அருகி கிடந்த ஆன்மாக்கள்!
ஆன்மநேய உரிமையுடைய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க வந்தனம் ;
அறிவு என்பது ஒருசிறிதும் விளங்காத அஞ்ஞானமென்னும்
பெரிய பாசாந்தகாரத்தில் (பேரிருள்)
அளவிடப்படாத நெடுங்காலம் அருகிக்கிடந்த ஆன்மாக்களாகிய நமக்கு
ஆண்டவர் ஓரறிவு தாவரப் பிறவிமுதல் ஆறறிவு மனிதப்பிறவி வரை தேகம் கொடுத்து ஒவ்வொரு ஆன்மாக்குள்ளும் உள்ளொளியாக இருந்து அனாதிதொட்டு உயிர்க்கு துணையாக வருவதன் நோக்கம் என்னவெனில்..... ,
அறிவற்ற ஆன்மாக்களுக்கு அறிவு விளக்கத்தைக்கொடுத்து அவைகளுக்கு பக்குவத்தைக்கொடுத்து,
பதத்தைக்காட்டி,
பதவியைக்கொடுத்து,
நிலையைக் காட்டி,
அந்தநிலைக்குரிய பக்குவம் வந்தவுடன்
அதன்மேல் ஏற்றுவித்து, அழியாநிலையைத்தந்து தன்மாயமாக்கி கொள்ளவேண்டும்(கடவுள் மயமாக்கி) என்பதற்காகவே ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மூன்று பெருங்கருணைத் தொழிகளாகிய படைத்தல் காத்தல்,அழித்தல் என்பதுடன்,மறைத்தல் அருளல் என்னும் இருபெருந் தொழில்களால் ,
ஆன்மாக்களுக்கு
மறைப்பைக் கொடுத்து அம்மைறைப்பினால் அவர்களுக்குள் கேள்விகளை எழுப்பி ,விசாரம் தந்து அவ்விசாரத்தினால் தெளிவைத் தந்து , பிறகு அருளல் என்னும் தொழிலால் அவர்களுக்கு பக்குவத்தையும்,
பதத்தையும்,
பதவியையும்,
நிலையையும் தந்து அருள்பாளிக்கின்றார்கள்;
ஆன்மாக்கள் அடையவேண்டிய ஆன்ம லாபம் என்ற முடிவான நிலைக்குத்தான்" சிவானுபவம் "என்றும் "பேரின்பப் பெருவாழ்வு" என்றும் பெயர்;
சிவானுபவம் என்பது என்ன ?
சிவானுபவம் என்பது தேகத்திரயம் எனப்படும்.
அதாவது,
தேகம் +திரயம்
தேகம் =உடம்பு அல்லது உடல்;
திரயம்= மூன்று என்பதாகும்;
ஆக மூன்று உடல் என்றும் ,
முத்தேகம் என்றும் சொல்லலாம்.
அதாவது" முத்தேக சித்தியைப்" பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்;
முத்தேக சித்தி என்பது என்ன ?
நமது மனித உடம்பு மூன்று பகுதிகளை உடையதாய் உள்ளது .
1:தூல உடம்பு (நாம் கண்ணால் பார்க்கக்கூடிய புற உடம்பு ) ;
2:சூக்கும உடம்பு (நமது உணர்வும் அறிவும் சேர்ந்த அந்தகரணத்தால்(மனம் புத்தி சித்தம் அகங்காரம்) இயங்கக்கூடிய உடம்பு ;
3:காரண உடம்பு (மேற்கூறிய தூல சூக்கும இரண்டு உடம்புக்கும் காரணமாக இருந்து இயக்கக்கூடிய காரண உடம்பு )
மேற்கூறிய தூல சூக்குமமாகிய இரண்டு உடம்புகளும் ,அசுத்தமாகிய தசைகளால் எலும்பு தோல் இரத்தம் என்னும் சப்த தாதுக்களால் இணைக்கப்பட்ட இந்திரியங்களாகவும் , அசுத்த கரணங்களாகவும் இருக்கின்றன , அவற்றால் பெறப்படும் அறிவும் அசுத்த அறிவாகவே இருக்கின்றன;
இவற்றை எல்லாம் அறிவின் பக்குவத்தில் அருளொளி கிடைக்கப் பெற்று சுத்த கருவி கரணங்களாக்கிக் கொண்டு ,
தூலத்தேகம் சுத்தமான மாற்றறியாத
பொன்னொளி வீசும் ஒளித்தேகமாகவும்;
சூக்குமதேகம் பிரணவதேகமாகவும்;
காரண தேகம் ஞானதேகமாகவும்;
திருவருள் துணையால் கிடைக்கப் பெறும் ;
இந்த சுத்தமாதிய முத்தேக சித்தியைப் பெற்றுக்கொள்வதே சிவானுபவ நிலையாகப் நமது பெருமான் கூறுகின்றார்கள்;
அந்த முத்தேகசித்தி அனுபவத்தை சுத்தசன்மார்க்கத்தில் சுகப்பெருநிலையாகக்காட்டி ,
இந்த முத்தேக அனுபவசித்தியை சுத்தசன்மார்க்கத்தினால் மட்டுமே அடையமுடியும் என்று பெருமான் அனைவரையும் சுத்தசன்மார்க்கத்திற்கு அழைக்கின்றார்.
சிவானுபவத்தைப் பெறுவதற்குரிய
மார்க்கம் எது ?
தற்போதைய சுத்தசன்மார்க்க
உலகத்தில் மேற்கண்ட சிவானுபவத்தைப் பெறுவதற்கு இரண்டே மார்க்கம்தான் உண்டு அவை,
1:பரோபகாரம்,
2:சத்விசாரம் என்பதாகும் ;
இந்த இரண்டைத்தவிர வேறு மார்க்கம் கிடையாது என்று சத்தியமாக அறிதல் வேண்டும்;
பரோபகாரம் என்பது என்ன ?
ஆன்மாக்களாகிய நாம் நமது தேகத்தாலும் ,கரணத்தாலும்,இந்திரியத்தாலும் ,திரவியத்தாலும் (பொருள்) ஆன்மாக்களுக்கு உபகரித்தல் (உதவி செய்தல்) திரவியம் கிடைக்காத பட்சத்தில் திரிகரண சுத்தியாய் (மனம் வாக்கு காயம் ) ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு எல்லா சீவர்களினது வாட்டத்தைக் குறித்து கடவுளிடம் பிரார்த்தித்தல் என்பதாகும்;
சத்விசாரம் என்பது என்ன ?
சத்விசாரம் என்பது கடவுளது புகழையும் பெருமையையும் போற்றிடவும்.....,
ஆன்மாக்களாகிய நமது இயல்பான தரம் எப்படி இருக்கவேண்டும் என்று ஆன்மதரத்தை விசாரித்து அறிந்து....,
இதில் நமது ஆன்மா தற்போது எந்தஅளவிற்கு சிறுமையைக் கொண்டுள்ளது (குற்றம்) என்பதை விசாரித்து.... ,
எல்லாம் வல்ல கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து.... ,
நமது குறைகளை எல்லாம் இறைவனது திருவடியில் விண்ணப்பிப்பதுதான் "சத்விசாரம்" என்பதாகும்;
....மேற்கண்ட பரோபகாரம், மற்றும் சத்விசாரம் இந்த இரண்டுமார்க்கத்தைத் தவிர வேறு மார்க்கத்தால் சிவானுபவத்தை அடையவேமுடியாது என்பதுதான் நிதர்சனம்;
அதனால்தான் பெருமான் "ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்" என்றார்கள் என்பதை அறிவோம்;
தயவு என்பது என்ன ?
தயவு என்பது கருணை, இரக்கம், அன்பு , அருள் என்ற ஒரேப் பொருளையே வழங்கும்;
அந்த தயவு இரண்டு வகைப்படும்;
1:கடவுள் தயவு,
2:ஜீவ தயவு என்பதாகும்;
கடவுள் தயவு என்பது என்ன ?
கடவுள் தயவைப் பெற்றதன் பயன் என்னவென்றால்,
1:இறந்தவர்களை எழுப்பும் வல்லமை ;
2:தாவரங்களுக்கு நினைத்த மாத்திரத்தில் மழை பெய்வித்தல்;
3:மிருகம்,பட்சி,ஊர்வனவாதிகளுக்கு ஆகாரத்தை அருள்நியதியின்படி அருட்சக்தியால் ஊட்டிவித்தல்,
4:சோம(சந்திரன்)சூரியன்,அக்கினிப் பிரகாசங்களை காலதேச வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல்,
பக்குவ ஜீவர்களுக்கு அவர்களின் பக்குவத்திற்கு தக்கவாறு அனுக்கிரகித்தல்,
5: பக்குவமற்ற அபக்குவிகளுக்கு செய்யவேண்டிய அருள்நியதியின்படி தண்டனைச் செய்வித்து பக்குவம் வருவித்தல் என்பதுவாகும்;
ஜீவ தயவு என்பது என்ன ?
ஜீவர்கள் தமக்கு இருக்கின்ற சக்தியின் அளவைப் பொறுத்து மற்ற உயிர்களுக்கு.... ,
பசி,கொலை,தாகம்,பிணி,இச்சை,எளிமை,
பயம் என்னும் ஏழுவகைத் துன்பங்களால் படும் அவத்தைகளைக் கண்டபோதும்....,
பிறர்சொல்லக் கேட்ட போதும்....,
அல்லது நமது அறிவால் அறிந்தபோதும்.... அவைகளுக்கு நம்மால் முடிந்த அளவு உபகாரம் செய்து அவ்வவத்தைகளிலிருந்து நீக்கி அவைகளுக்கு இன்பத்தை தருதல்;
அல்லது ஆன்மநேய உறவின் அடிப்படையில் தயாவடிவமாக அவைகளுக்காக கடவுளிடம் பிரார்த்தித்தல் என்பனவாகும்;
ஆன்மாக்களின் லாபம் என்று சொல்லக்கூடிய முடிவான சிவானுபவம் பெறுவதற்காகவே ஆன்மாக்களாகிய நாம் பிறவிஎடுத்து வந்துள்ளோம் என்பதை அறிந்து..... ,
நாமும் ஏதோ ஒரு காலத்தில் வள்ளல் பெருமான் அடைந்த நிலையை அடையப் பிறந்தவர்களே என்பதை உணர்ந்து , நமது பெருமான் காட்டிய பெருநெறியாம் சுத்தசன்மார்க்க நன்னெறியில் நடைபயில்வோம்;
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம்எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக