அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

சனி, 23 செப்டம்பர், 2023

சிற்சபை பொற்சபை ஞானசபை !

*சிற்சபை! பொற்சபை! ஞானசபை !*

*சிற்சபை என்பது ஆன்மா இயங்கும் புருவமத்தி என்னும் இடமாகும்.*

*பொற்சபை என்பது உயிர் இயங்கும் இடமான மெய் என்னும் உடம்பாகும்.*

*ஞானசபை என்பது கடவுள் விளங்கும் இயங்கும் அருட்பெருவெளி என்கின்ற இடமாகும்.*

*ஆன்மாக்களின் வாழ்க்கை !*

*இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி பஞ்சபூத இவ்வுலகிற்கு அனுப்பபட்ட ஆன்மாக்கள்,மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட பஞ்ச பூத உடம்பும் உயிரும் எடுத்து  வாழ்ந்து உடம்பையும் உயிரையும் அழிக்காமல் மாயையிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.*

*ஆன்மாவானது அருள் தேகம் என்னும் ஒளிதேகத்தைப்பெறுவதற்கு மூன்று தேகமாற்றங்கள் பெற வேண்டும்*

*அசுத்த பூதகாரிய தேகத்தை சுத்த பூதகாரிய தேகமாக மாற்ற வேண்டும், அடுத்து பிரணவ தேகமாக மாற்ற வேண்டும், அடுத்து ஞான தேகமாக மாற்ற வேண்டும், இந்த மூன்று தேகமாற்றம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்றுத்தான் மாற்ற முடியும்*
 
*வள்ளலார் பாடல் !*

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு

தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு

இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.!

*கண்புருவப் பூட்டு !*

சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு

சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு

இற்பகரும் இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.! 

*ஆன்மா உயிர் உடம்பு மூன்றும் தனித்தனியாக பிரியாமல். எல்லாம் வல்ல ஞானசபைத் தலைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று கர்மசித்தி.யோகசித்தி.ஞானசித்தி என்னும் மூன்று தேகமாற்றம் உண்டாக்கி, முத்தேக சித்தி பெறுதலே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க சாகாக்கலை பயிற்சியாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்*

*பொருள் வாழ்க்கை! அருள் வாழ்க்கை !*

*பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பது சான்றோர்கள் அருள் வாக்கு !*

*ஆன்மா உயிர் உடம்பு என்ற மூன்றும் சேர்ந்து இயங்கினால்தான் மனிதன் மனிதனாக இவ்வுலகில் செயல்பட முடியும். தனித்தனியாக பிரிவதே மரணம் என்பதாகும்.*

*நம் உடம்பின் அகத்தில் இயங்குவது ஆன்மா.அகப்புறத்தில் இயங்குவது ஜீவன் என்னும் உயிர்.புறத்தில் இயங்குவது மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கரணங்கள்.*

*புறப்புறத்தில் இயங்குவது கண். காது.மூக்கு.வாய்.மெய் என்னும் புறக் கருவிகளாகும்.*

*இந்த நான்கு பாகங்களும் நான்கு சபைகளாக சொல்லப்படுகிறது.* 

*அதாவது கடவுள் விளங்கும் இடம் ஞானசபை என்பதாகும், ஆன்மா இயங்கும் இடம் சிற்சபை என்பதாகும், ஜீவன்,கரணங்கள்,இந்திரியங்கள் இயங்கும் இடம் பொற்சபை என்றும் சொல்லப்படுகின்றது.*

*மனித உடம்பின் முக்கிய ஒளிகள் நான்கு !*

ஆன்ம ஒளி.

ஜீவ ஒளி.

மன ஒளி.

கண் ஒளி 

என நான்கு பாகங்களிலும் கடவுள் ஒளி காரண காரியத்தால் விளங்குகிறது.

வள்ளலார் பாடல்! 

சபையெனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே

அபயம் மளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி! (அகவல் வரிகள்)

சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்

சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்

நித்திய ஞான நிறையமு துண்டனன்

நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம் அற்புதமே என்கிறார். 

என் உடம்பின் உள்ளே சத்திய ஞானசபையைக் கண்டேன் என்றும் அழியாமல் வாழும் நித்திய ஞான நிறை அமுதம் உண்டேன் என்றும் அதனால்  மரணத்தை வென்று வாழும் அற்புதத்தை உலக மக்களுக்கு தெரியப் படுத்துகிறேன் என்கிறார்.

*மனித உடம்பின் சிற்சபை என்கின்ற  தலை பாகத்தில் தான்,ஜீவன், கரணங்கள்,இந்திரியங்கள் என்கின்ற மூன்று விதமான கருவி கரணங்களை இயக்கி கொண்டும் தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உள்ளார்,அதனால் இயக்கம் தடைபடாமல்  நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.*

*மூன்று பாக்ஸ் ( பெட்டி )!*

1.ஆன்மா என்பது தலைமை பெட்டி (மெயின் பாக்ஸ்.)

2.பெரிய மூளை இரண்டாவது பெட்டி உயிர் இயங்கும் இடம்!

3.சிறிய மூளை மூன்றாவது பெட்டி கரணங்கள் இந்திரியங்களை இயக்கும் இடம் ! 

*(ஜீவன் மனம் முதலிய அந்தக்கரணக்   கூட்டத்தின் மத்தியில் ஆன்மா தனித்து இயங்கிக் கொண்டு இருக்கும்)*

*ஆன்மா ஆண்டவரிடம் இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும், ஜீவன் ஆன்மாவிடம் தொடர்பு கொள்ள வேண்டும். கரணங்கள் இந்திரியங்கள் ஜீவனுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.இவை மூன்றும் உடம்பில் இணைந்து இயங்கினாலும் கரணங்களும் இந்திரியங்களும் உலக இன்பத்தின் நாட்டம் கொண்டு அலைவதால் ஆன்மாவையும். ஆண்டவரையும் தொடர்பு கொண்டு அருளைப் பெற முடியாமல். நரை திரை பிணி மூப்பு பயம் ஏற்பட்டு மரணம்  வந்துவிடுகிறது. மரணம் வருவதால் ஆன்மா உயிர் உடம்பு பிரிந்து விடுகிறது. ஆன்மா  மீண்டும் நல்வினை தீவினைக்கு தகுந்தவாறு பிறப்பு எடுத்து கொண்டே இருக்கும் இதுதான் உலகியல் பொருள் வாழ்க்கை.*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வெல்ல வேண்டிய ஆன்மா அறியாமையாலும் அஜாக்கிரதையாலும் மரணம் வந்துவிடுகிறது* 

*சிற்சபையில் இயங்கும் ஆன்மாவும், பொற்சபையில் இயங்கும் உயிரையும்  ஞானசபையுடன் இணைத்து ஒரே சபையாக மாற்றியவர் வள்ளலார்.*

*ஒவ்வொரு ஆன்மாவும் கடவுள் சபையான ஞானசபையுடன் இணைய வேண்டும், ஞானசபையாக மாற்றினால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொள்வார்அதுவே அருள் வாழ்க்கையாகும்,அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.*.

*சத்திய ஞானசபை  என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்*.*நித்திய ஞான நிறை அமுதம் உண்டனன் நிந்தை உலகியற் சந்தையை விண்டனன்* என்ற அதிசய அற்புதத்தை வெளிப்படுத்துகிறார்.

*சிற்சபையும் பொற்சபையும் சொந்தம் எனதாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு இச்சமய வாழ்வில் எனக் கென்ன இனி ஏச்சு என்பிறவி துன்பம் எல்லாம் இன்றோடே பேச்சு என்பதை சத்து சித்து  ஆனந்தம் பெற்றுக் கொண்டு மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்*
 *சிற்சபையின் கண் மணத்தை செலுத்த வேண்டும்!* 

*புறம் என்னும் வெளியில் சென்று அலைமோதும் மனத்தை சிற்சபையின் கண் இடைவிடாது செலுத்த வேண்டும்* என்கிறார்.மனத்தை சிற்சபையில் செலுத்துவதால் இந்திரிய   ஒழுக்கம்.கரண ஒழுக்கம் கைகூடும். இரண்டு ஒழுக்கமும் நிறைவு பெற்றால் ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் தானே நிறைவேறும் என்கிறார் வள்ளலார். 

*ஜீவர்களால் ஜீவர்களுக்கு உண்டாகும் பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை போன்ற துன்பங்களும். சாதி.சமயம். மதம் சார்ந்த பற்றுதல்கள் யாவும் சிற்சபையில் பொற்சபையில் அழுத்தமாக திரைகளாக பதிவாகி  நிறைந்துள்ளது* 

*ஆகையினால் ஞானசபையை தொடர்கொள்ள  முடியாமலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளமுடியாமலும்.அருளைப்பெற முடியாமலும், அசுத்த மாயாதிரைகளாக மறைத்துக் கொண்டுள்ளன.அத்திரைகளை நீக்கி அருளைப் பெற்று மரணத்தை வெல்வதே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்.* 

*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடாகும்.எனவேதான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பதை வெளிப்படுத்துகிறார்.* 

*மோட்ச வீடுஎன்பது அருள் நிறைந்த அருட்பெரு வெளியாகும். அதுவே மோட்சவீடு என்பதாகும். அருள் நிறைந்த கோட்டை என்றும் சொல்லப்படுகிறது.அக்கோட்டையைத் திறந்து உள்ளே போக அருள் என்கிற திறவுகோலைக் கொண்டுதான் திறக்க வேண்டும். அத்திறவுகோலை ஜீவகாருண்ய ஒழுக்கத்தாலும். நாம்  தயவே வடிவமாக மாறினால் மட்டுமே சாவியைப் பெறமுடியும் வேறு வகையால் பெறமுடியாது என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்தி உள்ளார் வள்ளலார்.* 

*எல்லாச் செயல்களுமே மனித தேகத்திலே உள்ளது. சாட்டை இல்லா பம்பரம்போல் இயக்கிக் கொண்டு உள்ளவரே எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்*

*வள்ளலார் பாடல்!*

திருக்கதவும் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ

உருக்கிஅமு தூற்றெடுத்தே *உடம்பு உயிரோடு உளமும்*

ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ

கருக்கருதாத் தனிவடிவோய் நின்னை என்னுட் கலந்தே

கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ

செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 

என்னும் பாடலில் எளிய தமிழில் தெரிவிக்கின்றார்.

*ஞானசபை சிற்சபை  பொற்சபை என்கின்ற இடத்தில் இயங்கும் கடவுள் ஆன்மா உயிரையும் உடம்பையும் அருள் ஒளியாக மாற்றி ஆன்மா இயங்கும் ஞானசபையில் இணைக்க வேண்டும்.*

*ஞானசபையின் உள் ஒளியின் அசைவே கடவுளாகும் அதுவே நடனம் என்றும் நடராஜபதி என்றும் சொல்லப்படுகிறது.* 

மேலும் வள்ளலார் பாடல்! 

கடல்கடந்தேன் கரை யடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்

*கதவு திறந் திடப்பெற்றேன்* காட்சியெலாம் கண்டேன்

அடர்கடந்த திருஅமுதுண்டு அருள்ஒளியால் அனைத்தும்

அறிந்து தெளிந்து அறிவுருவாய் அழியாமை அடைந்தேன்

உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்

உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்

இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம் ஓங் கினவே

இத்தனையும் பொது நடஞ்செய் இறைவன்அருட் செயலே.! 

மேலே கண்ட பாடலின் வாயிலாக தான் பெற்ற அனுபவத்தை வெளிப்படுத்துகின்றார்.

நாமும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க தனிநெறிக் கொள்கைகளை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன்  *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக