாக்கு.காயம்(உடம்பு) என்னும் மூன்றினாலும் அடைகின்றன..

மேலும்,...

 மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும். அவையாவன:-

மனத்தினால் பரதாரகமனம் பண்ண நினைத்தல், அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல், அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் - இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள்.

வாக்கினால்.... பொய்சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் - இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள்.

தேகத்தினால்...
 பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் - இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள்.

இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்.

பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள். அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்...என்பதாகும்.

அறிந்து செய்த பாவங்களும்.அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும் என்றால் !

 அறிந்த பாவங்கள் செய்தபின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின், "நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும், அகங்காரத்தாலும், செல்வச் செருக்காலும், தாக்ஷிண்ய உடன்பாட்டாலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே!" என்று பச்சாத்தாபப் பட்டுப் பெரியோர்களை யடுத்து, (வள்ளலார் ) அவர்கள் சொல்லிய அவ்வண்ணம் இச்சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்து புண்ணிய ஸ்தலங்களிற் (வடலூர் )சென்று வசித்து, இயன்ற அளவில் அன்ன விரயஞ் செய்தால் நீங்கும். மேலும், சத்தியற்றவர்களாயும் வார்த்திகர்களாயுமுள்ள அறிவு சார்ந்த  மனிதர்களுக்கு தொண்டு செய்தால் நீங்கும். மகான்கள் நேரிடாத பக்ஷத்தில், பச்சாத்தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து அவர்கள் தரத்திற் கொத்தவாறு இடைவிடாது இறைவனைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கும்.

அறியாத பாவங்கள் யாவெனில், நடக்குங் காலத்திலும், நீராடுங்காலத்திலும், சயன காலத்திலும், தனக்குத் தோன்றாமல் நேரிடும் பாவங்களாம். இதன்றி அவை மனத்திற்குப் புலப்படாமலும் உண்டாகும். இவைகள் யாவும் தினஞ் செய்யும்  பாராயணத்தாலும், ஸ்தோத்திரத்தாலும், விருந்துபசரித்தலாலும் தெய்வம் பராவலாலும் நீங்கும்.

பிராயச்சித்த முதலியவைகள் செய்யாவிட்டால் பாவங்களாலடையுங் கதி யென்ன?

இறந்த பின் பிறவிகள் என்ன ?

மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீரமுண்டாகும். வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும். தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்.

எனவே நம் மனித பிறப்பு. வாழ்க்கை மரணம் இல்லாமல் வாழ்வதற்காகவே இறைவனால் கொடுக்கப் பட்டது.

இந்த தேகம் போனால் இந்த மனித தேகம் கிடைப்பது என்பது உறுதி அல்ல...

அஜாக்கிறதையால் மரணம் வந்தால் மீண்டும் மனித பிறப்பு கிடைக்க வேண்டுமானால்.மேலே கண்டபடி வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்..

நம் வாழ்க்கை நம்மிடம் தான் உள்ளது...

தீதும் நன்றும் பிறர் தர வாராது...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ?

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு