*வள்ளல்பெருமானின் உண்மை செய்தி !*
*வள்ளல்பெருமான் இறுதியாக அருளிய பேருபதேசத்தின் மிகவும் அழுத்தமாக வெளியிட்ட முக்கிய செய்தி படைப்பு!*
*இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*
*ஏனென்றால்,? அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*
*அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.*
*"தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.*
*ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.*
*அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும்.*
*ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது.*
*முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க*
*மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்*.
*வள்ளலார் பாடல்!*
இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக
செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.!
மேலும் பதிவு செய்துள்ளது!
*இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.*
*அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை.*
*மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா!*
*அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும்.*
*ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.*
*இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.*
*நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ*
*என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"*
*என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.*
*வள்ளலார் பாடல்!*
மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல்உன் தன்னையே மதித்துன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவவே றெண்ணிய துண்டோ
தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவதுன் கடனே.!
- திருஅருட்பா 3635...
*மேலும் பாடல்!*
தேடிய துண்டு நினதுரு வுண்மை
தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
உரைத்ததும் உவந்ததும் உண்டோ
ஆடிய பாதம் அறியநான் அறியேன்
அம்பலத் தரும்பெருஞ் சோதி
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
கூறவுங் கூசும்என் நாவே.!
*மேலும் ஒருபாடல்!*
கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
சிறுநெறி பிடித்ததொன் றிலையே.!
- திருஅருட்பா 3503
*ஒவ்வொருவரும் மேலே உள்ள அருள் வாக்கியத்தை நன்கு படித்து தெரிந்து கொண்டும் விடவேண்டியதை விட்டும்,பிடிக்க வேண்டியதை பிடித்துக் கொண்டும் வாழ்ந்தால் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்*
தொடரும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக