அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 26 ஏப்ரல், 2012

மெய் மொழியும் ஒழுக்கமும் ! பாகம் ,4,

மெய் மொழியும் ஒழுக்கமும் ! பாகம் ,4,



வடலூரில் வள்ளலார் அவர்கள் -சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை ,--சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை,--சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் .என்ற அமைப்புகளை நிறுவி --இவைகள் யாவும் உலக பொது அமைப்பாக செயல்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறார் .

சத்திய ''தருமச்சாலை'',சத்திய ''ஞான சபை'' இவை இரண்டையும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய அன்பர்கள் மேற் பார்வையில் செயல் பட வேண்டும் ,பாது காக்கப் பட வேண்டும்,நிர்வகிக்க வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளையாகும் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை பாது காக்கும்,உரிமை உடையவர்களின் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார் .

சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் !

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம்,மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்று அறக் கைவிட்டவர்களும்;காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவர்களும்,கொலை புலை தவிர்த்தவர்களும்,ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள் .

சுத்த சனமார்க்க லட்சிய அனுபவ விருப்பம் உடையவர்களுக்கு கனவினும் மண்ணாசை,கனவினும் பெண்ணாசை ,சுழுத்தியுனும் பொன்னாசை முதலிய மூன்றும் கட்டாயம் இருக்கக் கூடாவாம்.அதே போல் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை அனைவரும்  எக்காலத்தும், எவ்விடத்தும்,எவ்விதத்தும் ,எவ்வளவும் விலகாமல் நிறைந்து ஆன்மாவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் அப்படி உண்மையுடன் இருந்தால் அவர்களுக்கு செயற்கையால்.உண்டாகும் ,-மரணம் ,பிணி,மூப்பு,பயம்,துன்பம் --இவை முதலியவைகளை தவிர்த்துக் கொள்வார்கள்.அதாவது --செயற்கையாகிய குணங்களை நன் முயற்சியால் தடுத்துக் கொலபவர்களுக்குக் கேவலாதிகார மரணம் நீங்கும்,

அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்.அருள் விளங்கும் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக் கூடும்.பரலோக போகமாகிய ஞான சித்திகளைப் பெற மாட்டார்கள்.என்பதை சுத்த சன்மார்க்கத்தைக் கடைபிடிப்பவர்களுக்கும் சங்கம் சாலை,சபையை கவனித்துக் கொள்பவர்களுக்கும்,அழுத்தமான கட்டளையை பிறப்பிக்கிறார் வள்ளலார் .

சாதவனே சன்மார்க்கி .--சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே யன்றி வேறில்லை ,சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன்--சாகாதவனே சன்மார்க்கி ,என்று அழுத்தம் திருத்தமாக தெரியப் படுத்தி உள்ளார் .

வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ,சாலை,சபையைப் ,பாதுகாக்கும் உரிமை உடையவர்களின் நன் நடத்தையைப் பற்றி மேலே தெளிவாக பதிவு செய்து உள்ளார் .

1865,ஆம் ஆண்டு சமரச வேத சன்மார்க்கம் என்று ஆரம்பித்து பின் ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்று வழங்கி,பின் ஞானசபை தோற்றுவித்து
ஞான சபை விளக்கப் பத்திரிக்கை வாயிலாக ;--

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் .

இன்று தொடங்கி,சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்,சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்,சங்கத்திற்கு ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும் பெயர் வழங்குதல் வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார் .

சங்கத்தின் வாயிலாக சாலை,சபை செயல்பட வேண்டும் என்றும் ,அதை வழி நடத்துபவர்கள் வள்ளலார் சொல்லிய ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் கட்டளை பிரப்பிக்ககிறார் .ஆனால் அவர் சொல்லியபடி யாரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களாக இல்லை என்பதை அறிந்து கொண்டு ,சாலையை லகுவாக நடத்துங்கள் என்று சொல்லிவிட்டு சபையை பூட்டி,சாவியை எடுத்துக் கொண்டு வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் என்ற ஊருக்கு சென்றுவிடுகிறார் ,

அங்கு வள்ளலார் மக்களுக்கு பல வகைகளில் பல முக்கிய செய்திகளை,விண்ணப்பங்களாக,வேண்டுகோளாக ,போதித்தது மட்டும் இன்றி எழுதியும் வைத்துள்ளார்கள்,பல பல, அற்புதங்களை செய்து பல உண்மைகளையும் உபதேசங்களையும்,சொல்லிக் கொண்டே வந்துள்ளார்

அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அற்புதப் பத்திரிகையும் வெளியிடுகிறார் ;

ஆண்டவரின் ஆணைப்படி ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் ,புனர்பூச நட்சத்திரத்தில் .உள் இருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து ''தடைபடாது ஆராதியுங்கள் ' இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம்,இனி கொஞ்சம் காலம் எல்லோரும்,ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ,

நினைந்து நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழுங் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து எத்துதுநாம் வம்மீன் உலகயிலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருணம் இதுவே .

என்னும் இருபத்திஎட்டு பாசுரங்ககளில் அடங்கிய பாடலில் கண்டபடி ,தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் ,நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் ,இனி எல்லா உடம்புகளிலும் புகுந்து கொவோம்.

நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம்,பார்த்து அவ நம்பிக்கை அடையாதீர்கள்,ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் ,யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் ,என்னைக் காட்டிக் கொடார்,சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம் ,நாம் திருக்கதவை மூடிஇருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார் .

தாம் சொல்லியபடியே திருஅறைக்குள் சென்று உள்ளே தாள் போட்டுக் கொண்டு,வெளியேயும் பூட்டுப் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார் அவர் சொல்லியபடியே அன்பர்கள் செய்கிறார்கள் ,.வள்ளலார் திருஅறைக்குள் சென்று சொல்லிய வண்ணம் இறைவனுடன் கலந்து விட்டார் .

வள்ளலார் மேட்டுக்குப்பம் திருஅறைக்குள் சென்ற செய்தி தமிழகம் முழுவதும் பரவி விட்டது.,அப்போது உள்ள கடலூர்{ஆங்கிலேயர் ஆட்சி } ஆட்சியாளருக்கு விபரம் அறிந்து அதிகாரிகளுடன் வந்து மேட்டுக்குப்பத்தின் திருஅறையை திறந்து சோதனை செய்கிறார்கள் , வள்ளலார் சொல்லியபடி வெறு வீடாகத்தான் இருந்தது .ஆதிகாரிகள் மக்கள் சொல்லியதை கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள் .உண்மையிலே வள்ளலார் மிகப் பெரிய அருளாளர் என்பதை ஒப்புக் கொண்டார்கள் .

மேலும் அதிகாரிகள் --வள்ளலார் ஏற்படுத்திய தருமச்சாலை ,ஞான சபையைப் பார்த்துவிட்டு தருமச்சாலையில் உணவளிக்க பணம் கொடுத்துவிட்டு,பயபக்தியுடன் விடைப் பெற்று சென்று உள்ளார்கள் எனபது செவிவழிச் செய்திகளாகும்.

அவர் சித்திப் பெற்றப் பின் மக்கள் கண்களில் நீர் வழிய அழுது புலம்பி கதறி,துடிதுடித்து வேதனை அடைந்தார்கள் .மனம் உடைந்தார்கள் இனிமேல் வள்ளலாரை எங்கு காண்போம் ,எப்படி காண்போம்,அவர் இல்லாமல் எப்படி வாழ்வோம்,என்று புலம்பி புலம்பி அழுது, ஓய்ந்து ,அவரவர்களும் அவரவர் ஊருக்கு சென்று விட்டார்கள் பின் என்ன நடந்தது என்பதை யாரும் அறிகிலர் .  

ஞானசபை ஜோதி தரிசனம் !

கொஞ்சம் காலம் கழித்து ,வள்ளலார் உடன் இருந்த சபாபதி குருக்கள் தனக்கு சாதகமாக ,வடலூரில் உள்ள சத்திய ஞான சபையை கைப்பற்றிக் ஜோதி தரிசனம் காட்ட ஆரம்பித்து உள்ளார் .,ஆரம்பித்ததுடன் அல்லாமல் ஞான சபைக்குள் உருவ வழிப்பாட்டு முறையும் கொண்டுவந்து விட்டார் ,இதை யாரும் அப்போது கண்டு கொள்ளவில்லை .அவர் செய்வதே பெரும் பாக்கியமாக கருதி விட்டார்கள் .

வள்ளலார் கொள்கைக்கு விரோதமாக அன்று முதல் 2010,ஆம் ஆண்டு வரை ஞானசபையில் சமயக் கோயில்களில் நடப்பது போன்ற வழிபாட்டு முறைகள் நடைப் பெற்றுக் கொண்டு வந்துள்ளன ,

வள்ளலார் சித்திப் பெற்ற பின்பு கொஞ்சம் காலம் சன்மார்க்க அன்பர்கள் தருமச்சாலையையும்,சங்கத்தையும்.நடத்தி வந்தார்கள்.அவர்களால் திறம்பட நடத்த முடியாமல் .அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டார்கள்,அரசாங்கம் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைத்து விட்டது,அறநிலையத்துறை நிர்வாகம் சமயக் கோயில்கள் போல் வடலூர் தெய்வ நிலையங்கள் என்ற பெயரில் நிர்வாகம் செய்து வருகிறது .

சங்கம் சாலை சபை ,உலகப் பொது அமைப்பாக இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கொள்கைகளாகும் .அதற்கு உண்டான ஆதாரங்கள் அவர் எழுதிய திருஅருட்பாவில் தெளிவாக உள்ளது.இதை சன்மார்க்க அன்பர்கள் பலமுறை அரசாங்கத்திடம் போராடியும் ,அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை .

அரசாங்கம் சங்கம் சாலை,சபையைத் திருப்பிக் கொடுத்தாலும் யாரிடம் கொடுப்பது என்பது கேள்விக் குறியாக உள்ளது,சன்மார்க்க சங்க அன்பர்களிடம் ஒற்றுமை இல்லை ,வள்ளலார் சொல்லிய ஒழுக்கம் நிறைந்தவர்கள் வெளியே வருவதில்லை ,மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ முடியா விட்டாலும்,வள்ளலார் கொள்கைகளை முற்றும் தெரிந்தவர்களும் எதிலும் பற்று இல்லாதவர்களும் ,மேலே குறிப்பிட்ட ஒழுக்கம் உடையவர்கள் -- மனிதன் மனிதனாக வாழும் தகுதி உடையவர்கள் வசம வடலூர் சங்கம் சாலை சபையை ஒப்படைக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.அவர்கள் மனித தரத்தில் சங்கம் சாலை ,சபையை நடத்துவார்கள்.

ஏன் என்றால் வள்ளலார் சங்கம் சாலை சபை தோற்றுவித்த நாள் முதல் இன்று வரை ,வள்ளலார் கருத்துப்படியும் ,கட்டளைப் படியும் செயல் படுகிறதா என்றால் இல்லை என்ற பதில்தான் அனைவருடைய உள்ளத்தில் இருந்தும் வருகிறது .

இதற்கு என்ன செய்வது .வள்ளலார் தோற்றுவித்த சங்கம், சாலை சபை, இதை எப்படி காப்பாற்றுவது என்பது அனைத்து சன்மார்க்க அன்பர்களின் வேதனை நெருப்பாக கனைந்து கொண்டு உள்ளது .

வடலூர் நிர்வாகம் அறநிலையத்துறை வசம உள்ளது ,அதில் அரசியல் வாதிகள் உள்ளே நுழைந்து கொண்டு தவறான பாதையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .அதற்கு அரசாங்கமும் ,அறநிலையத்துறையும் துணை போகின்றன ,இதை தமிழக முதல்வர் கவனிக்க வேண்டியது அவசியமும் அவசரமும் என்பதை இதன் மூலம தெரிவித்துக் கொள்கிறேன் .

தொடரும் ;--


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக