*முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது!*
பாகம்- 3...
*சுத்த சன்மார்க்கக் கொள்கையை தெரிந்து கொள்ள வருபவர்கள், வள்ளலார் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் உள்ள உண்மை ஒழுக்க நெறிகளை முதலில் ஊன்றி படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்*
*முன் தேகம், பின் தேகம் உண்டு என்பது எவ்வாறு என்பதை வள்ளலார் சொல்லுவதை கவனித்து ஜாக்கிரதையாக வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்*
*வள்ளல்பெருமான் கேள்வி பதில்!*
12,*முன்தேகம் உண்டென்பது எப்படி யென்னில்:-?*
*ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டா னென்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவது போல்;*
*இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய வேண்டும்.*
*ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்றறியவேண்டும்.*
13,*சீவர்கள் முன்தேகத்தில் செய்த பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வருமென்பது எப்படியென்னில்:-?*
*ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள்.*
*அதுபோல், ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென் றறிய வேண்டும்.*
கீழே உள்ள நீண்ட கேள்வி பதிலை ஊன்றி கவனிக்கவும் !
14,*முன் பிறப்பில் சீவகாருணிய ஒழுக்கத்தை விட்டுத் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களை இந்தப் பிறப்பில் பசி தாகம் பயம் முதலிய வற்றால் துக்கப்படச் செய்வது கடவுள் அருளாக்கினை நியதியென்றால், அந்தச் சீவர்கள் விஷயத்தில் காருணியம் வைத்து ஆகாரம் முதலியவை கொடுத்து அவர்கள் துக்கத்தை மாற்றுவது கடவுள் அருளாக்கினைக்கு விரோதமாகாதோ என்னில்:-?*
*ஆகாது. அரசன் தன் கட்டளைக்கு முழுதும் விரோதித்து, கால்களுக்கு விலங்கிடப் பட்டுச் சிறைச்சாலையில் இருக்கின்ற பெரிய குற்றவாளிகளுக்கும் தன் சேவகர்களைக் கொண்டு ஆகாரங்கொடுப்பிக்கின்றான்.*
*அதுபோல், கடவுள் தம் கட்டளைக்கு முழுதும் விரோதித்துப் பலவகையால் பந்தஞ் செய்யப்பட்டு நரகத்திலிருக்கின்ற பாவிகளுக்கும் தம் பரிவார தேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக் கின்றார்.*
*அரசன் தன் கட்டளைப் படி நடவாமல் வேறுபட்ட சாதாரண குற்றமுடையவர்களைத் தன்னாலவர்கள் பெறத்தக்க லாபத்தைப் பெறவொட் டாமல் உத்தியோகத்தினின்றும் நீக்கி அவர்களுக்கு நல்லறிவு வருவிக்கின்ற நிமித்தம் அவ்விடத்தைவிட்டு வேறிடங்களில் வெளிப்படுத்துகின்றான்.*
*அவர்கள் உத்தியோக மிழந்தபடியால், சுகபோஜன முதலிய போகங்களை இழந்து ஊர்ப்புறங்களிற் போய் ஆகாரம் முதலியவை குறித்து அலைந்து வருந்துகின்ற போது, தயவுள்ளவர்கள் கண்டு ஆகார முதலியவை கொடுக்கின்றார்கள்.*
*அதை அரசன் கேட்ட காலத்திலும் கண்ட காலத்திலும் கொடுத்தவர்களை இரக்கமுள்ள நல்ல சமுசாரிகளென்று சந்தோஷ’த்து உபசரிக்கின்றானே யல்லது கோபிக்கின்றானில்லை. அதுபோல், கடவுள் தம் கட்டளைப்படி நடவாத சாதாரண குற்றமுடைய சீவர்களைத் தமது சத்தியால் அவர்கள் பெறத்தக்க சுகங்களைப் பெறவொட்டாமல் தாம் கொடுத்த சௌக்கிய புவனபோகங்களை விடுவித்து, அந்தச் சீவர்களுக்கு நல்லறிவு வருவிக்கும் நிமித்தம் அந்தத் தேகத்தினின்றும் நீக்கி வேறொரு தேகத்தில் விடுகின்றார்.*
*அந்தச் சீவர்கள் சௌக்கிய புவன போகங்களை இழந்தபடியால், சௌக்கிய போஜன முதலியவற்றை இழந்து வேறு வேறிடங்களில் ஆகார முதலியவை இல்லாமல் வருந்தும்போது, தயவுள்ளவர்கள் அந்த வருத்தத்தைக் கண்டு ஆகார முதலியவை கொடுத்தால் அப்படிக் கொடுத்தவர்களை நல்ல இரக்கமுள்ளவர்கள் மேன்மேலுஞ் சுகத்தையடையக் கடவார்களென்று சந்தோஷ’த்து உபசரிப்பாரல்லது கோபிக்கமாட்டார்.*
*ஆதலால், கடவுள் அருளாக்கினைக்குச் சீவர்களிடத்துச் சீவர்கள் காருணியம் வைப்பதே சம்மதவென்று உண்மையாக அறியவேண்டும்.*
*அறிவும் அன்பும் தோன்றுவது எவ்வாறு என்பதை கீழே விளக்குகின்றார்!*
15,*இந்தச் சீவகாருணியத்தால் இகலோக ஒழுக்கம் வழங்குகின்றது. சீவகாருணிய மில்லையாகில், இகலோக ஒழுக்க மெவ்வளவும் வழங்கமாட்டாதென்று அறியவேண்டும். எப்படியென்னில்:-?*
*சீவகாருணிய மில்லாதபோது அறிவும் அன்புந் தோன்றா;*
*அவை தோன்றாதபோது கண்ணோட்டமும் ஒருமையும் உபகாரமும் விளங்கா;*
*அவை விளங்காதபோது வலியசீவர்களால் எளிய சீவர்களொழுக்கம் பொறாமை முதலானவைகளால் தடைப்பட்டழிந்து போம். பின்பு வலியசீவர்கள் ஒழுக்கங்களும் தாமச ஒழுக்கங்களாகி ஒருவ ரொழுக்கத்தால் மற்றொருவரொழுக்கம் மதத்தினால் சோர்ந்தவிடதில் மாறுபட்டழிந்து போம்.*
*சீவகாருணிய ஒழுக்கஞ் சிறிது மில்லாத புலி சிங்கம் முதலிய மிருகங்கள் வழங்குகின்ற காட்டில் இகலோக ஒழுக்கம் வழங்கவேயில்லை அது போல் சீவகாருணிய மில்லாத மனிதர்கள் வழங்குமிடத்திலும் இகலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென் றறியவேண்டும்*
16,*பரலோக ஒழுக்கமுஞ் சீவகாருணியத்தால் வழங்குகின்றது. அது இல்லையாயின் பரலோக ஒழுக்கமும் வழங்கமாட்டாது எப்படியென்னில்;-?*
*சீவகாருணியமில்லாத போது அருள்விளக்கந் தோன்றாது. அது தோன்றாதபோது கடவுள் நிலை கைகூடாது. அது கூடாதபோது முத்தியின்பம் ஒருவரும் அடையமாட்டார்கள். அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென் றறியவேண்டும்*
17,*சீவகாருணிய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால் துன்மார்க்கப் பிறவியே பெருகி, எங்கும் புல்லொழுக்கங்களே வழங்குகின்றன. எப்படியென்னில்:-?*
*சீவகாருணிய மில்லாத கடின சித்தர்க ளெல்லாம் அவரவர் கடின செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர் சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரணியவாசிகளாகவும், சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை, முதலிய துஷ்ட மிருகங்களாகவும், சிலர் பாம்பு, தேள் முதலிய விஷசெந்துக்களாகவும், சிலர் முதலை சுறா முதலிய கடின செந்துக்களாகவும் சிலர் காக்கை கழுகு முதலிய பக்ஷி சண்டாளங்களாகவும், சிலர் எட்டி கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள்.*
*ஆதலால், புல்லொழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன என்றறிய வேண்டும்.*
*சீவகாருணியம். கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமென்பது மல்லாமல் அந்த அருளின் ஏகதேச விளக்க மென்றும் அறிய வேண்டும்.*
*சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆதலால், அந்த இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது*
தொடரும்....
*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று உலக வழிபாட்டையே மாற்றியவர் நமது வள்ளல்பெருமான்*
*அடுத்து ஜீவகாருண்யத்திற்கு முக்கியமான லட்சியம் எது என்று தெரிந்து கொள்வோம்!*
அன்புடன் ஆன்மநேயன் சுத்தசன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக