அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 29 பிப்ரவரி, 2024

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பாகம் 1

*முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவை !*

*சுத்த சன்மார்க்கத்திற்கு வருபவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது* 

*வள்ளல்பெருமான் எழுதி வெளியிட்ட ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் உள்ள உண்மை ஒழுக்க நெறிகளை படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்* 

*கேள்வியும் நானே, பதிலும் நானே என்பது போல் வள்ளல்பெருமானே கேள்வி கேட்டு பதில் சொல்லி புரிய வைப்பதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற பகுதி நூலாகும்* 

*ஜீவகாருண்ய ஒழுக்கம் முதற்பிரிவு !*

*ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு!*

*உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.*

1,*அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:-?*

 *எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று*

 *எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபமென்று உண்மையாக அறியவேண்டும்.*

2,*இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரியவாழ்வை எதனால் அடையக்கூடுமென்று அறியவேண்டில்:-?* 

*கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்றறிய வேண்டும்.*

3,*கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:-?*

*சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.*

4,*கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடா தென்பது எப்படி என்னில்:-?*

*அருளென்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம். சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்றறிய வேண்டும்.*

*அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும், அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவ காருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும்.*

*சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும்.*

*சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளுந் தோன்றும்.*

*ஆகலின் புண்ணிய மென்பது சீவகாருணியமொன்றே என்றும், பாவமென்பது சீவகாருணிய மில்லாமையொன்றே என்றும் அறியப்படும்.*

*சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தரென்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்*

5,*ஆனால், சீவகாருணிய ஒழுக்கமென்பது என்னெனில்:-?*

*சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வவழிபாடு செய்து வாழ்தலென்று அறிய வேண்டும்.*

6,*சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகுமெனில்:-?*

*சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.*

7,*சீவகாருணியம் உண்டாவதற்கு உரிமை எது என்னில்:-?*
 *சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாய்ச் சர்வசக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால், ஓருரிமையுள்ள சகோதரர்களேயாவர் சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்றபோதும், துக்கப்படுவாரென்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின், ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென் றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்று அறிய வேண்டும்* 

*ஜீவகாருண்ய ஒழுக்கத்தை படித்து பயன் பெறுவோம்*

தொடரும்....

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
   *9865939896*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக